Saturday, April 27, 2019

பறை எனும் தமிழர் அடையாளம்

தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய நடனமான பறைமேளம் உணர்ச்சியும் எழுச்சியும் மிக்கது. அதிர்ந்தெழும் பறையிசை- ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை ஒரே நேர்கோட்டில் இணைக்கும் சக்தி கொண்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம்.

தோற்கருவிகளின் பொதுப் பெயராகவே இலக்கியங்களில் பறை என்பது
வழங்கப்பட்டுள்ளது. பறை என்ற சொல்லுக்குக் கூறு, சொல் என்ற பொருள்கள் இருக்கின்றன. மலையாளத்தில் பறைதல் என்பது சொல்லுதல் என்ற பொருளில் வழங்கி வருவதை இன்றும் காணலாம். தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது. 'பறை என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி' எனவும் கூறப்படுகின்றது.

பறையோசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாது. அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித அதிர்வை கொடுக்கும். யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்தார்களாம் அக்காலத்து மக்கள்;. அதனால் தான் இறந்த வீடுகளில் பறை அடிக்கும் சம்பிரதாயம் வந்ததாக அறியப்படுகிறது.

இன்னும், அரித்தெழும் ஓசையையுடைய பறை அரிப்பறை எனவும் வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை ஆறெறிப் பறை எனவும் மகிழ்ச்சியைக் குறிக்கும் பறை உவகைப்பறை எனவும் சாவில் அடிக்கப்படும் பறை சாப்பறை எனவும் மீன் பிடிக்கப் பயன்பட்ட பறை மீன்கோட்பறை எனவும்; செய்திகளை நகரத்தவர்களுக்குத் தெரிவிக்கும் பறை கோட்பறை எனவும் யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை தலைப்பறை எனவும் வாயகன்ற பறை படலை எனவும் அரச விளம்பரங்களைக் குறிக்கும் பறை பண்டாரமேளம் எனவும் பகைவருடன் போர்புரிவதற்காக, வீரரை அழைப்பதற்குக் கொட்டும் பறை பூசற்றண்ணுமை எனவும் பலவாறாகப் பறை தமிழர் வரலாற்றினூடே விரவி நிற்பதைக் காணமுடிகின்றது.

தமிழரின் வாழ்வியல் கூறுகளுடனும் பறையிசையானது பல தளங்களில் செயற்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு மன்னன் எதிரிநாட்டுக்குச் சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேற வேண்டுவதற்கு, பெருகிவரும் புனலை அடக்க, உழவர் மக்களை அழைக்க, போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட, வெற்றி தோல்வியை அறிவிக்க, வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைக்க, அறுவடை செய்ய, காடுகளில் விலங்குகளை விரட்ட, மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க, இயற்கை வழிபாட்டில், கூத்துகளில், விழாக்களில், இறப்பில் எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் 'பறை' இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.

நெல்லைக் கவர வரும் பறவைகளை விரட்ட மக்கள் பறையைப் பயன்படுத்தினர் என்பதை பறநானூறு 'கழி சுற்றிய விளை கழனி அரிப்பறையாற் புள்ளோப் புந்து மென் பறையாற் புள்ளிரியுந்து' எனும் பாடலில் தெரிவிக்கின்றது. இங்கு பறையொலியானது மென்மையாகவும் வன்மையாகவும் ஒலித்திருப்பதைக் காண முடிகின்றது. தாளப் பிரமாணங்களில் செந்தூக்கு, வஞ்சித் தூக்கு என இரு முறைகளில் பறையொலியின் வேகம் அதாவது வுநஅpழ தாள நிலைமைகளுக்கேற்ப மேற்கொண்டிருப்பது இலக்கியங்களின் வாயிலாக எமக்கு அறியக்கிடக்கிறது.

மன்னரிடம் பரிசு பெறச் செல்வோர் தடாரிப் பறையை இசைத்துச் செல்கின்றனர். 'பாடுநர்க்கிருந்த பீடுடையாள...... அரிக்குரல் தடாரியுருப்ப ஒற்றிப் பாடி தந்திசின் பெரும்பாடன்று' எனும் பரணர் பாடிய புறநானூற்றுப்பாடல் இதற்குச் சான்றாகின்றது. பல இசைக் கருவிகள் சேர்ந்து ஒலிப்பதை சங்ககாலத்தில் ஆமந்திரிகை எனக் குறிப்பிட்டனர். 'விறலியரே, முழாவின் கண்ணே மார்ச்சனையை இடுவீர், யாழிலே பண்ணை நிறுத்துவீர், பெருலிங்கியத்தையும் சல்லியையும் வாசியுங்கள், சிறுபறையை அடியுங்கள், பதலையின் ஒரு முகத்தை மெல்லெனக் கொட்டுவீர்' என வரும் உரையுள்ளிட்ட செய்யுள் இதனைத் தெரிவிக்கின்றது.

திருஞான சம்பந்தரும் தனது திருவீங்கொய்மலை பதிகத்தில் 'குழல் யாழ் மொந்தை கொட்டவே பறையும் குழலும் கழுலுமார்ப்ப' என பறையின் தெயிவீகத் தன்மையினை உணர்த்துகின்றார்.

உத்தம சோழனால் வழங்கப் பட்ட சென்னை அருங்காட்சியகத்து செப்பேடுகள் காஞ்சிபுரத்து ஊரகத்து நின்ற பெருமாள் கோயிலைப் பற்றிப் பேசுகின்றன. இக்கோயிலில் ஒன்பது உவச்சர்கள் பணியாற்றினர். இருவர் மத்தளம், ஒருவர் கரடிகை, இருவர் காளம், ஒருவர் தாளம், ஒருவர் செகண்டி, ஒருவர் கைம்மணி என்பன ஒலித்தனர். இவர்களை வழி நடத்த இருந்த தலைப்பறை இங்கு உகட்சகர் தலைப்பறை என்று குறிப்பிடப்பிடப் படுகின்றார்.

இவ்வாறு வரலாற்றினூடே பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட பறை இன்று தமிழர் பாரம்பரியத்தினின்றும் கை நழுவிப் போகும் நிலை காணப்படுகின்றது. எமது தொன்மையான வாத்தியத்தினை பேணுவதற்காகவும் அதற்கான அழுத்தமான அங்கீகாரத்தினைப் பெறுதல் வேண்டியும் பல செயற்பாடுகள் தொடர்ந்து நடை பெறுகின்றன. மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடம், மூன்றாவது கண் உள்ளுர் அறிவு செயற்பாட்டுக் குழுவினர், சமதை சமத்துவத்திற்கான பெண்கள் பறை மேள அணியினர், இன்னும் பல அமைப்புக்கள் இதனை செயல்வாதமாக முன்னெடுத்துச் வருகின்றனர். இதன் சமூக, அரசியல் முக்கியத்துவத்தினை மனதில் கொண்டு பறைமேளத்தின் நிலைத்து நிற்றலுக்காக தொடர்ந்து செயற்படுதல் எம் எல்லோருக்கும் அவசிய கடமையாகின்றது.

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...