Tuesday, May 7, 2019

சமகாலத்தை ஒப்பனைகளின்றி நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் ஈழக்கவி ரசிக்குமார்...

   
   அண்மையில் தனது "முட்களின் மேல் உறங்கிய இரவுகள்" கவிதை நூலினை ஈழக்கவி ரசிக்குமார் அவர்கள் எமக்கு வழங்கியிருந்தார். அந்தக்கவிதைகளை வாசித்தபின் அவை பற்றிய பொதுவானதொரு
எண்ணப்பகிர்வு...
    சமூகம் தன்னை மறந்து, தனது நடை பாதையை மறந்து உணர்விழந்து மரத்துப்போன பொழுதுகளிலெல்லாம், தமது படைப்புக்களால் உணர்வு ஊதி சமூகத்தை சிலிர்ப்படையச்செய்கின்றனர்படைப்பாளிகள். தன்னை சூழ்ந்திருக்கும் எல்லா அனுபவங்களையும் கவிதையாகவே காணும் கவிஞர்கள் வரிசையில, தான் சார்ந்த இவ்வுலக அவலங்களை, அதன் வலியை, சின்னத்தனங்களை, துரோகங்களை என வேதனையால் சொல்லோடு பொருளெடுத்து, தன்னுணர்வையும் சமூக உணர்வையும் கலந்து வாழ்வின் தரிசனங்களை கவிதையாகத்தந்து ஒரு சமகாலக்கவிஞனாக அறிமுகமாகிறார் ஈழக்கவி ரசிக்குமார்.

      சமகால நிதர்சனங்களை, மிகச்சரியான நேரத்தில் கவிதையாக்குவது கவிஞனின் கடமையாகிறது. இங்கு இவர் மனிதனாக உணர்வூற வாழ்ந்து கவிஞனாக தன்னை வெளிப்படுத்துகின்றார். இவர் கற்பனைகளைக்கொண்டு உணர்வைக்கொன்று மாயை செய்யாமல், உண்மைகளையும் உணர்வையும் மொத்தத்தில் சமகாலத்தை ஒப்பனைகளின்றி நமக்கு அறிமுகப்படுத்தி எது கவிதை? என்பதற்கப்பால் எதற்கு கவிதை? என்ற பாதையில் பயணிக்கிறார்.

     இவரது கவிதைகளில் ஆங்காங்கே தமிழின் வீரத்தாலாட்டு கேட்கிறது. ஓயாத அலைகளாக வழிமறிக்கும் கடுந்துயர்க் கணங்களும், மிரட்டிப்பார்க்கும் கடந்தகாலத்தின், நிகழ்காலத்தின் அந்தகாரப்பொழுதுகளும், வாய்மை மீறி வழிதவறும் பொய் பித்தலாட்டங்களும் இவரது கவிதையின் பாடுபொருள்களாகின்றன. ஆனாலும் பக்குவமாய் வளர்த்தெடுத்த ஒரு தமிழ்க் கனவின் சூரியனை நமது விடியல்களுக்காய் கட்டித்தொங்கவிட முயற்சி செய்திருக்கிறார்.


      இவரது கவிதை மொழி எளிமையானது. பிசிறுகள் அற்றது. மறை பொருள், வார்த்தை ஜாலம் என்றெல்லாம் மலைப்பூட்டாதது. வாசகனுக்கும் தனக்குமான இடைவெளியை இல்லாமல் செய்து தனது அனுபவத்தினை, எண்ணத்தினை, உணர்வை, உண்மையை ஒரு பொது அனுபவமாக மாற்றியிருக்கிறார். சூழலின் பயங்கரத்தனம் அதன் உண்மை, எல்லோரின் கண்களுக்கும் புலப்படுவதில்லை. நம் கண்முன் புலப்படாத சிலவற்றைக்காட்டும் ஆச்சர்யத்தை கவிதைகள் நிகழ்த்தியும் விடுகின்றன. இதுவே இன்றையின் தேவையாகவும் இருக்கின்றது. இந்த வேலையை இவரது சில கவிதைகள் செய்யத்தவறவில்லை. மொத்தத்தில் இவரது கவிதை நூல், ஒரு காலத்தின் சாட்சியாய் நிற்கிறது. தொடரட்டும் உங்கள் கவிதைப்பணி! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
க.மோகனதாசன்

No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...