Friday, April 26, 2019

அடுத்த தலைமுறைக்கான விதை நெல்லைக்கூட விற்றுத் தின்னுகிறது நாம் கவனிக்காமல் விட்டுச்செல்லும் ஒரு சிறு தவறு...


Abad கிரிதாஸின் 'விளைகை' குறுந்திரைப்படம் பற்றிய உரை...

  படைப்பு வழியில் குறுந்திரைப்படங்கள் ஜனரஞ்சகத்தை நிறுத்தி, அலங்காரங்களின்றி அவசிய வாஞ்சையோடு வாழ்வின் பக்கங்களை தமது கமராக்கைகளால் மிக அவதானமாகப்
புரட்டத்தொடங்கிவிட்டன என்பதற்கு கிரிதாஸின் 'விளைகை' குறுந்திரைப்படம் எம் கண்முன் நிற்கும் சாட்சியாகின்றது.

     ஏதோ ஒன்றைத் தோன்றவைத்து அதன் பின்னுள்ள உண்மைகளை (Noumenal reality)உணரச் செய்வதான இக்கால நவீன கருத்தோவிய (Abstract paintings) படைப்புக்களைப்போல், இரு சிறுவர்களின அவல வாழ்வினைக் காட்டி அதற்கான பின்னணியினைத்தேடிச்சென்று, அதன் பின்னுள்ள, பலருக்கு சட்டெனப் புலப்படாத உண்மைகளும் அந்த பிரமாண்ட அதிர்வினைத் தோற்றுவிக்கும் ஆரம்ப அசைவும் இங்கு கமராக்கண்களால் கச்சிதமாகக்காட்டப்பட்டுள்ளன.

        வீதிகளில் நிகழும் வாகன விபத்துகளால் இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 07 பேர் மரணிக்கின்றனர். இந்த மரணங்களின்போது, ஆகக்குறைந்தது ஒரு குடும்பம் தனது வீட்டுத் தலைவனை இழக்க நேரிடலாம். சில குழந்தைகள் அநாதையாகக்கப்படலாம். தமக்கு உழைத்துக் கொடுக்கும் ஒரு சகோதரனை அல்லது சகோதரியை ஒரு குடும்பம் இழந்து தவிக்கக் கூடும். இத்தனைக்கும் ஒரு சாரதியின் அலட்சியமான நடத்தையே காரணமாக இருக்கக் கூடும். அந்த சாரதி நீங்களாக இருந்து விடக் கூடாது கவனமாயிருங்கள் என எமக்கு அறைந்து சொல்கிறது 'விளைகை'.

         சாலைகளில் குவிந்து நிற்கும் மக்களும், அங்கே வடிந்து கிடக்கும் ரத்தத் தீற்றல்களும், சிதிலமான உடற் பாகங்களும், சக்கரங்களின் அவசர நிறுத்தலைக் காட்டும் கீறல்களும் உடைந்து கிடக்கும் கண்ணாடித் துண்டுகளும் அவைகளுக்குப் பின்னே வலியுடன் வந்து நிற்கும் பல கண்ணீர் கதைகளைச் சொல்கின்றன. கணவனை இழந்த மனைவியையும் பெற்றோரை இழந்த பிள்ளைகளையும் பிள்ளையை இழந்த பெற்றோரையும் என எத்தனையோ கனவுகள் சிதைந்து கிடக்கின்றன வீதியோரங்களில்.. ஒவ்வொரு சாலையும் கறுப்புத் துணியால் மூடப்பட்ட கல்லறைகளாகத் தெரிகின்றன.

     பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு என நிறுவினார் ஒழுங்கின்மைக்  கோட்பாட்டின் தந்தையான Edward Lorenz. இதனையே பட்டாம் பூச்சி விளைவு(Butterfly effect) என்கிறோம். அண்மையில் இதனை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மாறும் அமைப்பு (Dynamical system) ஒன்றில்  நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே அவ்வமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பாரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே பட்டாம்பூச்சி விளைவின் சுருக்கம்.

   ஆரம்பத்தில் உருவாக்கப்படும் மிகச் சிறிய ஒரு செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், நாம் எதிர்பார்க்கவே முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம். உண்மையில் வண்ணாத்திப்பூச்சி விளைவு பொதுவாக  சுய சிந்தனை அற்ற ஒரு அமைப்பை முன்னிறுத்தியே முன்மொழியப்படுகிறது. 'சிறிய தவறுகள் தவிர்க்கப்படாத போது அதுவே பெரிய தாக்கங்களின் விளைநிலமாகிறது'....

   இந்தப்பின்னணிகளோடு இக்குறும்படத்தினை நோக்கின், இந்தக்கதையில் தந்தையின் இழப்பு இந்தச்சின்னஞ்சிறுசுகளை ஏதிலிகளாய் மாற்றி விடுகின்றன. கல்வியினைத்தொடர முடியாத ஏக்கம் ஒரு புறமும் வாழ்க்கையினைத் தொடர முடியாத வசதியின்மை மறு புறமும் என இவர்களைத் துரத்தும் வாழ்க்கை அவலத்திற்கான பின்னணி, வாகனம் செலுத்தும் போது அந்த  டிரைவர் எடுத்துக்கொள்ளும் ஒரு Phone call இனால் ஏற்பட்டிருப்பது நுட்பமான காட்சிப்படிமங்களால் சாட்சிகளாக்கப் பட்டுள்ளன.

    இக்குறும்படத்தினை வார்த்தைகளை விட்டு வெறும் காட்சிகளாக ஓட விட்டால் கூட அதேயளவு பாதிப்பினை எமக்கு தரக்கூடிய வல்லமை இதன் ஒவ்வொரு காட்சிப்படிமங்களுக்கும் உண்டு. சாப்பாட்டு மேசை துடைத்து விடும் சிறுவனின் பிஞ்சுக்கரங்கள், தந்தை வேலைக்குப் புறப்படும் போது அரிவாளைப்பார்க்கும் விதம், தந்தை இறந்த பின் சிறுவர்கள் இருவரும் இணைந்து தந்தைக்கு விளக்கேற்றும் தருணம், பாடசாலை செல்லும் போது தனது பழைய வாழ்வினை எண்ணி பரிதவிக்கும் சிறுவனின் கண்கள் எல்லாமே மிகுந்த வலியோடு எம்முடன் பேசுகின்றன. இதனால் தான் விபத்து ஏற்படும் போது அந்த வாலிபன் கதைக்கும் வார்த்தைகள் எமக்கு மேலதிகமானது போல் தோன்றிவிடுகின்றன.

  இக்குறும்படத்தில் பல நுட்பங்களைப்பிரயோகித்திருக்கிறார்கள். சிறுவர்களின் அவலமான காட்சிகளிலிருந்து பின்னோக்கி நகரும் காட்சியமைப்பு, மதுபாவனைக்கான எச்சரிக்கையாக அதன் பெட்டியையே காட்டுவது, கமராவின் நுட்பமான காட்சிக்கோணங்கள், நேர்த்தியான படத்தொகுப்பு, பொருத்தமான இசை, பொருத்தமான உடை ஒப்பனை, கதை நடக்கும் சூழல் மற்றும் இடங்கள், நடிகர்கள் தேர்வு, கேமராவினுள் உலாவரும் பாத்திரங்களின் இயல்பான நடிப்பு என்பனவெல்லாம் முடிந்தவரை தத்ரூபமாக கையாண்டிருப்பது இயக்குநரின் அனுபவத்தினைக் காட்டி நிற்கின்றது.

   அந்தச்சிறுவனின் ஏக்கமான பார்வையினை சில பெருமூச்சுக்களைத் தவிர்த்து எம்மால் கடந்து செல்ல முடியவில்லை. அக்கண்களில் தொனிக்கும் பாi பல நாட்களின் ஏக்கப்பரிவர்த்தனைகளின் முடிவாகத் தொனிக்கிறது. மொத்தத்தில் இக்குறும்படத்தின் காட்சிகளுக்குள் பதர்களைக்காண முடியவில்லை.

      சில புத்தகங்களை பார்க்கும் போது சிறிதாக இருக்கும் ஆனால் வாசித்து முடித்த பின் நமது கைகளில் அப்புத்தகம் கனக்கும். இருதயமும் இன்னும் கொஞ்சம் சிவக்கும். அத்தகையதொரு படைப்பு இந்த 'விளைகை'. விண்ணை முட்டும் அளவிற்கு கருத்தியலை யோசிப்பது, கருத்து சொல்வது என்று இல்லாமல், யதார்த்தமாக வாழ்க்கையின் ஒரு துளியை வலியோடு நச்சென்று காட்டி இருக்கிறார்கள். இது பட்டாம்பூச்சித்தாக்கம் மட்டுமல்ல இப்படைப்பு ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகளும் பட்டாம்பூச்சித் தாக்கமே.

     இந்தப்பச்சிளங் குழந்தைகளின் வாழ்க்கை உணவைத்திருடிக்கொண்டது அங்கே வந்து சென்ற ஒரு போனின் (phone) அழைப்பு, அவர்களின் கல்விக்கனவும் வாழ்வின் வசந்தமும் சாலையோரம் காலாவதியானது. அடுத்த தலைமுறைக்கான விதை நெல்லைக்கூட விற்றுத் தின்னுகிறது நாம் கவனிக்காமல் விட்டுச்செல்லும் ஒரு சிறு தவறு. அது அழகிய ஒரு வாழ்க்கையினைச்சீரழிக்கும் 'விளைகை' ஆகிறது.

க.மோகனதாசன்.

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...