Sunday, May 5, 2019

துன்பியலினூடாக ஒரு அரசியல், பண்பாட்டுப்பார்வை


ஏ.ஜி.யோகராஜா அவர்களின்  'புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்' எனும் நூலுக்கான ஒரு அறிமுகக்குறிப்பு 

மிக மோசமான சமூக நிலமைகளின் கீழ் தான் அற்புதமான படைப்புக்கள் படைக்கப்பட்டுள்ளன. இவை காலங்கள் பல கடந்த பின்பும் கடந்த காலத்திற்குச்சாட்சியாக நிற்கும் அதேவேளை மக்களை விழிப்படையச்செய்யவும் எழுச்சியடையச்செய்யவும் காலத்தின் நிலைமைகளை தெரியப்படுத்தவும் பயன்பட்டன. முரண்களின் மோதல்களை ஒழுங்கமைப்பதுதான் நாடகமாகின்றது. நாடகங்களில் இது
வெவ்வேறு தளங்களில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ      இயங்கிக்கொண்டிருக்கும்.

நாடகப் பிரதிக்கும் இலக்கியப் பிரதிக்கும் வித்தியாசம் உள்ளது. இலக்கியப்பிரதி தனி ஒருவரால் தனது பிரக்ஞையில் நின்று எழுதப்பட்டுவிடும். ஆனால் நாடகப் பிரதிக்கு ஒரு கூட்டுழைப்பு தேவைப்படுகிறது. நாடக எழுத்துப்பிரதியை ஒருவரே எழுதினாலும்கூட, அது  அரங்காற்றுகைக்கான பிரதியாக இல்லாவிடின் நாடகம் பிறக்காது. ஒவ்வொரு சொல்லும் எதைச் சுட்டுகிறது என்பதை பார்க்காமல் எதைச் செய்கிறது என்பதைப்  பார்க்க வேண்டும். அதாவது எழுத்துப் பிரதி நாடகப் பிரதியாக பரிமாணம் பெறுவது  கூட்டுழைப்பில்தான். இவ்விடயம் சார்ந்து இந்நூலாசிரியரும், 'எனது நாடகப்பிரதிகள் அனைத்தும் வெறுமனே என் தன் முனைப்பினால் உந்தப்பட்டு உருவாக்கப்பட்டவையல்ல. நேரடியாகவோ மறைமுகமாகவோ பௌதீக ரீதியிலோ, எண்ண ஓட்டத்தின் அடிப்டையிலோ ஆத்ம ரீதியிலோ பலரின் பங்களிப்பைக்கொண்ட ஒரு கூட்டு முயற்சிதான் எனது இவ் எழுத்துருக்கள்' எனக்குறிப்பிட்டுள்ளார்.

திரு ஏ.ஜி. யோகராஜா அவர்களின் புலம்பெயர் நாடக எழுத்துருக்கள் என்பது கூத்து நாடகம், சிறுவர் நாடகம், சிறுவர் கதா நிகழ்வு, சிறுவர் கவிதா நிகழ்வு, மாணவர் நாடகம், இசை நாடகம், இருமொழி நாடகம், இருமொழி கூத்து நாடகம் என நாடகத்தன்மையுள்ள அனேகமான வடிவங்களைக் கொண்டு விளங்குகின்றது. இதற்கான கருத்து நிலைகளை அவர் தனது அனுபவத்திலிருந்து பெற்றிருப்பது இப்பிரதிகளை கனதியாக ஆக்கியிருக்கும் அதே வேளை கவனிப்புக்குரியதாகவும் மாற்றியிருக்கின்றது.

குடும்பம், உறவு, பிரிவு, ஏக்கம், கிராமத்து வாழ்வு, மரபுகள், நம்பிக்கைகள், ஆகியவற்றை உள்ளடக்கிய 'தாயக நினைவும் போர்ச்சூழலும்' அகதிநிலை, இனவாதம், நிறவாதம், மொழி புரியாமை, முரண்பட்ட வாழ்வு, பண்பாட்டு வேறுபாடு, பாலியல் அதிர்ச்சி போன்ற 'புலம்பெயர் வாழ்வின் அவலமும் முரண்பாடும்' புதிய சூழலில் புதிய அனுபவங்கள் என்பவற்றோடு இன்று புலம் பெயர் நாடுகளிலேயே பிறந்த அடுத்த தலைமுறைக்கும் பெற்றோருக்கும் இடையிலான தலைமுறை இடைவெளி அதாவது புகலிட கலாச்சார முரண்பாடுகள், இரண்டாம் சந்ததியின் இரட்டை வாழ்க்கை, புகலிடத்திலும்  தொடரும் சாதிய மனநிலைகள், பெண்ணொடுக்குமுறை மனநிலைகள், குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து வளர்த்துவிட முடியாத அறிவுவீழ்ச்சி, அதையும் மீறி மேலெழும் குழந்தையின் ஆற்றலை கண்டுகொள்ளாமல் விடல் அல்லது  அதற்கு எதிராக நிற்றல் என பல விடயங்கள் இவரது எழுத்துருக்களில் மிக சுதந்திரமாக வெளிப்பட்டிருப்பதைக் காணலாம்.

எண்ணற்ற ஞாபகங்கள், துயரம் பெருக்கெடுக்கும் தனிமையின் பெருவலி, கைவிடப்பட்ட தமது நிலமும் காட்சிப்படிமங்களும் மொத்தத்தில் எல்லாமும் ஒரு இடப்பெயர்வின் இறுதியில் ஒரு பார்வை கவனிக்கத்தருகிற ஏகாந்த நிறுத்தத்திலிருந்து உதிர்கின்ற வேதனையை மிக நுணுக்கமாகத் தமது எழுத்துக்களில் தடவித்தடவியே இந்த நாடகப் பிரதிகளை இந்நூலாசிரியர் உருவாக்கியிருக்கிறார்.

இலங்கையிலிருந்து 1960 களில் இருந்தே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு ஆரம்பமாகின்றது. அக்காலத்தில் மலேசியா, அமெரிக்கா, இலண்டன் என தொழில் காரணமாக ஆங்கிலக் கல்வி பயின்றவர்கள் அதிகம் புலம்பெயர்ந்தனர். 1983 யூலைக்கலவரத்தின் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறிய ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வே இங்கு முக்கியமானதாகும். இற்றைக்கு மூன்று தசாப்தங்களைக் கடந்து விட்ட பின்னரும் தொடர்கின்ற இந்நிலை தமிழர்களின் வாழ்வின் மத்தியிலும் அவர்களின் படைப்புக்களின் மத்தியிலும் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றமை அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தப் பின்னணியிலேயே  திரு ஏ.ஜி. யோகராஜா அவர்களின் புலம்பெயர் நாடக எழுத்துருக்களுக்களும் செயற்பட்டிருப்பதனைக் காண முடியும்.

'வில்லியம் தெல்' கூத்து நாடகம் இவரது எழுத்துரு ஆற்றலுக்கு சான்றாக நிற்கும் முக்கிய நாடகமாகும். இது பற்றி சுவிசில் வாழும் ஒருவர் குறிப்பிடுகிறார், '...வீட்டுக்கழைத்த அவர் வரும் வழியைத் தொடர்ந்து  செல்பேசியில் சொல்லித்தான் அடைய முடிந்தது.  அவரிடம் எதையும் கேட்கவும் நகைச்சுவையாய் பேசவும் முடிந்தது. உடன் வந்த நண்பர்கள் அவரது  குழந்தையிடம் 'டச்' மொழியில் பேசி  விளையாடினர். சமையலறைக்கு அழைத்துத் தேநீர்  தந்தார் அந்த சுவிஸ் அதிகாரி. தமிழர்களின் நாடக ஈடுபாட்டையும் தான் சமீபத்தில் பார்த்த 'வில்லியம்  தெல்' நாடகம் பற்றியும் ஈடுபாட்டோடு பேசினார்  பெருமையாய் இருந்தது.' இக் கூற்றானது இந்நாடகத்தின் கனதியை விளக்கி நிற்கின்றது. 'சைபர் பாகை' என்ற நாடகம் ஒரு புகலிட தமிழ்க் குடும்பம் படும் அவஸ்தை என்ன என்பதை சொல்லும் நாடகம். புதிய சூழலுள், புதிய அமைப்பு முறைகளுள் இசைவாக்கமடைவதில் ஏற்படும் சிக்கல்கள் இவை.

'காடு' எனும் சிறுவர் நாடகம்.. மனிதர்கள் வாழ்வில் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது, இருப்புக்கான  போராட்டத்தை அதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து முன்னேறவேண்டும் என்ற கருத்துருவாக்கம் கொண்டது. மனிதர்களின் கூட்டுருவாக்கச் செயற்பாட்டின்; அவசியத்தையும் இது வலியுறுத்தி நிற்கின்றது. 'மதயானையை மடக்கிய சிற்றெறும்பு' என்ற சிறுவர்களுக்கான நாடகமும் இருப்புக்கான போராட்டம் பற்றியது. யானை என்பது அரசியல் குறியீடா? எனவும் எண்ணத்தோன்றுகிறது.

'தூர விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்' என்ற சிறுவர் கவிதா நிகழ்வுக்கான பிரதியில்  சிந்தனாமொழி - தாய்மொழி என்ற குழப்பங்களுடன் குடும்பத்துள் தமிழுலகம் வெளியில் வெள்ளையருலகம் என்பதான  இரட்டை வாழ்க்கை, நிறவெறி, அடையாளச் சிக்கல்கள், பிள்ளை - பெற்றோர் உறவுநிலை, பிள்ளைகள் உடனான உரையாடல் முறைமை, என பல விடயங்கள் பிள்ளைகளின் மொழியிலேயே வந்துபோகின்றன. 'பூவிதழ் மேனியர்' என்ற இசை நாடகம் பெண்களின் மீதான ஆணதிகாரத்தின்  ஒடுக்குமுறை பற்றி காத்திரமாக பேசும் நாடகமாகும். கடவுளர்கள் எப்போதும் புனிதங்களின் உச்ச பிம்பங்கள். அந்த புனிதங்களை போட்டுடைப்பது என்பது  கடவுள் மறுப்பு என்பதை விடவும், மதவெறிக்கு எதிரான எழுத்துச் செயற்பாடாக பார்க்கின்ற சுழலில் துணிந்து புனிதங்கள் என்பவற்றைக்கட்டுடைத்திருக்கின்றார்.

 'கடலம்மா' இது குமுதினிப்படகில் மரணித்தவர்களின் கதை. இந்தப் பிரதியில் கிட்லரின் யூத இனப் படுகொலை, றுவண்டாவின் டுட்டு இனப் படுகொலை  என்பவற்றை சுட்டுவதன் மூலம் இலங்கையிலும் நடப்பது இனப்படு கொலைதான் என்ற செய்தி  மறைமுகமாகச் சொல்லப்படுகிறது.
மயான காண்டம்-2 செம்மணி புதைகுழி பற்றியதான பிரதியாகும். 'பனி முகடுகளில் புதிய சுவடுகள்' என்ற பிரதி சொந்த நாடு, புகலிடம் என இருவேறுபட்ட மனநிலை, தாய்மொழி, சிந்தனாமொழி பற்றிய வாதங்கள், பண்பாட்டு முரண்கள், இரண்டாம் சந்ததி புகலிடத்தில் வேர்கொள்வதில் எழும் சிக்கல்கள் என்பவற்றைச்சுட்டுவதாக அமைந்துள்ளது.'மேற்குத் திசையில் சிவப்பு வானம்', 'சூரியன் உதிப்பதில்லை' என்பன யுத்தகாலத்தின் காயங்களைச்சுமந்து நிற்கும் நாடகப்பிரதிகளாகும்.

புதிய அலறலிலினால் இறந்து போய்க்கொண்டிருக்கும் தமது முகங்களின் இறுதித் தசையின் உயிர்ப்பைத் தக்க வைப்பதற்காகவும் கடந்துவந்த திசையைக்காட்டுவதாகவும் போக வேண்டிய தொலைவினை குறிப்பால் உணர்த்துவதாகவும், இறுகப் பற்றிக்கொள்வதற்கு புதிய நம்பிக்கையினை வழங்க எத்தனிப்பவைகளாகவும் துன்பியலினூடாக ஒரு அரசியல் பண்பாட்டுப்பார்வையினைத்தந்திருக்கிறார். 'சமூக அரசியற் பண்பாட்டு அம்சங்கள் சார்ந்து அந்தந்தக் காலகட்டங்களில் என்னிடமிருந்த உணர்வையும், பார்வையையும் இவ் எழுத்துருக்கள் நேர்மையாக வெளிப்படுத்துகின்றன' என இவர் கூறுவதிலிருந்தே இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆக எம்மையும் எமது வலிகளையும் தடவிப்பார்ப்பதற்கும் அதிலிருந்து மேலெழுவதற்கான உந்துதலையும் திரு.ஏ.ஜி யோகராஜா அவர்களின் நாடக எழுத்துருக்கள் வழங்குவதோடு புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் அரசியல், பண்பாட்டு, வாழ்வியல் பின்னணியின் குறுக்கு வெட்டுமுகத்தையும் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தி நிற்கின்றன.

க.மோகனதாசன்,
சிரேஸ்ட விரிவுரையாளர்,
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...