Thursday, June 20, 2019

நம்மைச் சுட்டெரிக்கின்ற வெப்பத்தினை மொழி பெயர்க்க...

ரிஷி வித்ஞானியின் "அரோகரா" கவிதை நூலுக்கான அணிந்துரையிலிருந்து....


       நம்மைச் சுட்டெரிக்கின்ற வெப்பத்தினை மொழி பெயர்க்க மௌனமான ஆர்ப்பரிப்பு ஒன்று தேவைப்படுகின்றது. அந்த வேலையை கவிதை கச்சிதமாகச் செய்துவிடுகிறது. உள்ளதிலிருந்து உணர்ந்ததைச் சொல்வதும் உணரச் செய்வதும் கவிதையாகின்றது. இதனாலேயே கவிதையினை தம்முணர்வின் ஊடகமாகவும் தம்மை ஆக்கிரமிக்கும் அவஸ்தைகளின் பாசையாகவும் பலர் பயன்படுத்துகின்றனர். காலத்தின் கைகளாலும் சில சூழ் நிலைச் சிக்கல்களின் நகங்களாலும் சின்னாபின்னமாக்கப்பட்டு சிதறிப் போய்க் கிடக்கின்ற மனங்களின் வார்த்தைகளை எடுத்து  பலர் கவிதை புனைய முனைகின்றனர். சிலவை வெறும் கூக்குரல்களாகவும் சிலவை ஆத்மாவின் வேர் சென்று உசுப்பி விடுகின்ற விசாரணைகளாகவும் அமைந்துவிடுகின்றன. 


     தனது கவிதைகளால் கைகுலுக்கி அறிமுகமான அன்புக்குரிய மாணவன் இளங்கோ சில நாட்களின் பின் கை நிறையக் கவிதைகளைக் கொண்டு வந்து வாசித்துப் பார்க்கும் படி கேட்டார். வாசித்த பின்னர் சிலவற்றைக் கலந்துரையாடினோம். பல இடங்களில் ஒன்று பட்டோம். சில இடங்களில் முரண்பட்டோம். ஆனாலும் கவிஞனுக்கும் கவிதைக்கும் இருக்கின்ற சுதந்திரத்திற்குள் நின்றுகொண்டுதான் உரையாடினோம்.

     கவிதையின் உணர்த்து திறனில் உணர்ச்சி, படிமம், குறியீடு, ஓசை என்பன பாதிப்பான தன்மைகளை ஏற்படுத்துவதில் முன்னிற்கின்றன. எடுத்த எடுப்பில் எமக்கான தனித்துவ மொழி நடையினையும் ஓசையினையும் ஏற்படுத்தி விட முடியுமா? சில வேளை அது சாத்தியமாகின்றது. இவரது கவிதையிலும் தனித்துவங்கள் தலைகாட்டத் தவறவில்லை. 

'...வாடைக்காற்றுக்கா 
இப்போ வழி தவறிப் போனாய்...'

    என்னும் உணர்ச்சி வேகமிக்க வரிகள் கடந்த காலக் காயங்களிலிருந்து எழும் குரலாக அமைவதைக் காணமுடிகின்றது. எள்ளல் தன்மையுடன் வார்த்தைகள் அமையும் போது கவிதைக்கான ரசனைத் தன்மை இன்னொரு தளத்திற்குச் செல்கின்றது. 

'அம்மா தரப்பில் இரண்டு கறிச் சட்டிகள்
அப்பா தரப்பில் அதே வானொலி
மீண்டும் உடைக்கப்பட்டது..."

  எனும் வரிகள் இளங்கோவின் கவிதையில் காணப்படும் எள்ளல் தன்மையினைக் காட்டி நிற்கின்றது. இத்தோடு அ..ரோ..க...ரா... எனும் கவிதையில் பிள்ளையாரை முன்னிறுத்தி நடத்தப்படும் தகிடுதத்தங்களை பிள்ளையாருடன் உரையாடுவது போலவே எழுதியிருக்கிறார்.

'சரி சரி கட்டட்டும்
ஊரில அடிச்சதெல்லாம் ஒண்டு சேர்த்து
கட்டட்டும்
கல்லுப் போதாதெண்டு
நேற்றுக் கதைச்சவயள்
செல்லுறத செல்லிப்போட்டன்
பிள்ளையாரப்பா
கவனமா இருந்துகொள்
அரோகரா...'
எனும் வரிகள் இவரது சமூக அக்கறையினைக் காட்டி நிற்கின்றது.

'பரீட்சை முடிவில் உங்கள் பேனாக்கள்
உமிழ்ந்த கண்ணீர்க்கறைகள் என் வெள்ளைச் சேட்டில்
என்றும் பொக்கிசமாய்..... உங்கள்
நினைவுகளோடு என்னிடத்தில்'

   என இவர் பள்ளிக் காலத்திற்கு தமது கவிதையில் எம்மையும் ஏற்றிச் செல்கிறார். பாடு பொருள்களாய் இவருக்;குப் பல பொருள்கள் கிடைத்துவிடுகின்றன. எளிமையான சொற்களுடன் எல்லோருக்கும் புரியக் கூடிய குறியீடுகளை இவர் பயன்படுத்துகின்றார். உதாரணமாக நல்(ல)அடக்கம் எனும் கவிதையில் ஒரு தாயின் இறப்பின் வலியினைப் பதிவு செய்கின்றார்.

'காலஞ் சென்ற
கணவர் செல்லையா(லண்டன்) – அன்பு மனைவியும்
குபேரன்(லண்டன்)
தனச்செல்வி(சுவிஸ்)
தனச்செல்வன் (கனடா) – அன்புத்தாயாரும்
கோடீஸ்வரன்
தனபதி – அன்புப் பேத்தியும் ஆவார்.' 

    எனப் பெயர்களிலே கூட செல்வத்தனம் இருந்தும் தாம் வளர்த்த உறவுகளே அத்தாயைக் கண்டுகொள்ள எத்தனிக்காத, போலி உறவுகளை சுட்டெரிக்கும் வார்த்தைகளால் சுட்டிக் காட்டுகின்றார். ஆங்காங்கே சில அழகான படிபங்களையும் தனது கவிதைகளில் இட்டு நிரப்பிச் செல்கின்றார். 

'உன்னால் உடைந்த
என் முகத்துண்டுகள் தேடி'
எனவும்
முட்கம்பித் தீவுக்குள் நீ
முரடரையும் உடைத்து – உன்னைப் பார்க்க
முந்தியடித்த நான்
எனவும்
வந்து போகின்றவர்கள் எல்லாம்
வசந்தம் மட்டும் பார்க்கின்றார்களே
எம்மவர் வலியின் மறுபக்கம்
என்றுதான் பார்ப்பாரோ?
எனவும்
காதலியே உன்னைக் காணமுன்பு
பல காதல் கவிதை எழுதியதுண்டு
ஆனால் உன்னைக் கண்ட பின்
அக்கவிதைகளே என்னை
கல்லால் அடித்தன

   எனவும் தனது கவிதைக்கான தனித்துவ அடையாளங்களைப் பதிக்கின்றார். கடந்த கால வலிகள், பசுமையான நினைவுகள், தற்கால சூழ் நிலைகள், தன்னுணர்வின் வெளிப்பாடுகள் எனப் பல்வேறு விடயங்களை தனது கவிதையில் இளங்கவிஞர் இளங்கோ வெளிப்படுத்தியிருக்கின்றார். அன்ரொயிட் போன்களுக்குள்ளும் சமூக வலைத் தளங்களுக்குள்ளும் அள்ளுண்டு போயிருக்கும் நம் எதிர்காலத்திற்குள்ளே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில ஆறுதல் பெருமூச்சுக்களும் கிடைத்து விடுகின்றன. எமது மாணவர்கள் சமூகம் சார்ந்து சிந்தித்தல், செயற்படுதல் என்பது முக்கியமானதாகும். அந்த வகையில் இளங்கோவின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. இத்துடன் மேலும் பல சிந்தனைகளுக்குப் பரிச்சயமாகுவதோடு தனக்கான தனித்துவ அடையாளங்களோடு அடுத்தடுத்து இளங்கோவின் ஆக்கங்கள் வெளிவரவேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன்.

க.மோகனதாசன்



No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...