Monday, May 6, 2019

இருட்டுத்தான்.. ஏகாந்தம்தான்..

நடுங்கிக் கொண்டிருக்கும்
எனது கனவுகளின் இடுக்குகளில்
எட்டிப் பார்க்கின்றன
ஏகாந்தத்தின் வலிகள்!
சிதைந்து கிடந்த என்னை
சேர்த்துத்

தைத்தெடுத்துக்கொண்டு
தொலைத்த
இருதயத் துடிப்புக்களை
தேடிக்கொண்டு வருகின்றேன்!
என்னைச் சுற்றி நின்ற
ஓலங்களின் ஓரங்களில்
கண்ணீர்த் திவலைகளாய்
வடிந்துகொண்டிருந்தன
நான்
தேடியலைந்த தென்றல்கள்!
வருடல்களோ வாசனைகளோ
சாத்தியமில்லாத
கணங்களில்
ரத்தம் துடைத்து
அடையாளம் காணப்படாத
இலக்கை நோக்கி
அதிர்ச்சியுடன் நீளும்
என் பாதங்கள்!
என் மீது
ஊற்றப்படும் இருட்டினை
பருகியபடியே
அமிலச் சாலை எங்கணும்
இருட்டின் உச்சரிப்பை
நிராகரிக்க முடியாமல்
நடந்து கொண்டிருக்கிறேன்!
இடி இடித்து
பெருமழை பெய்து
அடங்கும் வரைக்கும்
பேசாமல் இருக்க
நான் பழக்கப்பட்டிருக்கிறேன்
அல்லது
பயமுறுத்தப்பட்டிருக்கின்றேன்!
எனது நெற்றி கீறி
எழுதப்பட்ட வாசகம்
அவர்களது பாஷையில்
ஒரு வெளிச்சம் பற்றிய
மறுப்பாகவும் இருக்கலாம்!
சூழ்நிலைகள் கொத்திச்சென்ற
பேசத் தவறிய வார்த்தைகள்
எனக்கான சூரியனுடன்
திரும்பி வரும்வரை
இருட்டுத்தான்..
ஏகாந்தம்தான்..

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect