Thursday, June 20, 2019

"இறைநிலையுடன் இரண்டறக் கலப்பதற்கு இசை என்ற யோக முறை"

கிரான்குளம் பாலமுருகன் புகழ்பாடும் , கவிஞர் ஜீ. எழில்வண்ணனின் "வேல்நாதம்" இறுவட்டுக்கான அறிமுகவுரை


    சிறகுகளைக்காப்பாற்றிக்கொள்ள பூக்கள் பக்கமே திரும்பாத வண்டு, வேர்களை வாரிச்சுருட்டி தண்ணீரைப்பார்த்து நடுங்கும் மரம், சூரியக்குச்சி எங்கே உரசி விடுமோ என்று உருண்டு உருண்டு ஓடப்பார்க்கும் பூமி, சமூக வலைத்தளங்களில் தொலைந்து போன மனிதர்கள் என அடுக்கடுக்காய் எம்மை சூழ்ந்து நிற்கின்றன அவலங்கள். மௌனச் சுமையுடன் ஓடுவது இப்போது எல்லோருக்கும் பழகிவிட்டது அது நேரத்தின் அவசியமும் கூட. எண்ணற்ற ஞாபகங்கள், பிள்ளைப் பிராயத்து உடைமைகள், முன்னோர் சேர்த்து வைத்த முதுசங்கள், மண்ணின் மகிமைகள், இயற்கையின் இதங்கள், ஊரின் உன்னதங்கள், ஒன்றிணைக்கும் நம்பிக்கைள் என எல்லாவற்றையும் போக்கற்ற ஒரு பெரு வலியின் நடு வழியில் கிடத்திவிட்டு ஒரிரு பெருமூச்சுக்களுடன் மட்டும் கடந்து செல்ல முடிகிறது எம்மால்.
     இந்தச் சூழலிலிருந்து விடுபட்டு இயல்பான வாழ்க்கை வாழ இறைவனை இசையால் வழிபடுதல் நமது மரபில் பயில்நிலையில் உள்ளது. இசையால் வசமாகா இதயமெது இதனாலேயே வேதத்தின் ஒரு அங்கமாக சாம வேதம் அமைந்திருக்கிறது. சாம வேதம் என்பது சங்கீத ரூபமாக உச்சரிக்கபடுகிறது. அதில் இருக்கும் பல வார்த்தைகள் இசையாகவே அமைந்திருக்கின்றன. இராவணன் சாம வேதத்தை வீணையில் வாசிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான் என்கிறது ராமாயணம். அவன் சாமகானம் வாசித்தால் கைலாய மலையே உருகும் என்பது இசையின் பெருமை. 

      தற்காலத்தில் இசைத்திறன் சோதனைகள் உளவியல் சோதனையின் பகுதியாகவும் அமைந்துள்ளன. அதே போன்று சிறுவர்களின் சிந்தனா வளர்ச்சியையும் இசை அதிகரிக்கின்றது. அதன்படி இசையினை கேட்கும் சிறுவர்களது நுண்ணறிவு எண் வளர்ச்சியடைகின்றது என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகின்றது. இசை என்பது ஒருவித யோக முறை. யோகம் என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். இறைநிலையுடன் ஒன்றிணைந்து இரண்டறக் கலப்பதற்கு இசை என்ற யோக முறை மிக முக்கியமானது. இதனாலேயே அப்பரும் சுந்தரரும் ஆளுடை பிள்ளையும் அருள் மணிவாசகரும் இறைவனை இசையால் தரிசித்தனர். 

     இசை என்பது இறைவனின் வடிவம் என்கிறது மாண்டூக்ய உபநிடதம். இசை என்பதை நாதம் என பொருள் பட கூறுகிறார்கள். ப்ரணவம் இறைவனின் நாத வடிவம். முதலில் நாதம் பிறகே அனைத்து படைப்புகளும் விரிந்தது.  நாதம் என்ற ப்ரணவத்தின் கூறுகளான ஆ - உ- ம் என்ற ஒலிகளின் மூலமே அனைத்தும் வெளிப்பட்டது. நம் மொழிகள் கலாச்சாரம், சிந்தனை அனைத்தின் உள்கட்டமைப்பும் இந்த ஒலியாலேயே விவரிக்க முடியும். ஒரு இசை வடிவத்தை நாம் ரசிக்கின்றோம் என்றால் அந்த இசை எங்களை ஈர்த்தது என்பதல்ல. எங்களுக்குள் இருக்கும் இறைநிலை ஒலிவடிவில் இருக்கிறது. அந்த ஒலி தன்னை போன்ற இசைவடிவை வெளியில் இருந்து ஈர்த்தது. எங்கள் மனம் மற்றும் ஆன்மாவின் நிலைக்கேட்ப இசை எம்மை ஈர்க்கும். நாம் மிகவும் கடினமான தன்மையில் இருந்தால் கடினமான இசையும், மிகவும் மென்மையாக இருந்தால் மெல்லிசையும் எம்மைக் கவரும். 

'நாதம் என்ற நாதனை நாடினால்
நாளும் உன்னுள் நாதத்தை அறிவாய்
நாதமும் நாதனும் ஒன்றாகி
ஓம்கார நாதனாவாய்' என்கிறது ஒரு சித்தர்பாடல்.

   ஒரு படைப்பின் எழுச்சி நிலை உண்மையானதா போலியானதா என்பதற்கப்பால் ஒரு படைப்பினை எழுதத் தூண்டுவது படைப்பாளியின் மனவெழுச்சி நிலையே. கவிதைகளாக தூய எழுச்சி நிலைகளாக அவை அடையப்படுகின்றன. இன்று ஆலயங்களுக்கு பாடல்கள் வெளியிடுவது ஒரு சடங்காக மாறிவிட்டது. ஆனால் அவை என்ன விடயத்தைப் பேசுகின்றன. அவற்றை எவ்வாறு பேசுகின்றன. அவற்றின் ஆன்மீக உளவியல் என்ன? அவை பொதுச்சமூக உளவியலை எவ்வாறு மாற்றப்போகின்றன என்பவற்றை கவனித்து மேற்கொள்ளும் போது பக்திப்பாமாலையின் எதிர்பார்க்கை விளைவினை இன்னும் இலகுவாக அடைய முடியும். 

   காலத்தின் தேவையுணர்ந்து இந்த இறுவெட்டு வெளியிடப்படுகிறது. கிரான்குளம் திருமுருகன் ஆலய திருப்பணிச்சபையினரால் வெளியிடப்படும் வேல்நாதம் இறுவெட்டுக்குரிய இசையினை விநாயகமூர்த்தி செந்தூரன் அவர்களும் பாடல் வரிகளை ஜீ.எழில்வண்ணன் அவர்களும் தயாரிப்புப்பொறுப்பினை பெ.சிவசுந்தரம் ஐயா அவர்களும் ஏற்று இதனை வெளிக்கொணர்ந்திருக்கின்றனர். பாடல்களை க.ஜெயரூபன், பவானி, சந்தோஸ், மற்றும் எழில்வண்ணன் ஆகியோர் பாடியுள்ளனர்.

     கணபதி தாளினைக்கருத்திடை வைத்து கந்தப்பு ஜெயரூபனின் குரலில் முதல் பாடல் 'முதல் மடையில் வீற்றிருப்பான் கணபதி...' எனும் பாடலாக அமைகின்றது. 'ஆண்டு பல கடந்தாலும் ஆலமரம் சாயவில்லை. வேண்டி நாங்க ஓடி வர உன்வாசல் மூடவில்லை...' என எம் எல்லோருக்கும் தோன்றாத்துணையாக நிற்கும் அந்த கணபதியை நெஞ்சுருகுவதாக அமைந்துள்ளது. நாதஸ்வரமும் தவிலும் பாடலுக்கான கனதியை இன்னும் அதிகரிக்கச்செய்கின்றன. பாடகர் கந்தப்பு ஜெயரூபனும் எம் உணர்வுகளோடு ஒன்றி விடுவதை அந்தக்குரலின் அழுத்தம் எமக்கு உணர்த்திவிடுகின்றது.

   'கிரான்குளம் வந்த முருகா..' என ஜீ. எழில்வண்ணன் மற்றும் பவானி ஆகியோரின் குரலில் இரண்டாவது பாடல் அமைகின்றது. 'இன்னல் போக்க வந்தாய் அண்ணலாக நின்றாய் தொல்லை தீர்க்கும் கந்தா எல்லை உனக்கு உண்டா...' எனக்கந்தனை விழிப்பது எமக்கான ஒரு உளத்துணையினைத் தேடுவதாக அமைந்திருப்பதைக்காணலாம். 'குழந்தையாக வந்தவனே பால முருகா...' எனும் பாடல் சந்தோஸ் எனும் குழந்தையின் மழலைக்குரலாலே பாடப்பட்டுள்ளது. கேட்பதற்கு மனதில் ஒரு துள்ளலை ஏற்படுத்தவல்ல தன்மையில் இது அமைந்துள்ளது. சிறுவர்கள் எவ்வாறு இறைவனைக் காணுவார்களோ அதனை மனக்கண் முன் நிறுத்தி காட்சியாக்கியுள்ளனர் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் அந்த குட்டிப்பாடகரும்.

    நாலாவது பாடல், 'வினை தீர்க்க வாறவரே வேலாடும் சரவணரே மயிலாடும் தோகையிலே துயர் தீர்க்க வாருமையா...' எனும் பாடல் பவானி அவர்களின் உருக்கமான குரலில் அமைந்துள்ளது. 'நாள் தோறும் வேண்டுகிறோம். நலமாக காக்க வேண்டும் யாமிருக்க பயமேது வேல் இருக்க வினையேது' என எமக்கு தைரியம் சொல்லி முடிகிறது அப்பாடல். ஐந்தாவது பாடல் கந்தப்பு ஜெயரூபனின் குரலில் அமைந்துள்ளது. அண்மைக்காலமாக பலரும் 'முத்தைத்தரு பத்தித்திருநகை..' பாடலின் சந்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். தன் மனதைக்கட்டுப்படுத்தவே அருணகிரிநாதரும் இப்பாடலைப்பாடினார். அண்மையில் வந்த 'அச்சம் என்பது மடைமையடா' எனும் திரைப்படத்தில் 'பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு...' என ஒரு பாடல் வருகின்றது. இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து, சத்திய பிரகாஸ் பாடியிருக்கும் பாடலது. அதில் வரும் சரணம் இந்த முத்தைத்தரு பத்தித்திருநகை சந்தத்திலே அமைந்துள்ளது. 

எட்டு திசை முட்டும் என்னை பகலினில்
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில் மடிவேனோ
முன்னில் ஒரு காற்றின்  களி முகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ 

   என அப்பாடல் அமையும். இந்த இறுவெட்டிலும் 'சொல்லூன்றி நாதம் வேல்நாதம்...' எனும் முத்தைத்தரு பத்தித்திருநகை சொற்கோர்வையினை அடியொற்றிய இப்பாடலின் சரணம் மிகச்சிறப்பாகவுள்ளது. 'சித்தி தெளிந்திட புத்தி பெருகிட முற்றம் வாவென ஓத கத்தி கதறிட பக்தி கலந்திட காவலனே வருக' என அந்த சந்த வரிகள் அமைந்துள்ளன.  

    நாம் பல மணி நேரம் உரையாற்றுவதையும், பல பக்கங்கள் எழுதுவதையும் பாடல்கள் சில வரிகளில் எம்முள் இறக்கிவிடுகின்றன. சில பாடல்களில் பயன்படுத்தும் வார்த்தைகளும், கருத்தும் சில நேரங்களில் எமக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிடும்.

   'மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
   விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
   பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
   கண்ணகத் தேநின்று காதலித் தேனே'

  அதாவது, மண்ணாகவும், விண்ணாகவும், வேதமாகவும், இசையாகவும் இருப்பவனை நானும் காதலிக்க துவங்கிவிட்டேன். என்ற திருமூலரின் வரிகள் இந்த இடத்தில் எமக்கு ஞாபகம் வருகிறது.

       நான் வைகுண்டத்தில் இல்லை. நான் யோகிகளின் இருதயத்தில் இல்லை எங்கெங்கு என் பக்தர்கள் பாடுகிறார்களோ அங்கு நான் நிதர்சனமாய் இருக்கிறேன் என்று நாரதரிடம் மஹா விஷ்ணு கூறினார். அந்த சர்வவியாபியான பரமாத்மாவே இசையில் கட்டுண்டு இருக்கும்போது, நாம் எம்மாத்திரம்? கோடி ஜபம் தியானத்திற்கு சமானம்; கோடி தியானம் லயத்திற்கு சமானம்; கோடி லயம் கானத்திற்கு சமானம்; கானத்திற்கு சமானம் வேறில்லை என்று சொல்வதுண்டு. பக்தி மார்க்கத்தைக் கடைப்பிடிக்க சிறந்த சாதனம், இசையாகும்.

   பக்தி என்பது ஒன்றுடன் நாம் ஒன்றுவது. பக்தி என்பதைக் கடவுள் நம்பிக்கை என்று பார்த்தாலும் அல்லது ஒன்றின் மேல் நாம் வைத்திருக்கும் தீவிர ஆசை என்று பார்த்தாலும், கடவுள் நம்பிக்கை இருப்பவர்களையும், இல்லாதவர்களையும் தன்னை மறக்கச் செய்வது இசை. ஒன்றி வாழ்வதற்கான தவிப்பும் ஒன்றாமல் நிற்க வைக்கும் எதார்த்தமும் எம்மைச்சூழ அடர்ந்து வளர்ந்து கொண்டே வருகின்ற சமகாலச் சூழலில் எம்மை மனிதர்களாக்குவது இசையே. காலத்தின் தேவையுணர்ந்து இதற்காக உழைத்த அனைவருக்கும் எமது மகிழ்ச்சியும் பாராட்டுக்களும்.

க.மோகனதாசன்,
சிரேஸ்ட விரிவுரையாளர்,

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...