Sunday, May 5, 2019

உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது...

சுவாமி விபுலானந்தரின் சிந்தனைத்துளியொன்றை அடி நாதமாகக்கொண்டு இளைஞர்களை நோக்கி சில கருத்துக்கள்...


'உன்னிடம் இருக்கும் திறமையை நீ நினைத்துப்பார், எழுந்து நீ உன் ஞானத்தை வெளிப்படுத்து, உனக்குள் மறைந்திருக்கும் ஞானத்தின், அறிவின், சக்தியின் மகத்துவத்தை நீ உணர்ந்த அடுத்த நிமிடம், உலகம் உன்னிடம் வசப்படும்'  என இளைஞர்களைப் பார்த்து சுவாமி விவேகாநந்தரால்  குறிப்பிடப்பட்டபடி இளைஞர்களே இன்றையின், நாளையின் சக்திகள்.

சமூகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும்
இளைஞர்கள் பங்கு கொள்வது தவிர்க்க முடியாததாகின்றது. தான் சார் சமூகத்தின் நடத்தைகளில் அவர்கள் கணிசமான பங்கினை எடுத்துக் கொள்கின்றனர். கல்வி, சலாசாரம், விளையாட்டு, சுயதொழில், சமய வழிபாடு மற்றும் சமூக தலைமைத்துவ செயற்பாடு என எல்லாவற்றிலும் இளைஞர்களின் ஈடுபாடு தேவையாக இருக்கின்றது. இன்று எல்லோரும் எல்லா விடயங்களிலும் மாற்றம் தொடர்பில் பேசுகின்றோம். சமூகத்தின், நாட்டின், உலகத்தின் மாற்றம் என்பது அது இளைஞர்கள் கைகளிலேயே உள்ளது. அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவான முகவர்கள் என்ற வகையில் பூரண உள்ளாந்தமிக்கவர்களாக செயற்பட்டு தமது சமூகத்தை வழி நடாத்தவும் சேர்ந்து நின்று அடுத்த கட்டத்திற்கு சமூகத்தை கொண்டு செல்லவுமான உள பலத்தினை இந்தப்பொது வெளி வழங்குகிறதா? என்பது இன்றையின் பிரதான கேள்வியாகின்றது.

சிக்மண்ட் பிராய்ட் உளவியல் சார்ந்து மூன்று விடயங்களைக் குறிப்பிடுகின்றார். அவையாவன, உள்முனைப்பு உந்துதல் Id, தன்முனைப்பு உந்துதல் Ego, உயர் தன்முனைப்பு உந்துதல் Super Ego என்பனவாகும். உள்முனைப்பு உந்துதலானது அடிப்படை உணர்வின் வழி பெரும் ஆற்றலைக்கொண்டது. உள் முனைப்பின் முழுநோக்கம் இன்பம் அடைதலே (Pleasure  principle).  நன்மை, தீமை, அறம் போன்றவற்றை சிந்திக்காதது இது. இவ்வியல்புகள் மனித நனவிலியில் இருப்பவை.
மனித ஆளுமையை உருவாக்கும் அறிவாற்றல், செயலாற்றல், சோதனை செய்துபார்த்தல், மதிப்பீடு செய்தல், திட்டமிடல்,   தற்காத்தல் போன்றவற்றுக்குத் தன்முனைப்பே பொறுப்பாகும்.   ஒழுங்குபடுத்தப்பட்ட எண்ணங்களால் நம்மையும் உலகையும் புரிந்துகொள்ளச் செய்வது தன்முனைப்பு.  உள்முனைப்பும், சமூகப் புற நடவடிக்கைகளும் எதிரெதிராக இயங்கும் நிலையில் அவற்றைச் சமப்படுத்த அரும்பாடுபட்டுப் பதற்றங்களுக்குள்ளாவது தன்முனைப்பு. இது தன்னை முன்னிலைப் படுத்துவதாக அமையும்.

உயர் தன்முனைப்பு என்பது,  பெற்றோர்,  ஆசிரியர்கள்,  உயர் முன்மாதிரிகள் போன்றோர் போல மனத்தில் செயல்படும் இலட்சியப் போக்கு. எண்ணம், செயல் முழுச் சிறப்பாக அமைய வேண்டும் என வற்புறுத்துவது இப்போக்கு. முற்றிலும் உள்முனைப்பைக் கடிவது இது.   தவறான உணர்ச்சிகள், எண்ணங்கள் தோன்றினால் மனத்தைக் கண்டிப்பது உயர் தன்முனைப்பு.  இதனையே மனச்சாட்சி என்கிறோம். மனச்சாட்சியே குற்றவுணர்வைத் தோற்றுவிப்பது.

விலங்கு மனிதன், அறிவு வயப்பட்ட தனிமனிதன், பொதுநல நோக்கமுடைய சமூக மனிதன் என்ற படிநிலைக்குக் காரணமானவையே மேற்குறிப்பிட்ட உள்முனைப்பு, தன்முனைப்பு, உயர் தன்முனைப்பு ஆகியனவாகும். இந்த உணர்வு உந்துதல் மற்றும் தன் முனைப்பு உந்துதல் என்பன பல சமூகவியற்சிகல்களை உருவாக்கி விடுகின்றன.

தன்னைப்பற்றி மிகத்தாழ்வான சுய எண்ணக்கருவைக்கொண்டிருப்பவர்கள் தன்னுடைய திறன்களை மிக மட்டமாக மதிப்பிடுவதால், உணர்வெளிச்சியால் உருவாகும் தாழ்வுச்சிக்கலால்  தமது மனப்பான்மையை மூடி மறைப்பதற்கு ஆக்கிரமிப்பு, வன்முறை போன்ற தன்முனைப்பு பிரதியீட்டு நடத்தையில் ஈடுபடுகின்றனர். தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் பண்புகளால் மற்றையவர்களில் இருந்து வேறுபடும் சிலர், தமது தோற்றம், நடத்தைகள் மற்றவர்களில் ஏற்படுத்தப்படும் துலங்கலைப்பற்றி அக்கறை காட்டாமல் தமது உணர்வின் வழியே விசித்திரப்போக்கான நடத்தையினைக்கொண்டிருப்பர். நல்ல முறையில் மற்றவர்களின் கவனத்தைப்பெற முடியாத சிலர் சில தேவையற்ற குழப்பமான நடத்தைகள் மேற்கொண்டு தம்பால் கவனத்தை ஈர்க்கவும் முயற்சிப்பர்.

இன்னும் சிலர்,  தங்களது குற்றங்கள், தாழ்வுகள், பிழைகள் ஆகியவற்றை மறைப்பதற்கு மற்றவர்களில் புறத்தேற்றி அவர்களில் இத்தகைய குற்றங்கள் இருப்பதாகக்குறை கூறுவர். மேலும் சிலர், மற்றவர்களின் பரிதாபத்தைப் பெறுவதற்காகத் தம் நிலையை உண்மைக்குப்புறம்;பாகத்தாழ்த்திக்கூறி, மற்றவர்களின் பரிதாபத்தைப்பெற்று அதில் சந்தோசமடைவர். இத்தோடு பொய் பேசுதல், களவெடுத்தல், அமைதியின்மை, நம்ப முடியாத தன்மை என்பனவும் அறநெறி விருத்திகளில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. வன்செயல் நடத்தை தற்காப்பு நுட்பமுறையாகக் கருதப்படுகிறது. மனமுறிவுகள் ஏற்படும்போது அவற்றைச் சமாளிப்பதற்காக ஒருவர் வன்செயலில் ஈடுபடலாம். வன்செயல்கள் நேரானதாக, மறைமுகமான, இடம்பெயர்ந்ததாகவும் அமையலாம். சமூக தேவைகள் நிறைவேறாத பட்சத்தில் சமூக பொருத்தப்பாடுகள் அற்றவர்களாகவும் இவர்கள் காணப்படுவர். இளைஞர்களுக்கு குடும்பம் சகபாடிகள் ஆகியோரால் வழங்கப்படும் சூழல் இந்நடத்தைகளில் முக்கிய செல்வாக்கினைச் செலுத்துக்கினறன.

இவ்விளமைப் பருவத்தில் இளைஞர்கள் பல்வேறுவகையான பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. அத்தோடு இவ்விளமைப் பருவமானது உடல், உள, சமூக விடயங்கள் தொடர்பிலும் மிக முக்கியமான பருவமெனக் குறிப்பிடலாம். அத்தோடு சாதனைகள் புரியக் கூடிய வயதாக இவ்விளைமைப் பருவம் காணப்படுகிறது. இந்த வகையிலேயே உணர்ச்சி உந்துதலும் தன்முனைப்பு உந்துதலும் தொழிற்பட ஆரம்பிக்கின்றன. இவை உடல், உள. சமூக ரீதியாகவும் தாக்கம் செலுத்தும். இப்பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை தனது நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். சில வேலைகளில் நண்பர்கள் கொடுக்கும் பிழையான ஆலோசனைகளாலும், வழிகாட்டல்களாளும் முழு வாழ்க்கையும் பாதிப்புறும் அபாயமும் இருக்கிறது. அத்தோடு மனிதன் உடல், அறிவு, ஆன்மா என்ற மூன்றையும் கொண்டிருந்தாலும் கூட பெரும்பாலான இளைஞர்கள் உடலையும் அறிவையும் கவனித்து விட்டு ஆன்மாவை முற்றாகப் புறக்கணித்து விடுகின்றார்கள். இப்புறக்கணிப்பானது முழு வாழ்வையும் பாதிப்புறச் செய்யும். இவ்வாறான வற்றுக்குக் காரணியாக இளைஞர்களை மட்டும்  குறிப்பிட முடியாது. ஏனென்றால் இளைஞர்கள் வழிகாட்டல் பெற வேண்டியவர்கள். அத்தோடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருப்பவர்கள்.

இன்று தற்கொலை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 15- 29 வயது உள்வர்களில் தற்கொலையானது இறப்பிற்கான இரண்டாவது காரணமாகின்றது. மனவழுத்தம், இரு முனையப்பிறள்வு, மனப்பிழவு போன்ற உளவியல் தாக்கங்களில் மனவழுத்தமே தற்கொலைகளுக்கு பிரதான காரணங்களாகின்றன. 170 நாடுகளைக் கொண்ட உலக தற்கொலை தரவரிசைப் பட்டியலில், தென் அமெரிக்க நாடான கயானா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் முதலாம் இரண்டாம் இடங்களைப்பிடிக்க இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. உலக மயமாக்கலும் உயர் தொழிநுட்பமும் மனிதர்களை தனியன்களாக மாற்றிக்கொண்டிருக்கும் இச்சூழலில் இளைஞர்கள் சார்ந்து மிகத்தீவிரமாகச்சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில் சுவாமி விபுலானந்தரின் சிந்தனைகள் கவனிக்கத்தக்கன.

அடிகளார் கீழைத்தேய சிந்தனை மரபில் முனிவர்களதும், சித்தர்களதும், துறவிகளதும் ஒழுக்க வாழ்வியல்களிலும் சிந்தனைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இந்திய அல்லது தமிழர் வாழ்வியலின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டவர். இவர் தனது வாழ்வில் கடமையின் மூலமாக பல சாதனைகளைச் செய்தார். மனிதன் மனிதனாக வாழ்வதற்கு புலன் அடக்கமும், தியானமும் அவசியமென சுவாமி அவர்கள் அவரது கட்டுரைகள், கவிதைகள், நூல்கள் ஆகியவற்றினூடாக உணர்த்தியது மட்டுமல்லாது வாழ்ந்தும் காட்டினார்.

புலனடக்கத்தின் இன்றியமையாமை பற்றிக்குறிப்பிடும்போது துறவிகள் மட்டுமன்றி இல்லறத்தாரும், குறிப்பாக இளைஞர்களும் புலனடக்கத்தை மேற்கொள்வதால் ஏற்படக்கூடிய மாபெரும் நன்மைகள், புலன்வழி செல்வதால் ஏற்படும் மாபெரும் தீங்குகள், அழிவுகள் பற்றி நுணுக்கமாக பல கருத்துக்களை கூறுகின்றார். புலன்களை அடக்குவதன் மூலம் அரும் பெரும் சாதனைகளைச் செய்யலாம் என 'விபுலாநந்த உள்ளம்', 'விபுலாநந்த அமுதம்' எனும் இரு கட்டுரைத் தொகுதிகளிலும் உள்ள கட்டுரைகள் விசேடமாக உணர்த்துகின்றன. மனிதன் பௌதீக உலகில் வாழ்ந்து பௌதீக உலகு தொடர்பான விடயங்களை கருத்தியல் ரீதியாக உணர்வதற்கு புலனடக்கமும் தியானமும் முக்கியமான கருவிகளென சுவாமிகள் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார்.

ஆகவே இன்றைய சூழலில் இளைஞர்கள் தமது ஆன்மாவினைப்புடம் போடுகின்ற புலனடக்கம் மூலம் தனக்கும் தன்சார் சமூகத்திற்கும் அளப்பரிய நன்மைகளை வழங்க முடியும் என்பதே அடிகளார் தமது வாழ்வியலின் மூலம் உணர்த்தியிருக்கும் உண்மையின் தத்துவமாகும்.

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...