Saturday, July 18, 2020

'இதழகல்' குறட்பாக்கள்

கவிஞர் வாலியை இவ்வாறானதொரு பாடலை எழுதத் தூண்டியது எது? திருக்குறள் ஏராளமான ஆச்சரியங்களைக் கொண்டது. உச்சரிக்கும் போது உதடுகள் ஒட்டாத குறட்பாக்களும் அதில் அடக்கம். இவை  'இதழகல்' குறட்பாக்கள் என்று அழைக்கப்படும். அதாவது உதடுகள் ஒட்டுவதற்குக் காரணமான எழுத்துக்களில்லாது இப்பாடல்கள் புனையப்பட்டிருக்கும். திருக்குறளில் 24 குறட்பாக்கள் இவ்வாறு அமையப் பெற்றிருக்கின்றன.

1. 'தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று'. (208)

2. 'வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய

வாழ்வாரே வாழா தவர்'. (240)

3. 'அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்'. (286)

4. 'இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை'. (310)

5. 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்'. (341)

6. 'நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

வாயினர் ஆதல் அரிது'. (419)

7. 'அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃதுஅறி கல்லா தவர்'. (427)

8. 'ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்லார்க்குச் செல்லாதது இல்'. (472)

9. 'எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்'. (489)

10. 'செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்'. (516)

11. 'அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடுஇன்றி நீர்நிறைந் தற்று'. (523)

12. 'வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று'. (678)

13. 'நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல்'. (679)

14. 'கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்

ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல்'. (894)

15. 'எற்றிற்கு உரியவர் கயவரொன்று உற்றக்கால்

விற்றற்கு உரியர் விரைந்து'. (1080)

16. 'நோக்கினால் நோக்கெதிர் நோக்குதல்

தாக்கணங்கு

தானைக்கொண் டன்னது உடைத்து'. (1082)

17. 'உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து

வேண்டி யவர்க்கண்ட கண்'. (1177)

18. 'வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடை

ஆரஞர் உற்றன கண்'. (1179)

19. 'காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து'. (1211)

20. 'நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டுஎன் உயிர்'. (1213)

21. 'நனவினால் நல்காரை நோவர் கனவினால்

காதலர்க் காணா தவர்'. (1219)

22. 'தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்

கொடியர் எனக்கூறல் நொந்து'. (1236)

23. 'காணுங்கால் காணேன் தவறாய; காணாக்கால்

காணேன் தவறல் லவை'. (1286)

24. 'தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததுஎன் நெஞ்சு'. (1296)

ஆகிய குறட்பாக்கள் இச்சிறப்புப் பெறுகின்றன. திருக்குறளின் சிறப்புகளை முற்றிலும் அறிந்தவர்கள் இங்கு  எவருமே இலர் எனலாம். அத்துணைச்சிறப்புகள் திருக்குறளிலே நிறைந்துள்ளன. இந்த நிரோட்டக குறளிலும் வள்ளுவர் நுண்மைகள் பல புகுத்தியிருக்கிறார்.



நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் – தாக்கணங்கு

தானைக்கொண்டு அன்னது உடைத்து. 

அவள் வீசிடும் விழிவேலுக்கெதிராய் நானும் அவளை நோக்கினேன்.. வெட்கப்படுவாள் என்று எதிர்பார்த்தால் அவளும் என்னைத் திரும்ப நோக்கினாள்...முதல் பார்வையில் தானொருத்தி மட்டும் தாக்கினாள் மறு பார்வையிலோ ஒரு படையுடன் வந்து என்னைத் தாக்குறாளே! வள்ளுவர் பயன்படுத்தியிருக்கும் தாக்கணங்கு எனும் சொல், வினைத் தொகையாக, தாக்கிய அணங்கு, தாக்குகின்ற அணங்கு, தாக்கப் போகும் அணங்கு என முக்காலமும் தாக்கும் திறன் பெற்றிருப்பதாக மிக ஆராய்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கம்பனும் இந்த தாக்கணங்கு எனும் வினைத்தொகையை சீதையும் ராமனும் சந்திக்குமிடத்தில், பயன்படுத்தியிருக்கிறார்.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்...
நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் விழி
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே! என அப்பாடல் வரும்.

இதழகல் பாடல் உத்தியில் கவிஞர் வாலியும் வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி

ஏழைகள் காதுகளில்
செந்தேனள்ளி சேர்க்குற கலைஞனடி
தென்னாட்டுல இருக்கிற இதயங்களை
சங்கீதத்தில் ஈர்க்கிற இளைஞனடி
நாட்டுல கேட்டுக்கடி
இசையில் இங்கு நான் செஞ்ச சாதனைதான்
நாக்குல இருக்குதடி
எடுத்து தர ஆயிரம் கீர்த்தனைதான்
அலை அடிக்க அதை தடுக்க அணை எடுக்க
நினைத்ததென்ன
தள்ளு எட்டி நில்லு
எல்ல தாண்டுற சீண்டுற ஏண்டி நீ அளக்குற

நீ இங்கு கேட்டதில்ல
அந்நாளிலே கிந்தனின் சரித்திரத்தை
திண்டாடிய நாட்டுக்கு இசையினிலே
தந்தாரடி என் எஸ் கே தன் கருத்தை
தேசத்தை திருத்திடத்தான்
கலைகள் என்று தெரிந்தது சேதியடி
நான் அந்த கலைஞனையே
நினைத்து இங்கு நடக்கிற ஜாதியடி
எனை அடக்க சிறை எடுக்க
சிறகடித்த இளைய கிளி
இன்று எதிர் நின்று
இந்த காலையை கங்கையில்
கால் கைகள் நடுங்குது

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...