Sunday, December 15, 2019

இந்த மனசு சொல்பேச்சு கேக்காமல் அது பாட்டுக்கு ஓடிப் போயிருச்சு அவளைப் பார்க்க...


தலைவன் போர்க்களத்திலிருந்து ஊர் திரும்புகிறான். தேரில் மிக விரைவாக காதலியைத்தேடி வருகிறான். வருகின்ற வழி எல்லாம் பெரிய காடுகள். அந்த காட்டில் புலி உறுமுகின்றது. அது கடல் அலை போல சத்தம் போடுகிறது. ஆபத்தான வழி.
அவன் அவளை நினைத்துப் பார்க்கிறான். அவள் இப்போது எப்படி இருப்பாள்? என்ன உடை உடுத்தியிருப்பாள்? எப்படி தன்னை அலங்கரித்திருப்பாள்? அவன் கற்பனை விரிகிறது. ஆக, அவளைப் பார்க்க அவன் மனம் அவனுக்கு முன்னே ஓடிவிட்டது. அவனையறியாமல் அவனுக்கு புன் முறுவல் பூக்கிறது. இந்த மனம் போய் என்ன செய்யப் போகிறது. இந்த மனதால் அவளைத் தழுவ முடியுமா? அப்படித் தழுவினாலும் நான் என் கையால் அவளை அணைப்பது போல வருமா? என்று தன்னையே நகைத்து புன்முறுவல் பூக்கிறான். 

'அஞ்சுவ தறியா தமர்துணைதழீஇய 
நெஞ்சுநப் பிரிந்தன் றாயினு 
மெஞ்சிய கைபிணி நெகிழினஃ தெவனோ 
நன்றும் சேய வம்ம விருமா மிடையே 
மாக்கடற்றிரையின் முழங்கி வலனேர்பு 
கோட்புலி வழங்குஞ் சோலை எனைத்தென் 
றெண்ணுகோ முயக்கிடை மலைவே'. 
                                     - குறுந்தொகை 

பொருள் : நான் அவள் நிலையை நினைத்து அஞ்சுவதை அறியாமல், நான் விரும்பும் தலைவியைத் தழுவும் பொருட்டு, என் நெஞ்சு. என்னைப் பிரிந்து சென்றது. ஆனாலும், என் கைகள் இங்கே எஞ்சி இருக்க, கட்டித் தழுவ முடியாத, என் நெஞ்சு சென்று தழுவியதனால் என்ன பயன்? எனக்கும் தலைவிக்கும் இடையில் உள்ள தூரம் மிகவும் அதிகம். நான் தலைவியைத் தழுவுவதற்குத் தடையாக, இடையிலே கரியகடலின் அலையைப் போல் முழங்கி, கொலை செய்யும் புலிகள் ஆரவாரம் செய்து, வலிமையுடன் எழுந்து, உலவுகின்ற சோலைகளை, எப்படிக்கடக்கப் போகிறேன்? ஆகவே, தேர்ப்பாகனே, 'என் நெஞ்சு, தலைவி இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றது போல், நீயும் தேரை விரைவாகச் செலுத்துவாயாக'. 

 க.மோ.

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...