Sunday, May 5, 2019

துடித்து வீழ்ந்த சில பொழுதுகளின் 'நோக்காடு'

ஐயாராம் குணசீலன் அவர்களது 'நோக்காடு' நாடகப்பிரதிகள் நூலுக்கான அறிமுக உரை

நெரிக்கப்படும் குரல்வளைகளிலிருந்து பெருங்குரல்கள் உருவாகும் சாத்தியங்களும் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றன. அது வாழ்வின் தீராத இடைவெளிகளில் நின்றுகொண்டு பெரும் அவலத்தை கறுப்பாக பெருங்குரலெடுத்து பதிவு செய்துவிட்டுச்செல்கிறது. இதைச் சொல்வதற்கோ
புரிந்துகொள்வதற்கோ ஒருவர் எவ்வாறு இருக்க வேண்டுமெனக்கேட்டால் ஒரு வலியை, ஒரு ஏமாற்றத்தைக் கடந்தவராயிருந்தால் போதுமானது. சமூகத்தின் கதை சொல்லியாய் நம்முன்னே பிரசன்னமாகும் குணா, குணாவின் கதைகள் இவ்வாறான பாதையிலேயே பயணிக்கின்றன. வாழ்க்கைக்கும் ஆற்றுகைக்குமிடையிலான இடைவெளியை இவை விலக்க முயற்சி செய்கின்றன.

இவரது கதைகள் அனைவரைப் பற்றியுமில்லையென்றாலும் அனைவருக்குமானது. இவரது கதைமாந்தர்கள் கற்பனையானவர்களல்ல. இவரது கதைகள் நம் தோளில் கைபோட்டபடி பேசிச் செல்பவை. அவற்றை வாசிப்பதில் நாம் கொள்ளும் அளவற்ற அனுபவத்திற்கும் நெருக்கத்துக்கம் அவர் சமூகத்தோடு கொண்டிருக்கும் இரண்டற்ற காரணத்தைத்தான் கூற முடியும். அவர் எடுத்துத்தரும் வலி நிறை வாழ்வின் கைப்பிடிச்சுவர் நம்மை திக்கு முக்காடச்செய்து விடுகின்றது. துடித்து வீழ்ந்த ஒரு பகலின் ஒளிக்கிரகணங்களை இருட்டின ஒரு பொழுதின் பின்பகுதியில் தருகிறார்.
தினசரித் தாள்களில் வாசிக்கப்படும்  செய்திகளைக் கொஞ்சம் உரத்த குரலில் வாசித்துக்காட்டுவது போல நடிகனின் குரலை மட்டும் பயன்படுத்தாமல் பாத்திரங்களின் சந்திப்பால் அல்லது முரண்பாட்டால் சில காட்சிகளை, அந்தக் காட்சிகள் ஏற்படுத்திவிடும் தாக்கத்தை நாடகப்பிரதியாக்கியிருக்கிறார். வாழ்க்கையில் அநிச்சையாய் அதிரும் எதிர்பாரா நிகழ்வுகளை அதன் ஆழத்திற்குள் இருக்கும் ஏமாற்றுத்தனங்களை அதனால் சிலர் அடையும் அரசியல் இலாபங்களை அதன்வழியாகவே அப்பட்டமாகத்தந்திருக்கிறார். மலையக மக்களின் அதிரும் நிகழ்காலம், காடாய்க் கழிந்த கடந்த காலம் என்பவற்றின் பின்னணியில் நமக்குள் இன்னும் சிலவற்றை கிளறிவிடுகின்றன இவரது கதைத்தளங்கள்.

கண்முன் காட்சிகள், புறத்தில் கனிந்த கனியாகக் காணப் பட்டாலும் அகத்தில் அடிபட்டு, அடிபட்டு அழுகிக்கொண்டிருக்கின்றது என்பதே உண்மையாகும். இந்த உண்மையின் முரண்களின் மோதல்களை ஒழுங்கமைப்பதுதான் நாடகப் பிரதிக்கு அடிப்படையான அம்சமாகிறது. நாடக இலக்கியமென்பது கருத்து வெளிப்பாட்டின் பல்வேறு நிலைகளையும், பல்வேறு தொனிகளிலும் பார்வையாளர்களுடன் நேரடியாக வெளிப்படுத்தும் பிரச்சார ஆற்றல் கொண்டது. நாடக எழுத்தாளர்கள் இன்னும் பல கலை இலக்கியவாதிகள் யாவரும் சமூகம் கடுமையான நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் சந்தித்த போதுதான் எழுச்சி கொண்டு படைப்புகளைப் படைத்திருக்கிறார்கள்.  அவ் வகையில் மிக மோசமான அரசியல், சமூக நிலமைகளின் கீழ் தான் இந்த நாடக இலக்கியங்களையும் குணா உருவாக்கியிருக்கிறார். தன் கண்ணெதிரே கண்ட காட்சியில் இருந்தே அவர் வார்த்தைகளுக்குச் சென்றிருக்கிறார்.

இனப்படு கொலை என்பது மனித உயிர்களோடு மட்டும் தொடர்பு பட்டதல்ல என்ற வகையில் அந்தச்  சம்பவம் கூட்டுப் படுகொலை என்ற இன்னொரு வகைக்குள்ளும் அடங்குகிறது. இவ்வாறான கூட்டுப் படுகொலைகள வெவ்வேறு தளங்களில் அரசியல் காரணங்களால் போராட்ட காலங்களில் சர்வசாதாரணமாய் நிகழ்த்தப்பட்டவை. ஒரு கிளையசைப்பில் பூவோ, பிஞ்சோ, காயோ, கனியோ விழுந்து அன்றைய சேதியாய் கூட வருவதற்கு நாதியற்ற காலம். அந்த மரம் மட்டுமே தனது விழுப்புண்களை தடவிப்பார்த்து பெருமூச்சுக்களை சப்தமில்லாமல் பிரசவித்த காலம். இத் துயரங்களை 'நாங்கள் பாவிகள்' எனும் பிரதியினூடாகப்பதிவு செய்திருக்கிறார். இது ஒரு அகால காலத்துக்கதை. யுத்தம் தனது கோரக்கைகளால் கிழித்துப்போட்ட பொழுதுகளின் உன்மத்தங்கள் பற்றியது. 'போதுமாடா உங்க ஆசை இனத்த பற்றியே தெரியாத ஒரு உசுர கொண்ணுடிங்களே அவன்ட உலகம் அந்த பலூன் மட்டும் தான்' என்ற வார்த்தைகள் ஒரு பேரிடியாய் எம்முள் இறங்குகிறது.

சில பெருமூச்சுக்களை, ஒரு மலையளவு வலியை தந்துவிட்டுச்செல்லும் இவரது பிரதிகள் எங்கெல்லாமோ எம்மை கூட்டிச்செல்கின்றன. 'நு.P.கு (ஊழியர் சேமலாப நிதி)' எனும் நாடகப்பிரதி மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதையாக ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்படுவதும் அவர்களது பணமே அவர்களுக்கு வழங்கப்படுவதில் ஏற்படும் சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
'ஒப்பந்தங்களையெல்லாம்
ஒன்று கூட்டி கொளுத்திவிட்டு
கலவர புகைமூட்டத்தில்
                                       குளிர் காய்ந்து கொள்வார்கள்'
என்ற இந்த நாடகப்பிரதியின் வரிகள், ஒரு யுகப்பிரளயமாய் ஒரு பெரு வலியாய் நம்முள் எங்கெங்கோ எல்லாம் வேதனையை படரச்செய்வதாய் அமைந்துவிடுகிறது. இப்பிரதியில் சாரதா எனும் பாத்திரத்தின் ஊடாக தனது சமூகத்தின் உருவகமாய் நிற்கும் கொழுந்து பறிக்கும் கூடைக்கு உயிரைக்கொடுக்கின்றார். தனது இறந்த தாயின் உருவமாக கூடையையே பார்த்துக்கதைக்கிறாள் அந்தப்பெண். (சிறிது நேரம் செல்ல மேடையில் இருந்து ஓர் ஆல்பம் எடுத்து பார்க்கிறாள். அதில் தன் அம்மாவின் புகைப்படங்களை பார்க்கிறாள். அவள் அழவில்லை எழுந்து சென்று கூடையிடம் பேசுகிறாள்.) 'அம்மா ஏன் அம்மா என்ன விட்டுட்டு போன? ஏன் இப்படி பண்ண? நா என்ன பாவம் செஞ்சேன். அப்பா ரொம்ப பாவம் அம்மா. நீ இல்லாம அவரு பாதி செத்துட்டாருமா. நீ இருந்தா என்ன எப்படி பாத்துக்குவியோ அத விட நூறு மடங்கு அப்பா பாக்குறாரு ஆனால் அவர பாத்துக்க யாருமே இல்லம்மா' என்பது போன்ற வார்த்தைகள் நமக்குள் சில காட்சிப்படிமங்களை அப்படியே நமது மனத்திரையில் ஆணியடித்து மாட்டிவிடுகின்றன.

இவர் தனது கதைகளில், கதைச் சூழலில் தன்னைக் கரைத்துக் கொண்டும்,  அதற்குள் இருந்தபடியே சற்று விலகி நின்றும் அதைச் சொல்லும் ஒரு தன்மை இருப்பதையும் காணமுடிகிறது. இதனால், சக மனிதர்களில் இயல்பில் அவர்களது எண்ண ஓட்டத்தை தனியாக கவனப்படுத்த முடியும். மேற்கூறிய நாடகப்பிரதியிலேயே 'நீங்க தோட்டத்தில எவ்வளவு காலம் வேல செஞ்சிங்கன்னு இந்த கடதாசில சொல்லி இல்லயே' என்ற ஏமாற்றுப் பேர்வழிகளினது வசனங்கள் அங்கு சம்மணமிட்டிருக்கும் அநியாயங்களை அடையாளம் காட்டி விட்டுச்செல்கின்றன.

'ஒருநிமிடம்' எனும் நாடகப்பிரதி காணாமலாக்கப்பட்ட கணவனின் நினைவுகளின் மேல் பயணிக்கும் ஒரு கைம்பெண்ணின் கதை.
     நித்தியா : சேர்! என் கணவனை புடிச்சிட்டு போய்ட்டாங்க சேர்.
    ஜெயகாந்த் : பெயர் என்ன? வயசு எத்தனை? நாளைக்கு வா கேட்டு  சொல்றேன்.
கணவனைப்பறிகொடுத்தவளின் வலி தெரியாது மெத்தனப்போக்கிலிருக்கும் அதிகாரிகள், ஒரு வசந்தகாலச் சூழலைப்பறித்துச்செல்லும் அந்தகாரப்பொழுது என கறுப்பான காட்சிப்படிமங்களால் ஆனது இந்தக்கதை. நிகழ்கால அவலத்தை நிகழ்வுகளாக்குதல், அதாவது ஒரு சம்பவத்தை, அதன் வடிவத்தை அதன்; உணர்வையெல்லாம் இணைத்து ஒரு விமரிசனச் சொற்றொடராகச் சொல்ல நினைத்து உருவாக்கிய நாடகமாக 'வலியோரம் விழி வைத்து' நாடகப்பிரதி அமைகின்றது. இது காத்திருப்பின் ரணமான பொழுதுகள் பற்றியது.
மகனது வருகைக்காய் காத்திருந்து மன நோயாளியான தாய், அந்தத் தாயையும் தனது மகனது பிரிவுத்துயரையும் ஒன்று சேரச்சுமக்கும் தந்தையென இப்பிரதி வலியால் நிறைந்தது. 'இந்த 7 வருஷமா அவன் எங்க இருக்கான்? உயிரோட இருக்கானா? இல்ல செத்துட்டானா? ஒன்னுமே தெரியல. உன்னோட கனவுக்கும் ஒரு ஓய்வு இல்ல. இப்படியே பண்ணிட்டு இருந்தா நீயும் காணாமல் தான் போவ. அவன் வந்துருவான் இன்னைக்கு கட்டாயம் வந்துருவான் பேசாமல் வந்து தண்ணிய குடிச்சிட்டு படு. ராகுல் நீ எங்க இருக்க? உயிரோட இருக்கியா? இல்லையான்னு? கூட இந்த அப்பனுக்கு தெரியலயேடா. உங்க அம்மாவ பாரு இப்படியே விட்ட உங்க அம்மாவையும் இழந்துருவேன் போல இருக்குடா என்ன விதியோ இது' என்ற அவஸ்தைகள் இன்று பல அப்பாக்களின் உணர்வுச்சுமைகளாகின்றன.

ஆரவாரம், அமைதி என்ற இருதுருவங்களை ஓரிடத்தில் இணைத்து அந்த இடைவெளி தரும் பயங்கரத்தை நம்மிடம் தந்துவிட்டுப் போவதாக 'மாமன் சீரு' நாடகப்பிரதி அமைகின்றது. சம்பிரதாய நிகழ்வுகளும், அதை அள்ள நினைக்கும் தருணங்களும், தடையாகும் பெருகியுள்ள பொருளாதார நெருக்கடிகளும் என ஒன்றையொன்று தழுவியபடி செல்லுகின்றது இப்பிரதி.
    'சின்ன பொண்ணுக்கு சடங்கு விழா
    சீதனமா நான் என்னதர?
   பொன்னும் இல்ல, பொருளும் இல்ல
   பொட்டி நிறைய பணமும் இல்ல
   என் கூடவே ஒன்னு இருக்கு
   என் உசுரு அத தாரேன்'
எனும் கூற்று சமகாலத்து வாழ்வியல் நெருக்கடிகளையும் சொல்லிச்செல்கின்றது. நமக்கு எங்கெல்லாமோ இருந்து இந்தக் குரல்கள் கேட்கின்றன. வாழ முடியாத வாழ்வின் ஒரு உண்மையை மிக எளிதான சில உரையாடல்கள் இங்கு தெரியப்படுத்திச்செல்கின்றன. இந்தச் சூழலை எதிர்கொள்ளும் ஆழ் மனதின் அச்சங்கள் இந்த நிலப்பரப்பு எங்கும் சிதறி இருப்பதைக்காண முடிகிறது.

மொத்தத்தில் ஒரு உணர்தல் அனுபவத்தை, கண்முன்னே இரத்தமும் சதையுமாய் நகர்ந்த காலத்தை இவர் எழுத்தாகத் தந்திருக்கிறார். காலாதீதத்தை உணர்வதற்கான ஒரு சூழலை உருவாக்க முயன்றிருக்கிறார். பேசு பொருள், பேசுகின்ற விதம் என நம்மை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கின்ற வேதனைகளைப்படையலாக்கியிருக்கிறார். இந்த நோக்காட்டினை பொது அனுபவமாக்கியிருக்கிறார். தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.

வாழ்த்துக்களுடன்
க.மோகனதாசன்,
சிரேஸ்ட விரிவுரையாளர்,
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப்பல்கலைக்கழகம்.







No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...