Thursday, May 23, 2019

தினேஸ்குமாரின் 'ஜக்கம்மா' ஆய்வு நூலுக்கான அறிமுகக்குறிப்பு


     'இது எங்கள் புனித நிலம்.  ஆறுகளிலும், ஓடைகளிலும் ஒளிவீசிப் பாயும் இந்த நீர் வெறும் நீரல்ல, இது எங்கள் மூதாதையரின் குருதி. நாங்கள் இந்த நிலத்தை உங்களுக்கு விற்றால், இது புனிதமான நிலம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இது புனிதமான நிலம் என்பதையும்,
ஏரிகளின் தெளிந்த நீரில் புலப்படும் சாயை ஒவ்வொன்றும் எங்கள் மக்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளையும், நினைவுகளையும் இயம்புவன என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் புகட்ட வேண்டும். இந்த நீரின் சலசலப்பில் எனது பாட்டனாரின் குரலை நான் செவிமடுக்கின்றேன். இந்த ஆறுகள் எங்கள் சகோதரர்கள். எங்கள் விடாயை அவை தீர்ப்பவை, எங்கள் படகுகளை ஏந்திச் செல்பவை, எங்கள் பிள்ளைகள ஊட்டி வளர்ப்பவை. நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், இந்த ஆறுகள் எங்கள் சகோதரர்கள் – உங்கள் சகோதரர்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதனை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் புகட்ட வேண்டும். ஒரு சகோதரனுக்கு நீங்கள் காட்டும் அதே கனிவை, இந்த ஆறுகளுக்கும் நீங்கள் காட்ட வேண்டும்.' எனும் செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலின் பிரசித்தி வாய்ந்த உரையில் கசியும் மண்ணின் உணர்வுகளின் கரங்களைப்பற்றிக்கொண்டு இந்த அறிமுகக்குறிப்புக்குள் வருகின்றேன்.

     மனித இனம் வரலாறு தெரிந்த காலம் முதல் நடந்த அனேகமான போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்களாகவே இருந்துள்ளன. இந்த வர்க்கப் போராட்டம் என்பது மனித உழைப்பைச் சுரண்டியவனுக்கும், சுரண்டப்பட்டவர்களுக்கும் இடையிலானதாக இருந்துள்ளது. இதற்குள் தான் நீதி, ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் முதல் ஜனநாயகம் வரை அனைத்தும் உரையாடப்படுகின்றன. உலகமயமாதல் இதற்கு வெளியில் எந்தவிதத்திலும் தன்னைத் தகவமைத்துவிடவில்லை. இந்தச் சுரண்டலுக்கு அப்பாற்பட்ட முற்போக்கான ஒன்றாகத் திரித்தும் புரட்டியும் காட்டும் சந்தர்ப்பவாத உலகமயமாதல் ஆதரவு அறிவாளிகளும் இருக்கின்றார்கள். அவர்கள் உலகமயமாதலை முதலாளித்துவத்தில் இருந்தும் வேறுபட்ட ஒன்றாகக் காட்ட முயல்வதன் மூலம், உலகமயமாதலை எதிர்ப்புரட்சிகர வழிகளில் பாதுகாக்க முனைகின்றனர். 

       ஆனால் முதலாளித்துவப் புரட்சிக்குப் பிந்திய ஒரு சமூக அமைப்பில் நீடித்த இயங்கியல் போக்கில் இருந்து, உலகமயமாதல் எந்த விதத்திலும் தன்னை மாற்றிக் கொண்டதில்லை. உலகமயமாதல் முதலாளித்துவத்தின் ஒரு நீட்சியாக, அதன் கொடூர வடிவங்களில் ஒன்றாகவே தொடர்கின்றது. வர்க்கப் போராட்டத்தினால் முதலாளித்துவம் கடுமையான உள் முரண்பாட்டையும், வெளி முரண்பாட்டையும் தொடர்ச்சியாகச் சந்தித்தது, சந்தித்து வருகின்றது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி, அதாவது சொத்துகளைக் குவிப்பது படிப்படியான ஒரு சீரானதும், சீரற்றதுமான குறுக்கு நெடுக்கு பாதைகள் ஊடாகவே கடந்து வந்தது. இதன் தொடர்ச்சியில் பழங்குடிகளின் திட்டமிட்ட அழிப்பு முன்பைவிட கூர்மையாகியுள்ள இன்றைய நிலையில், இந்தப் பழங்குடிகள் அமைப்பு ரீதியான பலத்தைக் கொண்டிருக்காத நிலையில், அதன் பண்பாட்டையும் வாழ்வியலையும் இந்த உலகமயமாக்கம் சிதைக்கின்ற வேலையைக் கச்சிதமாகச் செய்துவிடுமென்பது வரலாற்று உண்மை.

    சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் வரலாற்றின் அந்தந்தக் காலக் கூறுக்குரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களுமாகிய மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடிகிறது. இதுகாறும் செய்யப்பட்டது போல மனிதனது உணர்வைக் கொண்டு அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் கூறுவதற்குப்பதில், மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுக்கு விளக்கம் கூறுவது சிறப்பாக அமையும். இந்தப் பின்னணிகளோடு தினேஸ்குமாரின் 'ஜக்கம்மா' என்கின்ற இவ் ஆய்வு நூல் பற்றிய ஒரு அறிமுகத்தினை முன் வைக்கின்றேன்.

    காட்டில் வாழும் ஆதிவாசி மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்? என்னென்ன உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள்? யாரெல்லாம் அவர்களைச் சுரண்டுகிறார்கள்? உற்பத்தியில் இவர்களுக்குக் கிடைக்கும் பங்கு எவ்வளவு? வியாபாரிகளுக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு? ஏட்டறிவு இல்லாத இம்மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள்? காட்டு மிருகங்களாலும் மனித மிருகங்களாலும் என்னென்ன தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள்? என்பனவற்றையெல்லாம் பதிவு செய்தலுக்கும் அப்பால் அதற்கூடாக அச்சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியுமா? என்ற கேள்வியினையும் எம்மத்தியில் விட்டுச்செல்வதாக தினேஸ்குமாரின் இவ் ஆய்வு நூல் அமைகின்றது.

    'ஆய்வினைச்செய்யும் மாணவர்களை இரண்டு வகைக்குள் அடக்கலாம் ஒரு வகையினர் பரீட்சையில் புள்ளி பெறும் நோக்குடன் ஆய்வு செய்பவர்கள். இன்னொரு வகையினர், புள்ளி பெறும் நோக்குக்கும் அப்பால் சென்று எடுத்துக்கொண்ட விடயப்பொருளில் தோய்ந்து ஆய்வு செய்பவர்கள். களத்தில் சென்று அம்மக்களுடன் ஒன்றித்து ஆய்வு செய்பவர்கள் அம்மக்களையும் அவர்கள் வாழ்வு முறைகளையும் பிரச்சினைகளையும் அறிந்து கொள்கிறார்கள். இதனால் ஆய்வு செய்வோரின் சிந்தனையிலும் வாழ்வு முறையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அத்தோடு குறிப்பிட்ட சமூகம் பற்றிய செய்திகளும் வெளி உலகுக்கு வருவதுடன் அவர்களுக்கு உதவி செய்வதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்குமான பாதையும் இடப்படுகின்றது' (அணிந்துரை-1). என்ற பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் கருத்துக்களுடனும் ,

   'ஒவ்வொரு சமூகத்தினரும் தமக்குரிய இயல்பு வாழ்க்கை வாழ உரித்துடையவர்கள். காலங்காலமாக அவர்களது முன்னோர்கள் வகுத்துக்கொண்ட வாழ்க்கை முறைகள், வளர்த்துக் கொண்ட அறிவு, திறன், தொழிநுட்பம் என்பன முழு உலகிற்கும் வளம் சேர்ப்பவை. தொகையில் குறைந்தவராயினும் புலம்பெயர்ந்தவராயினும் ஒவ்வொரு சமூகக் குழுமங்களது அனுபவங்களும் அறிவு முறைகளும் நிலை நிற்கும் அபிவிருத்திக்கு ஆதாரமாக அமைபவை' (அணிந்துரை -2) என்ற கலாநிதி. சி.ஜெயசங்கர் அவர்களின் வார்த்தைகளுடனும், 

   'எமது மண்பதியில் இயங்கும் ஒவ்வொரு கிராமத்தினதும் பூர்வீகம், புவியியல், பாரம்பரியம், வாழ்வியல் கலாசாரம், பண்பாட்டம்சங்கள், வளர்ச்சிகள் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் எதிர்காலச்சந்ததிக்கு இன்றியமையாதன'(வாழ்த்துரை). எனும் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அவர்களின் கருத்துக்களுடனும் இந்த ஆய்வு நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவங்களை ஒரு அறிமுகக்குறிப்பாகத் தருகின்றேன்.

       முதல் அத்தியாயமாக இலங்கையில் வனக்குறவர் பரம்பலும் ஸ்ரீவள்ளிபுர சமூகமும் எனும் தலைப்பில் பழங்குடி மக்களின் பரம்பல், இலங்கையில் வனக்குறவர் பரம்பல், ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தின் வரலாறு, கிராமத்தினரின் சமூகக்கட்டமைப்பு, குற்றங்களும் அவற்றுக்குரிய தண்டனை முறைகளும், ஸ்ரீவள்ளிபுரம் கிராம மக்களின் சமூக பொருளாதார நிலையில் குடித்தொகை, கல்வி நிலை, தொழில் நிலை, சுகாதாரம், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள், ஆரம்ப பொருளாதார நிலை, வருமான மட்டம், இன்றைய நிலையில் பொருளாதாரம் என ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தின் ஒரு குறுக்கு வெட்டுப்பார்வையினை முதல் அத்தியாயத்தில் தந்திருக்கிறார். மக்களிடையே விருத்தி பெற்ற நாகரிக வளர்ச்சியுடன் இணையாது, தனித்தனிக் குழுக்களாக காடுகளிலும் வனாந்தரங்களிலும் மலைப்பிரதேசங்களிலும் பனிபடர்ந்த பகுதிகளிலும் தீவுகளிலும் ஒதுக்குப்பகுதிகளிலும் தொடர்புகளற்று தமக்கே உரித்தான தாம் வாழும் பிரதேசங்களுக்கு இசைவான பொருளாதார பண்பாட்டு விழுமியங்களுடன் ஒரு தொகுதியினர் வாழ்கின்றனர். இவர்களையே சமூகவியலாளர்கள், மானிடவியலாளர்கள், மொழியியலாளர்கள் பழங்குடிகள் அல்லது ஆதிவாசிகள் என அழைக்கின்றனர், எனவும் ஒரு வரையறையினைப் பதிவு செய்திருக்கிறார் ஆய்வாளர். 

    இரண்டாவது அத்தியாயத்தில் ஸ்ரீவள்ளிபுரம் கிராம மக்களிடையே காணப்படும் பண்பாட்டு நிலைமைகளையும் சடங்குகளையும் விவரணப்படுத்துகின்றார். பண்பாட்டில் மொழி முக்கிய வகிபங்கினை எடுத்துக்கொள்கின்றது. இதனாலேயே காலனித்துவ வாதிகள் மிக நுட்பமாக மொழியின் ஆதிக்கத்தினை உட்செலுத்தினர். இங்கு இம்மக்களுக்கென்று தனித்துவமானதொரு மொழிக்கையாளுகையும் தனியான மொழிக் கிடங்கும் இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவிக்கின்றார். இவை தெலுங்குச்சொற்களுடன் தொடர்புபட்டிருப்பதையும் தமது ஆய்வினடியாக வெளிப்படுத்தியிருக்கின்றார். 

      இம்மக்களின் நம்பிக்கை, மருத்துவ முறைகள், பழக்க வழக்கங்கள், உணவு முறை, ஆடை ஆபரணங்கள் பற்றியும் இங்கு விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றோடு சடங்குகளுக்கான பின்னணி அவை செய்யப்படும் முறைமை, வாழ்வியலோடு இயைந்து காணப்படும் தன்மை என்பன பற்றியும் இப்பகுதியில் தெரிவிக்கின்றார். ஜக்கம்மா சடங்கின் ஒரு முக்கிய குறியீடாக இருப்பதனால் அதனையே இந்நூலுக்கும் பெயராக வைத்திருக்கிறார் எனக் கருதுகின்றேன். திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் திரமணத்திற்கு முன்னர், மணமகன் தனக்கு மனைவியாக வருபவளின் தாய்க்கு பால்க்காசு 7 ரூபா 50 சதம் கொடுக்க வேண்டும் என்பது நியதியாகும். அக்காசானது அந்தப் பெண்ணை பெற்று பால் கொடுத்து வளர்த்ததற்காகவே இது வழங்கப்படுகின்றதென்பது போன்ற சுவாரசியமான அதே நேரம் தனித்துவமான பல விடயங்களையும் இவ் அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கின்றார்.

       எவருக்கும் தொல்லை கொடுக்காமல் காட்டிற்குள் சுயமாகத் தொழில் செய்து வாழ்ந்து வந்தாலும் கூட, கல்வியறிவு இல்லையெனில் வருங்காலத்தில், இந்த உலகில் வாழ முடியாது என்பதையும் சில உதாரணங்களால் மறைமுகமாகச்சுட்டிச் செல்லும் அதே வேளையில், பெற்ற கல்வியறிவின் மூலமாகப் புற உலகுடன் தொடர்புகொண்டு காலங்காலமாக இந்தப் பழங்குடி மக்கள் பின்பற்றிவரும் குழு மணமுறை புதிய தலை முறையினரால் புறந்தள்ளப்படுவதையும் இவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவற்றோடு மதமாற்றமும் காலப்போக்கில் அவர்களுக்கு இடையே ஏற்படும் மாற்றங்களும் அவர்களின் வாழ்வியல் முறையில் பாரிய தாக்குறவினைச் செலுத்தியிருப்பதை மிகக் கவனமாக ஆதாரங்களுடன் கொண்டுவருகின்றார். 'இன்றைய மாறிவரும் சமூகக் கட்டமைப்புக்கு இக்கிராம மக்களும் விதிவிலக்கல்ல, இவர்களிடத்தில் சமூக மாற்றமொன்று நிகழ்ந்துள்ளது. அச்சமூக மாற்றமானது திருமணச்சடங்கிலும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம். தம் பாரம்பரிய முறைப்படி திருமணச்சடங்கு நடை பெற்றாலும் மோதிரம் மாற்றும் நிகழ்வானது. தேவாலயத்தில் பாதிரிமார் முன்னிலையில் நடைபெறும்'. எனக்குறிப்பிடுவதிலிருந்து இதனை அறிந்து கொள்ள முடிகிறது.

  'ஆதிவாசி மக்கள் நாகரிகமற்றவர்கள் அரைகுறை ஆடைகளுடன் நடப்பவர்கள்' என்றெல்லாம் பல கதையாடல்கள் வணிக நோக்கமாகவும் ஆதிக்க நோக்கமாகவும் மலினமான சில நிகழ்வுகளின் சுவாரஸ்யம் கருதியும் இன்றும் கூடப் பலர் கண்டபடி கூறிக்கொண்டிருப்பதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் விதத்தில் பல புதிய சமூக உண்மைகளை வெளிப்படுத்துகிறது இவ் ஆய்வு. 

    ஸ்ரீவள்ளிபுர கிராம மக்களின் கலைச் செயற்பாடுகள் எனும் பகுதியில் அவர்களது பண்பாட்டோடு இயைந்த 'டுப்பிடி' என அவர்கள் பாஷயில் அழைக்கப்படும் தப்பு வாத்தியக்கலை பற்றியும் கைவினைக்கலை, சோதிடக்கலை என்பன பற்றியும் குறிப்பிடுகின்றார். இம்மக்கள் ஆரம்பகாலத்தில் தங்களுக்குரிய ஆபரணங்களை தாங்களாகவே செய்தனர் என்ற விடயத்தினையும் இங்கு குறிப்பிடுகின்றார்.

    முதல் மூன்று அத்தியாயங்களும் விவரணமாக அமைய நான்காவது அத்தியாயத்தில் ஏற்கனவே கூறப்பட்ட ஆதாரங்களின் அடியாக விமர்சன ரீதியிலும் தமது ஆய்வினை அணுகுகின்றார். உலக மயமாக்கம், கருத்தியல் மாற்றம், பண்பாட்டு மாற்றம் சார்ந்து கருத்துக்களை முன்வைப்பதோடு தமக்குரிய தனித்துவங்களோடு அவர்கள் தொடர்ந்தியங்குவதற்கான சில முன்மொழிவுகளையும் இவர் தமது ஆய்வில் முன்வைக்கின்றார்.

     'வரலாற்றில் தோன்றியுள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்விதம் செல்வம் விநியோகிக்கப்படுகிறது, சமுதாயம் எப்படி வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாய் பிரிக்கப்பட்டிருக்கிறதென்பது, என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது, உற்பத்திப் பொருள்கள் எவ்விதம் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பவற்றைச் சார்ந்தே உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தின் படி எல்லாச் சமுதாய மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான இறுதிக் காரணங்களைப் பொருளுற்பத்தி மற்றும் விநியோக முறைகளின் மாற்றங்களில் கண்டறிய வேண்டுமே அல்லாது, மனிதனது மூளையில் அல்ல, நிலையான சாஸ்வத உண்மை மற்றும் சாஸ்வத நீதி குறித்து மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வில் அல்ல.' என்ற கால்மாக்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதக்கருத்தினை இந்த இடத்தில் ஞாபகப்படுத்தும் அதே வேளை, இன்றைய நவீன தாராளமய உலகமயமாதல் சூழலானது, இயற்கையை மனித பண்பாட்டு வாழ்வோடு இணைந்த பன்முக உயிர்ப்பு தன்மை கொண்ட சூழலியல் சங்கிலியை தன்னகத்தே வைத்திருக்கும் பழங்குடிப்பண்பாட்டை சுக்கு நூறாக உடைத்து, அச்சமூகத்தை அச்சுறுத்துகிறது என்பதும் இங்கு குறிப்படத்தக்கது. 

    அசுரத்தனமான வளர்ச்சி என்ற பெயரில் மண்ணுக்கும், விண்ணுக்கும் கொடியினை நாட்டிக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள், பழங்குடி மக்களின் இருதயத்தினைச்சுரண்டி, ஆலைகள் வெளிப்படுத்தும் நச்சுப் பொருட்களால் நிலத்தினைப் பாழாக்கி, நதிகளை அசுத்தமாக்கி, நூற்றுக்கணக்கான பறவைகள், விலங்குகளை சந்தடியின்றி அனாதரவாக்கி, இந்த பழங்குடி மக்களிடையே வேற்று கிரகத்தில் வாழும் மனப் பிரமையினை உருவாக்கி அவர்களை தம் நிலத்தினின்று புலம் பெயரச் செய்து தாங்க முடியாத மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் சூழ்நிலையினை உருவாக்கியும் வருகின்றனர். 

   எனவே இதற்கான சாஸ்வதமான சரியான வழிமுறைகளைக்கண்டு பழங்குடியினர் தமது பூர்வீகப்பண்பாட்டோடு வாழவேண்டும் என்பது ஆய்வில் மறைமுகமாகத்தொனிக்கும் குரலாகின்றது. இவ்வாறாக, ஆரோக்கியமானதொரு உரையாடலினை தமது ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் தினேஸ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...