Tuesday, May 7, 2019

பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுடனான எனது பயணம்...

இக்கட்டுரை 2017 ல்  "பேராசிரியர் சி.மௌனகுரு" மகுடம் சிறப்பிதழுக்காக எழுதியது...

 க.மோகனதாசன்
 
    பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுடனான எனது பயணமென்பது 17 வருடங்களாகத் தொடர்வதாகும். 1994, 1996களில் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளில் பேராசிரியரைச் சந்தித்திருந்தாலும் 2001 லிருந்தே அவரது கையைப் பிடித்துக்கொண்டு சிகரங்கள் பற்றிய கனவுகளுடன் எம்மால் பயணிக்க முடிந்தது. அவர் எமக்கான சிறகுகள் மட்டுமன்றி நாம் பறப்பதற்கான வானத்தினையும்
எமக்கு சிருஸ்டித்துத் தந்தார். அவரது பன்மைத்துவ ஆளுமை உத்வேகத்துடன் செயற்படுவதற்கான மனநிலையைத் தந்ததோடு எம்மை செயற்படவும் தூண்டியது. பேராசிரியரிடமிருந்து நாம் பெற்றது ஏராளம். எதைச் சொல்வது எதைத்தவிர்ப்பது. சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றேன். 

பேராசிரியரின் கற்பித்தல் நுட்பம்
   நான் 2001ல் பல்கலைக்கழகம் செல்கின்றேன். நான் தமிழ் அல்லது பொருளியல் துறையில் விசேட கற்கை நெறியினை மேற்கொள்ள வேண்டும் எனும் தீர்மானத்திலேயே இருந்தேன். புதுமுக மாணவர்களுக்கு பாடங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஒவ்வொரு துறைசார்ந்தும் இடம்பெற்றது. அதில் நுண்கலைக்கான அறிமுகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. காரணம் அன்று எமக்கு அப்பாடத்தினை அறிமுகப்படுத்தியது பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள். நான் மிகத் தீர்மானமாக நுண்கலையினை  1ம் வருட பாடங்களுக்கு மாத்திரமன்றி ஒரு வருட முடிவில் சிறப்புக் கற்கை நெறிக்காகவும் தெரிவுசெய்தேன். 

       பேராசிரியரின் கற்பித்தல் நுட்பம் மிக அலாதியானது. விடயதானங்களை மிகத்தெளிவாக எமக்குத்தருவதோடு அது சார்ந்து தொடர்ந்து தேடுவதற்கும் எம்மை மிக வலுவாகத்தூண்டின. எந்த இடத்திலும்  அலுப்புத்தட்டாத ஒரு கவர்ச்சிகரமான கற்பித்தல் முறையினை அவர் தனது முறைமையாக வைத்திருந்தார். நாம் சிந்திப்பதுண்டு ஏன் எல்லோராலும் இவ்வாறு முடிவதில்லை. இவருக்கு இவ் ஆற்றல் வரக்காரணம் அவருடைய இலக்கியப்புலமையா? பல்துறை வாசிப்பா? அவரது நடிப்பாற்றலா? அல்லது எல்லாம் சேர்ந்தா? உண்மையில் விடயதானத்தில் இருக்கும் ஆழமான புலமையும் மேற்சொன்ன விடயங்களும் சேர்ந்தே இதனைத் தீர்மானிக்கின்றன என நினைக்கிறேன். ஒரு அனுபவமுள்ள கைதேர்ந்த ஓவியர் ஒரு கோட்டுப்படத்தினை(Sketch) வரையும் போது நான்கைந்து கோடுகளுக்குள் அப்படத்திற்கான முழுமையினைக் கொண்டு வந்து விடுவார். மொத்தத்தில் பேராசிரியரின் ஆழமான புலமையும் பல்கலைச்கங்கமமும் தரமான அலாதியான கற்பித்தல் முறைமையினை அவரிடத்தே உருவாக்கியிருக்கிறது எனலாம்.

ஆற்றுகைகளிலுருந்து...
  2001 லிருந்து பேராசிரியரின் பல்வேறு ஆற்றுகைகளில் நான் பங்கு பற்றியிருக்கின்றேன். இராவணேசன், லயம், கிழக்கிசை, மேளப்பேச்சு, காண்டவ தகனம், தோற்றம், பரதமும் கூத்தும், வேரிலிருந்து கிளைகளுக்கு என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கன. 

    2001ல் பேராசிரியர் மௌனகுரு அவர்களால் இராவணேசன் நெறியாள்கை செய்யப்படுகின்றது. அப்போதுதான் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்த என்னை நாடகத்திற்குள் உள்வாங்குகின்றார். அது என்னால் நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை. பல்கலைக்கழக விருந்தினர் விடுதியிலும் ஆசிரியர் கலாசாலையிலும் இதற்கான பயிற்சிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு நாளும் பயிற்சியானது வெவ்வேறு அனுபவங்களாக இருக்கும். சில நேரங்களில் இறுக்கமாக இருக்கும். சில நேரங்களில் கலகலப்பாக இருக்கும். ஆனால் அன்றைய நாளுக்கான திட்டம் மிக உறுதியாக இருக்கும். நாளுக்கு நாள் நாடகம் மெருகேறிக்கொண்டே செல்லும். நான் இப்பயிற்சிகளினூடாக நாடகத்திற்கான இசை மட்டுமல்லாது, நெறியாள்கை, நடிப்புப் பயிற்சி என்பவற்றோடு தீவிரமான நாடகச்செயற்பாட்டின் ஒழுக்க முறையினையும் சரியான முறையில் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நாள் பயிற்சி முடிவிலும் கலந்துரையாடல் இடம்பெறும். எல்லோரும் தமது கருத்துக்களைப்பகிர்ந்து கொள்வர். அந்தச்சூழல் அப்போது புதிதாகவும் ஆச்சரியாகமாகவும் இருந்தது. 

   2001, 2004, 2010, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் உருவாக்கம் பெற்ற இராவணேசன் நாடகங்களில் தொடர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து. ஒவ்வொன்றும் வெவ்வேறு. ஒரு நாடகத்தின் தன்மையும் மற்றையதும் வெவ்வேறானது. கதை சொல்லும் விதத்திலும் ஆற்றுகை நுட்பங்களிலும் அது வேறுபட்டிருக்கும். அது அக்காலத்தின் முக்கியமான கதையாடலைப் பேசியிருக்கும். இதனை புகழ் பெற்ற வான்கா போன்ற ஓவியர்களின் சில ஓவியங்களிலும் காணலாம். ஒரு ஓவியத்தினை தமது மன நிலைக் கேற்ப மாற்றி மாற்றி வரைவர். இங்கும் ஒரு கதை அக்காலத்தின் உணர்வுகளை எழுதி நிற்கின்றது.

  லயம் ஆற்றுகையானது, கிழக்கிலங்கையில் இருக்கும் பல்வேறு ஆற்றுகைக்கோலங்களை அடிப்படையாகக்கொண்டது. இதில் கிட்டத்தட்ட 40 பேரிற்கு மேல் பங்கு பற்றினர். விரிவுரையாளர்களும் மாணவர்களும் பங்குபற்றிய இந்நிகழ்வானது, பல இடங்களில் ஆற்றுகை செய்யப்பட்டு வெற்றியும் கண்டது. எவ்வாறு கலை வடிவங்களை நுட்பமாக இணைக்க முடியும் என்பதை பேராசிரியரிடமிருந்து இவ் ஆற்றுகையில் கற்றுக்கொண்டேன். இவற்றினைப் போன்றே கிழக்கிசை, கூத்தின் அழகியல் போன்ற ஆற்றுகைகளிலும் எம்மை ஒரு அரங்கவியலாளனாக நிலை நிறுத்திக் கொள்வதற்கான சூழல் தரப்பட்டடிருந்தது. 

அரங்க ஆய்வு கூடத்தின் சக பயணியாக...
  பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் பேராசிரியரால் உருவாக்கப்பட்டுள்ள அரங்க ஆய்வு கூடத்தின் மூலம் தொடர்ந்து பயணிப்பதற்கான சூழல் எமக்கு உருவாகின்றது. அரங்க ஆய்வு கூடம் கலையாக்கற்செயற்பாட்டிற்கான சுதந்திர வெளியினைச் சிருஸ்டித்திருந்தது. பயிற்சிகள், விரிவுரைகள், கலந்துரையாடல்கள், ஒளிப்படக்காட்சிகள், ஆளுமைகளுடனான சந்திப்புக்கள், ஆற்றுகைப் பரிசோதனைகள், ஆற்றுகைள் என எம்மை பல்வேறு தளங்களில் விசாலப்படுத்துவதற்கான முறைமையுடன் பேராசிரியரால் ஆரங்க ஆய்வு கூட பயில்முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. நாம் புதிது புதிதாக பல தளங்களில் வேலை செய்வதற்கும் புதிய சிந்தனைத் தளங்களில் பயணிப்பதற்கும். அரங்க ஆய்வு கூடம் எமக்கு ஒரு ஆதர்சமாக இன்றளவும் இருக்கிறது. நாம் வெளியிடங்களில் சென்ற ஆற்றுகைகள் செய்து முடித்த பின் எமக்கு அவர்கள் தரும் கரகோசமும் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் அரங்க ஆய்வு கூடம் இன்று ஆற்றுகைப் புலத்தில் தவிர்க்க முடியாததொன்றாக மாறியிருப்பதும் அதனோடிணைந்து நாம் செயற்படுவதும் எமக்கு மன நிறைவைத் தருகின்றது. 

எமது வாழ்வின் வழிகாட்டி
    பேராசிரியர் அன்று தொட்டு இன்று வரை எம்மை வழிப்படுத்தும் ஒரு வழிகாட்டியாக வழி நடத்திக் கொண்டே வந்திருக்கிறார். நான் கொடிய யுத்தத்தில் பாதிக்கப்பட்டு எனது மூன்று சகோதரங்களை இழந்து கிட்டத்தட்ட ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனாகவே பல்கலைக்கழத்திற்கு வந்திருந்தேன். என்னை அந்த மனநிலையிருந்து மீட்டு புதியதொரு ஒளியைக்காட்டியவர் பேராசிரியர் அவர்களே. நாம் தடம் மாற இருக்கின்ற இடத்திலெல்லாம். நமது கையைப் பிடித்து சரியான பாதையில் வழிநடத்திய நன்றியை நான் என் மனதில் எப்பொழுதும் நினைத்துக் கொள்கிறேன். உண்மையை உணர்த்தினார், புதிய உலகினைக் காட்டினார். சோர்ந்து போயிருக்கும் போதெல்லாம் எமக்கு சக்தியூட்டினார். கடினமான பாதைகளைக்கடந்து செல்வதற்கான தைரியத்தையும் தந்தார். 
  
      அவரது வாழ்க்கை முறையே எமக்கு ஒரு வகை மாதிரிதான். எளிமையான வாழ்வு, நேரந்தவறாமை, எப்பொழுதும் செயற்பட்டுக்கொண்டிருத்தல், வார்த்தை ஜாலங்களைவ விட செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல். எதனைச் செய்தாலும் அதனைத் திருத்தமாகச் செய்தல், செயற்பாடுகளைத் திட்டமிடல் என அவரிடமிருந்து நாம் நிறையவற்றைக் கற்றுக்கொள்வேண்டியிருக்கிறது. நான் முடிவெடுக்கத்திணறும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஆலோசனை கேட்பது பேராசிரியரிடமே. பல தடவைகளில் அவரது தீர்க்க தரிசனத்தை நான் உணர்ந்திருக்கின்றேன். நாம் அந்தக் கோணத்திலேயே சிந்தித்திருக்க மாட்டோம். இது இப்படித்தான் நடக்குமென்பார். அவ்வாறே நடந்தேறும். நமக்குக் கிடைத்த காலத்தின் கொடை. நாம் அவர் காலத்தில் வாழ்கின்றோம். அவரோடு பயணிக்கின்றோம். வேறென்ன வேண்டும் நமக்கு. 




1 comment:

  1. மறக்கப்பட்ட தமிழர் சிலம்ப கலையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் நூல் தேவை. எப்படி வாங்குவது?

    ReplyDelete

Diderot effect

 Diderot effect