Saturday, April 11, 2020

ஆத்திசூடியில் ஒளவை கூறும் வாழ்வியல் நெறிகள்.


அறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத்தொடங்கி ஓரம் சொல்லேல் என முடிகின்ற அறவியல் சார்ந்த ஒரு வாழ்வை முன்னிறுத்தி நிற்கும் ஆத்திசூடி வரிகளை அவதானிக்கும் போது, வாழ்வைப்பற்றி குறிப்பாக மனித இயக்கங்களை கட்டமைக்கும் பெரிய தத்துவங்களை சுருக்கமாக அதே நேரம் தெளிவாகச் சொல்வதாக அமைந்து காணப்படுகின்றன. 'ஆத்திசூடி' என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல் சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராகவும் அமைந்துள்ளது. 

ஒர் அடியால் மட்டுமே ஒரு பாடல் அமைந்துள்ளது. இதற்கு 'ஒரோவடி யானும் ஒரேவிடத்து இயலும்' என்ற யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் நூற்பா இலக்கணம் தருகிறது. ஓர் அடியில் இரு சீர்கள் மட்டுமே உள்ளனவாக ஆத்திசூடி அமைந்துள்ளது. வாழ்க்கை குறித்த கவனத்தைத் தருவதாக வெளிப்படும் ஒளவையாரின ஆத்திசூடி வரிகளுக்குப் பின்புலமாக தெளிவான பிரக்ஞா பூர்வமான ஒரு மனம் செயல்படுவதைக் காண முடியும்.

மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில் அதிக நோய்க்கூறுகளை தன்னகத்தே கொண்டவன் மனிதன்தான். தனது சிறுவலியைக் கூட அதிகமாக பிரஸ்தாபிப்பவன். பிரபஞ்சம் என்ற பெரிய ரகசியத்திற்கு முன் கழிவிரக்கம் கொண்டவனாக தன்னைக் காண்கிறான். வாழ்க்கை என்றால் ஏதாவது அசம்பாவிதம், சிக்கல், எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும். சிலர், அடி பட்டு, எலும்பு முறிந்திருந்தால் கூட, பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிலர், எதையும் மிகைப் படுத்திக் கூறுவதன் மூலம் தாங்களும் துன்பப் பட்டு, சுற்றி இருப்பவர்களையும் ஒரு உணர்ச்சி மிகுதியில் அமிழ்த்தி விடுவார்கள். எனவே தான் ஒளவை சொன்னார், 'மிகைப்பட பேசேல்' என்று. அதிகம் கலவரப்படாது சாதாரணமாக பேசிப் பழக வேண்டும். அப்படிச் செய்தால், மனம் பதட்டம் அடையாது, நிதானம் வரும், பிரச்சனைகளை சரி செய்யும் பக்குவம் வரும்.

ஒளவையார் தமது ஆத்திச்சூடியில் 16 இடங்களில் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது, எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என்று எடுத்துரைக்கின்றார்.  வாழ்வியல் மாறிக்கொண்டே இருக்கிறது. இன்று நண்பர்களாய் இருப்பவர்களை நாளை அவ்வாறு எதிர்பார்க்க முடியாது. பகை, காதல் பற்றியதோ, நோய் பற்றிய சொந்த விடயமாகவோ இருக்காலாம். தோழனோடாயினும் இல்லாமை, இயலாமை பற்றி பேசுதலை தவிர்த்தல் அல்லது குறைத்தல் நன்று. யாரிடம் எதை சொல்கிறோம் என்று அறிந்து பேசுங்கள். சொல்லாத சொல்லுக்கு நாம் அதிகாரி. சொல்லிய சொல் நமக்கு அதிகாரி. ஆகவே யோசித்துப் பேசுங்கள் என ஒளவையார் 'உடையது விளம்பேல்' என்கிறார். அதிலும் குறிப்பாக பணம் இல்லாதவரிடம் உன்னிடம் இருக்கும் பணம் பற்றிப் பேசுவதோ, வேலையில்லாதவரிடம் உனது வேலையின் மகத்துவம் பற்றிப்பேசுவதோ, குழந்தை இல்லாதவரிடம் உனது குழந்தையின் சிறப்புப்பற்றிப் பேசுவதோ நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியன. 

ஒளவையார் ஏன் அறம் செய்ய விரும்பு என்றார். அறம் செய் என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம் தானே. நமக்கு விருப்பமான ஒன்று என்றால் அதற்காக நாம் நம் நேரத்தை செலவு செய்வோம், பணத்தை செலவு செய்வோம். எது நமக்கு விருப்பமானதோ அது நம் சிந்தனையையை எப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கும். அத்தோடு அறம் என்பதற்கு தானம் என்று மட்டும் பொருள் அல்ல. அறவழியில் நிற்றல் என்றால் பாதகச் செயல்களைத் தவிர்த்து ஒழுங்காக வாழ்தலுமாகும். இதற்கு மனம் விருப்புறுதல் வேண்டும். இதனாலேயே ஒளவை அறம் செய்ய விரும்பு என்றார்.

தன்னந்தனியாய் பாதைகளை எதிர்கொள்ளும் பாதங்களுக்கு பாதைகளைக்கடக்கும் தெளிவை சொல்லித்தரவேண்டும். நம்மால் பிறருக்கு உதவ முடியும், ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லையென நியாயத்தினைத் தேடுகின்றோம். சாலையைக் கடக்க அவதியுறும் மனிதனை பார்த்து விட்டு பார்க்காதது போல் செல்கிறோம். உதவக்கூடிய எத்தனையோ சந்தர்ப்பங்களை வசதியாகக் கடந்து செல்கிறோம். ஒளவையார் சொல்கிறார், நீ கஸ்டப்பட்டு செய்யாவிட்டாலும் உன்னால் முடிந்ததைச் செய் அதுதான் 'இயல்வது கரவேல்'.

இல்லாதோருக்குக் கொடுப்பது நல்ல குணம். அதை விட்டு நீ விலகி விடாதே. அத்தோடு ஒருவர் மற்றவருக்கு கொடுப்பதையும் நீ இடையில் சென்று நிறுத்தி விடாதே என்னும் பொருள் பட 'ஈவது விலக்கேல்' என்றார் ஒளவையார்.

சினம் என்றும் சேர்ந்தாரைக் கொல்லும். சினம் கொண்டால் உடல் நலிந்து மனிதநேயம் வற்றி இதயத்தை சீர்குலைத்து விடும். அடக்க முடியாத கோபத்தில் இருந்து ஒருவன் விலகி இருந்தால் ஞானியாவான் என்கிறது விதுரநீதி. இயலாமை, ஆற்றாமை, தனிமை, வெறுமை, தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், கழிவிரக்கம், புறக்கணிப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்கள் சினம் தோன்ற வழிவகுக்கின்றன. சினம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆனால் அதனை அதன் வெம்மையிலிருந்து குளிர்ந்த தன்மைக்கு கொண்டு வர முடியும் எனும் பொருள்படவே ஒளவையார் 'ஆறுவது சினம்' என்றார். 

சிறுபிள்ளைத் தனமான செயல்களும் சில்லறைத்தனமான விடயங்களும் வாழ்வைச் சீரழித்துவிடும். இது குணநலன்களுக்கும் பொருந்தும் உணவுப்பழக்க வழக்கங்களுக்கும் பொருந்தும். உடல் நலத்திற்கு முதல் எதிரி அளவுக்கு அதிகமாக உண்பது. அதிலும் குறிப்பாக நொறுக்குத் தீனிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தோடு புகைப்பிடித்தல், மது அருந்தல், புறஞ்சொல்லல் போன்றனவும் வாழ்வைக் கெடுக்கின்றன. இதனாலேயே ஒளவை 'நுண்மை நுகரேல்' என்றார். அதாவது சிறியனவாகவும் வாழ்வைக் கெடுப்பனவாகவும் உள்ளனவற்றைத் தவிர்த்தால் வாழ்வு சிறக்குமென்றார்.

உணவே மருந்து என்ற காலம் போய் மருந்தே உணவாக உட்கொள்ளும் காலச் சூழலில் வாழ்கிறோம். இதில் அதிகமாக உணவினை உட்கொள்ளுதலும் ஒரு காரணமாகின்றது. உயிர் வாழ மிக இன்றியமையாதது உணவு. அதுவே அளவுக்கு மீறிப் போனால் உடலுக்குத் தீங்கை விளைவிக்கும். அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் அதுவே காரணமும் ஆகிவிடும். இதனாலேயே மருந்தைப் பற்றி எழுத வந்த வள்ளுவர் பத்து குறளிலும் உணவைப் பற்றியே சொல்கிறார். 

'மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்'

அதாவது உண்டது நன்றாக செரிமானம் அடைந்ததா என அறிந்து உண்டால் மருந்தே வேண்டாம் என்கிறார் வள்ளுவர். நொறுக்குத் தீனி, கண்ட நேரத்தில் உண்பது போன்றவற்றை தவிர்ப்பது நலம். உணவின் மேல் விருப்பம் குறைய வேண்டும். நாம் எதை விரும்புகிறோமோ அதை அடிக்கடி செய்வோம், அதே நினைவாக இருப்போம், அதை செய்வதில் சந்தோசம் அடைவோம் விருப்பம் குறைந்தால், அளவு குறையும். அளவு குறைந்தால் ஆரோக்கியம் நிறையும். இதனையறிந்த ஒளவையாரும் 'மீதூண் விரும்பேல்' என்றார்.

உங்களுக்கு எது வேண்டுமோ அதை நேசிக்கத் தொடங்குங்கள். நேசித்தலின் முதல் படி அதை வெறுக்காமல், இகழாமல் இருப்பதாகும். எதை வெறுக்கின்றோமோ அதை நாம் செய்ய மாட்டோம். அதை விட்டு விலகி நிற்போம். படிப்பை விட்டு விலகி நின்றால் வாழ்க்கை சிறக்காது. எனவே, 'எண் எழுத்து இகழேல்' என்றார். எண் என்பது கணிதம் முதலான அறிவியல் கல்வியையும் எழுத்து என்பது இலக்கியம் முதலான கலையியல் கல்வியையும் குறிக்கும். இவை இரண்டும் மனிதனின் இருகண்களைப் போன்றவை. மனிதனின் இரு கண்களும் சேர்ந்து ஒரு பார்வையைக் கொடுப்பது போல அறிவியல் கல்வியும் கலையியல் கல்வியும் சேர்ந்து மனிதனுக்கு அறிவைக் கொடுக்கின்றன. எனவே மனிதன் தனது வாழ்நாளில் அறிவியல் கல்வியையும் கலையியல் கல்வியையும் இகழ்ந்து ஒதுக்கக் கூடாது.

ஆத்திசூடியில் கல்வி பற்றிய செய்திகள் 9 இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஓதுதல் என்பது கற்றலையும் கற்பித்தலையும் குறிக்கும். கல்வியும் கற்பித்தலும் தொடர்ந்து நடைபெற வேண்டிய செயல்கள். கற்கக் கற்க அறிவு வளரும். கல்வியைக் கற்காமல் இடையில் நிறுத்தினால் அறிவு வளர்ச்சி குறைவது மட்டும் அல்லாமல் முன்பு கற்ற கல்வியும் மறந்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே தான் ஒளவையார், 'ஓதுவது ஒழியேல்' என்று பாடியுள்ளார்.
இப்போது எங்கு பார்த்தாலும் நன்செய் நிலங்களில், நதியோடும் நிலங்களில் வீடுகளைக் கட்டி விடுகிறார்கள். இதனால், விவசாயம் பாழாய்ப்போகிறது. நதியானது சாலை மறியல் செய்கிறது. பயிர் விளைய நல்ல மண் வேண்டும், நீரோட வழி நிலம் வேண்;டும். அவ்வாறாக இருக்கும் இடங்களில் வீடுகளைக் கட்டி விட்டு வாழ வழி தெரியாது தவிக்கும் மனிதனின் நிலையினை, மக்கள் தொகை அவ்வளவு இல்லாத காலத்திலேயே ஒளவை எதிர்வு கூறியிருக்கிறார். இடம் பட்டு போகும் படி வீடு கட்டக் கூடாது. பயிர் பட்டு போகும் படி வீடு கட்டக் கூடாது. அதுதான் 'இடம் பட வீடு எடேல்' எனும் ஆத்திசூடிப்பாடல்.

வெல்வது நிச்சயம் என்று தெரிந்தால் கூட சூதாடாதே. சூதில் வரும் வெற்றி என்பது தூண்டிலில் உள்ள இரையை கவ்விய மீனின் வெற்றியை போன்றது. முதலில் நன்றாக இருக்கும், சிறிது கடித்தவுடன் முள் வாயில் ஏறி வேதனை செய்யும். அதில் இருந்து தப்பிக்க வேகமாக அங்கும் இங்கும் துள்ளும் போது அந்த முள் இன்னும் ஆழமாக இறங்கும். நீரை விட்டு வெளியே வந்த மீன் மூச்சு முட்டி இறந்து போகும். அதுபோல சூதில் வரும் வெற்றி, முதலில் சுகமாகத் தோன்றினாலும் பின்னால் மிகுந்த துன்பத்தை தரும் எனவே சூதாடக் கூடாது. இதையே ஒளவையார் இரண்டே வார்த்தையில் 'கோதாட்டொழி'இ சூது விரும்பேல்' என்கிறார்.

பெரியோர்களைப் போற்றி ஒழுகுவதும் அவர்கள் காட்டும் வழி நின்று வாழ்வதுமே நல்ல அறச்செயலாகும்;. இனியவை நாற்பதில் ஒரு பாடலில் பெரியோரைத் துணைகொள்ள வேண்டும் என்கிறது. இதனை, 'தெற்றவும் மேலாயார்ச் சோர்வு' என்ற பாடலடிகள், தெளிந்த அறிவுடைய பெரியோர்களோடு கூடி வாழ்வது நல்லது என எடுத்தியம்பியுள்ளது. இதன் மூலம் பெரியோர்களை பின்பற்றி ஒழுக வேண்டும் என்ற செய்தியை அறியமுடிகிறது. இக்கருத்தையே ஆத்திசூடியும் இயம்புகிறது. 'மேன்மக்கள் சொல் கேள்' என்ற அடிகளால் இதனைக் காணலாம்.

எவ்வளவுதான் நற்பண்புடன் நடந்தாலும் சில பிழையான தீர்ப்புக்கள் நல்வாழ்வியலை இல்லாமல் செய்து விடுகின்றன. குற்றம் செய்தவர் தப்பிப்பதும் குற்றம் செய்யாதவர் தண்டனை பெறுவதும் ஒருபக்கச் சார்பினால் ஏற்படும் படுபாதகச் செயலாக மாறிவிடுகிறது. இந்தக் கொடுமையின் தீவிரம் உணர்ந்தே எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசக்கூடிய 'ஓரம் சொல்லேல்' எனும் மனநிலை ஏற்படவேண்டும் என ஒளவையார் ஆத்திசூடியின் முத்தாய்ப்பாகச் சொல்லி முடிக்கிறார்.

எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமையினைக் கைவிடாதே. இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் ஒருவரிடத்தும் சென்று ஒன்றையும் வேண்டாதே. இரப்பவர்க்கு உணவிட்ட பின்பு உண். உலகத்தோடு பொருந்த நடந்துகொள். அறிவு தரும் நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே. பார்க்காதவற்றைப் பார்த்ததாகப் பேசாதே. பெரியோர்கள் உன்னை நல்லவன் என்று புகழும்படி நடந்துக்கொள். ஒரு வேலையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத் தொடங்கு. ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ். யாருடனும் கடினமாக சொற்களைப் பேசாதே. என 109 வரிகளாலும் வாழ்வியல் நெறிகளைப் போதித்து நிற்கிறது ஆத்திசூடி.

இன்றைய காலப்பின்னணியில் ஆத்திசூடியின் தேவை மிகவும் உணரப்படுகின்றது. சிறு வயதிலிருந்தே வாழ்வியல் நெறிகளை இயல்பாக உணரப் பண்ணுவதற்கும் செம்மையான வாழ்வியல் முறைமையினைப் பின் தொடர்வதற்கும் சாத்தியமான நுட்பமுறையினை கொண்டதாக ஆத்திசூடி காணப்படுகின்றது.  

பொதுவாக, மற்ற மொழிகளை கற்பிக்கும் போது, அதன் எழுத்துக்களை மனதில் பதிய வைக்க ஏதேனும் பொருட்களோடு ஒப்பிடுவர். ஆனால், ஆத்திச்சூடி மூலம் தமிழ் எழுத்துக்களை கற்பதினால், எழுத்துக்கள் மட்டுமல்ல, நல்ல எண்ணங்களையும் வாழ்வியல் நெறிகளையும் மழலைகள் மனதில் பதிய வைக்க இயல்கிறது. சில காலத்திற்கு முன்பு வரை, நம் மழலைகளுக்கு நிலாவினைக் காட்டி அமுது ஊட்டும்போதே, ஆத்திச்சூடியால் அறிவும் ஊட்டப்பட்டது. ஆனால், இன்றோ, மழலைகளின் கைகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலாக்களோடு தொடுதிரைச் செல்பேசிகள். ஆக, ஸ்தூலமாகவும் சூக்குமமாகவும் மனதை உழுது பண்படுத்தும் ஒளவையின் ஆத்திசூடி வார்த்தைகள் இக்காலத்துக்கு மட்டுமல்ல எக்காலத்துக்கும் மிகத்தேவைப்பாடாகின்றன.

க. மோகனதாசன்,
சிரேஸ்ட விரிவுரையாளர்,
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்


2 comments:

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...