Tuesday, March 16, 2021

வாழ்வில் நமக்குத் தெரிந்த ஒன்றின் மூலம் தெரியாத ஒரு அற்புதத்தை ஆழ்மனதில் உருட்டிவிட்டுப்போகும் தன்மையுடையவை ஆ.மு.சி.வேலழகன் அவர்களது வார்த்தைகள்


எங்கோ ஏதோ ஓர் குழந்தை துயருறுகையில் தம் பிள்ளைகளை இழுத்து  கட்டியணைத்துக் கொள்வது ஒவ்வோர் தகப்பனின் ஒவ்வோர் தாயின் அனிச்சை மற்றும் எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல். வன்முறை மிகுந்த வாழ்வில் எளியதைப் பற்றிக்கொண்டு அல்லது எளியதன் அழகில் மெல்லிய உணர்வுகளின் வழி கிறங்கி வாழச் சொல்லி அழைப்பவை ஆ.மு.சி.வேலழகன் ஐயாவின் எழுத்துக்கள். இயல்பாய் இரு, சுயசிந்தனையுடன் இரு என்பது அவர் எழுத்துக்களில் வெகுவாய்த்தொனிக்கும், வார்த்தைகளை மீறிய நாதமாக ஒலிக்கிறது. சிக்கலற்ற மொழியும், நனவோடை உத்தியும், நாம் வாழத்தவறி நடுவீதியில் கிடத்திவிட்டுச் செல்லும் அன்றாடத்தைப் புதிதாகத் துலக்கி வைத்து சக மனிதர்களை நேசத்தோடு வாழச்சொல்லி அழைக்கும் எழுத்துக்கள் ஆ.மு.சியினுடையது.

"அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்"

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதமாகவும், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டையாகவும் திகழ்கிறது என்கிறார் திருவள்ளுவர்.

அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை. அது சிறியதோ, பெரியதோ, கசப்போ, இனிப்பாகவோ இருக்கலாம். இலைகளை, பூக்களை, ஏன் அசுத்தங்களைக்கூட எவ்வித பாகுபாடின்றி சுமந்து செல்லும் நதியைப்போலத்தான் வாழ்க்கை எனும் நெடுங்கதை அமைந்துவிடுகிறது. ஆனால் ஆறிவாகிய அரண் நம்மைச்சூழ இருக்கும்போது தக்கது இது தகாதது இது என்று பகுத்துணர்வு இருக்கும் போது அன்பால் அந்த வாழ்வு நிறையும் போது, புரிந்துணர்வுடன் உறவுகளை அரவணைக்கும் போது ஒரு அழகிய வாழ்வு சாஸ்வதமாகிறது.

குறுங்குழுவாதமும், சாதிய வாதமும் இன முரண்பாடுகளும் பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கும் தற்காலச் சூழலில், தார்மிக அறம் பேசுபவர்களை ஒழித்துக் கட்டப்பயன்படும் நுட்பமான கள்ள மௌனங்களும், நிராகரிப்புகளும் நிறைந்த விசச் சூழலை எதிர்கொள்வதற்கு ஆதரவு நிறைந்த வார்த்தைகள்,  கடந்த காலத்தின்  அழகான படிமங்கள், வாழ்ந்த முறையின் நனவிடை தோய்தல் என மனதில் எழும் ஒரு பேரலையை எல்லோரையும் தழுவக்கூடிய வார்த்தைகளால் உருவாக்கியிருப்பதுதான் அறிவற்றம் காக்கும் கருவி.

திருநாவுக்கரசு எனும் இளைஞன் கொழும்பில் சென்று தனது மணிபர்சை ஓட்டோகாரனிடம் இழந்து தடுமாறுதலுடன் ஆரம்பித்து அதன் பின்னணியில் தொடரும் ஒரு உறவையும் அதனால் திருநாவுக்கரசுவின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும் ஒரு மெல்லிய புன்னகை தடவி கடல்போன்ற அன்பால் நிறைத்து ஆ.மு.சி அவர்களால் தந்திருக்கும் படைப்பே இந்நாவலாகும்.

யதார்த்த நாவல்  எனும்போது ஒரு தட்டையான கதைசொல்லும் முறைமை அமைந்துவிடுகிறது. அதனையும் வென்று இங்கே நம்மை கதையோடு பயணிக்கப்பண்ணியிருக்கும் ஐயாவின் எழுத்துக்கொண்டிருக்கும் ஆற்றல் அவரது 50 ஆண்டுகால எழுத்துத் துறைசார் அனுபவத்தினடியாக வந்திருக்கவேண்டுமென நினைக்கிறேன்.

இது பதினோராவது நாவலாகும். பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் குறிப்பிடுவது போல் சிழக்கிலங்கை நாவல் செல்நெறியில் ஒரு திருப்பமாகவே நான் இதைப்பாரக்கிறேன். கார்ல் மாக்சையும் ஏங்கல்சையும் லெனினையும் அறிமுகப்படுத்துவதற்கு பிரசாரத்தன்மை வாய்த்த மொழி தவிர்க்க முடியாததாகிறது. மக்சீம் கார்க்கியின் தாய் நாவல் படிப்பவர்கள் இத்தன்மையினை வெகுவாக உணர்வார்கள். பாட்டாளிவர்க்கப் போராட்டத்தை படைப்பிலக்கியத்தில் கொண்டுவந்தவர் மக்சீம் கார்க்கி. 'இழப்பதற்கு அடிமைத்தனத்தைத் தவிர வேறு ஏதும் அற்றவர்கள் நாம்' என்கின்றன அதில் வரும் பாத்திரங்கள். புரட்சிகரமான போராட்டத்தை வழிநடத்தும் கதைதான் தாய்  நாவலின் மையம். இன்று உலகின் பல பல்கலைக்கழகங்களால் பரிந்துரைக்கப்படும் தாய் நாவலை எழுதிய கார்க்கி, பள்ளிக்கூடமே சென்றதில்லை. உண்மையில் தான் எவ்வாறு படிக்கப்பட வேண்டும் என ஒரு புத்தகத்தினை காலம்தான் தீர்மானிக்கிறது. அறிவற்றம் காக்கும் கருவி நாவலைப் படித்தவுடன் மனதில் ஏற்படும் வெறுமையை நிரப்ப கண்களும் மனதும் புற உலகை தீராத ஏக்கத்துடன் பார்க்கிறது ஆக இந்தக்கதை சமகால வாழ்வின் நிறைவேற்ற முடியாத ஆனால் நிறைவேற்ற ஆசைப்படுகின்ற வாழ்வின் பக்கங்களைத் தழுவிச் செல்கின்றது. நமது அக உலகில் அதை புரிய வைக்கும் மொழியை இயல்பாய் பயன்படுத்தியிருக்கிறார் வேலழகன் ஐயா அவர்கள்.

வெற்றிமாறனின் அசுரன் திரைப்படம் வந்த பிற்பாடு பூமணியின் வெக்கை நாவல் வாசித்திருந்தேன். படத்தில் காட்டியவாறு இக்கதையில் ஆக்ரோசங்கள், வெறித்தனங்கள், எதிர்பாராத திருப்பங்கள் என எதுவும் நாவலில் இல்லை. கதை எளிமையான நேர்கோட்டிலேயே பயணிக்கிறது. 1982 ம் ஆண்டு எழுதப்பட்ட நாவலுக்கு 2019 ல் மிகப்பெரிய வரவேற்பு என்றால், முழுக் காரணமும் 'அசுரன்' திரைப்படம் மட்டுமல் அதன் யதார்த்தப்பண்புமாகும். கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகின்றார், நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது. ஆ.மு.சி வேலழகன் ஐயா அவர்களது நாவலும் அது கொண்டிருக்கும் குறிக்கோளும் முக்கியமானவை. கலாநிதி சி. சந்திரசேகரம் அவர்கள் குறிப்பிடுவது போல் மக்களின் வாழ்வியலை, பண்பாட்டம்சங்களை, மண்வாசனையை, அவர்களது மொழியை வெளிக்கொண்டுவருகின்றன இவரது நாவல்கள். 

இந்த உலகத்தில் அரசியல் தீமைகளினால் குறைவாகவும், சுயமாக உருவாக்கிக் கொண்ட அல்லது ஏற்றுக்கொண்ட தீமைகளினால் மிக அதிகமாகவும் துன்பத்திற்குள்ளாகின்றோம். விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் போல் மூட நம்பிக்கைகளும் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. மூட நம்பிக்கைகளை மீறுவதன் வாயிலாக உருவான முரணியக்கம் இந்த நாவலில் தனித்தன்மையாக நீடிப்பதை அவதானிக்கமுடிகிறது. இக்கதையில் வருகின்ற சாத்திரியாரும் பூசாரியாரும் யதார்த்த வாழ்வில் நாம் சந்திக்கும் வகைமாதிரிப்பாத்திரங்களே. 

கதையில், அப்பாவுக்கும் மகனுக்குமான பாசம், அம்மாவுக்கும் மகனுக்குமான பாசம், ஆரியதாசவிற்கும், திருநாவுக்கரசுக்குமான உறவு, அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என கச்சிதமான குடும்ப பாசங்கள் புத்தகம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. மேலும் குடும்பங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது என இப்படி ஒரு அழகிய வாழ்வா என அங்கலாய்க்கச் செய்கிறது. வாழ்வின் அவசர ஓட்டத்தின் முன் நகர்தலை தடுத்து சொற்களில் இளைப்பாற வைத்தும், வாழ்வின் பிடிமானத்தை நம்முள்ளும் கடத்துவதில், சொற்களை, அது எடுத்துத் தரும் வாழ்வியலை விதை நெல்லைப்போல் கையாள்வதில் இவருக்கு நிகர் இவரே.. தான் பார்த்த மெல்லிய மனதின் கணங்களை நம்மையும் காண வைக்க இவர் நீட்டும் ஆள்காட்டி விரலே இந்தக்கதையாக உருப்பெற்றிருக்கிறது.

ஆரியதாசவின் தங்கை மனோகரியை திருசாவுக்கரசுக்குப் பேசுவதும் ஆரியதாசவிற்கு செல்வி நாசிரா முஸ்தபாவை மணமுடிக்கத் தீர்மானிப்பதும், வேலழகன் ஐயா நிற்கின்ற அந்த அதிசயவெளியை நமக்குச் சுட்டிக்காட்டி நிற்கின்றன. வெளியிடங்களில் செல்லும் போது எவ்வாறு கவனமாக நடந்துகொள்ள வேண்டுமென்பதும், மூட நம்பிக்கைகள் களையப்பட வேண்டுமென்பதும், அதாவது தன் அறச்சீற்றத்தை திருநாவுக்கரசுவிடம் வார்தைகளாய் மாற்றிக் கொடுத்து எறிய வைப்பதும், இயல்பான கிராமங்களின் தோற்றத்தை அப்படியே வரைந்து காட்டியிருப்பதும், சாதி, இன, மத வேறுபாடுகள் புரிந்துணர்வின் அடிப்படையில் அணுகப்படவேண்டும் என்பதும் மாச்சியம் என்பது கொள்கை என்பதற்கப்பால் ஒரு வாழ்வியல் என்பதையும் ஒரு அழகான கதையாகத் தந்திருக்கிறார். வேலழகன் ஐயா அவர்கள்.

ஓர் எழுத்தாளனின் வலிமை, தன் எழுத்தின் வழியாக ஒரு தரிசனத்தைத் தருவது. ஆ.மு.சி ஐயாவுக்கோ எழுத்தில் நிரூபணங்கள் தேவையில்லை. தன் பக்கம் என்று எதையுமே அவர் வைத்துக்கொள்வதில்லை. யதார்த்த எழுத்தின் தமிழின் விரிந்த பரப்புக்குள் எப்போதும் மிக முக்கியமான ஒருவராகத் தன்னை கவனஈர்ப்புச் செய்கிறார். தனது தொடர்ச்சியான எழுத்தியக்கத்தின் மூலம் மனித மனங்களின் மெல்லிய பக்கங்களைத் தனக்கே உரித்தான பாணியில் எழுதிவருகிறார் என்பதற்கு அத்தாட்சியாக அறிவற்றம் காக்கும் கருவி நாவல் திகழும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக ஒரு தத்துவசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் அந்த எழுத்தின் உள்சரடாக ஓடுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.

ஜென் குரு ஒருவர் சீடர்களைப்பிரியும் தறுவாயில் ஆசைப்பட்டு ஓர் இனிப்புப்பண்டம் வாங்கி வரச் சொல்லி உண்டு முடித்த வேளையில் அவரது சீடர்கள் கேட்டிருக்கிறார்கள். 'குருவே, இறுதியாக ஒரு சொல்லை அளியுங்கள்' என. குரு சொன்னார், 'அப்பா! என்ன ருசி!' ஆம்! ஆ.மு.சி ஐயாவின் எழுத்தில் நாம் கண்டுகொள்வதும் அதுதான். வாழ்வின் மீதான பூரண ருசி. சூழ்நிலைகளில் பாத்திரவார்ப்புகளில் அவற்றின் உணர்ச்சித் தீவிரங்களில் சொல்லாமலே உணர்த்தும் நளினம் கதை முழுவதும் இயல்பாகவே இருக்கும். நனவோடை மன ஓட்டம், சுயஅமைவு கதையோட்டத்தின் கூட்டமைவுக்கு உயிர்ப்பாக உள்ளன. அருவியை விடவும், சுத்தமாக்கவல்லன இந்நாவலில் தெறித்துவிழும் வார்த்தைகள். வாழ்வின் நுட்பங்களை ஞான உபதேசங்களாக வாசிப்பதைவிடவும் வாழ்ந்து கண்டவரின் நாக்கிலிருந்து கிடைக்கும் போதுதான் நெருக்கமாக இருக்கிறது. அது நமக்கு இங்கே இந்த நாவலில் கிடைக்கிறது.


க.மோகனதாசன்

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...