Tuesday, May 14, 2019

அழகு தனுவின் 'சுமைகள்' குறுந்திரைப்படத்திற்கான நயவுரை


  ஒரு முப்பது வருடங்களுக்கு முன் தமிழ் இளைஞர்கள் புதுக்கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டினர். இன்று அந்த இடத்தைக்குறும்படம் எடுத்துக்கொண்டது. குறுந்திரைப்படங்கள் கருத்தியல் சார்ந்தும் பயன்படுத்தும் நுட்பங்கள் சார்ந்தும் பல தளங்களில் செயற்படுகின்றன.

   • கலைத்துவமான குறும்படங்கள்
   • கருத்துக்கள் தெரிவிக்கும் குறும்படங்கள் 
   • வாழ்வியலை பேசும் குறும்படங்கள்
  
   குறும்படத்தின் வெற்றிக்கு கதையின் தன்மையும் கனதியும் மட்டும் போதாது கதையின் கருவை எவ்வாறு நாம் திரைக்கதையாக்குகிறோம், படமாக்குகிறோம், இயக்குகிறோம், இசையமைக்கிறோம் என்று பல விடயங்களில் அதன் வெற்றி தங்கியிருக்கிறது. வசனமேயில்லாத குறும்படங்கள் நிறையவே தற்பொழுது வந்துவிட்டன. அங்கு காட்சிகளே எம்மோடு பேசுகின்றன. உண்மையில் காட்சிப்படிமங்களே கதையில் அதிகமாக எஞ்சி நிற்கின்றன. இதனால் ஒவ்வொரு (Shot) சொட்டும் எம்மோடு பேசுகின்றன. இதனாலேயே காட்சிப்பாதிப்பு (visual impact) இந்த ஒவ்வொரு பிறேமுக்கும் தேவையாக இருக்கின்றது.

       குழந்தைகளுக்கான கல்வி எப்படி இருக்கவேண்டும். எனச்சொல்லும் ஒரு குறுந்திரைப்படத்தில் ஒரு காட்சி. அதில் வரும் சிறுமி, சில இளைஞர்கள் போடுகின்ற குப்பைகளை எடுத்து குப்பைக்கூடைக்குள் போடப்போகின்றாள். அங்கே குப்பைக்கூடைக்குள் இந்திய தேசியக்கொடி கிடக்கிறது. கொடியை கையில் எடுத்து விட்டு குப்பையினைப் போடுகின்றாள்.

          ஒரு சிறுவன் வீதியில் செல்லும் போது பார்வையிழந்த ஒருத்தரை ஒருவர் கைப்பிடித்து அழைத்துச்செல்வதைப்பார்க்கிறான். அச்சிறுவனுக்கு பாடசாலையில் பரீட்சைக்கான பத்திரம் வழங்கப்படுகின்றது. அதில் தொடர்புபடுத்தும் பகுதியில் Blind என்பதற்கு கண்ணும் eyes  என்பதற்கு பார்வையிழந்தவர் படத்திற்கும் கோடிடுகின்றான். ஆசிரியர் அதனைப் பார்த்து செய்வதறியாது நிற்கின்றார்.

      ஒரு 30 செக்கனுக்குள் ஒரு குறும்படம். இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் பார்த்தது. இன்னும் அந்தக்காட்சிகள் அப்படியே மனதில் நிறைந்திருக்கிறது. ஒரு Pan right shot, ஒரு சிறுமி, ஒரு கைதி, சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒருவர் என கைதிகளின் இருப்பிடத்தை தெரிவிக்கும் காட்சிகள். கமரா Pan left க்கு அப்படியே திரும்புகிறது. அந்தச்சிறுமியின் ரத்தம் தோய்ந்த ஆடை, சங்கிலியால் பிணைக்கப்பட்ட இறந்த உடல் என அந்த pan left shot வலியால் துடிதுடிக்கும்.

  இன்னும் ஒரு காட்சி, ஒரு Full sleep shirt கொடியில் காயப்போடப்பட்டுள்ளது. காற்று பலமாக அடிக்கிறது. அந்த shirt தன்னைக்காப்பாற்றிக்கொள்ள காற்றுடன் பலமாகப்போராடுகிறதோ என எண்ணத்தோணுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் தனது சேட்டின் கையொன்று பிய்ந்து விடுகிறது. காற்று மெதுவாக ஓய்கிறது. அந்தச் சேட்டினுள்ளிருந்து அம்மாவின் உடை பிள்ளைகளின் உடைகள் என்பன வெளிவருகின்றன. Father என குறுந்திரைப்படம் முடிகிறது. மனம் முழுக்க அந்தக்காட்சியின் உணர்வு நிறைகிறது. இது தான் காட்சிப்பாதிப்பு.





        காட்சிகள் எப்பொழுதுமே சொற்களை முந்திவிடுகின்றன. உதாரணமாக நீங்கள் ஒரு நபரை நினைக்குமிடத்து, அவரது உருவம் முதலில் தோன்றும். பிறகே வார்த்தைகள். ஒரு குறுந்திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அந் நேரத்தினை எந்தச் சோர்வும் அலுப்புமில்லாமல் உங்களால் கடந்துபோக முடியுமென்றால் அத் திரைப்படம் வெற்றியடைந்துவிட்டது என்று அர்த்தம். ஒரு சிறந்த குறுந்திரைப்படமானது எம்மை அடுத்தவருக்கு வெளிப்படுத்தும், எமக்கு அடுத்தவரைப் பற்றித் தெரிவிக்கும், எமக்கு எம்மையே வெளிப்படுத்தும். இந்தப்பின்னணிகளோடு அழகு தனுவின் 'சுமைகள்' குறுந்திரைப்படத்தின் நயவுரையினை ஆரம்பிக்கின்றேன்.

    உலகிலே அதிகமாக மழை பெய்கிற இடங்களில் முதலிடம் பெறுவது சிறாபுஞ்சி. ஆனால், அங்கு தண்ணீர்ப்பஞ்சம் நிலவுகிறது. காரணம் அங்கு மழை நீர் சரிவரத்தேக்கி வைக்கப்படுவதில்லை. நமது மக்களும் அதிகமாக அன்பைப்பொழிகிறார்கள். ஆனால் அது சரியான நேரத்தில் இல்லாமல் போய்விடுவது குறைபாடாகவே உள்ளது. வார்த்தைகளால் வீழ்த்தி மேலேறி அமர்ந்து குரல்வளை நெறிக்கிறதாய் அமைகிறது இந்தப் பொது வெளி. அனேகமானோர் எதிர்மறைகளின் கழிவறைகளில் இருந்தே துப்புகிறார்கள். பொதுப்புத்தி என்பது காயப்படுத்துதல்களிலிருந்துதான் அதிக சந்தோசம் கொள்கிறதோ என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகின்றது. நாக்குப்பிய்த்து நேசக்கரம் உடைத்தெறியப்படும் சூழலில் எங்கிருந்தோ எல்லாம் வார்த்தைகள் வெடிக்கும். கானம் இசைத்த இதழ்களைக்கிழ்த்து நீண்டு கிடக்கின்றன கோரைப்பற்கள். இந்த சமுதாயச் சிலுவையில் அதிகம் அறையப்படுபவர்கள் ஏழைகள்தான்.

    இக்குறுந்திரைப்படத்தின் கதை சொல்லும் முறையை பொறுத்தவரை ஒற்றை கதாபாத்திரத்துடன் மிக எளிதில் அமைந்துள்ள நேரியலான கதை கூறும் பாணி (Linear Narrative Style) அழகுதனுவால் கையாளப்பட்டுள்ளது. இறைந்து கிடந்த அவனது மீதங்களை அள்ளி எடுத்துக்கொண்டு சில சிறை வருடங்களுக்குப்பிறகு வெளியில் வருகிறான் நமது கதாநாயகன். தன்னைக்கூட்டிச் செல்வதற்கோ தன்னோடு பயணிப்பதற்கோ அங்கு ஒருத்தரும் இருக்கவில்லை. அன்று இரவை காந்தி பார்க்கில் கழித்துவிட்டு பஸ் ஏறுகிறான். அவனது முகமும் உடல் மொழியும் இடையிடையே காட்டும் மனிதாபிமானமும் எம்மை அந்த பூஞ்சோலை என்ற பாத்திரத்தின் கைப்பிடித்து அப்பாத்திரத்தோடு பயணிக்க வைக்கிறது. 

      தொடர்ந்து, பொதுப்புத்திகளுக்கு மத்தியில் ஆழ்ந்த நட்பினால் கூட எதுவும் செய்துவிட முடியாதென்பதை சந்துரு பாத்திரம் காட்டி நிற்கின்றது. சிதறுண்ட தன்னிலைகளின் ஆத்மா அழும் ஓலம் இக்குறுந்திரைப்படம் முழுக்க கேட்கிறது. திரு அன்ரனி அவர்களாலும் திரு பரமானந்தம் அவர்களாலும் அவனது ஆத்மா அடித்து நொறுக்கப்படும் போதெல்லாம் எமக்கு அவர்கள் மீது கோபம் வருகிறது. ஆனால் உண்மையில் அந்தப்பாத்திரங்கள் நிஜத்தில் நாங்கள் தானே. எத்தனை சொல்லாடல்கள் எம்மத்தியில் இருக்கின்றன. யார் அந்த கொலைகாரண்ட மகனா? ஊர ஏமாத்தித்திரிறவன்ட மகளா? என சிறுசுகளின் மீது சிலுவைகளை ஏற்றிவிட்டு சந்தோசப்படும் "சட்டிச"  மனோ நிலை எம்மை விட்டு விலகியபாடில்லை. ஒருத்தரை அறிமுகப்படுத்துவதற்குக்கூட அவர்களது எதிர்மறைகளிலிருந்தே அறுமுகப்படுத்துகிறோம். அண்மையில் ஒரு சிறுமி ஒரு பரீட்சையில் சிறந்த பெறுபேறினைப் பெற்றிருந்தாள். அவள் யாரென்று கேட்டால் இரண்டுதலைமுறைகளுக்கு முன் அப்பிள்ளையின் குடும்பத்தில் நடந்த மோசமான சம்பவத்தினைக்கூறி அப்பிள்ளை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த சமூகக்கோபமும் வித்தியா போன்ற சிறுமிகளின் படுகொலைகளின் பாதிப்பும் இப்படைப்பிற்கான காரணங்களென நினைக்கிறேன். ஓர் எண்ணம், பல நிகழ்வுகள் இந்தக்கதைக்களத்தினைத் தீர்மானித்திருக்கலாம்.

     காட்சிப்பின்புலத்தினை நோக்கினால், கதைக்கு இயல்பான காட்சிக்களம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தீர்க்கமாக அசையும் கமராக் கோணங்கள் பிரதான பாத்திரத்தின் மன நிலையினை ஆங்காங்கே பிரதிபலித்துக்கொண்டும் செல்கின்றன. கண்ணை மூடி காட்சிகளை மட்டும் ஞாபகப்படுத்தினாலேயே எமக்கு இக்கதையின் முழுமையும் புரிந்துவிடுகிறது. இந்தக்காட்சிப்படுத்தலின் வலிமையினால் சில இடங்களில் திரைக்கதை ஒட்டாதது போல் இருப்பது உணரக்கூடியதாகவிருக்கின்றது. ஆனால் கிராமத்துச் சூழலையும் தனித்துவமான மொழியமைப்பையும் இந்த திரைக்கதையின் மூலம் இப்படைப்பிற்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

       படத்தொகுப்பும் சிறப்பாகவுள்ளது. இசையமைப்பினைப்பொறுத்தளவில் கதையோட்டத்திற்கு இயல்பாக பின்னணி இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே அமைதியும் இசையாகப்பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு சில இடங்களில் இயற்கையான பின்னணி இசையும் இதற்கு பலம் சேர்த்திருக்கிறது. பிரதான பாத்திரத்தின் கண்களும் முகமும் வலியாக எம்முடன் ஒட்டிக்கொண்டிருப்பது. இயல்பான அவரது நடிப்பாற்றலைக்காட்டி நிற்கின்றது. ஏனைய பாத்திரங்களும் கதைக்கேற்றாற்போல் நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். உடை, ஒப்பனை என்பனவும் பொருத்தமாகப்பயன்படுத்தப்பட்டிருந்தமை. நெறியாளரின் அனுபவத்தினைக்காட்டி நிற்கின்றது. மொத்தத்தில் 'சுமைகள்' எமது சமூகத்தில் பாதிக்கப்பட்டவர் மீது தொடர்ந்து ஏற்றப்படும் வலிகளின் கனதியைப்பற்றிக்கூறும் ஒரு சமூகத்தின் அழுகுரல். புதிய புதிய நுட்பங்களோடும் சிந்தனைகளோடும் தொடர்ந்து பயணிக்க அழகு தனுவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...