Monday, May 6, 2019

ஒரு சிறுவனின் டயறிக் குறிப்பிலிருந்து....

ஒரு முரட்டு
நிமிஷத்தில்
எமது ஒட்டு மொத்த
சந்தோசத்தையும்
எங்கள் அப்பாவுடன் சேர்த்து
அள்ளிக் கொண்டு சென்றனர்!
கணாமலாக்கப்பட்ட
எம் வசந்தங்களை

திரும்பத்தருவதற்கோ
எம் வலிகளை
தொட்டு இறக்குவதற்கோ
எவரும்
முன்வந்ததாகத் தெரியவில்லை!
பக்கத்து வீட்டுப் பையனை
அவனது அப்பா
பாடசாலையில்
முத்தமிட்டு இறக்கிவிடும் போது
எங்கப்பா கடைசியாகத் தந்த
முத்தத்தின் ஈரத்தை
தடவிப் பார்த்துக்கொள்கிறேன்!
அந்தச் சிறுவர்கள் - தமது
அப்பாவுடன் சிறுவர் பூங்கா
சென்றது பற்றியோ
அவர்களது அப்பா வாங்கிக் கொடுத்த
விளையாட்டுப் பொருட்களைப் பற்றியோ
கதைக்கும் போது
எமக்கு எமது அன்பு அப்பா
வாங்கிக் கொடுத்த
அன்புப் பரிசுகளை கண்ணீருடன்
ஆரத் தழுவிக் கொள்கின்றோம்
அவையே இப்போதய
எமது அப்பாவினுடனான
நினைவிடை நனைதல்கள்!
எமது அப்பாக்களைப் போல
பலரது ரத்தமும் வலியும் நிறைந்த
கதைகளை விற்றுத்தானே
அவர்கள் தமக்கான
கதிரைகளை வாங்கினார்கள்!
நாம் எதற்காக இப்படி
இன்னும் இருக்கிறோம்?
அடுத்த தடவையும்
கதிரைகள்
விற்பனை செய்யும் போது
எமது அப்பாக்களும் அழுகுரல்களும்
காய்ந்து போன
எமது முகங்களும்
அவர்களுக்குத் தேவையாக இருக்கும்!

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...