Thursday, May 16, 2019

நவீனத்தைப் புரிந்து கொள்ளல்

  'மொடேனிஸம் என்பது பொதுப்படையாக நோக்கும் போது, அது மேற்கத்தேயக் கலையில் மாத்திரமல்லாது, மேற்கத்தேயப் பண்பாட்டிலே ஏற்பட்ட வேண்டுமென்றே செய்யப்பட்டனவும், தடையற்ற பண்புடையனவுமான, மரபுத்தள விடுபாடுகளைக் குறிக்கும்.'
பேரா.கா.சிவத்தம்பி

  னிதன் சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்தே தான் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே போகிறோம், தன்னைச் சூழவுள்ள இயற்கை எப்படித் தோன்றியது, எப்படி இயங்குகிறது எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு விடைகாண முயன்று வந்துள்ளான். இயற்கை பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் மனிதனுக்குக் கிடைத்த விடைகள் மனுக்குலத்தின் அவ்வக்கால அறிவியல் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஏற்ப மாற்றம் அடைந்து வந்திருக்கிறது. இம்மாற்றங்களை மூன்று பெரும் கால கட்டங்களாக வகுக்கலாம்.

1. பண்டைய காலம்
2. மத்திய காலம் 
3. நவீன காலம்
  
பண்டைய காலம்
    இது வரலாற்றுக் காலம் தொட்டு கி.பி. 6ம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியாகும். அதாவது தொல் பழங்குடிகளின் வாழ்வு தொடங்கி முடி மன்னர்கள் அடிமை எசமானர்கள் வரையான காலப்பகுதியாகும்.
       இக்காலப் பகுதியில் பூமி, பிரபஞ்சம் பற்றிய புரிதலில் பூமியே மையமாகவும் பிறகோள்கள் அனைத்தும் இதையே மையமாகக் கொண்டு இயங்குவதாகவும் கருதப்பட்டது. இக்காலத்தில் கடவுள் கருத்து, கடவுள் மறுப்புக் கருத்து, இயக்கவியல் கருத்து, இயக்கவியல் மறுப்புக் கருத்து ஆகிய இருவேறு சிந்தனைப் போக்குகளையும் காணமுடிகிறது. இக்காலத்தில் சிந்தனையாளர்களாக பொருள் முதல் வாதத்திற்கு வித்திட்ட தேல்ஸ்(கி.மு.624–547), அனாக்சிமான்டர் (கி.மு.610–546), அனாக்சி மெனிஸ் (கி.மு.588–525), ஹெராக்றிட்டஸ் (கி.மு.544–483), கருத்து முதல் வாதியான பிளேட்டோ(கி.மு. 427–347), சோக்கிரட்டீஸ், அரிஸ்ரோட்டில் போன்றோரைக் குறிப்பிடலாம்.

மத்தியகாலம்
     இது கி.பி. 6ம் நூற்றாண்டு தொடங்கி 15ம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியாகும். நிலமானிய முறை வலுப்பெற்று பேரரசுகளின் ஆட்சியுருவான காலகட்டமாகும். பேரரசர்கள் இறைவனின் தூதுவர்களாகச் சித்தரிக்கப்பட்டு, இவர்களுக்கு விசுவாசமாகவும் அடிபணிந்தும் கிடந்து வேலை செய்வதே இறைவனுக்குச் செய்யும் சேவையாகும் எனும் கருத்து முதல்வாத்தின் மூலம் பேரரசுகளும் மத நிறுவனங்களும் எல்லாம் வல்ல அதிகார மையங்களாக இக்காலப் பகுதியல் ஆக்கப்பட்டிருந்தன.
       புனித அகஸ்டின், தாமஸ் அக்வினாஸ் போன்ற மதப் பாதிரிமார்களே இக்காலப் பகுதியின் தத்துவ கர்த்தாக்களாக விளங்கினர். இதனால் பண்டைத் தத்துவத்தின் பொருள் முதல்வாதக் கடவுள் மறுப்புக் கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு கடவுள் நம்பிக்கையூட்டும் கருத்து முதல்வாதக் கூறுகளே முதன்மைப் படுத்தப்பட்டன.

நவீன காலம்
       இது 15ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக் காலம் தொடங்கி 19ம் 20ம் நூற்றாண்டு காலம் வரையான சிந்தனைகளை உள்ளடக்கியதாகும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, முதலாளித்துவத்தின் தோற்றம் என்பன நிலமானிய முறைமையையும் பேரரசுகளான முடிமன்னர் ஆட்சியையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயக தேசிய அரசுகள் அமைய வழிவகுத்தன.
     முதலாளியத்தின் உச்சகட்ட வளர்ச்சியாக ஏகாதிபத்தியம், அவைகளுக்கிடையிலான மோதல்கள், சோசலிஷம், கம்யூனிஷம் முதலான கருத்தாக்கங்களின் எழிச்சி அவற்றுக்கான போராட்டங்கள், கட்டுமானங்கள் ஆகிய அனைத்திற்குமான தத்துவங்களின், விஞ்ஞான பூர்வமான சிந்தனைகளின் காலப்பகுதியாக இது கொள்ளப்படுகின்றது.
          இக்காலப் பகுதியில் புது யுகப் பொருள் முதல்வாதச் சிந்தனையாளர் எனப் போற்றப்படும் பிரான்ஸஸ் பேக்கன், அறியொணாக் கொள்கையை முன் வைத்த இம்மானுவெல் காண்ட், இயக்கவியல் கொள்கை நிலைநாட்டிய ஹெகல், பொருள் முதல் வாதக் கருத்தாக்கத்தை நிறுவிய பாயர் பாக், இயக்கவியல் பொருள் முதல் வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள் முதல்வாதம் ஆகிய தத்துவ மூலவர்களான கார்ல்மாக்ஸ், பிரடறிக் ஏங்கல்ஸ் போன்றவர்கள் பல்வேறு தத்துவங்களை முன் வைத்தனர். இவையெல்லாம் சேர்த்துத்தான் நவீன காலத்தை உருவாக்கின. இதனை மேலும் புரிந்து கொள்ள மூன்று சிந்தனை மரபுகளின் தத்துவங்கள் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1. கார்ட்டீசின் அறிதல் முறை: 
    கணிதவியல் தத்துவ வாதியாக விளங்கிய டேக்கார்ட்(1596–1650) என்பவரின் பெயரினாலேயே இவ் அறிதல் முறை அழைக்கப்படுகின்றது. அனுபவமாயிருந்த அறிதல் முறையைத் தர்க்கத்திற்குட்படுத்தியும் அறிதல் செயற்பாட்டில் சிந்தனையின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியும் பகுத்தறிவு வயப்பட்ட அணுகு முறையினை முன் வைப்பது இவரது அணுகுமுறையாகும் (நான் சிந்திக்கின்றேன் அதனால் இருக்கின்றேன்).

2. அறிவொளிக்கால சிந்தனை மரபு: 
           18ம் நூற்றாண்டில் பிரான்சில் தோன்றிய இச்சிந்தனை மரபு, வரட்டுத்தனமான மதக் கோட்பாடுகளுக்கும், பிரபுத்துவ அதிகாரத்துக்கும் எதிராகக் குரல் எழுப்பி அறிவார்ந்த சனநாயகச் சிந்தனைகளுக்கு முக்கியத்துவமளித்தது. இது கருத்தியல் ரீதியான மாற்றங்களை எதிர்பார்த்தது. இச்சிந்தனை மரபின் முன்னோடிகளாக வால்டேர், ரூஸோ போன்றோரைக் குறிப்பிடலாம்.

3. மார்க்சியச் சிந்தனை:
       கார்ல் மாக்ஸ் (1818–1883), ஏங்கெல்ஸ் (1820–1895) ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட இத்தத்துவம் அறிதல் முறையில் மட்டுமல்லாது அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத்துறை அனைத்திலும் புரட்சிகரமானதோர் அணுகுமுறையைக் கொண்ட தத்துவமாக விளங்கியது. இது தனக்கு முன் விளங்கிய தத்துவ முறைகளை உள்வாங்கி அவற்றின் தவறுகளைக் களைந்து புதிய ஓர் அணுகு முறையினை முன் வைத்தது. இது இயக்கவியல் பொருண் முதல் வாதம், வரலாற்றுப் பொருண் முதல் வாதம் எனும் கருத்தோட்டம் வழியாக பேரண்டத்தையும் சமூகத்தையும் அணுகி விளக்கியதோடு, உலகைப் புரட்சிகரமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத் தையும் வலியுறுத்தியது.
          மேற்கூறப்பட்ட சிந்தனைப் போக்குகள் எல்லாம் முன் மொழியும் பிரதான கருத்துக் களாக பகுத்தறிவு, சனநாயக மயப்பாடு, மதச்சார்பின்மை என்பனவே வலியுறுத்தப் படுகின்றன. இதன் தொடர்ச்சியாக பல விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளும் (research), வெளிப்படுத்துதல்களும் (Discovery)கண்டுபிடிப்புக்களும் (Invention) இவ்வாதங்களைப் பலப்படுத்துகின்றன.
           இதில் சாள்ஸ் டார்வினுடைய கூர்ப்புக்கொள்கை முக்கியமானதாகும். அதாவது 'X'எனும் ஒரு மூதாதையிலிருந்து மனிதனும் குரங்கும் தோன்றினர் எனவும் தக்கன மட்டுமே பிழைக்கும் எனவும் கூறுவதோடு அதற்கான ஆதாரங்களையும் அறிவியல் ரீதியாக முன் வைக்கின்றார். இக்கூர்ப்புக் கொள்கை கடவுளை அடிப்படையாக்கொண்ட படைப்புக் கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கியது.
            இவரோடு சிக்மண்ட பிராய்ட்டும் தமது உளப்பகுப்புக் கோட்பாட்டோடு இணைகிறார். அதாவது மனித நடத்தைகளுக்குக் காரணம் அவனது இயல்பூக்கமான செயற்பாடுகளே ஆகும் என்கிறார். இதுவும் இவ்வளவு காலமும் இருந்த கடவுள் தான் மனித நடத்தைகளைத் தீர்மானிப்பவர்  எனும் கருத்தியலை நிராகரிப்பதாக அமைகின்றது.
    இச்சந்தர்ப்பத்தில் அச்சியந்திரமும் நீராவி இயந்திரமும் கண்டுபிடிக்கப்படுகின்றன. மனிதன் அதீத சக்தி பெற்றவனாக மாறுகின்றான். மேலும் மரபணுக்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன. இதனால் சந்ததி உருவாக்கம் பற்றி விஞ்ஞான அத்தாட்சிப்படுத்தல்கள் முன் வைக்கப்படுகின்றன. 
         மேற்கூறிய எல்லா விடயங்களும் சேர்த்து இதுவரை காலமும் மரபுச் சமூகத்தில் சாஸ்வதம் என எண்ணியிருந்த மதம், கடவுட் கோட்பாடு போன்றவற்றை நிராகரித்த தோடு புரட்சிகரமான மாற்றத்தையும் மேலைத்தேயச் சமூகத்தில் ஏற்படுத்தின. இவையெல்லாம் பாரம்பரிய சமூகத்தின் அழிவிலிருந்து தோன்றின. இதனைத்தான் நவீனம் என ஒற்றைச் சொல்லால் அழைக்கின்றோம். இந்த ஒற்றைச் சொல்லைப் புரிந்து கொள்ள இன்னும் சில சொற் பிரயோகங்களை அறிதல் அவசியமாகின்றது.

Modern  – நவீனம்
Modernity – நவீனமயமாகும் தன்மை
Modernization – நவீன மயமாதல்
Modernism  – நவீனத்துவம்

       நவீனம் என்பது பழமையும் வழிவழியே மரபானதுமான விடயங்களை மீறும் நோக்கம் கொண்ட புரட்சிகர மாற்றம் எனப்படுகின்றது. நவீன மயமாகும் தன்மை எனும் போது நவீனத்தைப் படிப்படியாக உருவாக்கத் தொடங்கும் அரசியல் சமூகப் பின்னணியாகும். நவீன மயமாதல் எனும் போது பாரம்பரிய சமூகம் முற்றுமுழுதாக மாறுதலடைதலாகும். நவீனத்துவம் என்பது மரபார்ந்த சமூகத்தின் மாற்றமுறைமை பற்றிய சிந்தனை மரபு. இதனையே பாரதி 'சொல் புதிது, சுவை புதிது, பொருள் புதிது...' எனக் கூறினான்.
       இந்நவீனம் கீழைத்தேயத்தில் மேனாட்டு ஆட்சியுடன் வருகிறது. மேற்குலகில் நவீனம் முந்தியிருந்த விடயங்களை அழித்து புதியதை உருவாக்க கீழைத்தேயத்தில் பாரம்பரிய மீட்புணர்வை ஏற்படுத்தியது. இதனால் பழமைக்கு புதிய கட்டமைப்பு ஏற்பட்டது. நவீனம் நடையுடை பாவனைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து தனித்துவ கலாசாரங்களை கேள்விக்குள்ளாக்கினாலும் நவீனத்தினை கீழைச் சமூகம் தன்வயப்படுத்தியிருப்பதும் உண்மையாகும். இதற்கு குறியீடாகத் திகழ்பவரே மகாகவி பாரதியார் ஆவார். அதிகாரப் படி நிலைச் சமூகத்தை மாற்றியமைப்பதற்காக 'சட்டத்தின் முன் சமத்துவம்' எனும் கொள்கையை முன் வைத்தது. இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக அது வரை காலமும் குழு நிலையில் இருந்து வந்த கல்வி முறை எல்லோருக்குமாக பரம்பலடைந்தது. அதாவது எந்த மனிதனும் கல்வி மூலம் உயர்நிலையடையலாம் என அனைவருக்குமான கல்வியை அறிமுகப்படுத்தியது. இங்கு சாதாரணமானவனாகக் கருதப்பட்ட மனிதன் அசாதாரணமானான்.
 எனவே நவீனத்துவம் என்பது வரலாற்றின் முக்கிய திருப்புமுனையாகவும், பல்வேறு மாற்றங்களை மானிடர்க்கு வழங்கிய உலக தரிசனமாகவும் திகழ்கின்றது. மதக் கொள்கையிலிருந்து மனிதனைப் பிரித்தெடுத்து அவனுக்கு சர்வ வல்லமையினை வழங்கி அதி மானுடனாக்கி (Super Man) எதையும் எதிர்கொள்ள அவனால் முடியுமென்ற நம்பிக்கையினையும் பலத்தினையும் வழங்கியது. பகுத்தறிவு, தர்க்கம், பொதுமைப்படுத்தல் என்பன மூலம் சமயச் சார்பின்மை, சனநாயக மயப்பாடு என்பனவற்றை சமூகங்களிடையே விதைத்து, சமத்துவமான சமூகத்தைக் கட்டியெழுப்ப நவீனம் விளைகிறது எனலாம். 


க.மோகனதாசன்

No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...