Thursday, May 9, 2019

பெரும் அதிர்வலையை எம்மில் பதிவு செய்திருக்கும் ஒரு பல்துறைக்கலைஞரின் இழப்பு...


பல்துறைக் கலைஞர் வீரசிங்கம் ஐயா அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்பு



தனக்காக தன்னையே உருவகித்துக்கொள்ள வைக்கும் சிறப்பு ஒரு சிலருக்கேயுண்டு. அந்த சிலரது இல்லாமையை மரணத்தின் கைகள் காலத்தின் மீது மிகக்கடுமையாக எழுதி விட்டுச்செல்கிறது. ஒரு கலைஞனின் மரணம் என்பது பிரத்யேக குணநலன்கள் கொண்டது. அது
மற்றவர்களையும் தழுவிக்கொள்ளும். அவர்களின் கண்ணீரின் மூலம் அது
கட்டற்ற அஞ்சலியை வெளிப்படுத்தும், அந்த ஈரத்தில் தவித்துக்கிடக்கும் தன் ஆன்மாவை ஆற்றுப்படுத்த முயலும்.

    மரணத்தை எதிர் கொள்வது கடினமானது. அதைவிட கடினமானது ஒரு மகா கலைஞன் மரணத்தை எழுதுவது. ஆனால் மரணம் அவனது இருப்பை இன்னும் உறுதிசெய்துவிடுகிறது. மரணத்தை கடந்து செல்லும் வாழ்வு அந்த கணத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. ஒரு சிறந்த பண்பாளரின் மரணத்தை எழுதும் போது காலத்தை கடந்து ரத்தமும் சதையுமான வாழ்வை உணரச் செய்யும் பதிவுகளாக அது ஆகிவிடுகிறது. சிலரது இழப்பின் வெற்றிடம் அவர்களன்றி வேறொருவரால் நிரப்ப முடியாமல் அவர்கள் விட்டுச்சென்ற இடத்தில் அப்படியே உறைந்து போய்க்கிடக்கிறது. வில்லுப்பாட்டுக்கலைஞர் என எல்லோராலும் அறியப்பட்ட பல்துறைக்கலைஞர் அமரர் வீரசிங்கம் அவர்கள், காலத்தின் கைகளால் மறைக்க முடியாத ஒரு காலக்கொடை.

      ஒரு பெரும் அதிர்வலையாய் எம்மில் பதிவு செய்திருக்கும் இக்கலைஞரின் இழப்பு, வாழ்வில் இறக்காமல் மரணத்திலும் வாழும் தன்மை பெருங்கலைஞனுக்கே சாஸ்வதமாகிறது என்பதை எம்மில் எழுதிவிட்டுச்சென்றிருக்கிறது. காலம் சிலர் வாழ்வை ஒற்றைப்பூவென உதிர்த்தி விட்டுச்செல்லும். ஆனால் இவர் வந்த வழித்தடங்களை எந்தக்கையும் அழித்துவிடமுடியாது. அந்தப்பூக்கள் அவர் சமூகத்தின் முக்கிய திருப்பங்களில் வாசனை பரப்பிக்கொண்டேயிருக்கும். அவர் பரப்பிய கலையடையாளங்களின் நறுமணத்தில் அவர் என்றும் மிதந்து கொண்டேயிருப்பார். அவருடைய ஆயுளுக்குள் ஆகாயமளவு கலைஞனாக வாழ்ந்து நாம் தொடர்வதற்கான காற்புள்ளிகளையும் இட்டுச்சென்றிருக்கிறார். ஆக அவரது அனைத்து லயங்களோடும் நமக்கான கலை வாழ்க்கை குறித்தும் அவரது வாழ்விலிருந்து நாம்  குறிப்பெடுத்துக்கொள்ள முடியும்.

   ஒரு புள்ளியிலிருந்து அவரை எழுதத் தொடங்கும் எழுத்துக்கள் பல புள்ளிகளாய் விரிகின்றன. பேனாவுக்கும் சன்னதம் வந்து விடுகிறது. எனக்கு அவரை நினைக்கும் போது தாவிச்செல்லும் படிமங்களே காட்சிகளாகின்றன. அவர் நாதஸ்வரம் வாசிக்க நான் தவில்வாசித்த தருணங்கள், அனாமிகாவின் அஞ்சலிக்கூட்டத்தில் அவர் அடியெடுத்துப்பாடிய பாடல், கும்பவிழாவில் தலைமைப் பூசாரியாக நின்று மடை வைத்து தெய்வங்களை வழிநடத்திய காட்சிகள், அவரைக்கண்டு அன்பு மேலீட்டால் வணக்கம் சொல்லும் கும்பிட்ட கைகள், அவர் எல்லோருடனும் புன்னகையால் கைகுலுக்கும் இனிய பொழுதுகள், கணீர் என்ற குரலால் வசீகரிக்கும் இறைவணக்கப்பாடல்கள் என இது நீளும். ஒரு பல்திறம் கொண்ட கலைஞனை ஒரு காட்சிப் பின்புலத்தில் நினைத்துப்பார்க்க முடியாததை நான் இக்கணம் உணர்கிறேன்.

      வில்லுப்பாட்டுக் கலைஞர், சிறந்த நடிகர், நாடக எழுத்தாளர், கவிஞர், பூசாரி, மந்திரக்கலைஞர், வைத்தியர், ஓடாவி, சிற்பி, மேசன், பாடகர், ஒப்பனைக்கலைஞர், நாதஸ்வர வித்துவான், இசையமைப்பாளர் என ஒரு மனிதனுக்குள் எத்தனை ஆளுமைகள் ஆனால் அந்த பெருங்கலைஞனின் இத்தனை ஆற்றல் வெளியையும் தெரிந்து கொண்டு அவரை நேரில் சந்திப்பவர்கள் அவரின் திகைக்க வைக்கக்கூடிய எளிமையால் திக்குமுக்காடிப்போவர். அவர் சூழலில் நம்மைக் கரைத்துக் கொண்டு அவரது ஆற்றல்; குறித்து பேசும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதால் அது நமக்குள்ளும் ஒரு கனவினை, ஒரு இலட்சியத்தினை திரித்தூண்டிவிடுகிறது. அவரின் இறப்பின் அசைவின்மை ஒரு கடலின் அலையிழந்த நிலையை நமக்கு நினைவூட்டினாலும் நம்முள்ளே ஆயிரம் ஆயிரம் அலைகளை அது எழுப்பிச் சென்றிருக்கிறது. இவர் மரணத்தைக்கண்டு அஞ்சவில்லை.

'கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்'
   என்பதாக அவர் மலையளவு வாழ்ந்து நிலையான சேகரிப்பை சேகரித்திருக்கிறார். ஆனாலும் அவரது வாழ்வின் தீராத பக்கங்களில் இன்னும் மிச்சமிக்கின்ற அவரது செயற்பாடுகளின் தொடர்ச்சியை எம்மைத் தொடரும்படி சொல்லாமல் சொல்லிச்சென்றிருக்கிறார். 

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect