Monday, September 21, 2020

பல தலைமுறைகளுக்கு பகிரக்கூடிய பாரம்பரியப் புலமை அவரிடம் உள்ளது..

ஆரையூர் அருளம்பலம் அவர்களது இரு தென்மோடிக்கூத்து நூல்களுக்கான அறிமுகக்குறிப்பு

பாரம்பரியக் கலைகள் அழிய நேர்ந்தால் சமகாலக் கலைகளுக்கான ஒரு முக்கியமான விளை நிலம் அழிகின்றதென்றே பொருள். இலக்கியத்திற்கும், நேராக வாழ்வில் இருந்து அனுபவங்களை எடுக்கும் பாரம்பரியக் கலைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது. தன்னிச்சையாக கட்டற்ற வெளிப்பாட்டை, அதற்கான சூழலை உருவாக்கும் சக்தி பாரம்பரியக்கலைகளுக்குண்டு. இதனால் கலைகளுக்கான சூழல் மாறினாலும் கலைகள் வாழக்கூடிய புதிய சூழலுக்கான புதிய களங்களை உருவாக்கி இப்பாரம்பரியக் கலைகளை நிலைத்து நிற்றலுக்கான அமைப்பாக செயற்படுத்தும் திறன் பாரம்பரியக்கலைஞர்களுக்குண்டு. நாட்டார் இலக்கியங்களில் செறிவையும் அதில் அர்த்த அடுக்குகளையும் எதிர்பார்க்கக் கூடாது என சிலர் கூறுவர். ஆனால் இவற்றோடு சரளமாக, உடனடிவெளிப்பாடாக படைப்புக்களை உருவாக்ககூடிய ஆற்றலுடன் பல பாரம்பரிய கலை விற்பன்னர்கள் நம்மத்தியில் திகழ்கின்றனர். அதன் ஒரு குறியீடாக ஒரு அத்தாட்சியாக எம்முன் ஆரையூர் அருள் அவர்கள் திகழ்கிறார்.

பிறர் அணுகத் துணியாத இலக்கியத் தடங்களில் எல்லாம் நம்பிக்கையுடன் ஈடுபடும் ஓர்மம் இவருக்கிருக்கின்றதென்பதில் எந்த ஐயப்பாடுமில்லை. ஈழத்திலே நாட்டுக் கூத்துக்களைப் பொறுத்தவரையில் அவை அவ்வப்போது, மேடையேற்றப்பட்டு வந்ததைத் தவிர அவை இலக்கியமாக, பனுவலாக எழுதப்படும் முயற்சிகள் அருந்தலாகவே நடந்தேறின. காலவோட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் நவீன நாகரிகமும் கிராம வாழ்க்கையின் சிதைவும் இக்கூத்து மரபுகளையும் அதன் முக்கிய அம்சமான பிரதிகளையும் கேள்விக்குள்ளாக்கின. இன்றைய சூழலில் அது வாழ முடிந்தால் வாழட்டும் என்று அப்படியே விட்டுவிடாமல், அதன் இலக்கியச் சாத்தியப்பாடு குறித்த எண்ணத்தோடு புதிய பனுவல்களை உருவாக்குதல் என்பது அதன் இலக்கியப்பரப்பை ஆழப்படுத்துவதோடு பார்ப்போர் மனத்தில் கூத்து இலக்கியம் சார்ந்த பல்வேறு கனவுகளையும் புதிய தரிசனங்களையும் செயற்பாட்டு உந்துதல்களையும் கிளர்ந்தெழச்செய்வதற்கான ஒரு சூழலைச்சிருஸ்டித்துவிடும். இதற்கு பொருத்தமான கூத்துப்புலவனை காலம் வேண்டி நிற்கிறது. அவ்வாறு நமக்குக்கிடைத்திருக்கும் கூத்தாசிரியனே ஆரையூர் அருளம்பலம் அவர்களாவார்.

கூத்துப்புலவர் என்பார், அடிப்படையில் ஒரு இசையாசிரியனே. பண்டைய கூத்துகளில் பாடகன் ஒருவன் இசைப்பதற்கென்றே இருந்திருக்கிறான் என்பதை சிலப்பதிகாரத்தின் 'அரங்கேற்று காதை'யிலிருந்து நம்மால் அறிய முடிகிறது. அவன் வரிப்பாட்டிற்கும், ஆடலுக்கும் உரிய பொருளை விளக்கி, இயற்சொல், திரிசொல், திசைசொல், வடசொல், ஆகிய சொற்களின் ஓசைகளைச் சுத்தமாகக் கடைப்பிடித்து, அந்த ஓசையின் இலக்கணங்களையெல்லாம் குற்றமறத்தெரிந்த அறிவாளியாயிருக்க வேண்டும் என்பது மரபு. இந்த மரபே கூத்து மரபின் தொடர்ச்சியாயிற்று.

கூத்தின் வெளிப்பாட்டிலே பாடல்களுக்கு முக்கிய வகிபாகம் உண்டு.  மெய்ப்பாடுகளுக்கும் உணர்ச்சிக் கிளர்வுகளுக்கும் உகந்த நடைவேறுபாடுகளையும் தாள லயத்தையும் கொண்ட புதுப்புது யாப்புக்களிற் பாட்டுக்களை இயற்றவேண்டியது கூத்துப்புலவர்களின் பிரதான கடனாயிற்று. கூத்துப் பாடல்களுக்கு ஓசைநயம் உயிர்நாடியாய் அமைந்திருந்ததால் பொருத்தமான யாப்பமைதிகளை கூத்துப் புலவர்கள் நாட வேண்டியிருந்தது. இசையறியாமல் எழுதுவதால் கூத்துப்பிரதியின் தன்மையை இழக்கவேண்டிவரும். எனவே கூத்துப் பற்றிய ஆழமான அறிவும் இயல், இசை, நாடகத் தமிழில் பாண்டித்தியமும் உள்ள ஒருவராலேயே கூத்துப்பனுவலைச் சரியாகப் படைக்க முடியும். இவை ஆரையூர் அருளம்பலம் அவர்களுக்கு மிகத்தாடனமான விடயங்கள். இதற்கு இவரது இராவண சொரூபம், இறைவனும் புலவனும் எனும் இரண்டு தென்மோடிக்கூத்துப்பிரதிகளுமே அத்தாட்சிகள். இராமனின் அம்பறாத்துணி எடுக்க எடுக்கக் குறையாத பாணங்களைக்கொண்டதாம். இராமனின் அம்பறாத்துணி போலவே ஆரையூர் அருளம்பலம் அவர்களின் சொல்வளமும் எடுக்க எடுக்க குறையாதது என அடையாளங்காட்டி நிற்கின்றன இந்தப்பிரதிகள். 

ஒரு செய்யுள் படைப்பிற்கு இன்றியமையாத இருபத்தாறு உறுப்புகளுள் ஒன்றாக தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு குறிப்பிடப்படுகிறது. தொல்காப்பியரின் கருத்தின் படி மெய் என்பது படைப்பு (செய்யுள்) என்றும், படைப்பினால் சுவைகளைப் புலப்படுத்துவது மெய்ப்பாடு என்றும் கூறப்படுகிறது. 

 ' உய்ப்போன் செய்தது காண்போர்க்(கு) எய்துதல்

 மெய்ப்பா(டு) என்ப மெய்யுணர்ந்தோரே '

என நாடக இலக்கண நூலான செயிற்றியம், உய்ப்போன் (படைப்போன்), காண்போருக்காக (வாசிப்போர்) செய்வது படைப்பு எனக்குறிப்பிடுகிறது. மெய்ப்பாடு வாசிப்பவனிடம் ஏற்படுத்தும் மாற்றம் சுவை எனப்படுகிறது. சுவை என்பதற்கு இளம்பூரணர் 'சுவை என்பது காணப்படு பொருளால் காண்போர் அகத்தில் வருவதோர் விகாரம்' என்கிறார்.

சலனமற்ற மனத்தோடு ஒரு படைப்பை படிக்கத் தொடங்கும் நம்மைத் தன்னுள் இழுக்கும் படியான ஒரு படைப்பு ஏற்படுத்தும் பரபரப்பு, பரவசம், சோகம், சந்தோஷம் என்ற உணர்வுகளால் நம்மை ஆட்கொள்ளுதல் மெய்ப்பாடு ஆகின்றது. பொதுவாகக் கூத்தில் இத்தகு மெய்ப்பாடுகள் பயின்றுவரவேண்டியது அவசியமாகின்றது. ஆக படைப்போனின் உணர்வுகளைப் படிப்போனின் மனதில் இடம்மாற்றச் செய்யும் கலையை இலக்கணமாகத் தரும் மெய்ப்பாட்டியலை கூத்தின் யாப்பமைதி முறைகள் சரியாகப்பேணியிருக்கின்றன. அவை அளவறிந்து பயன்படுத்தும் போதுதான் அந்தக்கூத்திலக்கியத்தின் அனுபவத்திற்குள் எம்மால் செல்ல முடியும்.

தென்மோடிக் கூத்தின் அமைப்பும், அதிற் கையாளப்படும் பாடல் முறைகளும், அதன் உட் பொதியும் செழுமையும் ஒரு தொல்சீர் நெறியின் எச்சங்கள் என்பது நிருபணமாகின்றன. பாட்டின் பொருளுக்கும் வடிவிற்கும் இயைபு உண்டு. உணர்த்தப்படும் பொருளும் அதை உணர்த்தும் வடிவமும் பிரிக்க முடியாதன. தமிழிலக்கிய வடிவமைப்பில் யாப்பமைதிக்கு முக்கிய இடமுண்டு. மரபு வழிக் கூத்துக்களைப் பொறுத்தளவில் ஆடலையும் பாடலையும் ஒருங்கிணைத்து மெய்ப்பாட்டுச் சுவைகளை மிகுவித்தற்குப் பொருத்தமான பல்வேறு யாப்பு வகைகளை கூத்தாசிரியர்கள் கையாண்டுள்ளனர். அவற்றின் தன்மைகளை புலவரும் பயன்படுத்தியிருப்பது பிரதிகளினடியாகப் புலனாகின்றது. 

ஆசிரியப்பாவின் இனங்களுள் ஆசிரிய விருத்தமும் கலிப்பாவின் இனமாகிய கலிவிருத்தமும் மிகப்பரவலாகக் காப்பியங்களில் இடம் பெற்றவை. கம்பராமாயணம்,   பெரியபுராணம்,  சீவகசிந்தாமணி போன்ற பெருங்காப்பியங்களில் இவை ஆளப் பெற்றிருப்பதைக் காணலாம். எவ்வகைக் கருத்தையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தவும், நீண்ட கதை நிகழ்ச்சிகளை இனிய ஓசை அமைப்புடன் விளக்கிக் கூறவும் ஆசிரிய விருத்தம் தென்மோடியில் பொருத்தமான யாப்பாக பயன்பட்டிருக்கின்றது. இவரது இரு பிரதிகளிலும் பல இடங்களில் இதனைக் கையாண்டிருப்பதைக்காணலாம். ஏனைய இனங்களைப் போலன்றி ஆசிரிய விருத்தம் சந்த ஒழுங்குக்கு உட்பட்டு வரும். சந்த ஒழுங்கு என்பது முதலடியில் வரும் சீர் அமைப்பு அதே மாதிரியாக ஏனைய மூன்றடிகளிலும் வருதல் வேண்டும். இவ்வமைப்பின் காரணமாக ஆசிரிய விருத்தம் இனிய ஓசை அமைப்பைப் பெறுகிறது. இராவண சொரூபத்தில், 

'ஈழமாம் இலங்காபுரிதன்னை இட்டமோடரச தாண்ட

சூரனாம் இராவண சொரூபமதை துலங்கு நாடகமாப்பாட

பாரதம் தன்னை வெண்கொம்பொடித் தெழுதியளித்த 

வாரணமுகவைங்கர வேழமுகவன் திருவடி காப்பதாமே' என அதன் தன்மையுணர்ந்து பொருத்தமாகப் பயன்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது. மட்டக்களப்பு தென்மோடி நாடகங்களிலே கொச்சகம் அதிகமாகப் பாவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கொச்சகங்கள் காய்முன் நிரைவரும் அளவடியாலேயே ஆக்கப்பட்டுள்ளன. அறுசீர் பெற்று வருவன மிகக்குறைவே. விருத்தம் பெறும் இடத்தினைச் சில வேளைகளில் கொச்சகம் பெறுவதனைக் காணலாம். இராவணண் சொரூபத்தில் வரும் இராவணன் கொச்சகமும் மண்டோதரி கொச்சகமும் இறைவனும் புலவனும் பிரதியில் இறைவன் கொச்சகமும் தருமி கொச்சகமும் நக்கீரர் கொச்சகமும் சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இறைவனும் புலவனும் எனும் பிரதியில் இறைவன் கொச்சகம் 

'தலைமைப்புலவனென்ற செருக்கோ மிடுக்கோ தலைக்கனமோ 

புலமை முழுவதுமறிந்த இறைவனென்று அறியானோ...' என சந்த ஓசையுடன் வருகிறது.

தென்மோடிக் கூத்துக்களில் பல இடங்களில் தருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தரு, மறு தரு, பல்லவித் தரு, தோற்றத்தரு, விளையாட்டுத் தரு, வரவுத் தரு, தர்க்கத் தரு, வண்ணத் தரு, சண்டைத் தரு, சபைத் தரு, ஏணித் தரு, தாலாட்டுத் தரு, தாழிசைத் தரு, கொச்சகத் தரு, ஊஞ்சற் தரு, வழி நடைத் தரு, கலிப்பாத் தரு, தேவாரத் தரு, வாழித் தரு என பல்வேறாக அமைகின்றது. இதுவே கூத்தில் அதகிமாகப்பயன்படுத்தப்படுகின்றது. இந்த இரு கூத்துக்களிலும் கூட இதன் ஆதிக்கத்தினைக்காண முடிகின்றது.

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை வெண்பா எனப்படுகின்றது. கொச்சகம் என்ற பாவினத்தைச் சோக உணர்வு புலப்படப் பாடும் பொழுது அதற்கு இன்னிசை என நாடடுக்கூத்தாசிரியர்கள் பெயர் வழங்கியுள்ளனர். இராவண சொரூபத்திலும் இதன் இலக்கணங்கணங்கள் வழுவாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் வரும் போர் வீரன் இன்னிசை

'அயலவன் மனைவியை அண்ணனவன் கவர்ந்தால்

அவளைக் கொண்டவனுக்கில்லா வார்வமிவனுக்கேன்...' என அமைகிறது. இவரது கூத்துப்பிதிகளில் அகவல், வெண்பா ஆகிய பாக்களும் கலித்துறை, கட்டளைக் கலிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கொச்சகம் முதலான பாவினங்களும் தரு, சிந்து, இன்னிசை, தாழிசை, வண்ணம், தேவாரம் ஆகிய பாவகைகளும் பயன்படுத்தியிருப்பது புலனாகின்றது. அத்தோடு ஆங்காங்கே தென்மோடிக்கூத்துக்குரியதான மொழி நடையிலே வசனங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.

ஒரு மொழியை, அதன் இலக்கியத்தை, அதன் இசையை அதன் இயல்பான வழியில் நின்று பாடினால்தான் அது அம்மொழிக்குச் செய்யும் பெருமையாகும். புரியாது எனப் பழக்கப்படுத்தப்பட்டும், புரிந்து கொண்டுவிடக் கூடாது என மிகக் கவனமாக கற்பிக்கப்பட்டும், புலவர்க்கானது என ஒதுக்கப்பட்டும், கிடக்கின்ற தமிழிலக்கண, இலக்கியப் பெரும்பரப்பில் எளிதான நடையில் அமைந்திருக்கும் கூத்திலக்கியம் ஒரு கவனிப்புக்குரியதற்றதாக மாற்றப்பட்டிருப்பது ஒரு இலக்கிய வரலாற்றுத் தவறாகும். இந்நிலையுணர்ந்த ஆரையூர் அருளம்பலம் அவர்களின்  சமூக உணர்வும், கவித்துவ பார்வையையும் நின்று நிதானித்து, எல்லோரும் எளிதில் விளங்கக்கூடிய கூத்துப்பிரதிகளாக வெளிப்படுத்திருக்கின்றன. இதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகின்றது.


க.மோகனதாசன்,

சிரேஸ்ட விரிவுரையாளர்,

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்,

கிழக்குப்பல்கலைக் கழகம்.





Sunday, July 19, 2020

சந்தோசமான வாழ்வு என்பது வசதிகளில் இல்லை...

சிறு குருவி ஒன்றுக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.  கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.


இதுவரை அந்தக் குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.

Saturday, July 18, 2020

'இதழகல்' குறட்பாக்கள்

கவிஞர் வாலியை இவ்வாறானதொரு பாடலை எழுதத் தூண்டியது எது? திருக்குறள் ஏராளமான ஆச்சரியங்களைக் கொண்டது. உச்சரிக்கும் போது உதடுகள் ஒட்டாத குறட்பாக்களும் அதில் அடக்கம். இவை  'இதழகல்' குறட்பாக்கள் என்று அழைக்கப்படும். அதாவது உதடுகள் ஒட்டுவதற்குக் காரணமான எழுத்துக்களில்லாது இப்பாடல்கள் புனையப்பட்டிருக்கும். திருக்குறளில் 24 குறட்பாக்கள் இவ்வாறு அமையப் பெற்றிருக்கின்றன.

Sunday, July 5, 2020

அளவில் பெரிய கோப்புக்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம்? how to share big files online?


நாம் மின்னஞ்சலிலோ வேறு வழிகளிலோ இன்னொருவருக்கு தகவல் பரிமாறிக் கொள்ளும் போது, குறிப்பாக காணொளிகளை பகிரும்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக எம்மால் அனுப்பமுடிவதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய மென் பொருட்கள் அல்லது வலைத்தளங்கள் சம்பந்தமான பார்வையிது..

Tuesday, April 14, 2020

வான்காவின் 'நட்சத்திர இரவு – 1889'


இன்றைய சூழலில் வான்காவின் 'நட்சத்திர இரவு – 1889' ஓவியம் பெருங்குரலெடுத்து என்னோடு பேசுகிறது..


நான் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பேராசிரியர் மௌனகுரு sir அவர்கள் விரிவுரைக்காக எனக்குத் தரும் பாடங்கள் பெரும்பாலும் கலை வரலாறு, ஓவிய வரலாறு என்பனவாகவே இருக்கும். வான்கா, கோகான், மொனே, செசான், சல்வடோர் டாலி, பிக்காசோ, ரெனே மக்ரித், லியனாடோடாவின்சி, மைக்கல் அஞ்சலோ, றபாயல், ஆதிமூலம், தனபால், அல்போன்சா, மூக்கையா, மார்க் மாஸ்டர், ஜோர்ஜ் கீத், மங்சுசிறி என நிறைய ஓவியர்களும் அவர்களது ஓவியங்களும் எனக்கு அப்போது அறிமுகமாயின. சிலரது சில ஓவியங்கள் அப்படியே மனதில் ஒட்டிவிடும். பிக்காசோவின் குவார்ணிகா, சல்வடோர்டாலியின் வடிந்தொழுகும் கடிகாரங்கள், வான்காவின் சூரியகாந்தி, கோகானின் சூரியோதயம், மைக்கல் அஞ்சலோவின் ஆதாமின் படைப்பு, ரெனே மக்ரித்தின் பைரனீஸ் கோட்டை போன்றன சில உதாரணங்கள்.

ஒரு அனர்த்த காலத்துப் புல்லாங்குழல்


செவிகளை அடைக்கும் பேரிரைச்சலாக
மௌனம் தெருவிலே குந்தியிருக்க...
வீட்டின் நிழல் தரும் தகிப்பு - ஒரு
வெட்டவெளி வெயிலின் குளிர்ச்சியைத் தேட...
ஒரு அனர்த்த காலத்துப் புல்லாங்குழல்
இறந்த காலத்தின் இசையை
எங்கிருந்தோவெல்லாம் மீட்டெடுத்துப் பாட...

Sunday, April 12, 2020

"தென்னாடுடையவனே எந்நாட்டிலும்..." திரு ஆ.மு.சி வேலழகன் அவர்களது நூலுக்கானஅணிந்துரை



இது உலகத் தோற்றத்தின் கதை, நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விடயங்களோடு, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் மனித பரிணாமத்தின் கதை. அந்த வரலாற்றிலும் பரிணாமத்திலும் தமிழ்ப்பண்பாட்டின் வகிபங்கு பற்றிய கதை. வரலாற்று உண்மைகளை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் மேலும் நம்மை தேடும் விதத்திலும் கூற முடியுமா? நம்மைத் திகைக்க வைக்கிறார் ஆ.மு.சி. வேலழகன் ஐயா அவர்கள். 

Saturday, April 11, 2020

ஆத்திசூடியில் ஒளவை கூறும் வாழ்வியல் நெறிகள்.


அறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத்தொடங்கி ஓரம் சொல்லேல் என முடிகின்ற அறவியல் சார்ந்த ஒரு வாழ்வை முன்னிறுத்தி நிற்கும் ஆத்திசூடி வரிகளை அவதானிக்கும் போது, வாழ்வைப்பற்றி குறிப்பாக மனித இயக்கங்களை கட்டமைக்கும் பெரிய தத்துவங்களை சுருக்கமாக அதே நேரம் தெளிவாகச் சொல்வதாக அமைந்து காணப்படுகின்றன. 'ஆத்திசூடி' என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல் சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராகவும் அமைந்துள்ளது. 

ஒர் அடியால் மட்டுமே ஒரு பாடல் அமைந்துள்ளது. இதற்கு 'ஒரோவடி யானும் ஒரேவிடத்து இயலும்' என்ற யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் நூற்பா இலக்கணம் தருகிறது. ஓர் அடியில் இரு சீர்கள் மட்டுமே உள்ளனவாக ஆத்திசூடி அமைந்துள்ளது. வாழ்க்கை குறித்த கவனத்தைத் தருவதாக வெளிப்படும் ஒளவையாரின ஆத்திசூடி வரிகளுக்குப் பின்புலமாக தெளிவான பிரக்ஞா பூர்வமான ஒரு மனம் செயல்படுவதைக் காண முடியும்.

மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில் அதிக நோய்க்கூறுகளை தன்னகத்தே கொண்டவன் மனிதன்தான். தனது சிறுவலியைக் கூட அதிகமாக பிரஸ்தாபிப்பவன். பிரபஞ்சம் என்ற பெரிய ரகசியத்திற்கு முன் கழிவிரக்கம் கொண்டவனாக தன்னைக் காண்கிறான். வாழ்க்கை என்றால் ஏதாவது அசம்பாவிதம், சிக்கல், எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும். சிலர், அடி பட்டு, எலும்பு முறிந்திருந்தால் கூட, பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிலர், எதையும் மிகைப் படுத்திக் கூறுவதன் மூலம் தாங்களும் துன்பப் பட்டு, சுற்றி இருப்பவர்களையும் ஒரு உணர்ச்சி மிகுதியில் அமிழ்த்தி விடுவார்கள். எனவே தான் ஒளவை சொன்னார், 'மிகைப்பட பேசேல்' என்று. அதிகம் கலவரப்படாது சாதாரணமாக பேசிப் பழக வேண்டும். அப்படிச் செய்தால், மனம் பதட்டம் அடையாது, நிதானம் வரும், பிரச்சனைகளை சரி செய்யும் பக்குவம் வரும்.

Monday, March 16, 2020

விடுமுறை நாளொன்றில்...


விடுமுறையொன்றின் விலாசம்
மனதை அழுத்திப்பிடித்து வைத்திருக்கின்ற
ஒரு சூழமைதியின் தகிப்பில்
ஆணியடித்து மாட்டப்படுகிறது..

Friday, January 17, 2020

வீர இராசமாணிக்கம் அண்ணாவியாரது கூத்துப்பிரதிகளுக்கான அணிந்துரை

பாரம்பரியமெனும் செழுமை நிலத்தில் ஆழ வேரூன்றி நிற்கும் பெருமரமாய்  வீர இராசமாணிக்கம் அண்ணாவியார்


பாரம்பரியக்கலைகளின் உள்ளார்ந்த விழிப்பும் தேடலும் உள்ளவர்களது படைப்புலகம் அவர்களது விழிப்பினடியாகவே விரிகிறது. இது இக்கலைசார் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுவோருக்கு ஒரு பாதையினையும் உருவாக்கித்தருகின்றது. காலனித்துவம் உருவாக்கிக் கொடுத்த தற்காலிக சௌகரிய கொட்டில்களில் தஞ்சமடையாமல், பாரம்பரிய படைப்புலகை நிர்மாணிக்கும் பெரும் பொறுப்புக்களை சிலர் ஆங்காங்கே நிறைவேற்றியும் வந்திருக்கின்றனர். அந்த வகையில் பாரம்பரிய இலக்கியப் படைப்பு வெளியில் தனக்கான படைப்புப் பயணத்தை அப்பண்பாட்டுக்குரிய தன்மைகள் கெடாதவாறு மேற்கொண்டு வருபவர் அண்ணாவியார் வீர இராசமாணிக்கம் அவர்கள்.

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...