Monday, May 6, 2019

நாசி துளைக்கும் மண் வாசனை மணக்கவே பேசுகிறார் சீலன்

எஸ்.ரீ. சீலனின் "ஊர்க்குருவியின் உலா" கவிதை நூலுக்கான ரசனைக்குறிப்பு


இந்த ஊர்க்குருவி இத்தேசமெங்கணும் உலாவித் திரிந்திருக்கிறது. அது சும்மா திரியவில்லை. தன் சிறகுகளில் மண்ணின் கனவுகளைச்சுமந்தே அலைந்திருக்கிறது. இந்த உலகில் இருந்து கிராமிய வாசம் இல்லாமல் போய்விடுமோ என்ற பரிதவிப்பில் அக்குருவியின் நினைவின் அடுக்கு சரியத் தொடங்குகிறது. அச்சரிவின் அடிவாரமெங்கும் நீக்கமறச் சிதறும்
அந்த பிம்பங்கள் எம் கடந்த கால கனவுகளையும் நாம் இன்னும் விரும்புகின்ற காட்சிப்படிமங்களையும் கண்ணெதிரே நிறுத்துகின்றன. யானையின் காலிலிருந்து தப்பிவிட்ட சிறுபூஞ்செடியின் கணுக்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாசனைப்பூவைப் போல், இந்த அவசரயுகத்தின் காலடியில் மிதிபடமால் எஞ்சியிருக்கும் நம் மண்வாசனையையும் அதன் வாசம் கிளரச் செய்ய மேகத்திலிருந்து கீழிறங்கும் மழைத்துளியாக, நம்மோடு எடுத்துச்செல்ல இருக்கின்ற சேகரிப்புக்களாக இந்த ஊர்க்குருவியின் உலா உங்கள் முன் பவனி வருகிறது.

பிரியங்களை சமைப்பதென்பது ஒரு பெரும் பசிக்கோ அல்லது தேடலுக்கு பின்னதாய் நிகழும் போதோ அது அமைத்துத் தருகிற தாழ்வாரத்தில் உட்கார்ந்துகொள்வது கிட்டதட்ட ஓர் உயிர் தவம். இவர் துயரங்களின் பெருமூச்சுச் சுவாலைகளிலிருந்தே எல்லோருக்குமான பிரியங்களை சமைக்க முயன்றிருக்கிறார். பொதுப்படையான இவரது கவிநூலுக்கான பார்வையிலிருந்து சற்று கவிதைகளுள் உள் நுழைந்தால், 'மண்வாசனை' என்ற பகுதி மட்டக்களப்பின் மூலை முடுக்கெல்லாம் எம்மை கூட்டிச்செல்கிறது. 'மீன்பாடும் தேனாடு வாருமையா' என முதற்கவியிலே அழைக்கும் இவர், தேசத்தின் புகழைப்பேசி

'வந்தவரை வாழவைக்கும் மண்ணையா 
நம்ம மாநிலத்தில 
கிடைக்காதது என்னையா?... 
...நெல் ஆடும் பூமியிது 
சொர்க்கம் அல்லவோ' 

என இறுக்கமாக இவர் கவிகள் எம் கரங்களைப்பற்றுகின்றன. ஒரு தேசத்தின் வரைபடம் எலும்பும் சதையுமாகத் தரப்படும் போது அதன் அநாதரவான பக்கங்களும் தவிர்க்க முடியாமல் புரட்டப்படுகின்றன.

'வாக்கினையும் வளத்தினையும் 
சுரண்டி வங்கிகளில் 
பணத்தை நிரப்பும் 
போக்கத்த பெரியவர்கள் தான் 
அதைச்செய்ய வேண்டும்' 
என சற்றுக்கடுமையாக ஒலிக்கும் இவரது குரலில் ஒரு சமூக அக்கறையினை எம்மால் தரிசிக்க முடிகிறது.

'புள்ளி விபரம் காட்டி 
புகழ் சேர்க்கவா இவர்களை 
தள்ளி வைத்திருக்கிறீர்கள் 
இதுகளும் எங்கள் குழந்தைகள் 
பாவம் இந்தக்குழந்தைகள்  
இவர்கள் பள்ளியை நிறுத்தி 
கொள்ளி சுமக்கிறார்கள் 
இன்று இவர்களை விரட்டுகிறீர்கள் - நாளை 
இந்தப்பாவம் உங்களை விரட்டும்' 

என்று மேலும் கோபமாய் ஒலிக்கிறது இவர்குரல். இவரது எல்லாக்கவிகளிலும் மண்மணக்கிறது. நாசி துளைக்கும் புழுதி மணக்கவே பேசுகிறார். ஊர்ப்பக்கம் எனும் பகுதி எமது நேற்றைகளை விலக்கிக்கொண்டு கடந்த காலத்திற்கு எம்மை கூட்டிச்செல்கிறது. 'தேத்தாத்தீவு அழகான களறியம்மா' என ஆரம்பித்து 'வந்து உனை அள்ளுகிறேன், என்னதான் எண்டாலும் எண்ட ஊர் போலில்லை, கறிக்கு ஏதும் கரப்புக்க ஏத்தணும்' என எல்லாக்கவிதைகளும் மண் வாசனையை எம்மீது அள்ளி அப்புவதாகவே அமைந்துள்ளது.

'நாவற்கா தின்ன நடுக்காடு சென்ற காலம் 
வாகைப்பிரம்பெடுத்து 
வாத்தியாரிடம் பட்ட அடி என 
நினைக்க இனிக்கும் எங்கட பாடசாலை 
பள்ளி விட்டதும் 
துள்ளிக்குதிக்க பெரிய குளம் 
கள்ளத்தனமாய் குளிக்க 
காத்துக்கிடக்கும் கடற்கரை 
செல்வம் சேர்க்கும் வெற்றிலைச்செடி 
சேர்ந்து செய்யும் வெண்காயம் 
காலம் வந்தால் கரைவலை 
கறிக்கு ஆற்றில் கட்டுவலை' 

உண்மையில் எமக்குக்கிடைத்திருக்கும் ஞாபகப்படிமங்களில் ஒரு சில விழுக்காடுகள் கூட நமது அடுத்த தலை முறைக்கு கிடைக்குமா? என்ற ஏக்கக்குரல் இவரது கவியில் மறைமுகமாக ஒலிப்பதை எம்மால் உணர முடிகிறது. இன்றைய தலைமுறை வீடியோ கேம்களுக்குள்ளும், காணொளிக்காட்சிகளுக்குள்ளும் மட்டுமல்லோ மூழ்கிக்கிடக்கிறது. நமது தலைமுறையும் புல்வெளியில் புரளட்டுமே தும்பியைத் துரத்தட்டுமே, மழையில் தெப்பட்டையாய் நனைந்து சளி ஒழுகித்திரியட்டுமே, ஓடையில் தூண்டில் போட்டு விரால் மீன்களை சுட்டுத்தின்னட்டுமே என்ற அவரது ஆதங்கம் எம்மையும் ஒரு கணம் அசைக்கிறது. நம்ம ஊரு என்ற கவிதையில்

'ஒருத்தருக்கு ஒருத்தராய் 
ஒத்தாசையாய் இருந்து வாழ்ந்தோம் 
வருத்தம் வலி வந்தால் வாசல் நிறைய சனங்கள்...
எத்தனை இன்பம் ஊரில், 
எத்தனை சொந்தம் ஊரில், 
எத்தனை மகிழ்ச்சி ஊரில்.... 
ஓலை வீட்டுக்குள் வளர்ந்த ஒற்றுமை 
ஓட்டு வீட்டுக்குள் ஓங்கவில்லை ஒடுங்கிவிட்டது.' 

என்ற இவர் வார்த்தைகளின் உஸ்ணம் எம்மையும் ஒரு கணம் சுடுகிறது. நகரம் விழுங்கிய தாய்மையின் அணைப்பான மரங்களின் நிழல் பற்றியோ கழிவு நீர்த்தொட்டி அமைந்திருக்கும் இடத்தில் இருந்த கிணறு பற்றியோ தொலைக்காட்சிப்பாடல்களின் காது நிறைப்புக்களில் தொலைந்த எமது பறவைகளின் பாடல்கள் பற்றியோ யாரும் வருந்துவதாகத் தெரியவில்லை. தொண்டை பிரித்துத்தாலாட்டும் நெற் பூக்களுடைய வாசனைக் காற்று, சுழன்று பறக்கும் மின்விசிறி ரெக்கைகளால் தொட முடியாத் தூரத்திற்குப்போய்விட்டது. எமது காலத்தை சுமந்திழுத்துப்போன உழவு மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் இதயத்துடிப்பினை நிறுத்துவதாய் குரைக்கும் அல்சேசன் கட்டப்படடிருக்கிறது. இந்தப்பின்னணியலேயே இவர் தொலைக்காட்சி இருட்டுக்களில் எம்மைத்தேடுகிறார்.

'வானொலியும் தொலைக்காட்சியும் 
எல்லோருக்குமுண்டு உயர்ச்சிதான் 
ஆனால் அத்தையும் அழகம்மாவும் 
அரங்கேற்றிய தாலாட்டுப்பாடல்கள் தொலைந்து விட்டது 
களறியில் ஆடி கவலை மறந்த கணங்கள் 
சீரியலின் தினத்தொடருக்குள் சின்னாபின்னமாகிறது' எனத்தன் கவிதையால் அழுகிறார். 
'என் அப்பா நடந்த வில்லுக்குள அளிப்பாடு...' 

எனத்தொடங்கும் ஒரு துண்டுக்கவிதை பல பெருமூச்சுக்களால் உருவாக்கப்பட்டிருப்பதை எமது பெருமூச்சுக்களும் சேர்த்து உறுதியாக்கிவிடுகிறது. 'என்னதான் வெறுத்தாலும் என்னதான் மறுத்தாலும் இன்னும் அந்த மண்ணைச்சுற்றியே எங்கள் மனசு மயங்கிக்கிடக்கிறது' என அவர் கூறுவதிலிருந்து அவர் மனசு அங்குதான் ஒட்டிக்கிடப்பது புரிகிறது. அவரது ஞாபங்களின் நனவிடை தோய்தல் எமது நினைவுகளிலும் நெருப்பினை மூட்டுகிறது. தாய்மை எனும் பகுதியில் பெண்மையின் மகத்துவம் பேசுகிறார். அவள் சுமக்கும் வலிகளையும் வார்த்தைகளில் கொட்டுகிறார்.

'தினமும் அரிசி விக்க 
பனங்காடு பாண்டிருப்பு 
மாங்காடு, மருதமுனை 
சென்று விப்பாள்... எனத்தொடங்கும் கவிதையில் 
...பசி வயிற்றைக் கிள்ளியதால் 
பானையில் அரிசெடுத்து 
உலை வைக்கப் போனாள் 
பானைதான் இருந்தது அரிசங்கு இருக்கவில்லை. 
யாருக்குத் தெரியும் ஊரெல்லாம் 
உணவளித்த கண்ணம்மை 
உலைமூட்ட அரிசி தேடுவாள் என்று..' 

இந்தக்கவிதை முடிவில் நான் சில கணங்கள் தேங்கி நின்று விட்டேன். இயற்கையும் சற்று அசையாது நின்றது போலவே உணர்ந்தேன். மையலில் மயங்கி எனும் கவிதைப்பகுதி காதலைப்பேசுகிறது. குhதலைச் சொல்வதற்குக்கூட சங்க காலத்துத் திணை மரபு போல் தன்னைச்சூழவுள்ளவற்றையே உவமையாக்குகிறார்.

'முத்திப்போன கதிரப்போல 
நீ முகம் குனிந்து சோறு கொண்டு 
மத்தியாத்தில் வருவாய் 
அத மணக்க மணக்கத் தருவாய்' 

என எமக்கும் மணக்க மணக்க கவிதை தருகிறார். 'மட்டுநகர் வாவிபோல மச்சினி நீ நடக்கும் போது மனசு தாங்கலயே என்னால' என மட்டு வாவியையும் உவமைக்கு அழைக்கிறார். மனிதம் எனும் பகுதி வறுமை, மனிதரின் போலி முகங்கள், சமூக அவலங்கள் எனப்பல விடயங்களைத் தொட்டுச்செல்கிறது.

'இந்த மனிதம் செத்த நாட்டுக்குள் 
மறுபடியும் வாழும் துரதிஸ்டம் 
இனியும் எனக்கு வேண்டம்' 

என விரக்கதியுறுவதையும் இவரது எழுத்துக்களில் காண முடிகிறது. எழுச்சி கொள் எனும் பகுதி ஒற்றுமையின் பலத்தையும் மனம் வலிமை பெற வேண்டியதன் அவசியத்தையும் விலக்க வேண்டிய விடயங்களையும் கோடிட்டுக்காட்டி நிற்கின்றது.

'புகையிலை தீ மூட்டி 
சாவின் நாள் குறிக்க 
சுடுகாட்டு பூ வைக்கும் ஊதுபத்தி' 

என புகைப்பழத்திற்கு எச்சரிக்கை விடுகிறார் தனது கவிதையினால். காலாவதியான ஒரு சொல்லின் வீரியத்தைப் பற்றிக்கதைக்காமல்  ஒரு துயரத்தின் திரித்தூண்டிவிடுதலால் கூட சொல்ல வேண்டிய கருத்தினை கனதியாக சொல்ல முடியும் என்பதை இங்கு அவர் உணர்த்துகின்றார். இயற்கை அணைப்பில் எனும் பகுதியில் காட்டு வளம்,  மழை, வயல்கள் என்பவற்றோடு இயற்கையை சிதைத்தால் ஏற்படும் அழிவு குறித்தும் பேசுகிறார். தெய்வத்தின் திருப்பாதத்தில் எனும் பகுதியில் மணல்பத்து, மாமாங்கப்பத்து என்பனவெல்லாம் இவரது சந்தக்கவியினை எமக்கு அத்தாட்சிப்படுத்தியிருக்கின்றன. நடக்கும் கொடுமைகளை கூற கடவுளரை முன்னிலைப் படுத்துவதாகவும் இக்கவிதைகள் அமைந்துள்ளன. உதிரிகள் எனும் பகுதியில் பேஸ்புக் பற்றியும் இன்னும் பல விடயங்கள் பற்றியும் பேசுகின்றார். கடைசியில் ஹைகூ எனும் பகுதியில் முடிக்கிறார்.

'புதிய வாழ்க்கையில் 
மணமேடையில் இருந்து 
வீட்டுக்குள் இருவரும் 
சந்தோசத்துடன் வலது காலைத்தூக்கினோம் 
தூக்கிய காலில் கடித்தது நுளம்பு 
அடித்ததும் கலைந்தது கனவு' 

என்ற படிமமும் எள்ளலாக எம்மோடு ஒட்டிக்கொள்கிறது. வாழ்வின் பசியாய் வளர்ந்து நிற்கிறது, பல எதிர்பார்ப்புகள். வகை வகையாய் வளர்ந்து நின்றபின்னும் கிளையின் மொழி மறந்த நிலையில் வேரைச் சூழ்ந்து கொள்கிறது எமது நிகழ்கால வாழ்க்கை. அச்சுப்பிசகாமல் அத்தனை உணர்வுகளையும் மொழிமாற்றம் செய்ய எத்தனிக்கிறது இவர் கவிதைகள். பத்திரப்படுத்திய நிர்வாணம், முதலில் தின்னத் தொடங்குகிறது இயலாமையை. அத்தனையும் தீர்மானத்திற்கு வரமுடியாத ஞாபகங்கள் வந்தே ஆகவேண்டியதாய் சொல்கின்றன இவரது நியாயங்கள். இது ஒரு அறிமுகக்குறிப்பு மட்டுமே. முழுவதையும் வாசியுங்கள் முழு உணர்வினையும் பெறுங்கள்.






க.மோகனதாசன்,
சிரேஸ்ட விரிவுரையாளர்,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

2 comments:

  1. அருமையான பதிவு மோகன். நன்றிகள் பல

    ReplyDelete
    Replies
    1. நாம் பல்கலையில் ஒன்றாகப்படித்தோம். சிந்தனைத்தளத்திலும் சமாந்தரமாகப்பயணிக்கின்றோம். நன்றிகள்.

      Delete

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...