Monday, December 9, 2019

வஞ்சப் புகழ்ச்சி



தியமான் மீது பகை கொண்ட, தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான்  தன்னிடத்துப் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி மிகவும்  செருக்கடைந்திருந்தான். தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான்,  தன் படை வலிமையையும் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி  என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு ஔவையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான். ஔவையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தொண்டைமானின் மாளிகையில் ஔவைக்கு மிகுந்த மரியாதை அளிக்ககப்பட்டது. 


தான் வந்த நோக்கத்தை ஔவை உரைக்கவும்  இல்லை, தொண்டைமான் வினவவும் இல்லை. ஆனால் அவனுக்கு ஔவையார் தூதுவந்திருக்கிறார் என்று தெரியும். எனவே தன் படைபலத்தை ஔவைக்கு காட்டி இதன் மூலம் அதியமானை மறைமுகமாக எச்சரிக்க தொண்டைமான் விரும்பினான். எனவே 'படைக்கலங்களைக் காண வருக' என ஔவைக்கு அழைப்பு விடுத்தான். ஔவையும் மறுக்காமல் ஏற்றார். அங்கே ஆயுதங்கள் வரிசையாக அடுக்கி வைக்கபடிருந்தன. எல்லா ஆயுதங்களும் புதிதாக நெய் தடவி, மயில் பீலியும் பூ மாலையும் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பூஜைக்கு வைக்கப்படிருந்தன.அவன் கருத்தை அறிந்த அவ்வையார், தொண்டைமானின் படைக்கலங்களைப் புகழ்வது போல் இகழ்ந்தும், அதியமானின்  படைக்கலங்களை இகழ்வது போல் புகழ்ந்தும் உடனே வஞ்சப்புகழ்ச்சியில் ஒரு பாடலைபாடினார்.

"இவ்வேஇ பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ;" 

இங்கே ஆயுதங்கள் எல்லாம் பூவாலும் மயில் பீலியாலும் அலங்கரிக்கப்பட்டு நெய் தடவி புதிதாகஉள்ளன. ஆனால் அதியமானின் படைக்கலத்திலே காட்சி இப்படி இல்லை. அவன் ஆயுதங்கள் எல்லாம் பகைவர்களின் ரத்தம் தோய்ந்து அவர்களின் கிழிந்த சதைகள் ஒட்டி நிறம் மாறி கூர் மங்கிக் கொல்லனிடத்தில் சரிசெய்ய வைக்கப்பட்டுள்ளன.

க.மோகனதாசன்


No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...