கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல், அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி உள்ளிட்ட பல பன்னாட்டு இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு, இசையமைப்பாளர் இராஜன் சோமசுந்தரத்தால் வெளியிடப்பட்டது. அமேசான் பன்னாட்டு இசைப்பட்டியலில் இடம்பிடித்துப் பெரும்புகழ் பெற்றது. 2019-ல் சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் கீதமாக அறிவிக்கப்பட்டது.
பாடல்கள்
புறநானூற்றிலும் (புறம்: 192) நற்றிணையிலும் (நற்றிணை: 226) இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
புறநானூறு 192
இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது.
“ யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
முனிவு = வெறுப்பு, கோபம்; தண்துளி = குளிர்ந்த துளி; மல்லல் = மிகுதி, வலிமை, பொலிவு; புணை = தெப்பம், மிதவை, மூங்கில்.
பொருள்
எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மையும் தீமையும் அடுத்தவரால் வருவதில்லை
அது போல துன்பமும் அதற்கு மருந்தான ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை
சாதல் மற்ற பிறத்தல் அது போல; வாழ்தல்
வாழ்தலை இனிது என்று நம்பி மகிழ்ந்து மயக்க முறுதலும் இல்லை
வாழ்தலை தீயது என்று எண்ணி வெறுத்தலும் இல்லை
வானத்தில் மின்னலுடன் வருகின்ற சிறுத்துளி மழைநீர் ஒன்றுசேர்ந்து பெரிய கல்லைக் கூட பேராற்று நீர்வழி ஓடி பள்ளத்தில் தள்ளுகிறது.
அது போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
என்பது போல சான்றோர் பார்வையில் தெளிந்த வண்ணம் ஆகும்
ஆதலினால், பெருமையில் பெரியோரை வியந்து போற்றுவதும் தவறு அதைவிட
சிறியோரை இகழ்ந்து தூற்றுவதும் மிகவும் தவறு.
யாதும் ஊரே, யாவரும் உறவினரே என்பதும், மக்கள் அடையும் நன்றும் தீதும் ஆகியன பிறரால் தரப்படுவன அல்ல, அவரவர் செய்த வினைப்பயனாகத் தாமே வருவன என்பதும், உலகியலிலே மக்கள் பெறும் உயர்வு தாழ்வுகட்கு அன்னோர் இயற்றிய இருவினைப் பயனாகிய ஊழ் என்னும் முறைமையே காரணமாதலால், நல்வினையால் உயர்ந்த பெருமக்களை வியந்து புகழ்தலையோ அன்றித் தீவினையால் தாழ்வுற்ற சிறியவர்களை எண்ணி இகழ்தலையோ மெய்யுணர்ந்தோராகிய தத்துவ ஞானிகள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதும் ஆகிய உண்மைகளைத் தம் அனுபவத்தில் வைத்து உணர்ந்த நிலையில் உலக மக்களுக்கு அறிவுறுத்துவதாக அமைந்தது.
நற்றிணை 226
மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்
நாந்தம் உண்மையின் உளமே அதனால்
தாம் செய் பொருளன அறியார் தாம் கசிந்து
என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்
இன்ன நிலைமைத்து என்ப
என்னோரும் அறிப இவ்வுலகத்தானே.
தரும் செய்தி
பொருள் தேடப் போய்வரட்டுமா என்கிறான் தலைவன். போக வேண்டாம் என்று சொல்லும் தலைவியின் கூற்றாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
நல்ல மாந்தர் யார், நல்ல மன்னர் யார், உயர்தவம் எது என்றெல்லாம் விளக்கிவிட்டுத் தோழியிடம் அவள் தொடர்கிறாள். அவர் இருப்பதால் தான் நாம் நன்னுதலோடு இருக்கிறோம். (அவர் பிரிந்தால் நுதல் பசந்துவிடும் அல்லவா) அதனால் தாம் செய்யும் பொருளின் பயனை அவரே உணரவில்லை. வேர்வை கசிய வெயில் கொளுத்தும் நீண்ட பாதையில் அவர் செல்ல, நான் இங்கே இருந்துகொண்டு எம் காதலர் சென்றார் என்று சொல்லிக்கொண்டு இருப்பது முறையா? உலகில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் பிரிவு கூடாது என்று தெரியும் என்கிறாள். பிரிதல் பொருட்டு வாடுதலைக் குறிக்கும்.
No comments:
Post a Comment