Monday, May 6, 2019

மனச்சாட்சியிடம் ஒரு தரம் பேசி விட்டு வா

தனக்காக மட்டும்
ஓலமிடும் தராதரமே...!
எங்களைப் பிடிங்கிய பின்பும்
எதற்காகப் புலம்புகிறாய்?
எங்கள் வலி சூடி

அலங்கரித்துக் கொள்கிறாய்
உன் கதிரையினை…!
ஈவிரக்கம் இன்றியல்லோ
எம்மைப் பறித்து
உமது ஆட்டங்களுக்கு
அடவு வைத்துக் கொள்கிறாய்..!
நீ விலக்களித்திருக்கும்
மனச்சாட்சியிடம்
ஒரு தரம் பேசி விட்டு வா
குந்தியிருந்து கதைப்போம்.!
எமது மெல்லிய நரம்புகளில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
புன்னகைகளை நீ
உனக்கேற்றது போல்
மொழி பெயர்த்துக் கொள்ளலாம்!
ஆனால் நீ வீசிய
அந்தச் சொல்லில்
அறுபட்டுக் கிடக்கிறது
அத்தனை மெல்லினங்களும்..
உனக்கான கரிசனைகளின்
கடைசிப் பெட்டியும் - இந்தத்
தண்டவாளத்தில் இருந்து
தவறிவிட்டது..!

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect