Thursday, May 2, 2019

அடுக்கிக்கட்டும் புரிதலின் அர்த்தச் சுமை...


லிங்கேசின் கவிதை நூலுக்கான அறிமுகம்


இங்கே ஒரு பிரக்ஞை சிலிர்க்கிறது. ஒரு வார்த்தை கூட சொல்லிக்கொள்ள முடியாதபோது மௌனத்தில் சொல்லிச் சேர்த்தவை தூக்கிச் சுமக்கிற முதுகுகளின் விலாசக்கனம் பொருள் சொல்லிச் சேர்க்கும் தருணம் தக்கவைத்திருக்கின்ற
அர்த்தங்களின் மேல் மிதந்துகொண்டிருக்கிற ஒரு பெரு வலியின் இருளை எழுதிச்செல்கிறது லிங்கேஸின் கவிதைகள். அது வித்தியாசமான குரல் என்பது மாத்திரமில்லை ஒரு சாசுவதமான குரலும்கூட. அது படிம வியாபகமானது. ஒரு கவிஞனின் உலகம் அவன் அனுபவ உலகம். லிங்கேஸை ஆர அமரப் படித்தால் அவரோடு ஒட்டிக்கொண்டு விட  முடியும். ஏனெனில்  இந்த அனுபவ உலகம் வாசகனுடைய அனுபவ உலகுடன் இணைந்து உண்மையான ரஸனை சூடு பிடிக்கிறது. ஒரு புலனால் உணர்வது இன்னொரு புலனுக்கு இணைக்கப்படுகிறது. அனுபவம் வார்த்தையின் மூலம் அதீத எல்லைகளை நோக்கி நகர்கிறது.

சுருக்கமாகக் கூறின் இவரது கவிதையில் வார்த்தையின் உள்வியாபகம் எல்லையற்ற பரிமாணம் உடையது. அரூபமான வார்த்தைகள் செயல் இழந்து போகும் பொழுது அந்த இடத்தை நிறைவு செய்யப் படிமங்களால் மட்டுமே முடியும் என்பதையுணர்ந்து படிம அணிவகுப்பே செய்திருக்கிறார் லிங்கேஸ். பொதுவாக ரஸனை என்பது அனுபவத்தின் நேர்கோடாக இணைக் குறியீடாகஇருக்க, லிங்கேஸ் அனுபவத்தை அதன் நானாவிதமான, ஏன், தாறுமாறான தன்மைகளுடன் காட்டுகிறார். 'கல்லறைகளை நிறுவுகிறேன்' எனும் முதல் கவிதையே விதவிதமான விபரீத சப்த அலைகளை எம்முள்ளே எழுப்புகிறது.

இப்போதும் கேட்கிறதெனக்கு பனைகளில் 
தலைமுறை வளர்த்த மைனாக்களின் சந்திப்பு 
அவை சாம்பலான பிறகும். 
ஓட்டுத்துண்டுகளோடு அம்மாவுக்கும்... அப்பாவுக்கும்... 
இரண்டு அண்ணன்களுக்குமாக... 
அந்தோ... வட்டிழந்த மைனாக்களுக்குமாக...!

என இக்கவிதையினை முடிக்கிறார். எதிர்மறைகளை இசைக்கும் வித்தை. மறுபடியும் காடு கருக, உடல் நாற்றம் வீச, இயற்கை உயிர்த்தெழுவது போல் படிமம் கண் முன்னே நிழலாடுகிறது. ஆனால் படிமம் மாத்திரமில்லை கவிதை, உயிரின் துடிப்பு உணர்ச்சி வேகத்தில் இங்கு கவிதையாக மிளிர்கிறது. உள்வாங்கிய அனுபவத்தின் பல குரல்களை இங்கு கேட்கலாம். உன் சிறுவயதுக் காயங்களில் மண் தொட்டு வைப்பர் என் தோழர்... என 'சவப்பெட்டி சொல்லும் கதை' யில்

விளக்கொளியும் சூரியனும் செத்துவிட்ட தேசமொன்றில் 
நீ அடைபட்டுக்கிடப்பாய் பின் சல்லடையாக்கப்படுவாய்
உன்னிலிருந்த ஒரு துண்டுத் துணியேனும் 
விட்டு வைக்காது ஒரு கூட்டம் 
எங்கோ, உனது சிரிப்பு, நாளிதழ்களை நிரப்பும் 
உன் வீட்டு மூலைகளில் இலையான்கள் பீச்சியபடி 
உன் முகமும் நினைவும் மெல்ல மெல்ல உருகத்தொடங்கும் 
உன் உடலைப்போலவே...

என்ற இவரது அழுகை வாசக மனத்தையும் தொற்றிக்கொள்கிறது.
லிங்கேஸின் கவிதைகள் மொழியால் அனுபவம் இயற்றும் படைப்பின் நேர்த்தி கொண்டவை. தான் சார்ந்த இவ்வுலக அவலங்களை, அதன் வலியை, சின்னத்தனங்களை, துரோகங்களை என வேதனையால் சொல்லோடு பொருளெடுத்து, நில்லாது ஓடுகின்ற நினைவுகளை நெஞ்சேற்றி, தன்னுணர்வையும் சமூக உணர்வையும் கலந்து வாழ்வின் தரிசனங்களை வெளிப்படையாக சொல்லிவிட முடியாத நிகழ்வுகளை படைப்பில் பதிய, சிடுக்கானதோர் மொழி நடையினால் நமக்குத் தந்திருக்கிறார். அவரது 'மரணத்தின் குறியீடு' எனும் கவிதை,

ஜந்துக்களின் பருத்த ஓலம், 
அந்தப் புல்வெளி எங்கும் 
அங்கு பச்சை என்பது 
மரணத்தின் குறியீடுதான் இங்கு போலவே 
வேட்டைக்காகவெனவே காடுகளை மூடியிருந்தது 
அந்தக் குறியீட்டின் போர்வை... 

என்பதாக எனக்கும் தெரியும் சில வித்தைகள் என சொல்லாமல் சொல்கிறார். கவிதை எழுத்து விஷயத்தில் பழகிய அர்த்தம் பூஜ்யமாவதில் தான் கவிதைக்கான அர்த்தம் உருவாகிறது. இது வார்த்தை, வார்த்தைச் சேர்க்கை, அந்தச்சேர்க்கைகளின் ரூபம் ஒன்றிலும் நாம் கண்டு பழகி களைத்து போன உருவங்களைப் பார்க்கக்கூடாது. இவரது படிமங்கள் அதனையே செய்திருக்கின்றன. 'மோனா' என தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை,

பகலைப் பெற திராணி அற்ற பாதையொன்றில் 
அவள் கைகளில் இரு முலைகளையும் ஏந்தியபடி 
அலைவுற்றிருப்பாள்.... மோனா...!! 
வானமெங்கும் அவளது வெள்ளிகளை விதைத்தொழித்தவள். 
சபிக்கப்பட்ட குயவர்களின் மகளவள். 
மோனா...!! மோனா...!! 
விடிவதற்குள் வேட்டையாடப்பட்டுவிடுவாள்...! 

என ஒரு யுகம் வேண்டும் முகம் தேட மீட்சிக்குப் பயனற்றுப் போயினும் தாறு மாறாய்க் கிடக்கும் வார்த்தைகள் நம்மை உலுக்கி எடுக்கின்றன. கவிதைகளில் அதற்கென பிரத்தியேகமாக சிந்தித்து அடுக்கும் லாவகமானதோர் மொழியை, லிங்கேஸ் கையாண்டிருக்கிறார். இரவுடன் பேசுவது, காற்றுடன்  உரையாடுவது....' என்பன மாதிரியான வார்த்தைகள் குறியீடாக எழுந்து, வாசிப்பின் குறுக்கே நின்று நம்மை உண்டு இல்லையென செய்திருப்பதை காண முடிகிறது.

ஆனாலும் லிங்கேஸின் கவிதை மொழி என்பது இலேசான சுளுவான பத்து பனிரண்டு வார்த்தைகளுக்குள் கட்டுமானம் கொள்வதாகவே காட்சித்தருகிறது. ஒரு கைதேர்ந்த ஓவியன் அதிக இரேகைகளை தனது ஓவியங்களுக்காக செலவழிப்பதில்லை. சில இரேகைகளே அந்த அனுபவத்தைத் தந்துவிடும். இவரின் 'எலும்பு யாருடையது' எம்முடன் பேசுவது அதிகம்.

என் நெஞ்சின் மேல் 
தாத்தன் தோட்டத்து புளியம் கட்டை ஒன்று 
மிகப்பெரியதாக.. என்றோ ஒருநாள் 
அதனில் ஊஞ்சல் ஆடியதற்காக பழிவாங்குகிறது. 
என்னுடனே அதுவும் சாம்பராகும் என்பதறியாது,
இப்போது குரோதம் நீர்மேவிக் கேட்கும். 
என்பு... உன்னுடையதா?? புளிய மரத்தினுடையதா??

பெரும் கேள்வியெழுப்புகிறது கவிதை. அதிசயமான இடைவெளியில் நின்று கொண்டு ஒரு அழைப்பு நம்மை துரத்துகிறது. அது நமது இயலாமையின் இருட்டை பெருஞ்சாட்டையால் அடிக்கிறது. இந்த முரணை 'சிறுமியின் அழைப்பு' எனும் கவிதை,

சிறுமியிடமிருந்து எனக்கொரு கூக்குரல். 
எப்போதும் கடைசியில் செல்லும் நான்... அன்றும் அப்படியே! 
அவளின் கந்தல் உடையும் அவள் பொறுக்கிய சுள்ளிகளும்... 
ஓட்டை சிரட்டை நிறைய 
அவளின் கடைசி முனகல் கேட்க கட்டி இரத்தமும்... 
திரும்பி வருகையில் கொழுவிவிடப்பட்டதென் கையில்... 

என ஒரு பெருவலியாக அந்த அழைப்பு நம்மைத்துரத்துகிறது. கவிதையின் வரிகளுக்கு அப்பால், தன்னுடைய திராணியும் சுதந்திர இச்சையும் சார்ந்து மேற்கொள்ளும் பயணத்தின் துவக்கமாக சில கவிதைகள் அமைகின்றன. புத்தகத்திற்கு தலைப்பிட்டிருக்கும் 'புகையுள் மறையும் கடவுளர்' எனும் கவிதை,

ஆயிரம் விளக்குகளை வழிநெடுக ஏற்றிவிட்டு 
புகை மண்டலத்தில் ஒளிந்து கொள்கின்றான் கடவுள்... 
தம்மை மறைத்தபடி வரும் 
பேய்களுக்கு வரங்களளித்துவிட்டு... 

என சமரசமற்று கடவுளை பார்த்து நீ யாரது பக்கம் எனக் கேட்கிறார். 'கேட்கவே இல்லை கடவுளர்க்கு' எனும் கவிதையும் கடவுளரை மேலும் கேள்விக்குட்படுத்துகின்றது.

ஒரு மொழிக்கொத்தாக மனத்தில் தொற்றுவதற்குச் சில நுண்கணங்கள் முன்பே கவிதை, வாசக மனத்தில் தன்னை ஊன்றிக்கொள்கிறது, இன்னதென்று தெரியாத விதை போல. இனி அது வளர்ந்து பூமிக்கு வெளியில் தலைகாட்டும் போதுதான் தெரியும் எந்தவிதமான தாவரம் என்று. 'என் ஊரைக் கண்டால்' எனும் கவிதை  ஒரு நனவிடை தோய்தலாக அமைய 'வானம் பற்றி' எனும் கவிதை,

பயணித்துக் கொண்டிருந்தது மேகம் 
சந்ததிகளை பிய்த்து உதறியபடி சில கழுகுகளோடு 
வானத்திற்குத் தெரியும் கழுகின் முகமும் முகவரியும் 
இருந்தும் அது மௌனியாகவே இருந்தது...

என்பதாக அந்தத் தருணம்வரை வாசகத் தனிமனம் தன்போக்கில் சேகரித்து வந்திருக்கும் அர்த்தத் தொகுப்பின்மீது கனமான அதிர்வலைகள் மோதி சமநிலையைக் குலைக்கின்றன இவை. தர்க்கபூர்வமாக நமக்குபுரிவதற்குச் சற்று முன்னதாகவே கவிதை புரியவைத்துவிடுகிறது சில விடயங்களை பேருணர்வாக. 'மௌனித்தன தீப்பந்தங்கள்' எனும் கவிதை,

சாமகான பூமியின் வெடிப்பிடை இருந்ததந்த உலகம் 
சல்லடையாக்கப்பட்ட கூரைகளின் நடுவே 
வெட்டிய இலைகளை சுமந்தபடி செல்லும் எறும்புகள்... 
நெகிழ்கிறது மண் எப்போதும் முளைவிடா விதைகளுக்கு... 
மௌனித்தபடியே இருந்தன தீப்பந்தங்கள் 
இறந்த காலத்தினை சட்டென போட்டுடைத்தபடி....!

என பலமுறை அவிழ்க்கப்பட்டு ஏற்கனவே விடை தெரியவந்த புதிரையே முன்நிறுத்துகிறது. ஆனாலும் அது புதிர்தானே. 'புது விதி செய்வோம்' எனும் கவிதையில்,

மரணித்துப்போகாத மனிதம் 
சொல்லிக்கொண்டே இருக்கும் 
அடுத்தடுத்த யுகங்களுக்கான யாத்திரைகளை.... 
வர்ணித்துக்கொண்டே செல் வாழ்வை 
ஏணிகளை சரிசெய்து புது விதி செய்குவோம்...

என உத்வேகமும் தருகிறார். இவர் தன்னைப்பறிக் கூறும் போது, தனிமனித சமூகத்தின் ஊக்கத்தூணாக நான் என்னைப்  பார்க்கிறேன். நிச்சயமில்லாத மலைச் சரிவுப் பயணங்களில் சிலநேரம்  வேகமெடுத்துச் செல்லத்தூண்டிய சிறகுகளை என் சார்ந்தோர்  பக்குவப்படும் வரையில் சேர்த்துக்கட்டி வழிகாட்டினர். எம்மை சீர்குலைத்த யுத்தத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் ஆன்மா நான். தோற்றுப்போனவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு வீரம் மிக்க சமுதாயத்தின் அங்கம் நான். இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை என் இருட்டடிப்புச் செய்யப்பட்ட நாட்களைச் சொல்லும்| இனியும் நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். என் சந்ததிகளை நிமிரச் செய்ய நான் இவைகளை உரைப்பேன். தொலைபேசிகளின் விளிம்புகளை விட்டகல  முடியாதவர்களை புத்தகம் நோக்கி பயணப்பட வைப்பது புதிர்தான்.  ஆயினும் நமது இரத்தம் தோய்ந்த வரலாற்றின் சிறு துளியாக  எனது 'புகையுள் மறையும் கடவுளர்' என்ற தொகுப்பை நான்  பிரசவித்திருக்கின்றேன் என்கிறார்.

இவரது கவிதைத் தலைப்புக்களை இணைத்தால் கூட ஒரு கவிதை போல் அமைகின்றது. கல்லறைகளை நிறுவுகிறேன், மரபணு செய்யப்பட்ட விதையொன்றைப்போல.. பிரிக்கப்பட்டுக்கொண்டிருந்தாள் திரௌபதி, சவப்பெட்டி சொல்லும் கதை, மரணத்தின் குறியீடு மோனா! காமம் என பெயர் சூட்டுக, எழமுடியாத சாபங்கள், மூன்று திங்கள் கழித்து வரும் இளவேனில் தேர்தல் முடிவுகள், காய்ந்தபடியிருக்கும் வர்ணம், வண்டுகளோடிணைந்து முகாரி பாட சிலைகளில் சிரிப்பு, அப்படியேதானிருந்தது கண்ணியில் சிக்கியபடி, வரங்களே சாபம், எலும்பு யாருடையது? சிறுமியின் அழைப்பு, புகையுள் மறையும் கடவுளர், கேட்கவே இல்லை கடவுளர்க்கு, என் ஊரைக்கண்டால், உன்முகவரி நான், வானம் பற்றி, தலைமுறைக்கான பரிசுப்பொதி, கால்களும் தவம் முடித்த செட்டைகளும்... முற்றுப்பெறாத ஆடை பொருத்திய இரவு காத்துக்கிடக்கிறது, மண் சூளைகளுக்காக, காத்திருப்பதே சாபம், மௌனித்தன தீப்பந்தங்கள், தர்க்கிக்கும் ஆத்மம் இருளில்? புதி விதி செய்வோம். என்பன இவரது கவிதையின் தலைப்புக்கள்.

சொல்லற்ற ஒரு தளத்தில் கவிதையின் வெளிச்சம் பாய்கிறது. மொழியமைப்பில் உள்ள வசீகரம் காரணமாக, முதல் வரியிலிருந்தே மேலெழும் வாஞ்சை காரணமாக, சொற்றொடர்களின் பிரயோகத்தில் உள்ள நூதனம் காரணமாக, கருத்துப் புலத்தில் உள்ள வலுவின் காரணமாக, இவையனைத்துக்கும் மேலே, அந்தக் கவிதை உணர்த்த முனையும் அனுபவத்தை ஏற்பதற்கான பதநிலையில் வாசக மனம் இருப்பதற்கான காட்சிப்படிம வெளியை புதிதாக உருவாக்கி நெஞ்சுக்குழிக்குள் உக்கிரமாகி உட்கார்ந்திருக்கும் நெருப்பை நமக்கு அறிமுகம் செய்கிறார். அதே நேரம் சௌகர்யங்களுக்கு திரும்பிப் பறக்கச் சொல்கிற சிறகிலிருக்கிறது ஒரு பெரும் கனவையும் ஆங்காங்கே தடவிச்செல்கிறார். அந்தக் கனவும் கூண்டுகளை அடைகாக்கிறது எப்போதுமற்ற சுதந்திரத்தோடு..

வாழ்த்துக்களுடன்.
க.மோகனதாசன்.

No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...