Saturday, May 11, 2019

மாஸ்டர் சிவலிங்கம் மாமாவின் ஆளுமையை நாம் உணர்வதும் தொடர்வதும் என்பது இந்த நிகழ்வின் பிரதான செய்தியாகின்றது.

மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் பற்றிய அறிமுகக்குறிப்பு...


 'நான் சிறுவனாக இருக்கும் போதே என்பாட்டியிடம் நிறைய கதை கேட்டிருக்கிறேன். என் பாட்டியின் பெயர் வள்ளிப்பிள்ளை. அவர் சொன்ன கதைகளை அப்படியே என் நண்பர்களிடமும் கூறுவேன். பின்னேரங்களில் வீட்டுப்பக்கத்தில் இருந்த ஆல மரத்தடியில் அமர்ந்து கதை சொல்வேன். என் கதையை கேட்க ஒரு கூட்டமே இருக்கும். குதிரை ஓடுவது மன்னரின் சிரிப்பு என கதைக்குள் வரும் ஒவ்வொரு விடயங்களையும் மிமிக்ரி செய்து சொல்வேன். நான் இப்படிக்கதை சொல்லும் விடயம் நான் உயர்தரம் படித்த
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி முழுவதும் பரவ அங்கே ஆசிரியராகவிருந்த புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை என்னை ஒரு நாள் அழைத்தார். 'தம்பி நீ டாம், டும், டுமீல் என்று கதை சொல்கிறாயே ரேடியோவில் வாய்ப்பு வாங்கித்தந்தால் கதை சொல்வியா? எனக்கேட்டார்.' என்ற ஒரு நேர் காணல் குறிப்போடும்,

'தனித்துவத்துக் கொரு உருவம் மாஸ்டர் - நல்ல
தங்குபுகழ்க்கொரு உருவம் மாஸ்டர் - வல்ல
இனித்தகதைக் கொருஉருவம் மாஸ்டர் - நீங்கா
எளிமைக்கும் பண்புக்கும் மாஸ்டர்.
நனிபுனைந்த கதைகளெலாம் நூல்களாக
நாம் கண்டு சுவைக்கின்ற நற்பேறுற்றோம்.
இனியென்ன, நீங்களும்தான் வாங்கி வாங்கி
இனித்தினித்துப் படிப்பதற்கும் இடையூறுண்டோ...? '

  என்ற கவிஞர் திமிலைத்துமிலன் அவர்களது கவி வரிகளோடும் கதைசொல்லி, வானொலி மாமா மாஸ்டர் சிவலிங்கம் அவர்களது அறிமுகக்குறிப்புக்குள் நுழைகிறேன்.

       ஒரு கலைஞனின் சமூக இருப்பு என்பது பிரத்யேக குணநலன்கள் கொண்டது. அவன் உருவாக்கும் ஒவ்வொரு படைப்புக்குப் பின்னாலும், அவன் இந்த வாழ்வில் பிணைந்தது இருக்கிறது, விலகியது இருக்கிறது, வெறுத்தது இருக்கிறது, தழுவியது இருக்கிறது. அது மற்றவர்களையும் தழுவிக்கொள்ளும். அவர்களின் சுவடுகள் தொட்டு அது மற்றவர்களையும் பயணிக்கத் தூண்டும். உள்ளிருந்து புறமும், புறமிருந்து உள்ளுமாய் வாழ்க்கையை விசாரணை செய்யும் கதைகளை ஐம்பதாண்டுகளாக ஒரு கதை சொல்லியாக உள்ளும் வெளியுமாய் தன்னையே நிறுத்திப் பார்த்து பெரும் காட்சிப்படிமங்களாய்,  ஒரு வெளியை சிருஸ்டிக்கும் ஆற்றல் மிக்க கவனிக்கத் தவறும் இடங்களிலிருந்து கவனிப்புக்குள்ளாக வேண்டிய விடயங்களை பிரமாண்டங்களாக்கியிருக்கும் மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மேற்கூறியவற்றோடும் அப்பாலும் அடக்கக்கூடிய ஒரு  மகத்தான் கலைஞர்.

    'ஏதாவது ஒரு துறையை உங்களுக்காகத் தேர்ந்தெடுங்கள் என்றோ ஒருநாள் அதில் நிச்சம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்' என்பதற்கிணங்க தமது பல்துறை ஆளுமைகளிலிருந்து  அவர் தனித்துப் பயணித்தது ஒரு கதை சொல்லியாகவே. அவர் சூழலில் நம்மைக் கரைத்துக் கொண்டு அவரது ஆற்றல் குறித்து பேசும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதால் அது நமக்குள்ளும் ஒரு கனவினை, ஒரு இலட்சியத்தினை திரித்தூண்டிவிடுகிறது. இவரது வழித்தடங்கள் நமக்கு பல முன் மாதிரிகளையும் இட்டுச்செல்கிறது.

    இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மஞ்சந்தொடுவாய் என்ற ஊரில் இரத்தினம் ஆசிரியருக்கும், செல்லத்தங்கம் என்பவருக்கும் 1933 ஆம் ஆண்டு மார்ச் 28 ல் ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்தார் சிவலிங்கம். சென் மேரீஸ் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றதோடு சென்னை சந்தனு கலைக்கல்லூரியில் ஓராண்டு கார்ட்டூன் கலையும், வில்லிசைக் கலையும் படித்திருக்கிறார். புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையவர்கள் இவரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று, இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த சரவணமுத்து மாமாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். அன்றில் இருந்து இலங்கை வானொலியில் கதை சொல்ல ஆரம்பித்தார். பின்னர் இலங்கைத் தொலைக்காட்சியிலும் இவரது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. கொழும்பில் இருந்து வெளியான தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் பண்டிதர் பூபாலபிள்ளை என்பவரின் மகள் மங்கையர்க்கரசி அவர்களைத் திருமணம் புரிந்தார். 

   நவீன இலத்திரனியல் சாதனங்களின் வருகைக்குமுன் வானொலி ஒன்றே மிகப்பெரிய ஜனரஞ்சக ஊடகமாக இருந்த அந்தக் காலத்தில், ஒரு கனவு வெளியை உருவாக்குவதற்கும் ஒரு உணர்வினை ஜனரஞ்சகத்துடன் தருவதற்குமான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டார். நிச்சயமாக அப்படியொரு காலமும் இப்படியொரு கதைசொல்லி மாமாவும் இனி வரும் காலத்தில் வாய்க்கப்போவதில்லை.

   இலங்கை, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வானொலி, தொலைக்காட்சி மற்றும் எண்ணிலடங்கா மேடைகள் என 50 வருடக் கதைசொல்லல் அனுபவமும், சிறுவர் எழுத்தாளர் (சிறுவர் கதை மற்றும் சிறுவர் பாடல்), 144 மேடைகள் கண்ட மிகச் சிறந்த வில்லுப் பாட்டுக் கலைஞர், நகைச்சுவைப் பேச்சாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர், சிறந்த நடிகர், ஓவியர், பத்திரிகையாளர், எனப் பல்வேறு திறன்களைத் தன்னகத்தே கொண்டவரும் கிருபானந்தவாரியார் அவர்களினால் 'அருட்கலைத்திலகம்' எனவும், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களால் 'நகைச்சுவைக் குமரன்' எனவும் பண்டிதர் வீ.சி.கந்தையா அவர்களால் 'வில்லிசைச்செல்வன்' எனவும் முன்னாள் அமைச்சர் செ.இராசதுரை அவர்களால் 'வில்லிசைச் செல்வர்' எனவும் காத்தான்குடிப் பொதுமக்களால் 'கனித்தமிழ்க் கதைஞன்' எனவும் மட்டக்களப்பு இந்து சயம அபிவிருத்திச் சங்கத்தினால் 'கலைக்குரிசில்' எனவும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினால் 'சிறுவர் இலக்கியச் செம்மல்' எனவும் இங்கிலாந்தில் இயங்கும் BUDS எனும் அமைப்பினால் பொன்முடிச்சுக் கொடுத்து 'கலைமாமணி' எனவும் கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் 'இலக்கிய முதுமாணி' எனவும் பற்பல பட்டங்கள் பெற்றவரும், 1984 – 1991 ஆம் ஆண்டுகளில் சிறுவர் இலக்கியத்துக்கான வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு, மற்றும் 2013 இல் 'அன்பு தந்த பரிசு' எனும் சிறுவர் படைப்புக்காக மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 'தமிழியல் விருது', இலங்கை அரசின் உயர் விருதுகளில் ஒன்றான 'கலாபூசணம்' விருது என்பவற்றைத் தனதாக்கிக் கொண்டவருமான மாஸ்டர் சிவலிங்கம் மாமாவின் ஆளுமையை நாம் உணர்வதும் தொடர்வதும் என்பது இந்த நிகழ்வின் பிரதான செய்தியாகின்றது.

   'தினபதி' பத்திரிகையில் இளைஞர் மன்றம் எனும் பகுதிக்குப் பொறுப்பாகவும் 'சோமண்ணே சொல்லுகிறார்' எனும் பகுதியும், 'சிந்தாமணி' பத்திரிகையில் சிறுவர் சிந்தாமணிக்குப் பொறுப்பாகவும் இருந்தமை மட்டுமன்றி அவ்விரு பத்திரிகைகளில் துணையாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 'சுதந்திரன்' பத்திரிகையில் கேலிச்சித்திரமும் வீரகேசரியில் சிறுவர் பகுதிக்கான ஓவியமும் வரைந்திருக்கிறார்.

      பயங்கர இரவு, அன்பு தந்த பரிசு, உறைபனித் தாத்தா, சிறுவர் கதை மலர் என நூல்களை படைப்புலகத்திற்குத் தந்திருக்கும் இவர், வீரகேசரி வாரவெளியீட்டின் சிறுவர் பகுதியில் மாணவர்களுக்காக மஹா பாரதக் கதையை 57 வாரங்கள் தொடர்ந்து எழுதியிருக்கிறார். அந்தத் தொடரை பின்னர் மாணவர்கள் விரும்பிப்படிக்கும் வகையில் தனி நூலாக அழகிய வண்ணப்படங்களுடனும் வெளியிட்டிருக்கிறார். இதுவரையில் இந்த நூல் மூன்று பதிப்புகளைக்கண்டுவிட்டது. அத்தோடு,  'யமலோகத்தில் வீசு கதிர்காமத்தம்பி', 'சுடுசாம்பலாப் போச்சு போடியாரே', 'நாஸ்த்திகன் நல்லதம்பி' போன்ற நாடகங்களை எழுதி இயக்கி நடித்துமிருக்கிறார். பல பாத்திரங்களின் கதைவசனங்களைப் பேசி நடித்துக் காட்டும் சந்தர்ப்பங்களில் குரல், தொனி, செய்கை வேறுபடுத்தும் திறனே அவரை ஒரு தனித்துவக்கலைஞனாக மாற்றியிருந்தது.

    'உண்மைக் கலைஞன் யார்' என்பதற்குரிய சரியான வரைவிலக்கணம் என்பதை இவ்வாறு நாம் குறிப்பிட முடியும்.'தனது ஆற்றல் மூலம் மக்கள் மனதில் என்றுமே நீங்க முடியாத காட்சியை எவன் ஒருவன் பதித்து விட்டுச் செல்கிறானோ அவனே உண்மையான கலைஞன் ஆவான். அப்படியான ஒரு உண்மைக் கலைஞர் பற்றிய கவிஞர் அமரர் சிவானந்தத்தேவர் அவர்களது கவிதையொன்று,

 'வில்லெடுத்து ,சைமீட்டி வெற்றியதில் ஈட்டி
விளக்கமுற ஓரங்க நாடகங்கள் காட்டி
பொல்லெடுத்து வாளெடுத்து பொய்வேடம் புனைந்து
பொக்கை வாய் கிழவனென போடியென நடித்து
சொல்லெடுத்து தேன் குழைத்து சிறு கதைகளாக்கி
சிறுவர் உளம் மகிழ்வுறவே வானொலியில் வண்ணச்சொல்தொடுக்கும்
மாமாவாம் மாஸ்டர் சிவலிங்கம் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி
சுற்றமுடன் வாழ என்றும் நாமும் வாழ்த்தி நிற்போம்"


இது தொடர்பான செய்தி


க.மோகனதாசன் 

No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...