Tuesday, June 4, 2019

'நானிலம் யாவுமோர் நாடக மேடையே ஆண் பெண் அனைவரும் அதில் நடிப்பவர் தாம்'

மதங்கசூளாமணியும் ஷேக்ஸ்பியர் நாடகங்களும்


  தத்தமது கருத்துரைக்கும், கட்டுரைக்கும், நாடக மேடைக்கும் சேக்ஸ்பியரைப் பயன்படுத்தி வரும் இலக்கிய உலகில் அந்த ஆங்கில நாடகாசிரியனை ஆழ்ந்து நுணுகிப்பார்க்கும் ஒப்பியல் ஆய்வுக்குப் பயன்படுத்தியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். சுவாமிகளின் பன்மொழி அறிவையும் இலக்கிய ரசனையையும் ஆய்வுக் கண்ணோட்டத்தினையும் ஒருங்கே புலப்படுத்தும் உயரிய நூல்தான் மதங்கசூளாமணி. இந்த ஒப்பியல் நோக்கு பற்றிய ஒரு பார்வையாக இந்த உரையானது அமைகிறது.


      தமிழ் மொழியை பல்கோணங்களில் ஆராய்ந்த துறவி விபுலானந்த அடிகள். 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் 13 ஆம் திகதிகளில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் 23 ஆவது வருடாந்த விழாவில் அடிகளார் அவர்கள் முதல்நாள், 'தமிழ் அபிவிருத்தி' என்னும் தலைப்பிலும் இரண்டாம் நாள், கலாநிதி உ.வே. சாமிநாதையர் தலைமையில் 'ஷேக்ஸ்பியரும் தமிழ் நாடகங்களும்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார். தொல்காப்பிய மெய்பாட்டியல் நூற்பாக்களையும், வடமொழியில் தனஞ்சயரால் எழுதப்பட்ட தசரூபகம் எனும் நாடக இலக்கணக்கருத்துக்களையும் மையமாக வைத்து ஆங்கில நாட்டு சேக்ஸ்பியரின் சிற்சில நாடகப்பாத்திரங்களோடு அம்மெய்ப்பாடுகளை ஒப்பிட்டு இவ் ஆய்வுக்கட்டுரையானது அடிகளாரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

      வடமொழியும் தமிழுமே பயின்று வந்த அந்நாளைய தமிழிலக்கிய சூழலில் ஆங்கில இலக்கியமும் முதன் முதலாக ஒப்பீட்டுக்கு வந்த நிகழ்ச்சி தமிழ் அறிஞர்களுக்குப்புதிதாகவும், சிறப்பாகவும் இருந்திருக்க வேண்டும். இதனால் அக்கட்டுரையினை சற்று விரிவாக எழுதி செந்தமிழ் இதழில் தொடர்ந்து வெளியிடுமாறு அன்றைய தமிழ்ச்சங்கத்தின் தலைவர் உ.வே.சாமிநாதையரும் செயலாளர் சீனிவாச அய்யங்காரும் கேட்டுக் கொண்டனர். அதன் விளைவே இந்த மதங்கசூளாமணி ஆகும். அது மதுரைத் தமிழ்ச்சங்கத்தினால் 1926 ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டது.

   இது பற்றி அடிகளார், 'நாடகவியலினை ஆராயப்புகுந்த இச்சிற்றாராய்ச்சியில் கண்ட முடிபுகள் அனைத்தும் பலநாளாக என்னுள்ளத்தினுள் பயின்று கிடந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் இருபத்து மூன்றாம் வருட உற்சவத்துக்குச் சென்றிருந்தபோது அவற்றினைத் தொகுத்துத் தமிழ்நாட்டுப் பெரும்புலவர் குழுமியிருந்த வித்தகக் கழகத்தில் பெரும் புலவருள் பெரும்புலவராகிய மஹாமஹோபாத்தியாய சாமிநாதையர் அவர்களது தலைமையின் கீழ் இயன்றவரை விரித்துக் கூறினேன். இவ்வாராய்ச்சி பயன்தரத் தக்கதென மஹாமஹோ பாத்தியாயர் அவர்களும் எனைய புலவர்களும் பாராட்டினார்கள். ஆதலினாலும், சங்கத்துக் கௌரவ காரியதரிசியாக இருந்து தமிழ் அபிவிருத்திக்காகப் பலவாற்றாலும், முயற்சித்துத் தம் கைப்பொருளையும், நேரத்தையும் செலவிட்டு வருபவரும், எனது நண்பருமாகிய மதுரை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசஐயங்கார் அவர்கள், இவ்வாராய்ச்சியை விரிவுற எழுதி வெளியிட வேண்டுமென்று பலமுறை கூறி என்னை ஊக்கப்படுத்தினார். ஆதலினால் இதனை எழுதி வெளியிடத் துணிந்தேன். சங்கப்புலவர் வீற்றிருந்து தமிழாராய்ந்த நான்மாடக் கூடலில் இருந்து இவ்வாராய்ச்சியை எழுதப்பெற்ற பெரும்பேற்றினை நினைக்குமபோது என்னுள்ளம் உருகுகின்றது. சிறியேனாகிய யான் எடுத்துக் கொண்ட இக்கருமம் இனிது நிறைவுறும் பொருட்டு உலகமாதாவாகிய மீனாட்சியம்மையாரும் சோமசுந்தரக் கடவுளும் திருவருள் பாலிப்பாராக' என 'மதங்கசூளாமணி' நூலில் குறிப்பிடுகிறார்'.

            'அம்புவியிற் செந்தமிழோ டாங்கிலமும் எனக்குணர்த்தி அறிவு தீட்டி
             வம்புசெறி வெண்கல வல்லியருள் எனக்கூட்டி வைத்த ............'

    எனத் தொடங்கும் பாடலைத் தமது குரு வணக்கப் பாடலாகப் பாடி குழந்தைப் புலவர் எனப் பாராட்டுப்பெற்ற அடிகளார்,
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்'
      
      என்ற மகாகவி பாரதியின் விருப்பினை நடைமுறைச்சாத்திய மாக்கினார். ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மூன்று மொழி நாடக இலக்கிய வளத்தையும் ஒப்பு நோக்கி எழுதப்பட்ட நூலே மதங்கசூளாமணி.

    மதங்கர் என்பது கூத்தாடுபவரைக் குறிக்கும் சொல். சூடாமணி என்பது விலைமதிக்க முடியாத ரத்தினம். அதுவே மதங்கசூளாமணி ஆகும். கம்பரது கவிகள், நயம்பல கொண்டவை. அவரது கவிதைகள் முத்திரை பதிக்கப்பெற்றவை. முதன்மை பெற்று விளங்குபவை. ஆங்கிலக் கவிஞர் சேக்ஸ்பியரது நாடகங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை. கம்பர் கவிச்சக்கரவர்த்தியாக விளங்குவதுபோல் சேக்ஸ்பியர் நாடகச் சக்கரவர்த்தி என சுவாமி விபுலானந்தர் போற்றுகிறார். சேக்ஸ்பியர், நாடகங்களை எழுதியதோடு மட்டுமல்லாது மேடையில் நடித்துமுள்ளார். 'உலக வாழ்க்கையை நாடகமாகக் கற்பித்துக் கூறிய இக்கவிவாணர் வனப்பின்மிக்க நாடக நூல்கள் பலவற்றை உலகுக்கு அளித்துள்ளார். அதுமட்டுமல்லாது அரங்கினுட் புகுந்து தாமும் கூத்தருள் ஒருவராக நின்று நடித்துள்ளார். நாடகக் கவிகளுள் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் பிறரில்லை. ஆதலால் சேக்ஸ்பியர் என்னும் இயற்பெயர் பூண்ட இக்கவிவாணரை யாம் மதங்கசூளாமணி என வழங்குவாம். 
   இவரது நாடகங்களுள் அமைந்து கிடந்த வனப்பினுட் சிலவற்றை ஆராயப்புகுந்த இவ் உரைத்தொடரும் மதங்கசூளாமணி என வழங்கப் பெறும்' என இது பற்றி அடிகளார் மேலும் கூறுவது இந்நூல் ஆக்குவதற்கான பின்னணியினையும் பெயருக்கான காரணமும் கூறுவதாக அமைகிறது. அது மட்டுமன்றி  சேக்ஸ்பியரின் உலகளாவிய கண்ணோட்டை மனதிற் கொண்டும் தமது நாடகத்தில் நடைமுறை உலகத்தைப்படைத்துக் காட்டிய மையினாலும் அவரை செகசிற்பியார் என்றும் கூறுகிறார். 

       சேக்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களைத் தெரிந்தெடுத்து அவற்றின் சிறப்புக்களை இந்நூலில் ஆராய்ந்துள்ளார். அந்த ஆங்கில நாடகங்களில் சுவைமிகுந்த உரையாடல் பகுதிகளை சுவைகுன்றாமல் செய்யுள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாடக இலக்கணங்கள் பற்றி நயம்பட எடுத்துரைத்துள்ளார். கூத்துக்களின் வகைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் கூறும் எண்வகை மெய்ப்பாடுகளுடன் வடமொழியில் குறிக்கப்படும் ஒன்பான் சுவையோடு சேக்ஸ்பியர் நாடகங்கள் ஒருங்கு வைத்துப்பார்ப்பது ஒரு இலக்கிய ஒப்புமை ஆகின்றது. கதையமைப்பினையும் நாடக நயத்தினையும் விடுத்து மானுடத்தின் மெய்ப்பாடுகளும் குணாதிசயங்களும் பாத்திரங்களின் வழி ஒப்பு நோக்கியிருப்பது அடிகளாரால் ஒரு முக்கோண இலக்கிய ஒப்புமையை ஆரம்பித்து வைத்திருப்பதையே காட்டுகிறது.
   
மதங்க சூளாமணி 3 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. உறுப்பியல்
2. எடுத்துக்காட்டியல்.
3. ஒழிபியல்
        உறுப்பியலில் சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையினால் பெறப்பட்ட அழிந்து போன நாடகத்தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை உரைக்கின்றார். இவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்திற்குரிய கட்டுக்கோப்பு (Structure) என்பவற்றுடன் நாடகத்திற்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவையுணர்வு என்பன பற்றி இந்திய ரசக்கோட்பாட்டினடியாக எடுத்துக் கூறப்படுகிறது.

       இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ்பியரின் நாடகங்களில் நகை மெய்ப்பாட்டினையுடைய லவ்ஸ் லேபர்ஸ் லாஸ்ட் நாடகம், காதல் கைம்மிக்க காவலன் சரிதை என்றும் அழுகையும் இளிவரலும் உள்ள கிங்லியர், ஆகுலராஜன் கதை என்றும் அழுகையும் உவகையுடன் கூடிய ரோமியோ யூலியட், இரம்மியன் சுசீலை சரிதை என்றவாறும் வெகுளியும் அவலமும் உடைய டைமன் ஒவ் எதென்ஸ், தீ நட்பு அஞ்சிய தீமோன் கதை எனவும் மருட்கையும் அவலமும் கொண்ட த டெம்பஸ்ட், பெரும்புயற் சரிதை ஆகவும் அச்சம் பிரதான மெய்ப்பாட்டினையுடைய மேக்பத் நாடகம், மகபதி சரிதம் என்றும் உவகையுடன் கூடிய மேர்ஜன்ட ஒவ் வெனிஸ், வணிக தேய வர்த்தகன் சரிதையாகவும் பெருமிதம் மெய்ப்பாட்டினையுடைய யூலியஸ் சீசர், யூலிய சீசர் சரிதை என்பதாகவும் வெகுளி மெய்ப்பாடு விரவிக்காணப்படும் டைடஸ் அந்ரானிகஸ்,  சேனாதிபதி சரிதமாகவும் உவகை விரவிக்காணப்படும் அஸ் யு லைக் இட், த வின்டர்ஸ் டேல் என்பன வேனிக்காதையாகவும் கூதிர்க்காதையாகவும் உவகை மெய்ப்பாட்டினையே மெய்ப்பாடாகக்கொண்ட டுவெல்த் நைட், கருதியது எய்திய காதலர் சரிதையாகவும் 12 நாடகங்களும் உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கமைய விளக்கப்படுகின்றன. நாடகத்தின் அமைப்பை முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என விளக்கி அந்த அமைப்பு இந்த நாடகங்களில் எவ்வாறு காணப்படுகிறது. என்பதனையும் அத்தோடு நாடகம் தரும் வீரம், அச்சம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, ருத்திரம், நடுவு நிலையாகிய 9 சுவைகளையும் தந்து அச்சுவைகளை இந்நாடகங்கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார். இதற்காக அவர் 12 நாடகங்களையும் முற்றாக மொழி பெயர்க்கவில்லை தமது ஆய்வுக்குத் தேவையான பகுதிகளை மாத்திரமே அவர் மொழி பெயர்த்தார் என்பதனை நாம் மனங் கொள்ள வேண்டும்.

      வங்கக் கவிஞர் ரவீந்திரநாததாகூரின் கார்டனர் என்னும் பாடல்களைப் பூஞ்சோலைக் காவலன் என்னும் பெயரில் அழகாக மொழிபெயர்த்த அடிகளார் இந்த 12 நாடகங்கயிலும் கூட இந்நூற்றாண்டின் இருபதுகளிலும் முப்பதுகளிலும் மக்களிடையே அறிமுகமாகியிருந்த தேசிங்கு ராஜன், மதன காமராஜன், குசலவன் போன்ற நாடகங்களில் வரும் பெயர்களைப் பயன்படுத்தியிருப்பது பலரும் தம் பண்பாட்டோடு இணைந்து பெயர் சூட்டுவதற்கும் காட்சிகளை உருவாக்குவதற்குமான பின்னணியினைக் கொடுப்பதற்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

       ஆண் மக்களுள் தலைசிறந்தாரின் இயல்புகளை தீர லலிதர், தீரசாந்தர், தீரோதாத்தர், தீரோத்ததர் எனப்பிரித்துக்காண்பது வடநூல் வழக்கு. இந்தப்பொருள்படும் விதமாக தீர லலிதர், வசந்தன் பிரிய தத்தனாக ஆட்சியைப் பிறரிடம் கொடுத்துவிட்டு லலித கலையில் ஈடுபடுவோராக பிளாரி ஜல் பெர்னாண்ட்டும் தீரசாந்தர் எனும் குணவியல்பு மாசேனனாக டியுக் ஆர்சினோவும் தீரோதாத்தர் ஆண்மையாளராகவும தற்பெருமையற்றோராகவும் உள்ள ரோமியோ, ஆர்லன்டோ பாத்திரங்கள் அனந்தன், ரம்மியன், ரதிகாந்தனாகவும் கர்வமும் ஆத்திரமும் கொண்ட தீரோத்ததர் பாத்திரம் மகபதி, சாபலன் ஆக மக்பெத்தும் iஷலக்கும் என பாத்திரக்குணாதிசயத்திற்கேற்றாற் போல் பெயரிடப்பட்டிருப்பது அடிகளாரின் நுண்புல அறிவை வெளிப்படுத்தி நிற்கின்றது.

       தமிழ் இலக்கிய மரபில் பெண் மக்களை வயதையும் பருவத்தையும் ஒட்டி ஏழுவகையாகப்பிரிப்பது போல் வடமொழி மரபிலும் குணவியல்புகளை அடிப்படையாகக்கொண்டு எட்டுவகையாகப் பிரிக்கின்றனர். இதனையே தமது ஒப்புமைக்கு எடுத்துக்கொண்ட 12 நாடகங்களிலும் அடிகளார் பெண்களுக்கான பெயராகச் சூட்டியுள்ளார்.

  இதில் காதலன் வாக்குறுதியை நம்பி அலமரும் விப்ரலப்தா குணவியல்புடன் யூலியட் பாத்திரம் சுசீலையாகவும் காதலனைக் கட்டுப்படுத்தும் ஸ்வாதீனாபாத்ருகை மனப்பாங்குடன் மிராண்டா பாத்திரம் மாலதியாகவும் கணவனின் நடத்தையினால் கோபமுறும் தன்மையுடன் கூடிய போர்சியா பாத்திரம் விஜயையாகவும் படைக்கப்ட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

      கருத்துத் தெளிவும் சுவையான சொல்லோட்டமும் இருக்கின்ற சிற்சில பகுதிகளை சுவாமிகள் அழகிய செந்தமிழ் நடையிலேயே மொழி பெயர்க்கிறார். யூலிய சீசர் எனும் நாடகத்தில் மனைவி கல்பூர்ணியாவிடம் தனது அஞ்சாமையினை வெளிப்படுத்தும் இடத்தில்
             'அஞ்சினர்க்குச் சதிமரண மஞ்சாத நெஞ்சத்து
              ஆடவனுக் கொருமரணம் அவனிமிசைப் பிறந்தோர்
               துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்குந்
              துன்மதி மூடரைக் கண்டாற் புன்னகை கொள்பவன் யான்'
      என மூலச்சுவை குன்றாது, அழகு தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளமை அடிகளாரின் மொழி பெயர்ப்புத் திறமையை விளக்கி நிற்கிறது. புயல் அதாவது 'டெம்பஸ்ட்' என்னும் நாடகத்தில் ஏரியல் எனும் பாத்திரம் பாடுவதாக வரும் பகுதியில் ஒலிக்குறிப்புச் சொற்களும் மரபுச்சொற்களும் விரவி வருகின்றன. தனது மொழி பெயர்ப்பிலும்,
'வாரீரோ நடமிடுவோம் வ்வ வவ் என நாய் குரைக்கச்
சீராக்க குக்கூ எனும் சேவலொலி கேட்குதையா'
என அத்தகைய ஒலியை உருவாக்குவது அவரின் பல்துறைத் திறனைக்காட்டி நிற்கின்றது.
இத்தோடு வடநூலில் குறிப்பிடப்படும் முகம், பிரதி முகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்பன முறையே துவக்க நிலை, பின்வரு நிலை, சிக்கல், உச்சகட்டம், தீர்வு எனபவற்றுடன் சில நாடகங்கள் ஒப்பிட்டு நோக்கப்படுகின்றன. ஒப்பிலக்கிய அணுகுமுறைகள் இந்தியாவிலே 1950களில் தான் ஜாதவ்வூர் பல்கலைக்கழகத்திற்கு அறிமுகப்படுத்திய சூழலில் அதற்கு முன்னமேயே இரு தசாப்தங்களுக்கு முன்னால் விபுலானந்தரால் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் ஒப்பியல் இலக்கியத்தின் முன்னோடியாக அடிகளார் கொள்ளப்படுகிறார்.

       ஒழிபியலானது, தனஞ்சயனார் வடமொழியில் இயற்றிய நாடக இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்துக் கூறுகிறது. தனஞ்சயனார் பரத நூல், நாட்டிய சாஸ்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங்களையெல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தசரூபகம். இதனால் வடமொழி நாடக இலக்கணங்களை ஒழிபியலில் அறிமுகம் செய்ய முயற்சிக்கிறார் எனலாம். இதனைவிட தொல்காப்பியச் சூத்திர உரையினின்று எடுக்கப்பட்ட நாடகத்திற்குரிய அபிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்திற்கு பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல், அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன.

      எனவே இந்நூலை அடிப்படையாகக் கொண்டு விபுலாநந்தரின் நாடகப் பணியை நோக்குவோமாயின், தமிழில் நல்ல நாடகங்கள் தோன்ற வேண்டுமென்பதே அவரது முக்கிய நோக்கமாகும். அந்நாடகங்கள் நாடக இலக்கணங்கள் அமையப் பெற்றனவாகவும் சேக்ஸ்பியர் நாடகங்கள் போல் செம்மையாக அமைய வேண்டும் எனவும் அவர் விரும்பியிருக்க வேண்டும். இதற்கான ஆராய்ச்சியாகவே இந்த மதங்கசூளாமணி அமைந்து காணப்படுகின்றது. இன்று பல்கலைக் கழகத்திலும் பாடசாலைகளிலும் நாடகமும் அரங்கியலும் ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. நாடகக் கலையானது பல்வேறு தளங்களில் நமது சூழலில் தொழிற்படத் தொடங்கிவிட்டது. இந்தப்பின்னணியில் இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னரே மதங்க சூளாமணி எனும் நாடக ஆராய்ச்சியின் மூலம் இது பற்றி விபுலாநந்தர்  சிந்தித்திருப்பது தமிழ் நாடகக்கலையினை ஆராய்ச்சியின் மூலம் உச்ச நிலைக்குக்கொண்டு செல்வதே அவரது நோக்கமும் கடமையுமாயிருந்திருப்பது புலனாகின்றது.

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...