Wednesday, May 8, 2019

எருவில் மாணிக்க ஜெயந்தன் சில அதீதங்களை படைக்க முயன்றிருக்கிறார்...

கவிஞர் எருவில்  மாணிக்க ஜெயந்தனின் இறுவட்டுக்கான அறிமுகவுரை


  கனத்த மனதுடனும் மௌனச் சுமையுடனும் ஓடுவது இப்போது எல்லோருக்கும் பழகிவிட்டது அது காலத்தின் கட்டாயமும் கூட. நமக்கு தொலைக்காட்சி வந்தது ஆனால் அந்த தொலைக்காட்சி வெளிச்சத்தில் நமது ஆத்மவை தொலைத்து நிற்கிறோம். இந்த மோசமான சூழலில் இருந்து
மீள நமக்கு ஒரு ஆன்மீகப்பின்னணி தேவையாயிருக்கிறது. இந்தச்சூழலை இலகுவாக்க இறைவனை இசையால் வழிபடுதல் நமது மரபில் பயில்நிலையில் உள்ளது. இசையால் வசமாகா இதயமெது இதனாலேயே வேதத்தின் ஒரு அங்கமாக சாம வேதம் அமைந்திருக்கிறது. சாம வேதம் என்பது இறைவனை சங்கீத ரூபமாக உச்சரிக்கபடுகிறது. அதில் இருக்கும் பல வார்த்தைகள் இசையாகவே அமைந்திருக்கின்றன. இராவணன் சாம வேதத்தை வீணையில் வாசிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். அவன் சாமகானம் வாசித்தால் கைலாய மலையே உருகும் என்பது இசையின் பெருமை. 

ஊன் உயிர்கள் உள்ளமெல்லாம்
உருகிடவே அருவியைப்போல்
தேனமுதத் தென்றலிலே
கானமுதம் பொங்குதடா

ஊட்டும் தாய் அன்பினிலே
உள்ளதெல்லாம் சொல்லி உன்னை
வாட்டமின்றி கண் வளர
வாழ்த்தியதும் இன்னிசையே

ஆடுவதும் பாடுவதும் அவரவர்க்கு வாய்ப்பதல்லால்
வீடு தோறும் கீரையைப் போல்
விலை போட்டு வாங்குவதா ?

  என்ற S.C.கிருஷ்ணன் அவர்கள் பாடிய பாடல் வரிகள் இங்கு மனங்கொள்ளத்தக்கது. பிரணவம் இறைவனின் நாத வடிவம். முதலில் நாதம் அதன் பிறகே அனைத்து படைப்புகளும் விரிந்தன.  நம் மொழிகள் கலாச்சாரம், சிந்தனை அனைத்தின் உள்கட்டமைப்பும் இந்த ஒலியாலேயே விவரிக்க முடியும். ஒரு இசை வடிவத்தை நாம் ரசிக்கின்றோம் என்றால் அந்த இசை எங்களை ஈர்த்தது என்பதல்ல. எங்களுக்குள் இருக்கும் இறைநிலை ஒலிவடிவில் இருக்கிறது. அந்த ஒலி தன்னை போன்ற இசைவடிவை வெளியில் இருந்து ஈர்த்தது. எங்கள் மனம் மற்றும் ஆன்மாவின் நிலைக்கேட்ப இசை எம்மை ஈர்க்கும். நாம் மிகவும் கடினமான தன்மையில் இருந்தால் கடினமான இசையும், மிகவும் மென்மையாக இருந்தால் மெல்லிசையும் எம்மைக் கவரும். 

காலத்தின் தேவையுணர்ந்து இந்த இறுவெட்டு வெளியிடப்படுகிறது. எருவில் அருள்மிகு ஸ்ரீ கேதாரகௌரி அம்பாள் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் வெளியிடப்படும் இவ் இறுவெட்டுக்குரிய பாடல் வரிகளை கவிஞர் எருவில்  மாணிக்க ஜெயந்தன் அவர்கள் தம் உள்ளுணர்வினின்றும் உருக்கொடுக்க அதற்கான இசையினை மருதமுனை யு.ஜே.நஸார் அவர்கள் வழங்கியிருக்கிறார். அதனை குரல் வழியினால் பாடல்களாக்கி கல்முனை பி.கே.சேகர், காரைதீவு திருமதி எழில்வேணி சுதர்சன், மகிழுர்முனை விதுசன் லிங்கம் ஆகியோர் நம் செவிகளுக்கும் மனத்துக்கும் விருந்தளித்துள்ளனர். இந்த ஆன்மீக கைங்கரியத்திற்கு வர்த்தகர் எருவில் கிருஸ்ணபிள்ளை யுவராஜ் அவர்கள் அனுசரணை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எருவில்  மாணிக்க ஜெயந்தன் அவர்கள் வெறுமனே பக்தி ரஸம் மட்டும் கலந்து இப்பாடல்களை உருவாக்கியிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக ஒரு வரலாற்று இயங்கியல் பின்னணியோடு கௌரி அம்பாளை முன்னிலைப்படுத்தி சமூகத்தின் பொது உளவியலின் ஆரோக்கியமான ஒரு உந்துவிசையினை புகட்ட முனைந்திருக்கிறார். பாடல் வரிகளிலும் சரி பாடல் உருவாக்கற் பின்னணியிலும் சரி பல்வேறு சமூக ஒருங்கிணைப்பினை மேற்கொண்டிருக்கிறார். வாய் கிழியக்கத்துதல்களால் உருவாக்க முடியாத அசாத்தியங்களை தனது பாடல்களால் சாத்தியமாக்கியிருக்கிறார். எளிதாக விளங்கக்கூடிய வரிகள் அதற்கு அளவெடுத்து தைச்ச அழகிய சட்டையாக இசை, அதனை அலங்கரிக்கும் அழகிய ஆபரணமாக பக்தி உணர்வெளிச்சியுடன் கூடிய குரலிசை எல்லாம் சேர்ந்து எம்மையறியாமல் பரவசத்தினுள் தள்ளிவிடும் சுட்சுமங்கள் நிறைந்தவை. மண்ணின் பழமையினையும் அது கொண்டுள்ள தனித்துவங்களையும் ஆங்காங்கே பதிவிட்டுக்கொண்டு சென்றிருப்பதையும் காண முடிகின்றது.

    நாம் பல மணி நேரம் உரையாற்றுவதையும், பல பக்கங்கள் எழுதுவதையும் பாடல்கள் சில வரிகளில் எம்முள் இறக்கிவிடுகின்றன. சில பாடல்களில் பயன்படுத்தும் வார்த்தைகளும், கருத்தும் சில நேரங்களில் எமக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிடும்.

    எருவில் மாணிக்க ஜெயந்தன் அவர்கள் சில அதீதங்களை படைக்க முயன்றிருக்கிறார். சில இடங்களில் அது கைகூடியும் இருக்கிறது. ஒவ்வொரு பாடலிலும் புதிது, புதிதாக தாவிச் சென்று பாடல்களில் பலவிதமான உணர்வு நிலைகளை ஏற்படுத்தியிருக்கிறார் அவரது இசைப் பாடல்களுக்கு முக்கிய அகத்தூண்டுதலாக நாட்டுப்புற பண்பாட்டுப் பின்னணியைக் கொண்ட இவரது வாழும் சூழல் முக்கிய பங்காற்றியிருக்கின்றது எனலாம். மிகச் சிறந்த இசைமரபைக் கொண்ட தமிழ் சூழலில், பலருக்கு அது சுமையாய் அமைந்து விட்ட சூழ் நிலையில், அதிலிருந்து உள்ளக்கிளர்ச்சிகளை உருவாக்கக் கூடிய, ஆன்மீக எழுச்சிகளை ஏற்படுத்தக்கூடிய வரிகளை தந்திருக்கிறார். அதற்குத்தகுந்தாற்போல் இசையமைப்பாளரும் பாடகர்களும் செயற்பட்டிருப்பதும் மனங்கொள்ளத்தக்கது. கூறியது கூறல்; மாறுகொளக் கூறல், குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்;. பொருளில கூறல்; மயங்கக் கூறல் இலக்கியத்திற்கு மட்டுமல்ல இசை போன்ற கலைகளுக்கும் பொதுவானதாக உள்ளது எனலாம். இந்தப்பாடல்களிலும் வௌ;வேறு மெட்டுக்களை பயன்படுத்தியிருப்பது இவர்களது இசையாற்றலை வெளிக்காட்டி நிற்கிறது.

    இன்று  Rock, Rap  என எமது சூழலுக்குப் பொருத்தமில்லாத எம்மை இந்த சூழலிலிருந்து அந்நியப்படுத்துகின்ற இசை வடிவங்கள் வந்துவிட்டன. அவை எமது இசை வடிவங்களை மட்டுமல்லாது எமது கலை பண்பாட்டையும் உணர்வுகளையும் சிதைத்து விடுகின்றன. சிம்மாசனத்தில் உட்கார்ந்து விட்ட நாம் இன்று ஜிகினா நாற்காலிகளையும் அனுமதித்துக்கொண்டிருக்கிறோம். இது சரியா பிழையா என்பதற்கு அப்பால் எம்மை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே தவிர்க்க முடியாத உண்மையாகின்றது. 

    மொத்தத்தில் இந்த இசைப்பாமாலை ஆத்மார்த்தமான  ஒரு ஆன்மீக இசையனுபவத்தினையும் அதனூடாக இங்கிருக்கின்ற ஆலயங்களுக்கான வரலாற்றுப் பின்னணியினையும் தந்திருப்பதோடு மன நெகிழ்சியினையும் உருவாக்கியிருக்கின்றன எனக்கூறலாம். பக்தி என்பது ஒன்றுடன் நாம் ஒன்றுவது. பக்தி என்பதைக் கடவுள் நம்பிக்கை என்று பார்த்தாலும் அல்லது ஒன்றின் மேல் நாம் வைத்திருக்கும் தீவிர ஆசை என்று பார்த்தாலும், கடவுள் நம்பிக்கை இருப்பவர்களையும், இல்லாதவர்களையும் தன்னை மறக்கச் செய்வது இசை. இசையின் தன்மையுணர்ந்து இந்த ஒலிப்பேழையினை எருவில்  மாணிக்க ஜெயந்தன் அவர்களும் குழுவினரும் மிகச்சிறப்பாகவே செய்திருக்கின்றனர். காலத்தின் தேவையுணர்ந்து இதற்காக உழைத்த அனைவருக்கும் எமது மகிழ்ச்சியும் பாராட்டுக்களும்.



No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...