Sunday, May 19, 2019

தீராத பிரார்த்தனையில் திளைத்திருக்கிறது மனசு

"ஆரையம்பதி கண்ணகையம்மனின் புகழ்பாட வந்தோம்" இறுவட்டு பாடல்களுக்கான  நயவுரை...


 இற்றைப்பொழுது தனிமை மிகும் இதயத்தின் இடுக்குகளில் நிம்மதியை தேடிக்கொண்டு தவிக்கிறது. இந்த துயரம் கொடுக்கும் தனிமையின் பெருவலி உள்ளுக்குள் நெருப்பொன்று பூத்த உணர்வாய் அலைகிறது.
எம்மைக் கொன்று போடும் ஆயிரம் யூகங்களுக்கு மத்தியில் ஒன்றிணைக்கும் நம்பிக்கைள் தத்தம் இடத்திலிருந்து எல்லாம் சற்று நகர்ந்திருக்கின்றன, அல்லது இல்லாமல் போயிருக்கின்றன. பிய்ந்து தொங்கும் புன்னகை, கைவிடப்பட்ட கனவுகள் என்பவற்றோடு எம்மை அடித்துப்போட்ட ஒரு வலியின் மேல் எதிர்காலங்களை கிடத்திவிட்டு ஒரு பெருமூச்சுடன் மட்டும் கடந்து செல்ல முடிகிறது எம்மால்...? 

  இந்தச் சூழலில் வாழ்தலுக்கான பிரியங்களை சமைப்பதென்பது அப்போதைக்குத் தேவையான பெரும் பசியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத சூழலில் ஒரு வலியாய் கடக்கிறது. ஆனாலும் வாழ்வினை உணர்ந்த நிமிடம், உறைந்த தருணம், உடன் வரவேண்டுமென்று உள்ளுக்குள் நெருப்பொன்று பூத்த தருணம், அத்தனையின் காலடியோசைகளையும் இணைத்து நம்மைக்காணுதலும் இன்றைய நியதிகளை சமூகத்தின் மனசாட்சியைக் கட்டமைப்பதிலும் இறைநிலையில் எழுந்த கவித்துவ பாடல்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. இசையாக, தூய எழுச்சி நிலைகளாக அவை அடையப்படுகின்றன. இறையின்; இரகசியம் பற்றிய சூட்சுமங்களின் தேடலே பக்தி கானங்களின் இதயத்துடிப்பு என உணர்ந்து, படைக்கபட்டதே 'ஆரையூர் கண்ணகியின் புகழ் பாடவந்தோம்' எனும் ஒலிப்பேழையாகின்றது.

  தூரங்களைச் சிறகுகளால் கடக்கும் பறவை போல, இந்த இறைநிலைப்பாடல்கள் எம்மை எங்கெல்லாமோ தூக்கிச் சென்று விடுகின்றன. அதன் தன்மை என்ன? அதன் தத்துவம் என்ன? அது எமக்கு எடுத்துத்தரும் வாழ்வியல் அணுகுமுறையென்ன? அது தரும் அனுபவம் என்ன? அது சொல்லும் சேதியென்ன? என்று உணர்வதற்கு, நாம் அந்த சூழ்நிலைக்குள் எம்மை கரைத்தல் அவசியமாகின்றது. இந்தப்பாடல்களின் உள்ளிருக்கும் துடிப்பைக் கேளுங்கள், அவை விரும்பும் இடத்திற்கு நம்மை கைபிடித்து அழைத்துச்செல்லும் வாஞ்சை நிறைந்தவை. அனுபூதி நிலையில் அவை மனங்களை மாற்ற விடுக்கும் சமிக்ஞைகளை தொடர்ந்து கொண்டேயிருங்கள், அதன் உணர்வை நழுவவிடாது பற்றிக்கொள்ளுங்கள் ஒரு இறைநிலையின் அருகாமையை உணர முடியும் உங்களால்.

   ஒளி விரித்துச்சட்டென ஆட்கொள்ளும் அற்புதம்! அந்தச்சுடரில் அப்படியென்ன இருக்கிறது எனப்பார்த்தால், பாடலும் பாடுபொருளும், இசையும், கவிவல்லமையும் என எல்லாம் இணைந்து என்னிடம் திரும்பி வா பக்தனே என தனது ஆன்மாவிலிருந்து இறையின்பமது கூப்பிடும் குரலாக, செவிமடுத்த ஆத்மாவின் புலரிக்கான பூபாளமாக நம்மில் இயல்பாகப் பரவுகிறது. பிரசாத் அவர்களின் கவி வரிகளில் சபேசனின் குரலில் 'அரச மரத்தடியின் நிழலில் அமர்ந்து நான் மனிதனாக வேண்டும் குருத்து மணலிலே புழுதி அழைந்து நான் புனிதனாக வேண்டும்' எனும் பாடல் தனக்குள்ளே கடவுளைத் தேடும் உள்முகப்பயணத்தினை ஆரம்பிக்கிறது. அன்னையே உனது கருணை ஊற்றிலே பருகினேன் ஒரு சிறு துளி, ஒரு பேரலை ஆட்கொண்டது என்னை அது புனிதனாக  உள் உணர்தலின் சாத்தியங்களை கொண்டிருப்தாக நம்மையும் ஆட்கொள்கிறது. இசையாக தழுவுகிறது அப்பாடல்.

          பிரசாத் அவர்களின் கவிவரிகளில் சிது சயோமியின் குரலில் அமைந்தது 'வைகாசி மாதமென்றால் மனம் குளிரும் அன்னையின் முகம் காண ஆசை வரும்...' ஒரு அழகிய தாலாட்டாக அது நம்மை  வருடுகிறது. அந்தப் புல்லாங்குழலும் நம்மை மெல்லத்தடவுகிறது. வானுயர்ந்த கோபுரங்கள் இங்கு இல்லை ஆனாலும் அவளருளில் தொய்வு இல்லை. தேனான நாமம் சொன்னால் பயமும் இல்லை. புhற்குட பவனியில்லை. ஆனாலும் அவள் இரக்கம் குறையவில்லை அன்னை எங்கள் துயர் தீர்க்க மறப்பதில்லை. எனத் தொடரும் அப்பாடல் ஒரு கனவை, ஒரு அனுபவத்தை மிக அழகாகத் தருகிறது. இதற்கான சதீஸ் அவர்களின் இசையும் பொருத்தமாய் அமைய ஒரு ஆன்மீக இசையுணர்வுக்குள் எம்மால் நுழைய முடிகிறது.

     நிறைவுற்ற மனம் பசியறியாது அது அந்த சித்து நிலைக்குள் தானே திளைத்துக்கிடக்கும். மெய்சிலிர்த்தலின் உணர்தல்கள் எவ்வாறெல்லாம் மாறும் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன அது எவ்வாறு கட்டற்ற கவலை மறத்தலைச் செய்திருக்கின்றன என்று யோசிக்கிறேன். இன்றையின் அவதானிப்புக்களால், சமகாலச்சூழலின் உன்மத்தங்களால் உணர்விழந்த ஆன்மாவிற்கு நிவாரணமளிப்பதாகவும் இந்தப்பாடல்கள் அமைந்திருப்பது இதன் சிறப்புக்களாகின்றன.

         சபேசனின் குரலில் 'குயில்களும் கூவும் வேளை தவிலின் நாதம் கேட்கும்...' எனும் பாடல் இன்னொரு அனுபவத்தைப்பரவவிடுகிறது. 'கைச்சிலம்பு கலகலக்க மெய்யடியார் உடல் நடுங்க தீபத்தின் ஜோதியிலே உம்மைக்காண்கிறேன். எங்கள் ஆரையம்பதி கண்ணகியின் எழிலைக்காண்கிறேன்...' எனத் தொடரும் இப்பாடலுக்கு தவிலும் நாதஸ்வரமும் மேலும் அலங்காரங்களாகின்றன.

         நாம் எப்போதெல்லாம் மோதிச்சிதறி மீண்டும் ஒரு சிமிளிக்குள் சுருண்டு கொள்கிறோமோ, அப்போதெல்லாம் செயல்படுத்தக்கூடிய ஒரு உந்து விசையினை இந்த இசையும் பாடல் வரிகளும் நமக்குள் ஏற்படுத்தி விடுகின்றன. மனதில் தேக்கிவைத்திருக்கும் இறங்க மறுக்கிற ஆணவச் சிம்மாசனத்தின் கால்களை உடைத்து அன்னை கண்ணகித்தாயாரின் பிரமாண்டத்தினை எம்மில் எழுதி ஒரு ஆத்மீக தைரியத்தினைத்தருகின்றன பாடல்கள். மண்ணின் பாரம்பரியத்தினையும் அது கொண்டுள்ள தனித்துவங்களையும் ஆங்காங்கே பதிவிட்டுக்கொண்டு சென்றிருப்பதையும் காண முடிகின்றது.

         ஆகுஜன் மற்றும் சிது சயோமி ஆகியோரின் குரலில் அமைந்த 'வண்ணம் பாரம்மா ஆரையூர் வடிவைப்பாரம்மா எண்ணமெல்லாம் கல்யாணச்சடங்குதானம்மா...' என கல்யாணச் சடங்கை அதன் அழகை, நடைமுறையை படிம வியாபகமாய் தருகின்றது பாடல். எம்மை விட்டோடாது இருக்கின்ற பண்பாட்டின் அரிச்சுவடி இங்குதான் ஆரம்பிக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு கும்மி மெட்டை ஞாபகப்படுத்துகின்றது பாடல்.

          கண்ணகித்தாயாரின் உயரம்தான் என்ன? ஆனால் நமக்கான திசையை எழுதும் திசையாய் அவள் இருக்கிறாள். அஞ்ஞான இருள் நம்மை, நமக்குள் பூட்டி வைத்திருக்கும் அத்தனை கதவுகளையும் தனது வெளிச்சக்கரங்களால் திறந்துவிட்டு புதிய ஒன்றிற்கான பிரம்மாண்டத்தினையும் அறிமுகம் செய்கிறாள் அந்த ஆதித்தாய். அதற்காக 'காவடிகள் தூக்கி ஆடினோம் நாங்க சொன்னபடி நேர்த்தி முடிக்கிறோம்.. என ஒரு மகிழ்ச்சியின் துள்ளலாய் நம்மை மறந்து ஆட வைக்கும் பாடல் தனுராஜின் குரலில் அமைந்தது. துந்துபியும் அரோகராச்சத்தமும் அதன் வரிகளும் இசையும் நம்மை சன்னதம் கொள்ள வைக்கின்றன. 'முதுகினிலே அலகு பாய்ச்சி இழுக்கும் காவடி மூல வேதமந்திரமுருவேற்றும் காவடி ஆனந்தமாய் மெய் மறந்து ஆடும் காவடி எங்க ஆரையூர் கண்ணகியை நாடும் காவடி எனத் தொடரும் பாடல் அன்னையின் அருளைக்கொண்டாடுவதாக அமைந்துள்ளது.

    ஒரு இறைநிலைப்பாடலின் வழியே கேட்பவருக்குள் நுழைந்து அவர் மனத்தை உருக்க, பரவச நிலைக்குள் கொண்டு செல்ல சிலரால் முடிகின்றது. ஒரு இறைநிலை கவித்துவச்சொல்லாடலை பக்தனுடைய மனதை இடமாகக் கொண்டு இவர்களால் நிகழ்த்தவும் முடிகிறது. சில மெட்டுக்கள் கேட்கக்கேட்க திகட்டாத அனுபவத்தைத் தரவல்லன. 'தந்தனத னாதனத...' எனும் காவிய இசை மெட்டு எமது பாரம்பரியத்தின் சின்னம். அந்த மெட்டுக்கு பரிபூரணாந்த முதலியார் அவர்களால் எழுதப்பட்ட 'ஆரையம்பதியிலுறை கண்ணகித்தாய்மேல் அன்போடு காவியம் செப்புதற்கே தான்...' எனும் காவியம் கண்ணகி வரலாறு கூறுதோடு இன்று எம்மத்தியில் இல்லாது போகின்ற நம்பிக்கையினையும் தைரியத்தினையும் கண்ணகித்தாயாரை முன்னிறுத்தி ஊட்ட முயல்கிறார். உய்யதொரு சக்தியாய் உலகோர்கள் போற்ற உற்றதொரு குலம் வாழ ஆரையம்பதியில்.. என்பதாக ஆன்மீக கருத்துக்களோடு சமூகத்துக்கான உளவியல் பலத்தினையும் வழங்குவதாக அமைந்துள்ளது இக்காவியம். இதனை ராஜ் மற்றும் நிஜேவிதா ஆகியோர் பாடியுள்ளனர். 

   ஆரையம்பதி கண்ணகைக்கு இந்த இறுவெட்டையும் சேர்த்தால் 4 மணித்தியாலம் 18 நிமிட நீளத்திற்கு பாடல்கள் உள்ளன. உண்மையின் இசையே சாஸ்வதமானது. இதனை உணர்ந்து இவ் அளப்பரிய கைங்கரியத்தினை தயாரிப்பாளர் றஞ்சித்குமார் அவர்கள் செய்திருக்கிறார்;. இசையமைத்த ராஜ் மற்றும் சதீஸ் ஆகியோரும் அதனை அழகாக ஒலிக்கோர்ப்புச்செய்த பிரணவன் மற்றும் ராஜ் ஆகியோரும் மிகச்சிறப்பாக தமது கடமைகளைச் செய்திருக்கிறார்கள்.

     பார்த்த கணத்திலே சட்டென மனம் திறந்து கனவுகளை ரகசியங்களை பரிமாறிக்கொள்ளுமிது, தான் அனுபவித்த விடய மொன்றை தன் இசையிலே தனித்துவமானதொரு வழியிலே தொடங்குகிறது இந்த ஒலிப்பேழை. உள்ளார்ந்த நெருக்கத்தின் உத்வேகம் அணையுடைத்து காட்டாறெனப் பாய்கிறது. ஈடிணையற்ற அன்னையுடனான உரையாடலை இது சாத்தியமாக்குகிறது. தீராத பிரார்த்தனையில் திளைத்திருக்கிறது மனசு. அரைகுறை மனதுக்கு அகண்டவெளி அகப்படாது. முழு மனதோடு பேரிருளை நீக்கி பயணிக்கத்தீர்மானித்திருக்கின்றன இப்பாடல்கள், ஒரு பரவச இறையியலோடு பயணிக்கின்றன, நம்மையும் ஆரத்தழுவிக் கொள்கின்றன. 

        கடலலையென இந்த இசைத்தல் அன்னையின் அருட்கடலின் ஆழத்தில் எங்கோ ஓர் மூலையில் பிறக்கின்றன. தனிமை பற்றி இங்கு எவரும் புகாரிட்டுக்கொண்டிருக்கத்தெவையில்லை. அச்சமூட்டும் தனிமையின் சொல்லாடல் இங்கே அடித்து நொறுக்கப்படுகிறது. எல்லோரும் ஒன்றிப்போம் இசையென்ற பேரனுபவத்தினூடாக...


க.மோகனதாசன்

பாடல்களைக் கேட்க....

No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...