Friday, June 7, 2019

நவீன அரங்கில் காட்சியமைப்பு

   ஒரு நாடகத்தின் பௌதீகச் சூழலை மேடையில் கொண்டு வருவதற்கு காட்சியமைப்பு உதவுகின்றது. அரங்கு கட்புல, செவிப்புல, மூலங்களைக் கொண்டது. இதில் கட்புலக் கூறுகள் மிக முக்கியமாகும். ஆகவே காட்சியமைப்பு முக்கியமாகின்றது. காட்சியமைப்பு சூழலையும் கதையுடன் ஒன்றிப்பதற்கான மனநிலையையும் கதையின்/பாத்திரத்தின் நிலையையும் கதைப்பின்னணியையும் காட்டி நிற்கின்றது.
     இக்காட்சியை வடிவமைக்கும் போது சில அடிப்படை விதிமுறைகளை நாம் கவனத்தில் எடுத்தல் வேண்டும். 
இசைவு                    – Harmony
சீர்                              –  Valance
விகிதம்                    –  Proportion
அழுத்தம்                  –  Emphasis
சீர்ப்பிரமாணம் – Rhythm

    காட்சியமைக்கும் போது ஒவ்வொரு சிறு காட்சியும் முரணற்றதாக அமைய வேண்டும். காட்சிகள் மாறுகின்ற போது அந்த மாற்றம் ஒருமையை நோக்கியதாக இருக்க வேண்டும். இது இசைவு என அழைக்கப்படும். சீர் எனும் போது நாடகத்திற்கான உறுதியை வழங்குவதாக அமையும். அதாவது மேடையின் இரு பகுதிக்கும் சரியான அளவில் சுமைகளை பங்கிட்டுக் கொடுப்பதன் மூலமே இந்த உறுதியைக் கொடுக்க முடியும். இங்கு நிறம், இழைநயம் (Texture) என்பனவும் கவனத்தில் எடுக்கப்படும்.
  காட்சியமைப்பில் பொருட்களை பொருத்துகின்றஃ சேர்க்கின்ற திறமையினால் அக்காட்சிக்கு அழுத்தம் உண்டாகின்றது. மேடையில் ஒரு தனி நாற்காலி கூட அது போடப்படும் விதத்திற்கேற்ப காட்சிக்கான அழுத்தம் வேறுபடும். காட்சியமைப்பின் பாகங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்தக் கூடியதாகவும், ஒரு வடிவத்தின் அளவு மற்றைய வடிவத்தின் அளவோடு பொருந்தக் கூடியதாகவும் காட்சியமைப்பின் விகிதம் அமைதல் வேண்டும். சீர்ப்பிரமாணம் என்பது காட்சிப் பொருட்களுக்கிடையிலான அசைவியக்கத்தைக் குறிக்கும். அதாவது காட்சி ஒன்றின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு கண் நகர்வதற்கு சீர்ப்பிரமாணம் உதவும்.
காட்சியமைப்பில் மேலும்  கவனிக்க வேண்டிய விடயங்களாக கோடுகள், வர்ணம் வெளி, என்பன உள்ளன.

கோடுகள்
  கோடுகள் அளவிற்கேற்ப குறுகிய/ நீண்ட கோடுகளாகவும், பண்பிற்கேற்ப நேர்/ வளை கோடுகளாகவும், குணங்களுக்கேற்ப ஒத்திசை முரண் கோடுகளாகவும் அமைகின்றன. 
  ஒரு காட்சி விதானிப்பாளன் காட்சியை மனக்கண் முன் கொண்டு வந்து முதலில் கோடுகள் மூலமே வரைகின்றான். இக்கோடுகள் அதன் தன்மைக்கேற்ப பல்வேறு உளவியல் அர்த்தங்களைக் கொடுக்கின்றன. இக்கோடுகளை பிரதானமாக நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

      1. கிடைக்கோடுகள்
      2. செங்குத்துக் கோடுகள்
      3. சாய்கோடுகுள்
      4. வளை கோடுகள்

  கிடைக்கோடுகள் மனிதச் செயற்பாட்டின் அழுத்தத்தையும், செயலற்ற தன்மையையும் குறிக்கும். கிடையாகக் கிடக்கும் பாறாங்கல் அழுத்தத்தையும், தூங்கும் மனிதன் செயலற்ற தன்மையையும் குறித்து நிற்கின்றன. செங்குத்துக் கோடுகள் செயற்பாட்டைக் காண்பிப்பவை. நின்று கொண்டிருப்பவன் செயலில் இருக்கின்றான். செயலில் ஈடுபடப் போகின்றான், எல்லாவற்றையும் விட அவன் உயிரோடிருக்கிறான். நாடகத்தின் அசைவியக்கத்தில் இச் செங்குத்துக் கோடுகள் பிரதான பங்கினை வகிக்கின்றன.
  சாய் கோடுகள் ஒரு ஸ்திரமற்ற தன்மையைக் காட்டுவதாக அமைகின்றன. தடுமாறி விழும் மனிதன், சாய்ந்து விழும் மரம், கவிழ்ந்து விழ இருக்கும் வாகனம் என்பன இச்சாய்கோடுகளால் குறிக்கப்படும். வளை கோடுகள் பதட்டம், அமைதியற்ற நிலை, குழப்பமான சூழ்நிலை இவற்றைப் பிரதிபலிக்கும். குழம்பிய மனிதன், காற்று, புயல், அலைகள் இவையெல்லாவற்றையும் வளை கோடுகள் வெளிப்படுத்தும்.

வர்ணங்கள்
  வர்ணங்களுக்கும் மன நிலைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. நாடகக் காட்சியமைப்பில் வர்ணங்களை நாம் பயன்படுத்தும் விதம் அதனை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முறை என்பவற்றால் காட்சிப் பாதிப் பாதிப்பை ( Visual Impact) இலகுவாக ஏற்படுத்த முடியும்.

  வர்ணங்களில் சிவப்பு, மஞ்சள், நீலம் என்பன அடிப்படை வர்ணங்கள் எனவும் பச்சை, ஊதா, செம்மஞ்சள், என்பன துணை வர்ணங்கள் எனவும் அழைக்கப்படும். இவற்றில் சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள் என்பன பிரகாச வர்ணங்களாகவும், நீலம், பச்சை, ஊதா என்பன குளிர் வர்ணங்களாகவும் உள்ளன.
 
   வர்ணங்களின் பாவனையைப் பொறுத்த மட்டில் வெண்மை நிறத்தை வேறு நிறங்களுடன் படிப்படியாகச் சேர்க்கும் போது இளம் நிறமாகவும் (Tint Colours)  கறுப்பு நிறத்தைச் சேர்க்கும் போது அது கருநிறமாகவும் மாறும். இதனை நிற அழுத்தம் என்கின்றோம். 
 
  வர்ணங்களின் குணாதிசயத்தினைப் பொறுத்த வகையில் சிவப்பு - ஆபத்து, மஞ்சள் - இளமை ஆரோக்கியம், ஊதா – Royalty> Brown Faith> Poverty> Sadness> Orange – அறுவடை, நீலம் - Romances>Truth>பச்சை – LiveYouth>  வெள்ளை – சமாதானம், கறுப்பு - இறப்புப் பயங்கரம் என்பவற்றைக் குறிக்கும். இந்த வர்ணங்களை நாம் சேர்க்கும் போது அவ்வர்ணங்களின் குணங்கள் நாடகக் கருவோடு ஒன்றிப்பதாக அமைய வேண்டும். ஒரு நாடகத்தில் எல்லா வர்ணங்களையும் நாம் பயன்படுத்து வதானாலும் அந்த நாடகத்தைப் பிரதிபலிக்கக் கூடிய வர்ணம் பெருமளவில் வெளிப்படையாகப் புலப்படும் விதத்தில் அமைதல் வேண்டும். 

தன்மை, வடிவம்
  பாத்திரங்களின் தன்மையை மென்மை, கடினம் என இரு பெரும் பிரிவுக்குள் அடக்க முடியும். சில நாடகங்களில் முரட்டுத் தன்மையான இழைநயமும் சில நாடகங்களில் மிருதுவான இழைநயமும் கொண்டு காணப்படும். எனவே நாடகத் தன்மையை/ பாத்திரக் குணாம்சத்தை வெளிப்படுத்தக்கூடியதாக பொருட்களின் தன்மை அமைதல் வேண்டும்.
  காட்சியமைக்கும் போது வடிவங்கள், அவற்றிற்கிடையிலான வெளி என்பனவும் கவனத்தில் எடுக்கப்படுதல் வேண்டும். வடிவங்கள், வட்டம், உருளை, செவ்வகம், சதுரம்,  என பாத்திரக் குணாதிசயத்திற்கேற்ப தீர்மானிக்கப்படும். இதே போல் பொருட்களுக்கிடையிலான இடைவெளி எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதும் நாடகப் பகுதிக்கு ஏற்ப வித்தியாசப்படும்.

காட்சியமைப்பின் வேலை முறை
  ஒரு காட்சியமைப்பாளன் நாடகப் பிரதியை முழுமையாக வாசித்து அதனுடைய கரு, செயல், பாத்திரங்கள், மொழி, எனப்பகுத்தாராய்ந்து நாடகத்தின் முழுமையான தன்மை யைப் புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு நாடக ஒத்திகைகளில் கலந்து கொண்டு நடிகர்களின் அசைவியக்கங்களை கவனித்துக்கொண்டு அதற்கேற்றதாக காட்சிய மைப்பை உருவாக்க வேண்டும். காலம், இடம், சூழல், என்பவற்றுக்கு ஏற்ப பிரதிக்கும், காட்சிக்கும் இடையில் தொடர்பை காட்சியமைப்பாளன் ஏற்படுத்த வேண்டும்.
  காட்சியமைக்கும் போது பார்வையாளனது கற்பனைக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைப்புக்களை உருவாக்க வேண்டும். இதற்கான வரைபடங்களை உருவாக்கி இயக்குனரோடும், நாடகக் கலைஞர்களோடும் கலந்துரையாடல் வேண்டும். ஒலி, ஒளி, இசை, நடன, உடை, வடிவமைப்பாளர்கள் அனைவருடனும் இக்கலந்து ரையாடல் இடம்பெற வேண்டும். அத்துடன் பின்வருவனவற்றையும் கவனிக்க வேண்டும்.
    1. காட்சியமைப்பின் முழுமையான வரைபடம்
    2. தரை வரைபடம்
    3. காட்சியின் அளவுகோல் மாதிரி
    4. பின்கோணத்திலிருந்து காட்சிப் பொருட்கள் இடம்பெறும் முறை
   5.முன்முகப்புக் கோணத்திலிருந்து காட்சிப் பொருட்கள் இடம்பெறும் முறை
   6. இருபுறக் கோணங்களிலிருந்தும் காட்சியின் தன்மை
   7. மேடைப் பொருடகள் பாவிக்கும் ஒழுங்கு முறை
   8. காட்சிப் பொருட்களின் கோட்டு வரைபடம்
   9. காட்சிப் பொருட்களுக்குப் பயன்படும் வர்ணம்
  10. காட்சியமைப்பாளர் பிரதி

  மேற்கூறிய வகையில் காட்சியமைப்பாளனினால் காட்சிக்குரிய வேலைத்திட்டங்கள் செய்யப்பட்டாலும் நெறியாளனின் கற்பனைக்கு ஏற்றதாகவே எல்லாம் தீர்மானிக்கப்படும். காட்சிப்படுத்தலில் மேடைப் பொருடகள், கைப்பொருடகள், என்பவற்றோடு நடிகர்களும் காட்சிக் கோலத்தினை உருவாக்குவர். காட்சியமைக்கும் போது மேடை உருமாற்றம் செய்யப்படுகின்றது. இவ்வாறு உருமாற்றும் போது நாடக மோடியும், மேடையமைப்பும் கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.

   யதார்த்த நாடகங்களின் காட்சியமைப்பு, நிஜத்தை ஒத்ததாக இருக்கும் வீடு எனும் போது வீட்டுக்குரிய அத்தனை பொருட்களும் அங்கு இருத்தல் அவசியமாகின்றது. குறியீட்டுப் பண்பு நாடகமாயின் கருத்துருவக் காட்சிகளாக அமையும். ஒரு கொடி ஒரு அரசியற் கட்சியைக் குறிக்கும், சிலவேளை ஒரு கப்பற் பயணத்தைக் குறிக்கும். ஒரு குறியீடு வெவ்வேறு அர்த்தங்களைத் தரக்கூடும். அதற்கேற்றது போல் காட்சிப் பொருட்களை அமைத்தல் அவசியமாகும்.

   மேடையமைப்பினைப் பொறுத்த வரையில் வட்ட அரங்கா, தெருவெளி அரங்கா, படச்சட்ட அரங்கா, என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் வட்ட அரங்கில் காட்சியமைப்பது போல் படச்சட்ட மேடையில் காட்சியமைக்க முடியாது. எனவே அரங்கில் காட்சியமைப்பு பிரதான இடத்தினை வகிக்கின்றது. இக்காட்சியமைப்பினை அமைக்கும் போது மேற்கூறிய விடயங்களை கவனத்தில் எடுத்தால் இக்காட்சிக்கான சரியான காட்சிப் பாதிப்பினை பார்வையாளரிடத்தே ஏற்படுத்த முடியும்.

க.மோகனதாசன், 
சிரேஸ்ட விரிவுரையாளர்,
சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக் கழகம்.


No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...