Sunday, December 4, 2022

கதிரவன் த. இன்பராசாவின் அப்பாவின் ஆரிராரோ

 


அழுகின்ற குழந்தையை அரவணைத்து அதனை மடியில் போட்டு தாலாட்டி தூங்க வைக்கும் மரபு தமிழ்ச் சமூகத்தில் தொன்று தொட்டு வந்த மரபாகும். குழந்தையை கையில் எடுத்துக் கொள்ளுவது, மடியில் போட்டுக் கொண்டு தூங்க பண்ணுவது, காலில் போட்டுக் கொண்டு நீராட்டுவது என்று அம்மாவின் அண்மை அதற்கு ஓரு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.

இருவர் கொள்ளும் காதலைவிட, உடன் பிறந்தவர் கொள்ளும் வாஞ்சையைவிட, நாடு இனம் மொழியிற் படியும் பற்றுதலை விட ஏன்-உலகளக்கும் அருளினையும் விட பிள்ளைப் பாசமே ஆழமானது, வலிமை மிக்கது, உணர்ச்சி மயமானது! இத்தகையை தாயும் சேயும் என்கின்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலைதான் தாலாட்டு. இன்றைய நிலையில் தாய்மார் பாடக்கூடிய சூழல் அமையாததும், பாடத் தெரியாததும், தொட்டில் கட்டும் பழக்கம் இல்லாததும், குழந்தையின் நித்திரைக்கு வேறுவிடயங்களைப் பரிச்சயமாக்குவதும், அது தானாகவே உறங்குவதும், ஆங்கிலக் குழந்தைப் பாடல்களின் தாக்கங்களாலும் நம் தாய்மொழியின் தாலாட்டுகளின் பயன்பாடுகள் குறுகிவிட்டன. இயந்திர வாழ்கையின் அவசர ஓட்டத்தில் உணர்வுகள் பதுங்கிக்கொள்ள, ஆடம்பரமும் பொருளியல் வளமையும் மட்டுமே முன்நிற்கின்றன. அன்பு, பாசம், நேசம் போன்றவை தூரமாய் விலகி நிற்கின்றன. இக்காலத்தின் தேவையுணர்ந்து நமக்குக் கிடைத்திருக்கிறது. கதிரவன் .இன்பராசா அவர்களின் அப்பாவின் ஆரிராரோ.

தானாக வந்தமையும் எதுகை மோனையும், நினைக்க இனிக்கின்ற இலக்கிய நயங்களும், வாழ்க்கையில் தோய்ந்த அனுபவ முத்திரைகளும், தமிழின் கலைபண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த நினைக்கும் தார்மீக ஏக்கமும், நிலைத்த உண்மையும், பழகு தமிழிலே உவமை உருவங்களை தரும் ஆற்றலும், நல்ல சொல்லாட்சியும், தடையில்லா நடைப்பெருமையும் கொண்ட ஒரு இலட்சியத் தந்தையின் தாய்மை தரும் தாலாட்டுத்தான் கதிரவன் .இன்பராசா அவர்களின் அப்பாவின் ஆரிராரோ.

ஆராரோ ஆண்டவனே ஆனைமுகப் பிள்ளையாரே

ஆராரோ ஆண்டவனே அருள்தருவாய் பிள்ளையாரே

(ஆராரோ ஆண்டவனே)

முழுமுதற் பொருளே எந்தன் முக்கண்ணன் புத்திரனே

பழுதொன்றும் வாராமல் பாலகனைப் பார்த்திடுவாய்

(ஆராரோ ஆண் டவனே)

சளி இருமல் தொற்றாமல் சனிதோசம் பற்றாமல்

வழிபடுவோம் விநாயகனே வந்து வரம் தந்திடுவாய்

பிள்ளையாரே காப்பாமே எனப் பிள்ளையார் காப்புடன் தொடங்குகின்றன இந்த தந்தையின் தாலாட்டுப்பாடல்கள். மலை மீதிருந்து பாயும் வெள்ளருவி போல, மணல்வெளியில் மதிவார்க்கும் நிலவொளி போல, தேன் பிலிற்றும் பூக்கள் போல, இனிமைதரும் தென்றல்போல, உள்ளங்கவரும் இசையாக ஒரு தந்தையின் தாயுள்ளத்தின் ஊற்றாகின்றன இந்த தாலாட்டுப்பாடல்கள்.

மனிதன் பார்ப்பவை, கேட்பவை அனைத்தும் மூளையில் பதியமிடுகின்றன. எத்தகைய பதிவாக இருப்பினும், பதிவு மனித உடற் கூற்றின் இயற்கை, வெளியீடுகள் மனிதப் பண்பின் வேறுபாடுகளால் வருகின்ற விளைவே ஆகும். அந்த விளைவை சரியான முறையில் எவ்வாறு உருவாக்குவது? என்பது ஒரு பெருங்கேள்வி. குழந்தைப் பருவத்தில் பதிவுகள் எளிதாகப் பதியும் தன்மை வாய்ந்தவை. அதுவும் பாதி உறக்கத்தில் இருக்கும்போது கேட்கும் கருத்துகள் ஆழமாகப் பதியும் சக்தி வாய்ந்தவை. தாலாட்டின் இசை, உறக்கத்திற்கு உதவுவது போல் பிஞ்சு மனத்திலே வளமான எண்ணங்களைப்பதியமிடுவது எவ்வாறு என்ற எண்ணத்திலேயே கதிரவன் . இன்பராசா அவர்கள் இப்பாடல்களை உருவாக்கியிருப்பதாகத் தெரிகிறது.

புத்த பகவானின் சித்தம் குளிர்ந்ததினால்

இத்தரையில் வந்துதித்த இதயமே! கண்ணுறங்கு

(ஆலயங்கள் ....)

ஆதி அந்தம் இல்லாத ஆண்டவனார் ஆதிசிவன்

நீதியாக தந்த வரம் நிம்மதியாய் கண்ணுறங்கு

(ஆலயங்கள் ....)

பள்ளிவாசல் உள்ளே சென்று பக்தியுடன் சிரங்கள் சாய்த்தேன்

அல்லாஹ்வின் நல்லருளால் அகிலத்தில் வந்துதித்தாய்

(ஆலயங்கள் ....)

காணிக்கை அள்ளிப் அள்ளிப் போட்டேன் கருணை ஈர்ந்து ஜேசுபிரான்

காணிக்கையாக தந்த கற்பகமே! கண்ணுறங்கு

என தூரிகை மையதை கன்னத்திலிட்டு தூரத்து நிலவதில் தூளிகட்டி காற்றைத் துணையாக்கி தாலாட்டும் தந்தை, மதம் கடந்த உணர்வைத் தன்குழந்தைக்கு இசைப்பாலாய் ஊட்டி வளர்க்கிறார். அன்னைத் தமிழையும் நந்தவனப் பூக்களையும் நல்லிசையாய் அறிமுகப்படுத்துகிறார். கண்ணூறு கழிப்பதையும் கடந்தகால நனவிடை தோய்தலையும் தன்குழந்தைக்கு பெருங்காட்சியாய் சொல்லிக்கொடுக்கிறார்.

மட்டுநகர் வாவி... மெட்டுக் கட்டி பாடுதையா...

கட்டழகே! கண்ணுறங்கு.

வங்கக் கடல் அலைகள் ... தங்கத் தமிழ் பாடுதையா...

சிங்காரமே...! கண்ணுறங்கு..

தென்றல் காற்று வீச... தேமதுரைத் தமிழ் பாடும்

கன்றுகுட்டி கண்ணுறங்கு....

விண்மீன்கள் கண் அடிக்க வெண்ணிலா பா படிக்க

கண்ணாளா...! கண்ணுறங்கு

வான் முகில் கூட்டங்களும் ... வான் உயர்ந்த குன்றுகளும்

தேன் தமிழ் பாடுதையா..

இதயத்தை நெகிழ வைக்கும் வாழ்வியலை, நிலவியலை வரலாற்றைப் புரியவைக்கும், இந்த இயற்கையின் தாலாட்டு எனும் கதிரவனின் தாலாட்டு காலத்தை வென்றது. அழும் குழந்தையும், அதைத் தூங்க வைக்க இசைபாடும் ஓர் அன்புக் குரலும் இருக்கும் வரையில் அழியாத்தன்மைக் கொண்டது தாலாட்டாகும். அதற்காகத்தான் அவரும் அங்கலாய்க்கின்றார். தாலாட்டின் பண் 'நீலாம்பரி' ஆகும். தாலாட்டு என்பது, 'தால்' என்றால் நாக்கு 'ஆட்டுதல்' என்பது அசைத்தல், அதாவது, நாவினை அசைத்து, சுழித்து, குரவையிட்டு, ஆட்டிப் பாடுதல் எனப்பொருள்கொள்ளப்படுகிறது. 96 வகைத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் பாற்பட்ட இத்தகைய தாலாட்டுப்பாடல்களின் தொன்மையை சங்க இலக்கியத்தில் புறப்பாடலாக விளங்கும் பரிபாடலின் 'வரையழி வாலருவி வா தாலாட்ட'எனும் பாடல் வரிகளினூடாக அறிகிறோம்.

தாலாட்டின் பொருண்மையுணர்ந்து அப்பாவின் ஆரிராரோ பல அற்புதங்கள் நிகழ்த்துகின்றன. நேர்த்திபல வைத்தேன், வரமே என் வரமே, அறுசுவைக் கனியே போன்ற தாலாட்டுப் பாடல்களில் அன்பு, உணர்ச்சியின் ஆழம், இறைசிந்தனை, நேர்த்திக்கடனின் உளவியல், தாயன்பின் மகத்துவம் பழங்கள் பற்றிய பசுமையான நினைவுகளுடன் பாச உணர்வுகளும் பளிச்சிடுவதையும் கற்பனைச் சுவையும் கவிதையழகும் பட்டாம்பூச்சியாய் வட்டமிடுவதையும் காணமுடிகின்றது.

குழந்தையின் கவனத்தைத் திருப்பி ஒருநிலைப் படுத்தி அழுகையை நிறுத்த விரும்புவோர் முதலிற் குரலைப் பயன்படுத்துதலையும் பின்னர், கைகால்களை அசைத்து முகக்குறி காட்டுதலையும் காண்கிறோம். அழுங்குழந்தையை அடக்க முயலுங்கால் தம்மையும் மறந்து '' '' றூ வென சிலர் இரைவதைக் காண்கிறோம். சில சமயங்களில் இவ் இரைச்சலைக் கேட்கும்போது, குழந்தை அழும் ஒலியையே பொறுத்துக் கொள்ளலாம்போல் தோன்றும் நமக்கு...

றூ... றூ.... றூ... பாடமாட் டேன் ... றேடியோவும் போடமாட் டேன் ..

உஞ்சு உஞ்சு சொல்லமாட்டேன் .உயிரே..! நீ கண்ணுறங் கு

இருகால் நீட்டித்தலை... அணைபோட்டு அதன்மேலே...

திருவே! உனை வளர்த்தி.... தமிழ் பாட்டு நான் படிப்பேன்

 இசைகுறித்து, தலாட்டின் உளவியல் குறித்து பிரக்ஞை பூர்வமாக சிந்திப்பதோடு அதன் நுண்மையினை அனுபவ ரீதியாகக் கண்டமையுமே இவ்வாறு கவிஞரை தாலாட்டு பாட எனும் இந்தப் பாடலைப்பாட வைத்திருக்கிறது. கண்படும் கண்மணியே எனும்பாடலும் அன்பால் அரவணைக்கிறது. இன்றைய தனிக்குடும்ப வாழ்வின் அவலங்களை நேரடியாகக் கூறாமல் உறவுகள் சேர்ந்திருக்கும் மகத்துவத்தை உறவுகளோடு நீ உறங்கு எனும் தாலாட்டு நேர்முறையாகக் கூறிநிற்கின்றது.

'குழப்பமூட்டும் சொற்களால் வசீகரிக்கப்பட்டவர்கள் குழப்பமூட்டும் வரிகளை எழுதுகிறார்கள். நான் எளிமையால் வசீகரிக்கப்பட்டவன். எனவே எளிமையாக எழுத முயல்கிறேன் 'தெளிவுற அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்' என்பது நமது மகாகவியின் வாக்காகும். இந்த வார்த்தைகளுக்கேற்றாற்போல், குழந்தை பற்றிய வருங்காலப் பார்வை, குறிக்கோளுடைய உயர்ந்த சிந்தனைகள் ஆகியவற்றைக் மிக எளிமையாக மிக அழகாகத் தந்திருக்கிறார் கவிஞர். எங்கேயும் தானும் குழம்பவில்லை, மற்றவர்களையும் குழப்பவில்லை. பிள்ளைச் செல்வம், சித்திரமே நித்திரை செய் எல்லாமே இனிதான தாலாட்டுக்கள்.

குழந்தைப் பருவத்தில் பாடும் தாலாட்டில், 'இசை' உறக்கத்திற்குப் பயன்படுவதுபோலவே 'இயல்' உள்ளத்திற்குப் பயன்படுகிறது என்பதை உளநூல் விளக்குகிறது. தமிழையும் தமிழ் நிலங்களையும் ஆன்றோர் அறிவுரையும் அன்புக்குழந்தைக்கு மட்டுமல்ல நமக்கும் நல்ல தாலாட்டுக்கள்தான்.

நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ இதமாய்

பேர் இதமாய் ஓர் தந்தை மொழி மயில்தோகையாய்

இவன் வாசனை தாயாகிடும் ஆண் தேவதை அன்பின்

உயரம் உருவம் தாயுமானவன்

பேர் இதமாய் ஓர் தந்தை

மொழி உலகை இந்த உலகை

அறிமுகம் செய்யும் ஒருவன்

ஒளியாய் வழி துணையாய்

விரல் பிடித்திடும் தலைவன்

பிழையை நம் பிழையை திருத்திடும்

ஒரு கவிதை தந்தை உன் நிழலில்

தாயாக மாற முயல்வாய் பல நேரம்

உன்னை மீறி அடைவாய் பிள்ளை என்னும் வேடம்

தாய்பட்டம் நெஞ்சோடு சுமக்கும் தந்தையே

மடியே இவன் மடியே மரகத தலையணையே

மழலை தன் மழலை குறும்பினில் இவன் நகலே

விடியல் புது விடியல் கொடுத்திடும்

கதிரவனே கண்வளரும் கதைகளை கதைப்பவனே

தன் கண்கள் ரெண்டால் பால் ஊட்டும் அன்னை

உயிர் தந்து தனை தந்திடும்

தந்தைக்கிணையில்லை

இது கதிரவன் .இன்பராசாவுக்கு எழுதிய பாடலாகவே தெரிகிறது. ஆக்கினைகள் செய்யக்கூடா, அழகுக்குட்டி, அழுதிடாம நித்திரைசெய், கதைகேட்டு கண்ணுறங்கு, தொட்டில்கட்டித் தாலாட்ட, பேரழகே, ஆன்றோர் அறிவுரையில், நவமணியே, வித்தகர் பாதையிலே என தாலாட்டுக்கள் தாலாட்டுக்களாக மட்டுமன்றி அறிதுயிலில் ஒருவகை கிம்நாட்டிச உறக்கத்தில் நல்லபல விடயங்களைப் புதைப்பதாகவே அமைந்துள்ளன.

கொத்துக் குள்ள மாம்பழம் போல்

கொரோனாவில வீட்டுக்குள்ள

பத்திரமாய் இருந்த எங்கள்

பாலகனே கண்ணுறங்கு

முகக் கவசம் 'சனனிட்டெடெய்சர்

முடிந்தவரை ஒரு மீற்றர் அகம் புறம் தூய்மையால

அழகா..! நீ பிறந்தாய்

என ஒரு காலத்தின் கண்ணிகளையும் அதைக்கடந்த விதத்தையும் பாடுகிறார். தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே என தாலாட்டுப் பாடும் இத்தந்தையின் அன்பினைச் சொல்லத்தோன்றுகிறதல்லவா? மரம் நடுதலின் முக்கியத்துவத்தினையும் பண்பாட்டுப் பயில்வின் தேவைகுறித்தும் ஆரிராரோ மெட்டிலே ஆழகாகக் தந்திருக்கிறார். மகாபாரதம் ஆழமாகக் கற்றவர்களுக்குத் தெரியும் விதுரரின் வகிபாகம். விதுரநீதி, விதுர வாசகம் கதிரவன் மகன்பேரால் நம்மனதிலும் பதிகிறது.

அன்புத் தூளியிலே அணைத்த கரங்களுக்குள்

தாய்மையைக் கண்டேனே தந்தையும் தாலாட்டுகையில்

இரவின் மடியினில் இதமான துயிலினை

இரசித்த நினைவுகள் இன்பத்தின் உயிர்ப்பில்

வீரத்தின் சாயலை நாமத்தில் நினைவூட்டி

விருப்புடன் கற்றிடவே  விதையுமானார் வாழ்வினிலே

பாசத்தை ஒலியாக்கி பாதைக்குள் வழிகாட்ட

சிந்திய வாசனை குன்றவில்லையே நெஞ்சுக்குள

'இது கதிரவன் . இன்பராசா எனும் அன்புத் தந்தையின் தாலாட்டு


1 comment:

  1. நன்றி அண்ணா மிகவும் சிறப்பான நயவுரை

    ReplyDelete

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...