Sunday, March 7, 2021

அவர் எடுத்துத்தரும் அர்த்தமும் அதன் தத்துவமும் ஒரு கனவினை, ஒரு அழகிய வாழ்வினை வாழும்படி கை நீட்டி அழைக்கின்றன.

(ஆரையூர் அருள் அவர்களின் "வில்லடிப்பாட்டு" நூலுக்கான நயவுரை)


வில்லுப்பாட்டானது மக்களின் அகத்திலெழும் உணர்ச்சிகளோடு ஒன்றி வளரும் கலையாகக் காணப்படுகிறது. நாடகத்தன்மை மிகுந்த நிலையில் கதை கூறலில் இது உருவாக்கித் தரும் பயன்பாடுகள் பலவாகும். மரபு வழிக் கதைகள் முதல் இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலைகள் வரை வாழ்வியலை அதன் தத்துவத்தை எளிதாகக் கூறும் வல்லபம் வாய்ந்தது வில்லுப்பாட்டு. தமிழுக்குத் தனித்துவம் வாய்ந்த இலக்கிய வடிவமாகவும் ஆற்றுகை வடிவமாகவும் வில்லுப்பாட்டு இலங்குகின்றது. இதனால் மிகச்சிறந்த கதைக் கூற்றரங்கு (Narrative Theatre) என்ற நிலையை வில்லுப்பாட்டுப் பெறுகிறது.  மக்களையும் கதையின் போக்கினூடே ஒன்றவைத்துக் கதை கூறும் வடிவமாக, எந்தக் கால அளவுக்குள்ளும் ஒரு கதையினைப் படைத்துக்காட்ட ஏற்ற நாடக வடிவமாக இது திகழ்கிறது. ஆக நம்மோடு இயல்பாக உரையாடக்கூடிய தன்மை வில்லுப்பாட்டுக்குள்ளது. இந்த சாத்தியங்களைக் கருத்தில்கொண்டே, தமிழின் மகத்துவங்களை பண்பாட்டின் நடுவழியில் தவறவிடப்பட்ட வாழ்வை மீள கொணரும் வேட்கையில் பல்கலை வித்தகர் மூ.அருளம்பலம் ஐயா அவர்களால் காலத்தின் தேவைகருதி உருவாக்கப்பட்டிருக்கிறது 'வில்லடிப்பாட்டு' எனும் இந்நூலாகும். இந்தப் புத்தகம் ஆ.மு.சி. வேலழகன் ஐயா அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. 36 புத்தகங்களை உருவாக்கி தமிழன்னைக்கு ஆரமாகச் சூட்டியிருக்கும் அந்தப் பெருமகனாரை நாமும் தலைவணங்கி நிற்கின்றோம்.

ஸ்ரீ நாகலிங்கேஸ்வர ஆலய பிரதமகுரு அருமையான ஆசியுரையினை வழங்கியிருக்கிறார். 'இன்பமுடன் கவிபாடி ஏற்றமதை தருவான் இலகுதமிழ் மொழியின் இருப்பிடமானோன்...' என்ற அரையூர் அருளம்பலம் ஐயா பற்றிய அவர் வார்த்தைகள் சத்தியமானவை. ஏனெனில் அவர் தமிழின் தனித்துவமும் எளிதான நடையும் சம்பவங்களை கோர்த்து சுவாரசியமாகக் கதை சொல்லும் முறையும் தற்காலத்திய கதை சொல்லிகளில் இருந்து அவரை தனித்துக் காட்டுகிறதெனலாம். குகநாதன் வழங்கியிருக்கும் வெளியீட்டுரையில் சமகாலத்தில் வில்லுப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து உரையாடுகின்றார். கரிய பெரிய மேகம் ஒன்று திங்களை விழுங்கி இறுமாந்து நிற்கிறது. ஆனாலும் அந்த ஏழைத்திங்கள் அந்நிலையிலும் தன்னாலான ஒளியை உலகிற்கு அளிக்கவே செய்கிறது. நாம் காலனித்துவத்தில் இழந்தவை அதிகம், இன்னும் மிஞ்சியிருப்பவையாவது பாதுகாப்போம் என்ற ஏக்கம் அந்த வார்த்தைகளில் தொனிக்கிறது. அந்த ஏக்ததிற்கு தன்னாலியன்ற நிவாரணம் வழங்க முற்பட்டிருக்கிறார் அருளம்பலம் ஐயா அவர்கள்.

பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் தமது அணிந்துரையில் குறிப்பிடுவது போல் முதன்முதலில் கிழக்கிலிருந்து வெளிவரும் வில்லிசைப்பாடல்களின் தொகுப்பும் ஆய்வும் கொண்டமைந்த நூலாக இது திகழ்வது மேலும் சிறப்பாகின்றது. 'இன்றைய கல்விச்சூழலில் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் போதிக்கவல்ல வாய்ப்பான கலைவடிவம்' இதுவென அவர் கூறும் வார்த்தைகளுக்குப் பின்னே, சமகால உலகமயமாக்கல், உயர் தொழிநுட்பப் பயங்கரங்களை வெற்றிகொள்ளும் சாத்தியத் தன்மைகளை இவ்வாறான கலைவடிவங்கள் கொண்டிருப்பதான முன்மொழிவுகள் பலமாகத் தொனிக்கின்றன. உண்மையில் உறங்கும் வாழ்வினை மெல்லத் தட்டி எழுப்ப வல்லன நமது நாட்டார் கலைகள். அதையும் ரசிக்கத்தூண்டும் வகையில் தரும் ஆரையூர் அருள் அவர்களின் எழுத்துக்கு நமது வந்தனங்கள். 

கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துரையின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரினா பிரான்சிஸ் அவர்களின் மதிப்பீட்டுரை வில்லுப்பாட்டுகளின் வரலாறு, அதன் தத்துவம் என்பவற்றோடு நூலாசிரியரின் 20 வில்லுப்பாட்டுகளின் தனித்துவம் பற்றியும் விபரிக்கின்றது.  அனுபவம் என்றால் அது சாதாரண சிந்தனைகளையும் தூண்டிவிடுவதாக இருக்க வேண்டும். இங்கு இவர் தன் அனுபவத்தை கூறும்போதெல்லாம் நம் அனுபவத்தையும் வாழ்க்கையையும் எண்ணிப் பார்க்கும் ஒரு நனவிடை தோய்தலாக அமைந்துவிடுகிறது. அந்த நனவிடை தோய்தல்தான் கைவிடப்பட்ட நம் வாழ்வையும் மீட்டுக்கொண்டுவரத்தக்கன. 

இந்த புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்தவுடன் விடுபட்ட நமது வாழ்வு பற்றிய ஏக்கம் பிறக்கிறது. மனதில் ஏற்படும் வெறுமையை நிரப்ப கண்களும் மனதும் புற உலகை தீராத ஏக்கத்துடன் பார்க்கிறது. நூலாசிரியரின் எழுத்தும் அவர் எடுத்துத்தரும் அர்த்தமும் அதன் தத்துவமும் ஒரு கனவினை, ஒரு அழகிய வாழ்வினை வாழும்படி கை நீட்டி அழைக்கின்றன.

'வில்லுப்பாட்டு' எப்படி உருவானது?. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். பல விலங்குகளை வேட்டையாடினார். மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் கலக்கம். அமைச்சரிடம் ''இந்த உயிர்களை இப்படிக் கொல்லுகிறோமே... நமக்கு சந்தோஷம், அவற்றுக்கோ துன்பம். மானைக் கொன்ற பின், அதன் குட்டி எப்படித் தவிக்கிறது பார்த்தீர்களா?'' என்றார். ''சரி, இதற்கெல்லாம் பரிகாரம் உண்டா?'' ''உண்டு ராஜா... இறைவன் மீது மனமுருகப் பாடி பாவ மன்னிப்புக் கோருங்கள். இசை ஒன்றுக்குத் தான் இசைவான்'' என்றார் அமைச்சர். உடனே காட்டிலேயே கச்சேரி நடத்த முடிவானது. ஆனால் பக்க வாத்தியங்கள் இல்லை. கொண்டு வந்த பொருட்களை இசைக்கருவிகளாக்கினர். வில்லைத் தரையில் வைத்து அம்பால் தட்டி இசை எழுப்பினார் மன்னர். அப்படி தட்டும் போது வில் சரிவர நிற்காததால். தண்ணீர் கொண்டு போயிருந்த மண் குடத்தைக் கட்டித் தட்டினார். ஓம் ஓம் என்று நாதம் பிறந்துவிட்டது. ராஜா பாட்டைத் துவங்கும் முன், 'தந்தனத்தோம்' என்று அடியெடுத்துக் கொடுத்தார் அமைச்சர். மன்னர் பாடும் போது, ஆமோதிக்க வேண்டாமா? அதனால் மன்னரின் உதவியாட்கள் 'ஆமாம்' போட ஆரம்பித்தனர். என அதன் வரலாற்றை வில்லுப்பாட்டு பிறந்த கதையாகத் தருகிறார் நூலாசிரியர்.

வில்லின் தத்துவம், வில்லிசையில் உடுக்கின் சிறப்பு, குடத்திற்குக் கிடைத்த இடம், வில்லுப்பாட்டின் முதன்மை துணைக்கருவிகள், வில்லுப்பாட்டு அன்றும் இன்றும், இறைவணக்கப் பாடலில் ஏற்பட்ட மாற்றங்கள், வில்லுப்பாட்டின் அமைப்பு எனும் உபதலைப்புக்களில் வில்லுப்பாட்டின் மகத்துவம் ஆய்வு நோக்கில் தரப்பட்டிருக்கின்றன. உடுக்கெடுத்துப் பிடித்த கைக்குப் பேர்தான் சொல்லு, ஓங்கியே அறைந்த கையின் உருவம் சொல்லு.. என்பதான பாடல் உடுக்கின் தெய்வீகத் தன்மையினை எடுத்தியம்புகின்றது. அந்த தெய்வீக இணைப்பின் முக்கியத்துவம் வில்லிசையில் உணரப்படுகின்றது. வுpல்லுப்பாட்டு அன்றும் இன்றும் எனும் பகுதியில் அக்கால நிலைமைகள், இக்காலத்தில் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், வில்லிசைக்கு உயிர் கொடுத்த கலைஞர்கள் போன்ற விடயங்களைத் தருகிறார். 

வில்லுப்பாட்டின் கட்டமைப்பு பெரும்பாலும் ஏழு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. இறைவணக்கமாக அமையும் காப்பு விருத்தம், குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடும் நுதலிப்பாடுதல் எனும் வருபொருள் உரைத்தல், தனக்கு ஆசிரியனாக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாக உதவுமாறு கோரும் குருவடி பாடுதல், கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச் சான்றோராகவும் கருதி கூறப்பெறும் அவையடக்கம், நாட்டு வளத்தைக்காட்டும் நாட்டு வளம், கதை முழுமையாகக் கூறப்பெறும் கதைக்கூறு, கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாகப் பாடும் வாழிபாடுதல் என்பன வில்லுப்பாட்டின் முக்கிய அங்கங்களாகும்.

வித்தகர் விபுலானந்தர், ஜீவ சேவையே சிவசேவை, ஞானவிளக்கு, சுத்தம் சுகம் தரும், ஒன்றே குலம் ஒருவனே தேவன், அல்லற்காலை நில்லலன் மன்னே, சமநீதியே சரிநீதி, சித்திர புத்திரன், அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும், நோதலும் தணிதலும் அவற்றோர் என்ன, தேறற்க யாரையும் தேறாது, தானே வரும் தன்கேடு, மகளீர் நிறை காக்கும் காப்பே தலை, சினம் சினந்தாரைக்கொல்லும், மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம், புலித்தலைமை நாய் மோத்தல் இல், குறைப்பர் தம்மே வீழப்பனை, மயிர் நீப்பின் வாழாக் கவரிமான், யாகாவராயினும் நா காக்க, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என இருபது பிரதிகள் இத்தொகுப்பிலுள்ளன.

புராண இதிகாசக் கதைகளாகவும் அதன் கிளைக்கதைகளாகவும் தமிழர்களின் விழுமியங்கள் பற்றிப் பேசுவனவாகவும் சைவ அடியார்கள், அரசர்கள், புலவர்கள், முனிவர்கள், பெரியோர்கள் பற்றிய கதைகளாகவும் கல்வி. சுகாதாரம் பற்றியனவாகவும் அமையும் இந்நூலிலுள்ள 20 வில்லுப்பாட்டுக்களுமே வில்லுப்பாட்டுக்குரிய கட்டமைப்புக்களைக் கொண்டதாக, ஒரு கதையை வில்லடிப்பாட்டாக விரிக்கையில் படரும் வார்த்தைகளின் வாசனை நம்மைத் தடவுவதாக,  தெம்மாங்கு, சிந்து, கண்ணி இசைமெட்டுக்களை உடையதாக, இலகுவான உள்நுழைவினைத் தரவல்ல எளிமைத்தன்மைவாய்ந்தவைகளாக, எடுத்த கருத்தினை தெளிவாக சொல்லும் ஆழமிக்கவைகளாக, சமகாலப்பதிவேற்றங்களையும் இட்டு நிரப்பும் தன்மை வாய்ந்தவைகளாக, நகைச்சுவைத் தன்மை நிரம்பப் பெற்றவையாக என இன்னோரன்ன சிறப்பு வாய்ந்தவைகளாக இந்த வில்லுப்பாட்டுப் பிரதிகள் திகழ்கின்றன. 

வாழ்க்கை எப்போதுமே கையருகில் உள்ள பேரதிசயம். அந்தப் பேரதிசயத்தை, வாழ்வின் அர்த்தங்களை தன்னுள் புதைத்துவைத்திருக்கும் ஒரு அழகிய வாழ்வை அழித்துவிடத்துடிக்கும் பல்தேசியக் கம்பனிகளின் கீழ்த்தரமான உத்திகளின் கிராதிகளின் இடைவெளியில் சிக்கித் தவிக்கும் வாழ்வொன்றிலிருந்து விடுவிக்கத்துடிக்கும் அழைப்பாக பல்கலை வித்தகர் ஆரையூர் அருள் ஐயா அவர்களின் குரல் நம்மைத் தொடுகிறது. அன்பைப் பிரவகிக்கும் நாட்டுப்புறத் தமிழிலக்கியப் பக்கத்தின் பெருங்கடல். மெல்லிய அலையாக முதுகில் தொட்டு, தன்னை உணர்த்தும் மென்மை. எல்லோரையும் கைகோத்துக்கொள்ளும் பேரன்பு. அது அவரின் அடையாளமாகிறது. 


க.மோகனதாசன்.


1 comment:

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...