Thursday, May 23, 2019

"மனசு எத்தனை துண்டுகளாக உடைந்து கிடந்தாலும் அத்தனையும் தானாகவே ஒட்டக்கூடிய ஒரு மாய வித்தையினை இது புரிந்திருக்கிறது"


அழகு தனுவின், மட்.மாங்கேணி சித்தி விநாயகர் ஆலயத்திற்காக பாடப்பெற்ற 'ஓங்கார நாமம் இசைப் பாமாலை' நயவுரை


  இயந்திரங்களுடன் பழகி மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் உணர்வுகளை, கவலைகளை, கஸ்டங்களை, சந்தோசங்களை பகிர்ந்து கொள்ளவும் தெரியாத ஒருவித தனிமைப்பட்ட வாழ்க்கையினையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்தங்களும் மனப்பிறள்வுகளும்
தவறான முடிவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் நாங்கள் உயிர்ப்புடன் வாழவும் எங்களை நாங்களே மீட்டுக் கொள்ளவும் இயந்திரமயப்பட்ட வாழ்க்கையிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் எமக்கு ஆரோக்கியமானதொரு ஆன்மீகப்பின்னணி தேவையாயிருக்கிறது.

    இயல்பான வாழ்க்கைக்கு வழிகாட்டவும் மக்கள் ஒன்று கூடி ஆன்மீக மகிழ்ச்சி பெறவுமான ஒரு அரோக்கியமான ஆன்மீகப்பின்னணியினை ஆலயங்கள் வழங்குதல் வேண்டும். இந்தச்சூழலை இலகுவாக்க இறைவனை இசையால் வழிபடுதல் நமது மரபில் பயில்நிலையில் உள்ளது. இசையால் வசமாகா இதயமெது இதனாலேயே வேதத்தின் ஒரு அங்கமாக சாம வேதம் அமைந்திருக்கிறது. அப்பரும் சுந்தரரும் ஆளுடை பிள்ளையும் அருள் மணிவாசகரும் எப்படிப்பாடினரோ அப்படியே ஆண்டவன் அவர்களுக்கு அருள்பாலித்தான். இலங்கை வேந்தன் ராவணனும் சாமகானம் பாடி இசையால் புகழ் பெற்றான். 

 இசை மனிதர்களின் உள்ளத்தின் அகவுணர்வுகளோடு தொடர்பு கொண்டுள்ளது. தற்காலத்தில் இசைத்திறன் சோதனைகள் உளவியல் சோதனையின் பகுதியாகவும் அமைந்துள்ளன. தொழிலகங்களின் எத்தகைய இசையை இசைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் கூடும் என்பது இன்று ஆராய்ச்சிப் பொருளாகிவிட்டது. சில தனியார் தொழில் நிறுவனங்கள் தொழில் நேரத்தில் மென்மையான இசையை தொழில்கூடங்களில் இசைக்கத் தொடங்கியுமுள்ளனர். இதன் விளைவுகள் விரும்பத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

   இசை கேட்டு செடி, கொடிகளே விரைவாக வளரும் என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இசை, மனிதர்களின் மனநலனை மட்டுமல்ல உடல்நலனையும் காக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். இசை மூலம் பரவும் நேர்மறையான அதிர்வுகள் கேட்பவர்களின் உள்ளத்துக்கு ஊக்கத்தை அளித்து, வாழ்வின் தரத்தை உயர்த்தும் என்பது ஆராய்ச்சிகளின் நிரூபணமாகும். மன அழுத்தம், பதற்றம் போன்ற உளவியல் காரணங்களிலிருந்து ஒருவர் விடுபட அவருக்குப் பிடித்தமான இசை எது? அவர் எண்ணத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டுவது எது? என்பன பற்றியெல்லாம் இன்று அதிகம் சிந்திக்கப்படுகின்றன. 

     இந்தப்பின்னணியோடு 'ஓங்கார நாமம்' பக்திப்பாமாலையினை நாம் எமக்குள் உள் வாங்குதற்கு அதன் இசைக்குள் நுழைய வேண்டும், கருத்துக்களின் கைகளைப்பிடித்துக்கொண்டு நடக்க வேண்டும், சமகால வலிகளையும் அப்போதைக்கப்போது தடவிப்பார்த்துக்கொள்ள வேண்டும், மாங்கேணி ஊரின் பண்பாட்டு வாசனையில் ஒரு கையள்ளி முகர்ந்து கொள்ளவேண்டும். மொத்தத்தில் இந்த அனுபவங்களோடு பயணிக்கச் செய்வதற்கு இந்தப்பாடல்களே எம்மைத்தயார் படுத்தினாலும் நாமும் எம்மைத்தயார்படுத்துதல் நமக்குள் இந்த அனுபவம் இலகுவாகப் பரவுவதற்கு உறுதுணையாயிருக்கும்.

         இந்தப்பாடல்களை கவியாக வடித்திருக்கும் அழகு தனு இன்று பல்வேறு தளங்களில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். கவிதை. நாடகம், குறும்படம், விவாதம், பாடல் என அது மேலும் விரிகின்றது. இவர் தமது கலைத்தடங்களில் பொய் சூடி அலங்கரிப்புச் செய்யவில்லை. சமூக யதார்த்தத்தை, பார்க்கத்தவறிய பக்கங்களை எம்முன்னே காட்சிப்படுத்துகின்றார். மட்டக்களப்பின் பல சமூக கலை ரீதியிலான செயற்பாட்டு தடங்களில் இவரது பதிவுகளும் இடம் பெற்றுக்கொண்டிருப்பது இன்று கண்கூடு. இவரது பரந்த எண்ணமும் சமூக அக்கறையும் ஆன்மீகத்தினூடாக இவரை சமூக உளவியல் பேச வைத்திருக்கிறது. இசை வழங்கியுள்ள அருணா கேதீசும் இவரும் இணைந்து இசை ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் ஒரு இசைச்சிகிச்சைக்கு அழைத்துச்செல்வதாக எமக்குப்படுகிறது.

      சிலர் தமது ஆலயங்களுக்கு நாலு பாடல் பாடி ஒரு ஒலிப்பேழையாக மாற்றி வெளியிட்டால் போதும் என்ற மன நிலையோடு அங்கொன்றும் இங்கொன்றுமாக பல இறுவெட்டுக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவை என்ன விடயத்தைப் பேசுகின்றன. அவற்றை எவ்வாறு பேசுகின்றன. அவற்றின் ஆன்மீக உளவியல் என்ன? அவை பொதுச்சமூக உளவியலை எவ்வாறு மாற்றப்போகின்றன என்பவற்றை சிந்திக்கத்தவறுவதாகவே எம்மால் உணர முடிகின்றது. ஆனால் இந்த ஒலிப்பேழை பத்தோடு பதினொன்று அல்ல. ஆன்மீக கருத்துக்களோடு சமூகத்துக்கான உளவியல் பலத்தினையும் வழங்குவதாக அமைந்துள்ளது. வினாயகரை முன்னிறுத்தி எம்மை வழி நடத்துவதாக அமைந்துள்ளது. இன்று ஆன்மீக அரசியல் பற்றிய உரையாடல்கள் இடம்பெற்றுவரும் சூழலில்; இந்தப்பாடல் வரிகள் நமக்குத்தேவையான ஆன்மீக அரசியலை நுணுக்கமாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் பேசுவதைக்காணலாம்.

     'முதல் வணக்கம்...' என்ற அருள் விக்னேஸ்வரனின் குரலில் அமைந்த முதலாவது பாடலே நமக்கு இந்த இறுவட்டில் என்ன இருக்கிறதென்பதை எடுத்தியம்புகின்றது. ' தமிழ் மணக்கும் எங்கள் ஊரினிலே கலை செழிக்கும் சுந்தரப்பதியுனதே... என பாடல் வரிகளும் இசையும் குரலும் இணைந்து எம்மை இந்த மண்ணின் மகத்துவங்களோடு ஒன்றச்செய்து விடுகின்றன. 
எளிதாக விளங்கக்கூடிய வரிகள் ஆனால் எம்மையறியாமல் பரவசத்தினுள் தள்ளிவிடும் சுட்சுமங்கள் நிறைந்தவை. மண்ணின் பழமையினையும் அது கொண்டுள்ள தனித்துவங்களையும் ஆங்காங்கே பதிவிட்டுக்கொண்டு சென்றிருப்பதையும் காண முடிகின்றது. ச.ஜெகனி அவர்களின் குரலில் 'மட்டுமண் வாகரையில் மாங்கேணி ஊரினிலே...' என்ற பாடல் வரிகள் எல்லாமாக இருப்பவரே என விழித்து இங்குள்ள நிலைமைகளையும் மறைமுகமாகச்சொல்லிச்செல்கின்றன. 

     ஒற்றைக்கொம்ப ராஜனிவர் ஓங்காரப்பொருளின் வடிவானவர்... என்ற கந்தப்பு ஜெயரூபன் குரலில் அமைந்த பாடல் எம்முள்ளே உண்மையில் ஓங்காரமாய் ஓங்கியொலிக்கிறது. நமது கவலை மறந்து கஸ்டங்கள் மறந்து, மொத்தத்தில் நம்மை மறந்து ஒரு பரவசத்தை உணரக்கூடியதாகவே உள்ளது. ஓங்காரத்திலிருக்கக்கூடிய அர்த்;தத்தினை உணரக்கூடியதாக பாடல் வரிகளும் மெட்டும் பாடியவர் குரலும் எம்மை எங்கோ இழுத்துச் செல்கிறது. அளவறிந்து பல வாத்தியப்பாவனை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. தவில், ஜெண்டை, தபேலா என அத்தனை வாத்தியங்களும் பாடலுக்கு இன்னும் அழுத்தத்தைச்சேர்க்கின்றன.

  ஜெகதீசன் மதூசிகனின் குரலில் அமைந்த 'நாயகனே எங்கள் வினாயகனே...' எனும் பாடல் இன்னொரு சுவையின்பத்தை எமக்குத் தருகின்றது. தமிழர் பண்பாடு வாழ்கின்ற ஊரையா என உச்சரித்து ஒரு திருவிழாக்காட்சியினை பிரமாண்டமாக எம் கண் முன்னே நிறுத்துகின்றது இப்பாடல். உண்மையில் இங்கு காவலிருக்கும் அமைதியாலும் ஆன்மீகத்தாலும் மட்டுமே நமது மனதுகளில் ஏற்படும் சுழுக்குகளை வலியில்லாமல் எடுத்துவிட முடியும்.

     கனகரத்தினம் கனிஸ்ரனின் குரலில் 'ஆனை முக அழகனுக்கு செந்தமிழில் துதிபாடி' எனும் துள்ளல் ஓசையிலமைந்த பாடல் வினாயகரை வணங்கும் முறையை காட்சியாக்குவதாக அமைந்துள்ளது. இந்தப்பாடலின் பின்பும் அந்த நாதஸ்வர தவில் மற்றும் உடுக்கோசை இசையாய்  எம்முள்ளே எதிரொலித்துக்கொண்டு நிற்கின்றன. நான் நினைக்கின்றேன். இதுதான் இந்தப்படைப்பின் வெற்றியும் கூட. இன்று சுழஉமஇ சுயி என எமது சூழலுக்குப் பொருத்தமில்லாத எம்மை இந்த சூழலிலிருந்து அந்நியப்படுத்துகின்ற இசை வடிவங்கள் வந்துவிட்டன. அவை எமது இசை வடிவங்களை மட்டுமல்லாது எமது கலை பண்பாட்டையும் உணர்வுகளையும் சிதைத்து விடுகின்றன. சிம்மாசனத்தில் உட்கார்ந்து விட்ட நாம் இன்று ஜிகினா நாற்காலிகளையும் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். இது சரியா பிழையா என்பதற்கு அப்பால் எம்மை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே தவிர்க்க முடியாத உண்மையாகின்றது. 

    மொத்தத்தில் இந்த இசைப்பாமாலை ஆத்மார்த்தமான  ஒரு ஆன்மீக இசையனுபவத்தினையும் அதனூடாக ஒரு உள ஆற்றுப்படுத்தலையும் மன நெகிழ்சியினையும் உருவாக்கியிருக்கின்றது எனக்கூறலாம். உண்மையில் இந்தப்பாடல்கள் உள்ளத்திலம் உடலிலும் இருக்கும் உஸ்ணத்தினை ஆவியாக்கக்கூடியன. ஒரு வீணையின் மெல்லிய அதிர்வு கூட எம்மையறியாது எம்மோடு ரசவாதம் செய்து விடுகின்றது. இங்கே எத்தனை அழகான அதிர்வுகள். அற்புதமான அதிர்வுகள். மனசு எத்தனை துண்டுகளாக உடைந்து கிடந்தாலும் அத்தனையும்  தானாகவே ஒட்டக்கூடிய ஒரு மாய வித்தையினை இது புரிந்திருக்கிறது. இந்த ஒலிப்பேழையினை அழகு தனுவும் இந்தக் குழுவினரும் மிகச்சிறப்பாகவே செய்திருக்கின்றனர். அவர்களுக்கு எமது மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.


ஒற்றைக்கொம்ப ராஜனிவர் பாடலைக்கேட்க...
https://soundcloud.com/moki-7/0ttaikompa-rajan

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...