Sunday, April 12, 2020

"தென்னாடுடையவனே எந்நாட்டிலும்..." திரு ஆ.மு.சி வேலழகன் அவர்களது நூலுக்கானஅணிந்துரை



இது உலகத் தோற்றத்தின் கதை, நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விடயங்களோடு, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் மனித பரிணாமத்தின் கதை. அந்த வரலாற்றிலும் பரிணாமத்திலும் தமிழ்ப்பண்பாட்டின் வகிபங்கு பற்றிய கதை. வரலாற்று உண்மைகளை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் மேலும் நம்மை தேடும் விதத்திலும் கூற முடியுமா? நம்மைத் திகைக்க வைக்கிறார் ஆ.மு.சி. வேலழகன் ஐயா அவர்கள். 


நம் அனுபவத்தை மீறியவை கூட அனுபவத்தின் தர்க்கத்திற்கு உட்பட்டவையாக இருந்தாக வேண்டும். எதையும் பரந்துபட்ட அனுபவ வட்டத்திற்குள் இருந்து கொண்டு சிந்தித்தலே ஞானத்திற்கான வழி. மீதியெல்லாம் வெறும் ஏமாற்று மொழி. ஞானவழியில் நிம்மதி இல்லை. ஆனால் கர்வமும் சுயதிருப்தியும் உண்டு. ஆனந்தத்தில் பெரிய ஆனந்தம் இதுவே. வேலழகன் ஐயா அவர்களும் ஒரு ஆழமான பரந்து பட்ட வாசிப்பின் பின், காலமும், சமூகப் பொதுப்புத்தியும் சொல்லும் போக்கில் மட்டும் போகாமல், எங்கோ ஓர் அதிசயமான இடைவெளியில் தன்னை நிறுத்தி மனித வரலாற்றை தமிழ்ப்பண்பாட்டின் உண்மையான தரிசனங்களுடன் திரும்பிப் பார்க்கின்றார்.

இவரது எழுத்துக்களுக்குள் நுழையும் போது பெரியதோர் உற்சாகம் பிறக்கிறது. ஆனாலும் அந்த விடயம் சார்ந்து எழுதுவது என்பது எனக்கு சவாலாகவே அமைந்திருந்தது. உலகமெல்லாம் பல காலங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள எண்ணற்ற ஆராய்ச்சிகளின் வாயிலாக் கிடைத்துள்ள தகவல்களின் அறிவியல் சாரத்தினை ஒரு சுவாரசிய விவரிப்பின் ஊடாக சுருக்கமாகத் தருவதென்பது இயலுமான காரியமா? ஆனால் தான் கற்றுணர்ந்த உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கான சாஸ்வதமான வழியைக் கண்டுபிடித்து தன் மொழி வல்லமையினால் பொருத்தமான, எல்லோருக்கும் புரியக்கூடிய வார்த்தைளினால் இதைத் தந்திருக்கிறார்.

உலகிற்குத் தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை என்ற கருத்து, ஒரு மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பிய தத்துவவாதிகளால் முன் வைக்கப்பட்டது. புவித் தோற்றம் மற்றும் பிரபஞ்ச ஆக்கம் குறித்துக் கூறும் முடிவுகள் பெருவெடிப்புக் கோட்பாடு (டீபை டீயபெ வாநழசல) எனும் பெயருடன் 20ஆம் நூற்றாண்டின் முக்கியமான இயற்பியல் கண்டுபிடிப்பாக முன் வைக்கபட்டது. ஆனால் நமது மரபில் இவை ஏற்கனவே புலவர்களாலும் சித்தர்களாலும் ஞர்னிகளாலும் முன் வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். இவ்விடயத்தினை 'உலகின் தோற்றம்' எனும் கட்டுரையில் ஆசிரியர் நன்னாகனாரின் பரிபாடல் வரிகளுடன் ஆதார பூர்வமாகத் தருகின்றார்.

'பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்து இசையிற் றோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்துவளி கிளர்ந்த ஊழூ ழூழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உண்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு'

என ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கிய வடிவமான பரிபாடல், உலகின் தோற்றம் குறித்த தெளிவான முடிவுகளை முன்வைத்தது. வெளி என்பதே ஐம்பூதங்களில் முதலில் இருந்தது. அந்த வெளியில் இருந்து 'உருவற்ற கரு' தோன்றியது. இரண்டாம் பூதமான காற்று பேரசைவுடன் வீசியதால் வெளியில் மிதந்த கருக்கள் மோதி தீப் பிடித்தது. தீ எழுப்பிய வெம்மையின் விளைவால், மேகம் உருவாகி மழை பிறந்தது. மழை குளிர்வித்த கருத் திரட்சிப் பகுதிகள் நிலமாக மாறின, என்ற பரிபாடல் நம்மை வியக்க வைக்கிறதல்லவா. 19ம் நூற்றாண்டில் மேலைச்சிந்தனை மரபு பேசியதை நம்முடைய மரபு 3000 ஆண்டுகளுக்கு முன்பே பேசிவிட்டதென்பது இவரது புத்தகத் தலைப்புக்கான ஆரம்ப அடிக்கல்.

'மானிடனின் தோற்றம்' எனும் கட்டுரையில், சோவியத் மானிடவியலாளர்களின் கருத்துக்களையும் பல்வேறு நாகரிகங்களின் தன்மைகளையும் கொண்டு மானிடவியலை ஆராய்கிறார். அதே நேரம் ஆசியாக்கண்டத்தின் சிறப்புக்களையும் இதில் பதிவிடுகின்றார். குறிப்பாக ஐவகை நிலங்கள் பற்றியும் அதனடியாக மனித பரிணாமத்தையும் முன் வைக்கின்றார். வேட்டையாடிய சமூகம் (குறிஞ்சி), மந்தை மேய்த்தல் சமூகம் (முல்லை), வேளாண்மை சமூகம் (மருதம்), வணிகம் மேற்கொண்ட சமூகம் (நெய்தல்) என மலைக்கும் கடலுக்கும் இடையே ஒரு பரிணாமப் பாதையினை அமைக்கின்றார். ஆகவே நமது மரபு டார்வின் கொள்கையை, மறுதலிக்கவில்லை.  மாறாக டார்வினுக்கு முன்னரே பரிணாமத்தைப் பேசியிருப்பதை சங்கப் பாடல்களின் வாயிலாகத் தருகின்றார். 

டார்வின், உயிர்கள் தங்கள் தகவமைவால் ஒன்றில் இருந்து இன்னொன்றாகப் பரிணாமம் கொண்டதைச் சொல்கிறார். நமது மரபில் உள்ள பரிணாமவாதம் என்பது ஒரு ஆன்மா தன் செயல்கள் மூலம் இன்னும் மேலானதாகப் பரிணாமம் கொண்டு கடைசியில் முழுமை அடைவதைப்பற்றிச் சொல்கிறது. 'புல்லாகிப் பூடாய்;ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்' போன்ற வரிகள் இதனைச் சுட்டுகின்றன.

இந்த இடத்தில் சிவன் தமிழ் மரபின் ஒரு முக்கிய குறியீடாக இங்கே முன்வைக்கபடுகின்றார். தென்னாடுடைய சிவன் என்பதில், தென்னாடு குமரிக்கண்டத்தைக் குறிப்பதாக ஆதாரங்களை முன் வைக்கும் அதே வேளை இச்சிவன் எல்லா நாட்டிலும் வணங்கப்பட்டிருப்தற்கான ஆதாரங்களையும் அடுக்குகின்றார். இது நமது தத்துவ மரபு பரவலாக்கம் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. தமிழின் தத்துவ மரபு என்பது உள்ளுணர்வைச் சந்திக்கும் தளங்களும் கடந்து செல்லும் தளங்களும் அடங்கிய ஒன்று. சில பிரபஞ்ச இயங்குவிதிகள் பற்றிய புரிதல் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தினடியாகவே தமிழுக்குக் கிடைத்திருக்கின்றது. ஏனெனில் நீண்ட காலம் எவ்வளவு நீளமானது என்றால், நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் ஆகிய பெரிய எண்களால் குறிக்கத்தக்க காலம் ஆகும். அதனாலேயே தமிழ் மரபில் பெரிய எண்களுக்கான சொற்களும் புழக்கத்திலிருந்தன. பரிணாமம் என கிரேக்க சிந்தனை சொல்லும் முரணியக்கம் இந்திய சிந்தனை மரபில் யோகாத்மதரிசனம் எனும் பெயரால் சுட்டப்படுகின்றது. ஆக நமக்குரியதாக எல்லாமே இருந்திருக்கிறது. அதனை பின்னர் பலரும் தமக்குரியதாக மாற்றியிருக்கின்றனர் என்பதே ஆய்வாளரின் அடிப்படை எடுகோளாக இங்கு இருந்திருக்க வேண்டும்.

வானியலின் மூலவர் தமிழரே எனத் தமிழ்க் கணிய மரபினரை மேற்கோள் காட்டி விளக்குகின்றார். கி.பி. 15ம் நூற்றாண்டு வரை உலகம் தட்டை என மேலைத்தேய மரபு கூற உலகம் உருண்டை என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தக்கணிய மரபினர் கூறியிருப்பதும், ஆரியர் இந்தக் கணிய மரபினை களவாடல் செய்திருப்பதையும் சொற்பிரயோகங்களைக் கொண்டு நிரூபணமாக்குகின்றார். உலக மொழிகளிலே மூல மொழி தமிழ் என்பதை கிளைமொழிக்கான மூலச் சொற்களை அடிப்படையாகக் கொண்டும் விளக்குகின்றார். எந்தச் செடியும் வேரை நிராகரித்தபடிதானே மேலெழுகிறது. அதே சமயம் வேரை நம்பியுமிருக்கிறது. நாம் இன்னும் வேரோடிருக்கும் அருகதைக்குரியவர்கள். 'கோண்டுவானாவில் உருவான மானிடனே உலகின் முதல் மானிடன், அந்த மானிடன் நம் தமிழன்தான்' என்பதை ஆரம்பம் தொட்டு முற்றும் வரைக்கும் முறையான ஆய்வுப் பின்புலத்தில் நிறுவியிருக்கின்றார்.

படித்து முடித்ததும் மனதை நிறைத்திருந்த கர்வத்தின் கதகதப்பில் நானும் ஒரு பெரும் பண்பாட்டின் அங்கத்தவன் என்ற இறுமாப்பு என்னைப்பற்றிக் கொண்டது. உண்மையில் இந்த புத்தகத்தின் அளவை விட பன்மடங்கு செறிவான தத்துவ விவாதங்களை அதாவது 69 பக்கங்களில் நிகழ்த்தியிருப்பது ஆழ்ந்த வாசிப்பும் அதனை விமர்சன நிலையில் நின்று பார்த்தலாலுமே சாத்தியமாகும். உங்கள் எழுத்துப்புலமைக்குச் சிரம் தாழ்த்துக்கின்றேன் ஐயா. எனது மேசைமேல் இருக்கும் பிரதியை எடுத்து அடிக்கடி அடிக்கோடிட்ட வரிகளை புரட்டிப்பார்த்துக் கொள்கிறேன். தென்னாடுடையவனே எந்நாட்டிலும்...

க.மோகனதாசன்,
சிரேஸ்ட விரிவுரையாளர்,
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப்பல்கலைக்கழகம்.









No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...