Saturday, May 4, 2019

பிரவீனின் 'பஞ்சதீபம்' நூலுக்கான ஒரு அறிமுகக்குறிப்பு


    இன்றைய நியதிகளை சமூகத்தின் மனசாட்சியைக் கட்டமைப்பதில் பித்துநிலையில் எழுந்த கவித்துவச் சொற்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. கவிதைகளாக தூய எழுச்சி நிலைகளாக அவை அடையப்படுகின்றன. தூரங்களைச் சிறகுகளால் கடக்கும் பறவை போல பல இறைநிலைப் பாடல்கள் எம்மை எங்கெல்லாமோ தூக்கிச் சென்றுவிடுகின்றன. அதனை
உணர்வதற்கு நாம் அந்த சூழ்நிலைக்குள் எம்மை கரைத்தல் அவசியமாகின்றது. இறைசாதனை பல புரிந்த இறைநிலைப்பாடல்கள் எம்மால் சரியாக உணர்ந்து கொள்ளப்பட்டதா எனும் கேள்வி இங்கு எமது அனுபூதி நிலைகளை பரீட்சிப்பதற்கு தேவையாக இருக்கின்றது. இதையறிந்த சிலர் இந்த தேவார திருவாசகங்களில் புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்பவர்களாகவும் அதில் தற்காலத்திற்கான புதிய தத்துவங்களை கண்டுணர்பவர்களாகவும் அதனை அடிப்படையாகக் கொண்டு புதிய படைப்புக்களை தருபவர்களாகவும் திகழ்கின்றனர்.

    அவ்வாறு தேவார திருவாசகங்களை ஆழமாகக்கற்றுணர்ந்து ஆந்த அனுபவத்திலிருந்து தான் பெற்ற உணர்வை பஞ்சதீபம் எனும் நூலாக இங்கே தந்திருக்கிறார் பிரவீன். தனது அனுபவத்தை, அதன் சிந்தனைக்கிளர்வை படைப்பின் வாயிலாகப் படிப்போனின் மனத்தில் எப்படி உருவாக்க முடியும்? என சிந்தித்து இந்நூலின் முதல் பகுதியில் தன்னை ஆகர்சித்த இறைநிலைப் பனுவல்களையும் அவற்றிற்கான புதிய பார்வைகளை, தத்துவங்களை அந்த பனுவல்களை அடிப்படையாகக்கொண்டு தருவதோடு இரண்டாம் பகுதியில் அவற்றின் சாரத்தினையும் தனது விஞ்ஞானக்கல்வியின் அடியாகப்பெற்ற விஞ்ஞான ஆய்வு அணுகுமுறையினையும் ஆதாரமாகக்கொண்டு தனது சிந்தனையோட்டங்களையும் புதிய படைப்புக்களாகப் பகிர்கின்றார்.

  இவரது குடும்பமும் இவரது சூழலும் ஒரு பலமான ஆன்மீகப் பின்னணியினைக் கொண்டதாகும். இத்தோடு இவரது சமூகப்பார்வையும் கலந்து சமகாலத்துக்தேவையான ஒரு எண்ணமாக உணர்வாக பஞ்சதீபம் எனும் இந்த புத்தக நூலுருப்பெற்றிருக்கின்றது திண்ணமாகின்றது. நமது ஆன்மாவிற்குள் செல்லக்கூடிய உள்முகப்பயணம் இருந்தாலேயே எம்மால் சரிவர எதையும் செய்யும் முடியும். இதனாலேயே சித்தர்கள் உன்னுள்ளே கடந்து செல் அதுதான் கடவுள் (கட + உள்) என்றார்கள். அந்த உள்ளமுகப் பயணத்தை இலகுவாக்குவது ஆன்மீகமே. தற்காலம் வாழ்வதற்கான விருப்பினையும் வாழமுடியாத யதார்த்தத்தையும் கொண்டுள்ளது. இந்தச்சூழலில் இருந்து மீள நமக்கு இருக்கும் இலகுவான வழி ஆன்மீகமே என்பதை உணர்ந்த இவர் அதற்கான சாத்தியங்களை சிந்திக்கின்றார்.

    இந்த தேவையுணர்ந்து திருவாசகத்தை முதன்மைப்படுத்தி தான் பெற்ற அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரவீன். மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறை பக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது திருவாசகம்.

'வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!'
                                                                                                          - என்றார் வள்ளலார்
    மெய்யாகவே இறைவனிடம் அன்பு செலுத்துவதும் அவனை அடைவதும் எப்படி?' என்று மனித உடலில் வாழும்போதே இறையனுபவம் பெற்ற மாணிக்கவாசகரிடமே கேட்டுவிடுவோம் என்ற எண்ணம் தோன்றி மாணிக்கவாசகர் இறைவனுக்கு எழுதிய காதல் கடிதங்களை வாசித்தால் விடை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அத்தகைய கடிதங்கள் சிலவற்றை தொகுத்துத் தந்திருக்கிறார் பிரவீன்.

திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும் நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும். சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி, பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரௌத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும். இங்கே இவர் திருவெம்பாவையின் ஒவ்வொரு பாடலுக்கும் தத்துவ விளக்கமளிப்பதையும் காணமுடிகின்றது.

      அடுத்து, திருவாய்மொழி திராவிட(தமிழ்) வேதம் எனப் போற்றப்படும் நூல். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இதனைப் பாடியுள்ளார். விண்ணிலிருந்து மண்வரை ஆடும் ஒரு பெரும் ஊஞ்சல். உயர்த்தத்துவமும் ஞானப்போதனையும் இறையன்பால் ஆரத்தழுவும் வல்லமையும் உணர்ச்சிகரமான அதிதூய பித்துநிலையும் பிசிறிலாது முயங்கும் ஒரு மொழிவெளியும் கொண்டது திருவாய்மொழி. பெருமாளை உருவகம் செய்ய இப்பாடல் அளிக்கும் விவரணைகளில் நம்மாழ்வார் உலகத்தத்துவத்தனை முன்னிறுத்துகிறார். இவைகளிலிருந்தே பிரவீன் தனக்கான தத்துவத்தினை பெற்றுக்கொள்கிறார் என நினைக்கின்றேன்.

  'இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி தன்னைத்தானே எழுதிக்கொள்ள யாராவது ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும். அவர் மூலமாக அது தன்னை எழுதிக்கொள்ளும். இது இலக்கியத்திற்கு மாத்திரமல்ல, அறிவியல், ஆன்மீகம், தொழில், விளையாட்டு, கலைகள்...... என சகல துறைகளுக்கும் பொருந்தும். ஒரு எழுத்தாளனுக்குப் பேனா எப்படியோ அப்படித்தான் பிரபஞ்ச சக்திக்கு மனிதன். கம்பன், பாரதி, கண்ணதாசன், புதுமைப்பித்தன என நீள்கிறது இவ்வரிசை.

     உண்மையிலேயே சரஸ்வதி நேரில் வந்து அருள் வழங்கினால் ஒருவன் எவ்வளவு சந்தோஷப் படுவானோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியும் நன்றியும் கொப்பளிக்கும் பாடல்கள் கம்பரால் எழுதப்பட்ட சரஸ்வதியந்தாதி பாடல்கள். கம்பர் சொல்கிறார், நான் எப்படி இவ்வளவு அழகான கவிதைகள் எழுதுகிறேன் என்று நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்கள் அல்லவா? இது என்ன ஆச்சரியம், அவளை இரவும் பகலும் எந்நேரமும் துதித்தால், ஒரு கல்  கூட கவி பாடும் என்கிறார்.

'படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.' 

    என கம்பர் தெரிவிப்பது வெறும் வார்த்தைகளல்ல ஒரு அனுவபம். இவ்வாறே புத்தரையும் குமரகுருபரரையும் தன்னோடு கலந்து அந்த அனுபவங்களை சிந்தனையை எடுத்து தன்வயப்படுத்தி தனது சமூகத்திற்கான முன்மொழிவுகளாக சிலவற்றை முன்வைக்கின்றார் பிரவீன்.

  முருகக்கடவுளை முன்னிறுத்தி, எமக்குப்பழகிய எல்லோருக்கும் விருப்பமான கந்த சஸ்டி கவசத்தின் மெட்டில் தற்கால நிலைமைகளை அவற்றுக்கான தீர்வினை நோக்கி ஆற்றுப்படுத்துவதாக புதியதோர் சந்தசஸ்டி கவசத்தினை அவரது புதிய படைப்பாக உருவாக்கியுள்ளார். மெட்டுக்குரிய வார்த்தைகளை அழகாக அடுக்கி புராணக்கதைகளுக்கு புதிய வியாக்கியானத்தையும் கொடுத்திருக்கிறார். விவசாயத்தின் மகிமையினையும் பேண்தகு வேளாண்மையின் முக்கியத்துவத்தினையும் தற்கால உணவுப்பழக்கத்த்தினையும் முருகனை முன்னிறுத்தி எம்மை சிந்திக்கச்செய்கிறார். கிரான்குளத்தின் அழகையும் அதன் தனித்துவங்களையும் கூட நாசுக்காக அழுத்தமாக எம்முள்ளே படிமமாக மாற்றுகின்றார். தமிழின் இன்றைய நிலையினைக்கூட அவர் இக்கவசத்தின் வாயிலாகச்சொல்கிறார்.

'கால வினையால் மறையும் தமிழும்
கனிய பண்புகள் மீண்டும் தழைக்க
வருக வருக தமிழ்க்கொற்றன் வருக'

   என காலத்தின் தன்மையுணர்ந்து நம் உணர்வுகளுக்குள் ஊடுருவ எத்தனித்திருப்பதை பல்வேறு இடங்களில் காண முடிகின்றது. தற்காலத்தில் நீர்த்துப்போகின்ற குடும்ப உறவுகளுக்கு முருகனிடம் முறையிட்டு விமோசனம் தேடுகிறார்.

'மனைவியுங்கணவனும் ஆரை யரந்தி
மூட்டுபோலிருக்க நீவரமளிப்பாய்......' என முருகனை விளிப்பதோடு
'என்னை அழிக்கும் சாதனமுடனே 
ஒவ்வாப்பொருளும் எனை விட்டோட....'

        என்று காலத்தின் கொடுமைக்கும் முருகனிடம் நிவாரணம் அளிக்கும்படி கேட்கிறார். இவ்விடயங்கள் சார்ந்தே கட்டுரைகளையும் தந்திருக்கிறார். 'தமிழ் மக்களின் கடற்பயணத்தைத் திருப்பிய மாலுமிகள்' எனும் கட்டுரையினூடாக எம்முள் புரையோடிப்போயிருக்கின்ற, இயல்பான வாழ்விலிருந்து எம்மை அலைக்கழிக்கின்ற விடயங்கள் சார்ந்து ஒரு கதை வடிவில் கலந்துரையாடலை மேற்கொள்கிறார்., 'தற்போதைய ஆலய வழிபாடு தொடக்குக்கூறும் தத்துவத்திற்கு எதிரானதா?' எனும் இவரது கேள்வி, அகத்தூய்மையின் அவசியத்தையும் அன்பின் தேவையினையும் முன்மொழிகின்றது. 'உயிரின் தோற்றம் தொடர்பான உயிரிரசாயன கூர்ப்புக்கொள்கை சரியானதா? எனும் கட்டுரை விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் இணைக்கிறது, இந்து மதத்தில் கூர்ப்புக்கொள்கையை தசாவதாரத்தோடு ஒப்படுகிறார். 'வாழத்தகுதியுள்ளவர்களையே இயற்கை தேர்ந்தெடுக்கிறது' என்ற டார்வீனின் தத்துவத்தையும் பகவத்கீதையையும் கூட இவர் பரிணாமக்கொள்கையோடு ஒப்பிட்டு நோக்குவதைக்காண முடிகிறது.

      'சிந்திக்க சில வரிகள்' எனும் குறிப்பில் மதங்களின் பல்வகைத்தன்மை பற்றியும் அதனூடான ஒருமித்த பார்வையிழனயும் வெளிப்படுத்துகின்றார். 'கல்வியின் இலக்கணமும் தற்கால புரிந்துணர்வும்' எனும் கட்டுரையினூடாக ஆன்மீகக்கல்வி எவற்றைப்போதிக்கின்றன அது இயல்பாகவே கொண்டிருக்கும் கல்வியல் நுட்பங்பங்கள் என்பற்றை அத்தாட்சிப் படுத்துவதோடு பெண் விடுதலை போதிக்கும் கல்வி, மனவலிமையளிக்கும் தியானக்கல்வி என்பவற்றைப'போதிப்பதோடு தவறான வழிகளில் பொருளீட்டுவதற்கான கல்வி பொருத்தமற்றது என்பதையும் தெரிவிக்கின்றார். இவற்றோடு நாம் இழந்து நிற்கும் கல்வி நுட்பவியலையும் ஆதாரங்களுடன் தருகிறார்.

     'தமிழர் பண்பாட்டில் வீழ்ச்சிறும் விருந்தோம்பல்' எனும் கட்டுரையிலிருந்து பண்பாட்டில் இழந்துவிட்ட உணவுப்பழக்க வழக்கங்களையும் அது கொண்டுள்ள மருத்துவ, மற்றும் உளவியல் தன்மைகளையும் விஞ்ஞான ரீதியில் அணுகுகிறார். 'வாழ்வின் இறுதிக்கட்டத்திலாவது இதைப்படியுங்கள்' என சூழல் மாசடைதல் பற்றிய பயங்கரத்தை மிக விரிவாக ஆராய்கிறார். இத்துடன் விழுமிய சிந்தனைகள் சார் குறிப்புக்களும் எமது உணர்வுக்குள் அறிவுக்குள் ஒரு நல்ல எதிர்வினையாற்றுவதைக்காணலாம்.

       ஒரு படைப்பின் வழியே படிப்பவருக்குள் நுழைந்து அவர்கள் மனத்தை உருக்க வேண்டுமா? மகிழ்வூட்ட வேண்டுமா? என்பதற்கப்பால், ஒரு படைப்பாளி எப்படித் தன் படைப்பை வாசகனுடைய மனதை இடமாகக் கொண்டு நிகழ்த்த இயலும்? மொத்தத்தில் இவரது பஞ்சதீபம் இவர் எதிர்பார்த்த விளைவுகளை வாசகரிடத்தே மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கின்றன என உறுதியாகக்கூறமுடியும். அத்தோடு இக்கட்டுரைகள் புதிய பல கேள்விகளை எம்மிடையே எழுப்புவதோடு சிந்திக்கவும் வைக்கின்றன இவரது கட்டுரைகள். இவரது எழுத்துப்பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.


க.மோகனதாசன்,
சிரேஸ்ட விரிவுரையாளர்,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect