Monday, May 6, 2019

சவால்களின் சதங்கை கட்டிக்கொண்டு...

எனக்காகத் தரப்பட்ட
பூக்களுடனான வாழ்க்கை
திருடப்பட்டது எப்போது?
மரந்தங்கள் 
சீரழிக்கப்பட்டதான போதில்
எனக்குள்


கருக்கட்டப்பட்ட பசுமைகள்
கருகிப்போயின!
பல கனவுகளை
அடைகாத்துக் கொள்ள
புகுந்தேன் ஒரு கூட்டுக்குள்
கல்லெறிந்து கலைக்கப்பட்டேன்!
எங்கும்
பல அவதார புருசர்கள்
வாழ்ந்து வருகிறார்கள்
நேரத்திற்கு ஒரு முகத்துடன்!
எல்லாமே
வெறுத்துப் போகிறது!
நாய்க்குரைப்பிற்கு
நாதியற்றுப் போகின்றனர்
இடியின் புதல்வர்கள்!
சூரியனைப் பிரதி செய்த
என் நண்பன்
மின்மினி வெளிச்சத்தில்
மங்கிப்போனான்!
சூழ்ச்சிகளின் தெருக்களில்
முகமில்லாதவர்கள்
படையெடுக்கிறார்கள்
எம்மைச் சிதைப்பதற்கான
எல்லா ஆயுதங்களுடனும்...
ஆனாலும் நடக்கின்றேன்
சவால்களின் சதங்கை
கட்டிக்கொண்டு...

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect