Friday, July 8, 2022

திரு சு.சந்திரகுமார் அவர்களின் "நஞ்சு மனிதர் - பனுவலும் ஆற்றுகையும்"...



இன்றைய சூழலில் படைப்பு, விமர்சனம் என்பன வாசகநிலைப்பட்டதாக மாறியிருக்கின்றன. வாசிப்பு, எதிர் வாசிப்பு, கட்டுடைப்பு வாசிப்பு, மீள்வாசிப்பு, வாசிப்பின் அரசியல் என்ற சொல்லாடல்கள் தற்பொழுது அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. காரணம், வாசிப்பு இன்று முதன்மை பெற்றிருக்கிறது. படைப்பு, வாசிப்பு ஆகிய இரண்டின் பிணைப்பும் பிரிக்க முடியாதவையாக உள்ளன. இதனால் பெரும்பாலும் படைப்புகள் வாசகநிலையில் இருந்தே புரிந்து கொள்ளப்படுகின்றன.

'ஒரு கலைப் படைப்பின் உள்ளார்ந்த இயங்கு விதிகளின் ஊடாகப் பயணிக்கின்ற ஒரு வாசக மனத்தாலேயே படைப்பு மனம் நோக்கி நகர முடியும். இல்லாவிடின் அப்படைப்பின் முழுமை நோக்கிய நகர்தலை நிகழ்த்த முடியாது இடையில் நின்றுவிட நேர்கிறது' என எம். எ. நுஃமான் அவர்கள் கூறுவது போல் கலைப்படைப்பின் உள்ளார்ந்த விதிகள் ஒன்றாகவே இருக்கின்றன. அதன் வெளிப்பாட்டு விதிகளே வேறுபடுகின்றன. இவையே படைப்பின் தனித் தன்மைகளையும் தீர்மானிக்கின்றன. 

ஒரு எந்திர உலகம் மனிதனின் பசுமையான வாழ்க்கையையும் அவனது சந்ததியையும் சேர்த்து நசுக்கிக் கொண்டிருக்கிறது. அவன் ஒரு நுகர் பொருளாக உலவிக் கொண்டிருக்கிறான். அசுரத்தனமான வளர்ச்சி என்ற பெயரில் மண்ணுக்கும், விண்ணுக்கும் கொடியினை நாட்டிக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள், அசேதன இரசாயனம் என்ற பெயரில் மக்களின் இருதயத்தினைச்சுரண்டி, ஆலைகள் வெளிப்படுத்தும் நச்சுப் பொருட்களால் நிலத்தினைப் பாழாக்கி, நதிகளை அசுத்தமாக்கி, நூற்றுக்கணக்கான பறவைகள், விலங்குகளை சந்தடியின்றி அனாதரவாக்கி, மக்களிடையே வேற்று கிரகத்தில் வாழும் மனப் பிரமையினை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

நாடகம் அவனுடைய கற்பனைகளை, வாழ்வை மீட்டெடுக்க முடியும். அல்லது தீர்ந்து போன சிதைந்து கொண்டிருக்கிற ஒரு காட்சியை அவனுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் தான் நின்று நிதானித்து செல்வதற்கான திசைகளை வசப்படுத்த முடியும், யதார்த்தத்தின் முன் அவனை வீறு கொள்ள வைக்க முடியும். கற்பனையற்ற அவனுடைய வாழ்க்கையை இன்னும் அதிக கற்பனையுடன் இன்னும் அதிக படைப்பு மனத்துடன் அவனை எதிர்கொள்ளச்செய்ய முடியும் என இருப்பிற்கும் இருப்பின்மைக்கும் இடையில் இருக்கிற வெளியில் நின்று அர்த்தங்களை கட்டவிழ்க்க முயற்சி செய்திருக்கின்றது, நஞ்சு மனிதர் பனுவலும் ஆற்றுகையும்.

யார் அந்த நஞ்சு மனிதர்? கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் கேள்வியும் அவர் தெரிவிக்கின்ற கருத்துக்களும் முக்கியமானவை. நஞ்சு மனிதர் பனுவலும் ஆற்றுகையும்  எவ்வாறு கவனிப்புக்குரியதாகின்றது. நாடகம் பேசுகின்ற விடயம், அதன் கட்டமைப்பு, ஆற்றுகை செய்யப்பட்ட முறைமை, ஆற்றுகையிலிருந்து பிரதி உருவான முறைமையென ஒரு செயலொழுங்கினை இந்த பனுவலும் ஆற்றுகையினுள்ளே அவதானிக்க முடிகிறது. இந்தப் பனுவல் கொண்டிருக்கும் கருத்தியலுக்கு ஏற்றதாக அர்த்தபூர்வமானதொரு அட்டைப் படத்தினை புஸ்பலதா அவர்கள் வடிவமைப்புச் செய்திருக்கின்றார்.

நஞ்சு மனிதர் எழுத்துப் பிரதியாகிய முறையினை நோக்கும் போது, நிகழ்த்துதலின்  நுட்பங்களையும், மனோதத்துவங்களையும் எட்டுவதற்கு முயற்சி செய்து வெற்றி பெற்றிருப்பதைனைக் காண முடிகின்றது. நாடகத்தின் காலம், இடம் மற்றும் வெளியினை உருவகப்படுத்த பாடல், நாட்டியம் என்பன இணைத்திருப்பதும் இவற்றின் இன்னொரு அழகியல் அம்சமாகிறது. இந்த நாடகப் பிரதி, கண் முன் கனலாய்க் கொதிக்கும் ஒரு யதார்த்தத்தை, அதற்கு மாற்றீடான ஒரு கனவை, நாம் இழந்து போன கணங்களோடு முன் நிறுத்துகின்றது. அந்தக் கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு, மனதின் ஆழ்நிலையில் கருக்கொள்ளும் காட்சிப்பொதிவான ஒரு படிமத்தைத் தன் நாடக மொழியாக்குவதற்காக, மனதின் வார்த்தை மொழிக்கு முன்பாக ஓவியப்பொதிவுகளாக பல்லுயிர்க்குழும மனநிலையில் நின்று நாடகப்பனுவலானது அதியுருநிலைக் கூட்டுடல்கள் வழி காண்பியங்களாகி ஆற்றுகையில் பார்வையாளனுடன் உரையாடுவதற்கான முனைப்புக்களை மேற்கொண்டிருப்பதனைக் காண முடிகின்றது. மாணவர்களுடன் இணைந்த தொடர் செயற்பாடு குறித்த பதிவு இவ்விடயத்தினைத் தெரிவிக்கின்றது.

இந்த நாடகப் பனுவலின் வசன அமைப்பும் பாத்திர வார்ப்பினையும் உருவாக்கிய விதம் பற்றி நோக்கின், வார்த்தைகளையும் காட்சிகளையும் ஒரு நிகழ்த்துப்பனுவலின் வரைகோடாக்கிய பின்னர் அதன் உட்கருத்தை தேடலுடன் கூடிய வியாக்கியான அணுகு முறையினால் வளர்த்தெடுத்திருக்கிறார் என்பது புரிகிறது. நமக்கெல்லாம் தெரிந்த கதைதான். ஆனால் பார்வையாளரைச் சகபயணியாக்குவதாகவும் வாசிப்பவரைத் தம் சொற்களினாலேயே உரையாடுவதற்கு அழைப்பினை விடுப்பதாகவும், வாசிப்பவர் தன் புனைத்திறத்திற்கேற்ப மெய்ப்பாடுகொள்ளும் ஒரு படைப்பாக்க முறைமையினையும் இந்த ஆற்றுகைச் செயல்முறை ஒழுங்கிலும் பனுவல் ஆக்க முறைமையிலும் எம்மால் கண்டுகொள்ள முடிகிறது. 

நாடக ஒத்திகையும் ஆற்றுகையும் என இங்கு குறிப்பிடும் பகுதி முக்கியமானது. ஒரு கருத்தியலாக கருக்கொண்ட கதையானது, மீண்டும் மீண்டும் காட்சிகளாக்கி விரித்துக் கொண்டே அன்றாடத்தில் பயணிக்கின்றது. பின் காட்சிகளுக்குள் இயங்கும் நாடக மாந்தர்களைப் பொது வெளியில் தேடி, இந்த அலைச்சலில், இசையையும் ஆடலையும் இணைந்து போர்த்திய பின் புனைவுவெளிக்குள் அபுனைவும் சேர்ந்து ஆற்றுகை உருவாகியிருக்கிறது. இந்த அடிப்படைகளோடு ஒத்திகைநிலம் புகுந்து, காட்சிகளைத் தனித்தனியாக உருவாக்கி, ஒத்திகையில் பனுவலானது மேலும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இங்கு நடிகர்கள் பல்லுயிர்க் குரல்கொண்டு ஆற்றுகை நிலத்தில் பொது நாடக உடலிகளாய் மாறுகிறார்கள். இசை, நடனம், உடையமைப்பு, ஒப்பனை, பனுவல், நிலம், நாடக உடலிகள், பார்வையாளர்கள் என அனைத்தும் பிணையும் இழைச்சேர்கையில் ஆற்றுகை, நிறைவை ஒட்டிய நிலையை அடைகிறது. இப்படியாக பனுவலுடன், இசை, காட்சி, ஒத்திகைகளுடன் ஒத்திகை அரங்க ஆற்றுகையோடு நஞ்சு மனிதர் இறுதி ஆற்றுகைக்குத் தயாராகின்றது.

இந்த பனுவலாக்கத்திலும் ஆற்றுகையிலும் இன்னுமொரு தனித்துவமாக, பாரம்பரிய இசையும், காட்சிப்படுத்துதலும், பார்வையாளரை ஒரு அபுனைவு வெளிக்குள் அமர்த்தி விடுவதற்கான முயற்சியாகப் பார்க்க முடிகிறது. அதாவது காலனியரேகை படிந்து ஊடகக் குப்பைகளால் போர்த்தப்பட்டுச் சலிப்படைந்து கிடக்கும் இளம் பார்வையாளர், அந்த நாடகம் நிகழும் அபுனைவு வெளிக்குள் தன்னை, தன் தொன்ம வேரைக் கண்டுகொள்கிறான். 

ஒரு கலைவடிவம் தன் மொழியைத் தேர்வுசெய்தல் என்பதை இன்னும் நுட்பமாகக் கூத்தில் கவனிக்கலாம். கூத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கூத்தின் வடிவத்திற்கேயான உச்சப் படபடப்பில் வேகத்துடிப்புடன் இருப்பதைக் காணமுடியும். இந்த நடிப்பு மொழியன்றி கூத்தானது வடிவம் கொள்ளாது. இவை, எல்லாவற்றையும் தாண்டி அந்த மொழி சந்ததிகளின் பண்பாட்டு நினைவடுக்குகளிலிருந்து நம் மூதாதைகளின் நினைவுகளையும் சுமந்துவரும் சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது.

"தனனா தனனா தனனத் தனன தனனா

நஞ்சு நஞ்சு நஞ்சு நாசகார நஞ்சு

நாங்கள் வாழும் பூமியை நச்சரிக்கும் நஞ்சு.."

பூமி தோன்றிய தொல்காலத்திலிருந்து, எத்தனையோ உயிர்த்திரள்கள் இங்கு வாழ்ந்து மறைந்திருக்கின்றன. இத்தனை கொடுமையாய் இயற்கையைச் சுரண்டி நஞ்சாக மாற்றி அழிக்கும் ஒரு நிலையைத் தன் பரிணாம வரலாற்றில் இந்த மனிதமையக் காலகட்டத்திலேயே புவி சந்திக்கிறது. ஆகவேதான். இங்கு ஆற்றுகையோடும் அதன் பனுவலோடும் மட்டும் கடக்கமுடியாமல், தன்னுள் உள்வாங்கிய உணர்வை, உண்மையை அசைபோட்டபடி ஆற்றுகை நிலம் தாண்டிய யதார்த்த பொதுவெளிக்குள் நடிகரும் பார்வையாளரும் நுழைகின்ற சாத்தியம் நஞ்சு மனிதரில் நிகழ்கிறது. 

இந்த ஆற்றுகையில் கட்டியம் கூறுபவர்கள் மிக முக்கிய வகிபாகத்தினை எடுத்துக் கொள்கின்றனர். மனித மெய்மைக்குள் அமர்ந்து ஆற்றுகைக்குள் உள்நுழைவு கொள்ளமுடியாத பார்வையாளர்களுக்கு நாடகத்தைத் திறந்துவிடுபவர்களாகவும் ஆற்றுகையினை இடத்திற்குத் தகுந்ததாக நடாத்தித் தருபவர்களாகவும் இவர்கள் காணப்படுகின்றனர். ஆற்றுகை மாந்தர்கள், அரங்க மொழியில் உரையாடிக்கொண்டிருக்க, கட்டியக்காரர்கள் இடை புகுந்து பார்வையாளர்களின் மொழியில் உரையாடி, அவர்களை நாடகத்திற்குள் உள்ளீர்ப்புச் செய்கிறார்கள். 

'நல்லாக் களைச்சித்தம்டப்பா, வட்டமா நின்று இப்பிடி ஆடுனா களைக்கும்தானே' என்ற மொழிப் பரியோகங்களை இங்கு உதாரணத்திற்குக் குறிப்பிட முடியும். கந்தையா, கனகம், மைதிலி போன்ற பாத்திரங்கள் சமூகத்தின் வகை மாதிரிகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. நஞ்சுப் போத்தல் பாத்திரம் உருவாக்கப் பட்டுள்ள விதமும் அது தெரிவிக்கின்ற கருத்துகளும் இந்தப் பனுவலுக்கான மிக முக்கிய சேதிகளாக அமைகின்றன. பங்குபற்றுனர்களின் பின்னூட்டங்கள் ஒரு காத்திரமான நாடகச் செயற்பாடாக இது நடந்தேறியிருப்பதைத் தெரிவிக்கின்றன. இந்த ஆற்றுகை சிறு சிறு மாற்றங்களுடன் வெவ்வேறு இடங்களில் ஆற்றுகை செய்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இயற்கை வேளாண்மை முறைகளை மீட்டெடுத்த நம்மாழ்வார் அவர்களையும் ஜப்பானின் இயற்கை வேளாண் விஞ்ஞானிகளான ஃபுகோகா பெர்னார்ட், ரேச்சல் கார்சன், மற்றும் தபோல்கார் முதலானவர்களையும் இந்த இடத்தில் குறிப்பிட்டுக் கொள்ளமுடியும். நம்மத்தியில் வாழ்ந்து மறைந்த எத்தனையோ இயற்கை விஞ்ஞானிகளின், இயற்கை முறையில் விவசாயம் செய்து சாதனைபடைத்த விவசாயகளின் பெயர்களும் அவர்களது நுட்பங்களும் இல்லாமல் போனது நமது காலத்துயர். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நூலாசிரியர் அவர்களால் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆகவே நம் அனைவரின் தனித்துவ அடையாளங்கள் ஒற்றைப்படையாய் முடக்கப்பட்டுக் கேள்விக்குள்ளாக்கப்படும் சமகால அரசியல் சூழலில் மனித மனம் சிந்தித்தேயிராத, இந்த நச்சுச் சூழலை, இல்லாதொழிப்பதற்காக, அரங்கு தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் என்பதற்கு நஞ்சு மனிதர் இன்னுமோர் உதாரணம். நாடக ஆசிரியர்;, நடிகர்;, பார்வையாளர் என அனைவரும் பாரம்பரியத்தில் வேர்கொண்ட நம் பண்பாட்டு நினைவுகளைத் திறந்து எழுச்சி கொள்ள வேண்டும். நஞ்சு மனிதர் போன்ற ஆற்றுகைப் பனுவல்கள், எப்பொழுதும் மறந்துபோன நம் வாழ்விற்காய் நஞ்சற்ற நாளைய உலகிற்காய் பன்மைக் குரலோடு தன் அரங்கியல் மொழியில் பேசிக்கொண்டே இருக்கும்.

க.மோ.



No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...