Wednesday, September 18, 2019

கிழக்கிலங்கையில் பெண் தெய்வ வழிபாட்டில் இசையின் வகிபங்கு : சிலப்பதிகார கானல்வரியில் குறிப்பிடப்படும் இசைச்சேதிகளை உள்ளடக்கிய ஆய்வு



அறிமுகம் :
  கிழக்கிலங்கைத் தமிழர் பண்பாட்டில் பெண் தெய்வ வழிபாடானது முக்கிய இடத்தினைப்பெறுகின்றது. பொதுவாக பெண் தெய்வ வழிபாட்டினை தாய்த் தெய்வங்கள், கன்னித் தெய்வங்கள் என இரு பிரிவுகளாக பிரிக்க முடியும். கிழக்கிலங்கைப் பெண் தெய்வ வழிபாட்டுப்பரப்பில் தாய்த்தெய்வங்களே அதிக முக்கியத்துவத்தினைப் பெறுகின்றன. பெண்களை தாய்மையின் வடிவமாகவும், வளமையின் குறியீடாகவும் பார்த்ததனால் பெண் தெய்வ வழிபாடு தாய்த்தெய்வ வழிபாடாக மாறியது. ஆண்தெய்வங்கள் மீதில்லாத பயமும் மரியாதையும் பெண் தெய்வங்கள் மீது அதீதமாக வெளிப்படுவதை இந்த வழிபாட்டு முறைகளிலிருந்து காண முடிகின்றது. இவ்வழிபாடுகளின் போது இசைக்கென்று ஒரு தனியிடம் உண்டு. ஒப்பீட்டளவில் அதிகமான பெண் தெய்வ வணக்க முறையும் அதற்காக அதிகளவான இசைப்பாடல்களையும் கொண்டமைந்திருப்பது கிழக்கிலங்கைப் பெண் தெய்வ வழிபாட்டின் சிறப்பம்சங்களாகின்றன. அத்தோடு சிலப்பதிகாரத்தில் பெண் தெய்வ வணக்க முறைகள், அதன் உருவாக்கற் பின்னணி என்பன பற்றி தெரிவித்திருப்பதோடு குறிப்பாக புகார்க்;காண்டத்தின் கானல்வரியில் இசை பற்றிய பல்வேறு செய்திகளையும் எம்மால் அறிய முடிகின்றது. இந்தப்பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலங்கையில் பெண் தெய்வ வழிபாட்டில் இசையின் வகிபங்கினை ஆய்வு செய்வதாக இந்த ஆய்வுக் கட்டுரையானது அமைகின்றது.


நோக்கங்கள்:
• கிழக்கிலங்கை பெண் தெய்வ வழிபாட்டில் இசையினையும் அதன் செயற்பாட்டுத் தளத்தினையும் புரிந்து கொள்ளல்.
• தாய்த்தெய்வ வழிபாட்டில் இசையின் இயங்கு நிலையினையும் அதன் தேவை குறித்தும் ஆராய்தல்.
• தமிழர் இசை மரபானது அறாத்தொடர்ச்சியுடன் பயணிக்கின்றது என்பதனை சிலப்பதிகார கானல்வரி இசைப்பாடல்களின் தன்மைகளுடன் ஒப்பிட்டு நோக்குதல்.
• தாய்த்தெய்வ வழிபாட்டில் பிரயோக நிலையில் இருக்கும் இசையின் ஆற்றல் குறித்த பிரக்ஞையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல்.

பெண் தெய்வ வழிபாடு:
     புராதன தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் ஆற்றல் நிலையை மூன்றாகப் பிரிக்க முடியும். அவை, கன்னி ஆற்றல், அன்னை ஆற்றல், முதுபெண்டிர் ஆற்றல் என்று அது வகையினைப் பெறும். இந்த ஆற்றல்களின் ஒட்டுமொத்தக் குறியீடாகவே தாய்த்தெய்வங்கள்  கொண்டாடப்படுகின்றன அல்லது வணங்கப்படுகின்றன. பொதுநிலையில் தாய்த்தெய்வ ஆற்றல்களாக கருதப்படுபவற்றை பின்வருமாறு குறிப்படமுடியும்.
• இயற்கையை ஏவல் கொள்ளுதல்: நெருப்பு, மழை, நீர், காற்று முதலியவற்றை ஏவல் கொள்ளும் ஆற்றல். 
• அணங்காற்றல்: எல்லை மீறிய சக்தி உடையதாக நம்பப்பெறுதல்.
• காத்தல், அழித்தல்: பகைவர், இயற்கை ஆகியவற்றிலிருந்து இனத்தைக் காத்தல், பகைவரை அழித்தல்.
• வருவது உரைத்தல்: எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் சக்தி உடையவராகத் திகழ்தல்.
• ஆற்றலை மீள உயிர்ப்புப் பெறச் செய்தல்: சடங்குகள், இசைப்பாடல்களால் ஆற்றலை உயிர்ப்புப் பெறச் செய்தல், மிகுதிப்படுத்திக்கொள்ளுதல்.
• வளமை, செழுமை: தம் இனத்தின் வற்றாத வளமைக்கும் செழுமைக்கும், இளமைக்கும் குறியீடாகத் திகழ்தல், வறட்சியைப் போக்குதல்.

      பரிணாம வளர்ச்சியில் இரண்டு கால்களால் நடக்கத் தொடங்கிய மனித இனத்தின் ஆறாவது அறிவுக்கு வாய்த்த முதல் அறிதல் அனுபவமாக அச்சம் காணப்படுகிறது. இயற்கையின் எல்லையற்ற ஆற்றலும் விநோதங்களும் ஆபத்துக்களும் மனிதனுக்கு தொடர்ச்சியாக அச்ச மூட்டிக்கொண்டே இருந்தன. பூமியின் கடைசி உயிரினமான மனிதர்களுக்கு கடவுள் தேவைப்பட்டதன் ரகசியமே இந்த அச்சம்தான். தனது பயிர்கள் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போவதை கண்டு பயந்த மனிதர் ஆடுவதன் மூலமும், பாடுவதன் மூலமும் தன்னையும் தனது பயிர்களையும் பாதுகாக்கலாம் என எண்ணினர். பலவிதமான ஒலிகளை எழுப்பிய அவர்கள் அதன் வளர்ச்சி போக்கில் இனிய இசையையும் கண்டடைந்தனர். இனம் புரியாத இனிமையில் திளைக்க வைத்த அந்த இசையினை இயற்கைச்சக்திகளை மகிழ்விக்கும் பொருட்டு அர்ப்பணம் செய்ததோடு அதற்கான சடங்குகளையும் உருவாக்கினர்.

    குறிப்பாக பழந்தமிழர் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனநிலையியிலிருந்து மாறி அச்சந்தரத்தக்க ஏதோ ஒன்று அதில் உறைகின்றது அதுவே நாம் அஞ்சத்தக்கது என்று கருதி, அச்சம் தருவதாகக் கருதிய அந்த ஆற்றலை, சூர் என்றும் அணங்கு என்றும் குறிப்பிடத்தொடங்கினர். அதாவது சூர் என்னும் சொல்லுக்கு அச்சம் என்றும் அணங்கு என்ற சொல்லுக்கு துன்பம் தருவது என்றும் பொருள்; கொள்ளப்படுகிறது. இதிலிருந்து அச்சம் தரும் தெய்வப் பெண் எனும் கருத்துக்கொண்ட ஆரணங்கு, சூரர மகள் என்பது  போன்ற கருத்தியல்கள் உருவாகின்றன. 

இது பற்றி தொல்காப்பியம்
      'அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப்
      பிணங்கல் சாலா அச்சம் நான்கே'
          (தொல்காப்பியம், பொருளதிகாரம்: மெய்ப்பாட்டியல்-8ஃ1)
   என அச்சமென்னும் மெய்ப்பாட்டிற்குக் காரண கர்த்தாக்களைக் குறிப்பிடுகின்றது. இதில் அணங்கு என்பதற்குப் பொருள் கூறும் பேராசிரியர், 'அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் அசுரர் ஈறாகிய பதினென்கணனும் நிரயப்பாலரும், பிறரும் அணங்குதற்றொழிலராகிய சவந்தின் பெண்டிரும் உருமிசைத் தொடக்கத்தனவும்' என்கிறார். அத்தோடு, 'கட்புலனாகாமல் தம்  ஆற்றலாற்றீண்டி  வருத்தும் சூர் முதலாய தெய்வங்களும் அணங்குதற்றொழிலுடைய பிறவுமாம்', என்று விரிவான கூறுவதன் வழியாக 'அணங்கு' எனப்படுவது, 'வருத்தும் திறன் கொண்ட தெய்வசக்திகள்' எனப்  புரிந்து கொள்ள முடியும்.
    நம்படப்பைச்
    சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து
    தாம்வேண்டு உருவில் அணங்குமார் வருமே .. .. (அகநானூறு. 158)

     என்ற அகநானூற்றின் பாடல்பகுதியில் அணங்கு தான் வேண்டிய உருவெடுத்து வரும் என்றும் இப்பொழுது மலைப்பூக்களைச் சூடிக்கொண்டு அணங்கு பெண்ணாக வந்திருக்கின்றாள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளமையை நோக்கும் போது அணங்கும் சூரும் விரும்பும் வடிவம் எடுக்க கூடியன என்ற அடுத்த கட்ட நம்பிக்கையாக அமைந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இத்தகு சூர், அணங்கு முதலான அச்சத்தைத் தரும் இயற்கை இகந்த ஆற்றல்களே பின்னர் பல கிளைகளாகக் கிளைத்துப் பல்வகை நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டுச் சடங்குகளாகப் பரிணாமம் பெற்றன. குறிப்பாகப் பழந்தமிழ் மக்களின் தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடக்கத்தை இத்தகு சூர், அணங்கு முதலான இயற்கை இகந்த ஆற்றல்களிலிருந்தே நாம் இனங்காண முடிகிறது.

 'மதியின் வெண்தோடு சூடும் சென்னி
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி, தவளவாள் நகைச்சி,
நஞ்சு உண்டு கறுத்த கண்டி, வெஞ்சினத்து
அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி,
வளியுடைக் கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய
அரியின் உரிவை மேகலை ஆட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை!
இரண்டு வேறு உருவின் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்
அமரி, குமரி, கவுரி, சமரி,
சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை
ஐயை, செய்யவள், வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை
ஆய்கலைப் பாவை, அருங்கலப் பாவை
தமர் தொழ வந்த குமரிக் கோலத்து
அமர் இளங்குமரியும் அருளினள் –
வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே'

    எனும் சிலப்பதிகார வரிப்பாடல் தாய்த்தெய்வத்தின் தோற்றம் அதன் வலிமை மற்றும் அத்தெய்வம் எடுக்கும் வடிவங்கள் என்பவற்றைக்கூறி நிற்கின்றது. மிக அமைதியாக வாழும் பண்பு கொண்ட பெண்கள் பாதிக்கப்படும் பொழுது, அவர்களின் வழமையான இயல்புக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில், வெகுண்டெழுந்து வெறிபிடித்தவர் போல நடந்து கொள்ளும் விதம் பிறருக்கு அச்சமூட்டும் வகையில் அமைந்துவிடும். பெண்களின் கர்ப்பப்பையில் நிகழும் மாறுதலுக்கும் கட்டுப்படுத்த முடியாத உணர்வின் வெளிப்பாடுகளுக்கும் தொடர்புள்ளது என உடலியல் மற்றும் உளவியல் மருத்துவர்கள் தெரிவிப்பதும் இங்கு நோக்குதற்குரியது. இந்தப்பின்னணியில் சங்க இலக்கியங்களில் கூட தாய்த் தெய்வத்திற்கு வெறியாடல் நிகழ்ந்தமைக்கான குறிப்புகள் உண்டு. அகநானூற்றுப் பாடல் (270) ஒன்று 'கடல் கெழு செல்வி' எனும் தாய்த் தெய்வத்திற்கு ஆடுமகள் ஒருத்தி வெறியாட்டு நிகழ்த்தியமையை விவரிக்கிறது.

கிழக்கிலங்கையில் பெண் தெய்வ வழிபாடும் இசையும் :

கிழக்கிலங்கை பெண்தெய்வ வழிபாட்டில் குறிப்பாக காளியம்மன், மாரியம்மன், பேச்சியம்மன், கண்ணகையம்மன், திரௌபதியம்மன், கடலாச்சியம்மன் போன்ற கிராமியத்தெய்வங்களே இங்கு ஆய்வுக்கான தெய்வங்களாக நோக்கப்படுகின்றன. சமஸ்கிருத மயமாக்கப்பட்ட பெண் தெய்வ வழிபாட்டு முறைகள் பற்றி இங்கு ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்றைய காலகட்டத்தில் நிறுவனமயமாக்கப்பட்ட சமஸ்கிருத, ஆகம நெறிப்பட்ட வழிபாடுகள் பல இருந்த போதும், இன்றும் நம் மக்களை பண்பாட்டின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் ஒரு பிடிப்புடனும் ஈர்ப்புடனும் இயங்க வைப்பது கிராமிய தெய்வ வழிபாடுகளே. ஏனெனில் இவ்வழிபாடுகள் எந்தவித மதக் கோட்பாடுகளுக்கும் உள்ளடங்காமல் ஆகம விதிகளுக்கு உட்படாமல் தங்களுக்கேயுரிய சடங்காசாரங்களுக்குட்பட்டு கிராம மக்கள் விரும்பிய வண்ணம் நிகழ்த்தப் படுகின்றன. இது தெய்வங்களுக்குத் தகுந்தவாறும் இடத்துக்குத்தகுந்தவாறும் வேறுபடும். ஒவ்வொரு தெய்வமும் தனக்கெனத் தனித்த வழிபாட்டு முறைகளைக் கொண்டிருக்கும். இவை பெரும்பாலும் ஆண்டிற்கு ஒரு முறையே இடம்பெறுகின்றன. 

     இவ் வழிபாடுகளில் தெய்வங்களை அலங்கரித்தல், பூசை செய்தல், படையல் போடுதல், நேர்த்திக் கடன் செலுத்துதல், ஆடியும் பாடியும் துதித்தல் போன்றவை வழிபாட்டு முறைகளாக அமைகின்றன. தெய்வங்களுக்கு ஆடு, கோழி போன்றவை பலியிடுவதும் வழிபாட்டு முறையாக அமைகின்றது. பலியிடப்படும் ஆடு, கோழிகள் ஆண் இனத்தைச் சேர்ந்தவையாகவே இருக்கும். 'பெண்ணினம் உற்பத்திக்கும் பெருக்கத்திற்கும் அவசியம்' என்பதால் அவ்வாறு பலியிடப்படுவது இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  இவ்வழிபாட்டில் தெய்வமேறி ஆடும் ஆட்டம் இடம்பெறும். ஒருவர் மீது அவருக்குரிய தெய்வத்தினை பூசாரி தன் மந்திரத்தினால் வரவழைக்க அக்குறிப்பிட்ட நபர் தன்னை அத்தெய்வமாக நினைத்து கையிலே சிலம்பணிந்து, வேப்பிலை தாங்கி அபிநயித்து ஆடுவார். பூசாரியின் உடுக்கடியும் பறையொலியும் பாடல்களும் அவர் ஆடலுக்கு அணிசேர்க்கும். இத்தோடு அம்மானைக்காய், சேகண்டி, சவணிக்கை என்பனவும் இத்தெய்வங்களை ஆடவைக்க இசைக்கப்படும் இசை வாத்தியங்களாகும். மக்கள் அவரைச் சாமி எனவும் தாயே எனவும் அழைத்து தம் குறை கூறி அத்தெய்வத்திடம் வாக்குக் கேட்டு ஆறுதல் பெறுவர். 

      தெய்வம் ஏறி ஆடுவோரை ஆட்டுவிக்க பாடப்படும் காவியம், தாலாட்டு, அம்மானை ஊஞ்சல் மற்றும் குளிர்த்தி பாடல்கள், இத்தெய்வ வழிபாட்டு முறைகளின் தனித்துவமான பாடல்களாகும். இப்பாடல்கள் உரிமையுடன் வேண்டுவதாகவும் நேரடியாக தாய்த்தெய்வங்களை அம்மா, அம்மா என நெருக்கமாக விழிப்பதாயும் அமையும். இது இப்பகுதி மக்களின் தனித்துவமான இசைப்பாரம்பரியமாக இருப்பதோடு மக்களின் துயர் துடைக்கும் மருத்துவ முறையாகவும் தொழிற்படுகிறது. சூட்சுமமான இசையின் ஆற்றல் இத் தெய்வ வழிபாட்டில் பிரித்து பார்க்க முடியாத வண்ணம் ஒன்றினைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகிறது. இந்த இசையுடன் கூடிய வழிபாடு மனதை ஒரு நிலை படுத்தி செம்மைப்படுத்தும் வல்லமை கொண்டது. கூட்டாக மக்கள் ஒன்றிணைந்து வழிபாடு செய்வதற்கான சூழ்நிலையினையும் இது இலகுவாக ஏற்படுத்திவிடுகிறது. மக்களை ஈடுபாட்டுடன் பேதா பேதமின்றி உள்ளிழுக்கும் வேலையையும் இது செய்து விடுகின்றது.

சிலப்பதிகார கானல்வரியில் இசைச்செய்திகள்:

     கானல்வரி என்பது சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டத்தில் அமைந்த கடற்கரைச் சூழலில் பாடப்படும் இசைப்பாடல்களாகும். தமிழ் இசை இலக்கண வரலாற்றை காட்டுவதான இப்பாடல்கள் இசைக்காரணம் எட்டுவகை, யாழின் மாட்சி, யாழின் உறுப்புகள், இசை ஏழால் எண்வகை என்பவற்றோடு கானல்வரி பண்களாகிய விளரி, செல்வழி, எனும் நெய்தல் நிலப்பண்களும், வரிப்; பாடல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

   வர்ணித்துப் பாடும் இசைப்பாடல்களே வரிப்பாடல்களாகும். துள்ளல், தூக்கல், அகவல், நடைபோட்டு ஒய்யாரமாய் ஓடுபவை. இது பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியின்றி மயங்க வருவதாகும். இத்தன்மையால் தெய்வம் சுட்டியும் இயற்கையை வருணித்தும்  பாடக்கூடிய வசதிபெற்றன இப்பாடல்கள்.  வரி என்பது பாடல், ஆடல் இரு கலைகளையும் குறிக்கும் ஒரு பொருள் சொல்லாக காணப்படுகிறது. சிலப்பதிகார வேட்டுவ வரி, ஊர்சூழ் வரி என்பன ஆடலையும், கானல் வரி பாடலையும் குறிப்பிடுவனவாகும். ஆற்றுவரி, சார்த்துவரி, முரிவரி, திணைநிலைவரி, மயங்கு திணைநிலைவரி, சாயல்வரி, முகமில்வரி என பல வகைப்பட்ட வரிப்பாடல்களை இளங்கோவடிகள் கானல்வரியில் பயன்படுத்தியிருப்பதைக் காணமுடிகின்றது.

     இயற்கையை வருணிப்பது ஆற்று வரி, தலைவரின் ஊரோடு பேரோடு சேர்த்து வருணிப்பது சார்த்துவரி, தன் உறுப்புகளால் பெயர்பெறல் முகமுடைய வரி மற்றும் முகமில்வரி, தெய்வத்தைப் பற்றியது தெய்வம் சுட்டியவரி என்பனவாக பொருள் கொள்ளப்படுகின்றது. முரிவரி என்பது தமிழர் தாள முறையையும் சந்தக்குறிப்பையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.  தகிதமி தகதிமி-தா, தகதிமி தகதிமி – தா என்ற மத்தளச்சொல்லும் தனதன தனதன-னா, தனதன தனதன – னா என்பதான சந்தக் குறிப்பும் வந்திருப்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது. மயங்கு திணைநிலை வரிப்பாடல்கள், சாயல் வரி என்பன இசையாலும் திணைத்திறத்தாலும் களிப்புற்று மயங்குதலைக்குறிக்கின்றன. தெய்வம் சுட்டிய வரிப்பாடல்கள் தெய்வத்தன்மை பொருந்தியனவாக அமையப்பெற்றிருக்கின்றன.

'அழலணங்கு தாமரை யருளாழி யுடைய கோ னடிக் கீழ்ச் சார்ந்து 
நிழலணங்கு முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்றும் போலும் 
தொழவணங்கு மன் புடையார் சூழொளியும் வீழ்கரியுஞ் சொல்லாவன் றே'

   எனும் தெய்வம் சுட்டிய பாடல் இதற்கு சான்று பகர்கின்றது. மேலும் இசைக்கான வரையறைகளையும் இப்பாடல்களில் காணலாம். பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், செலவு, விளையாட்டு, கையூள், குறும்போக்கு எனும் ஏழால் இசைத்தன்மை பற்றிக்குறிப்பிடுகின்றது. அத்தோடு இசைக்கரணம் என பாடல் தொழிலை குறிப்பிடும் போது அதற்காக வார்த்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்பவற்றையும் பரிந்துரை செய்கிறது.

     இக்கானல்வரிப்பாடல்கள் நாட்டார் பாடல்களில் தன்மையினைக்காண முடிகின்றது. அறுசீர் விருத்தம், கலிவிருத்தம் என இப்பாடல்கள் பெரும்பாலும் துறை விருத்தப் பாடல்களாகவே அமைந்துள்ளமை இதன் சிறப்பம்சமாகிறது.

சிலப்பதிகார கானல்வரியும் பெண் தெய்வ வழிபாட்டில் இசையும் :

  பெண்ணைக் காவிய நாயகியாக்குவது பெண்ணைத் தெய்வமாகப்போற்றுவது தமிழருக்கேயுரிய சிறப்பாகின்றது. சிலப்பதிகார வழக்குரை காதையில் கண்ணகியின் தலைவிரி கோலத்தைக் கண்ட வாயிற்காப்போன், பாண்டிய மன்னனிடத்தில் சொல்லும் போது வாசலில் வந்து நிற்கும் பெண் கொற்றவை அல்லள், காளி அல்லள், பிடாரி அல்லள் என்று பல பெண் தெய்வங்களின் பெயர்களை எல்லாம் சொல்லுகிறான்.

'வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை யல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்'

       என்ற பாடலில் இதனைக்காணலாம். சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு மட்டும் உரைக்கும் நூலன்று. பெண்ணுரிமை பேசும்  பேரிலக்கியமான சிலப்பதிகாரம் தமிழர்களின் மலையளவு இசையறிவை தெரிவிக்கும் ஈடிணையற்ற நூலாகும். சிலப்பதிகார கதையோட்டத்தில் அந்தக் கால கூத்து இசையையும், நாட்டார் இசையையும் அல்லது வாய் மொழி இசையையும் கதைக்குப் பொருத்தமான இடங்களில் அமைத்து பெருமை சேர்த்துள்ளார் இளங்கோவடிகள்.  சிலப்பதிகாரத்தில் வரும் கானல்வரிப்பாடல்கள் தமிழிசையின் பெருமையை தெரிவிக்கும் முக்கிய பகுதியாகும். பல்வேறு பண்களையும் இசைக்கருவி இசைக்கும் முறை, இசைக்கலைஞர்களின் வரையறை, எந்த சூழ்நிலைக்கு எப்படிப்பாட வேண்டும் என்ற திணைக்கொள்கைகள் பற்றியெல்வாம் மாதவி கூற்றாகவும் கோவலன் கூற்றாகவும் இப்பகுதி பேசுகின்றது. 

     பெருமைமிக்க ராகங்களில் ஒன்று பந்துவராளி ராகம். நாட்டுப்புற இசையிலிருந்து பிறந்த ராகங்களில் இதுவும் ஒன்று. பந்துவராளி என்றும் காமவர்த்தினி என்றும் இன்று அறியப்படுகின்ற இந்த ராகத்தின் பண்டைய தமிழ்ப் பெயர் சாதாரிப் பண். எல்லோரையும் கூப்பிடுகிற ராகம் என இது பெயர் பெறுகின்றது. ஆடு மாடுகளை மேயவிட்டு இடையன் சூரியன் மறைகிற நேரம் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டுவதற்கு உண்டாக்கும் ஒலியிலிருந்து பிறந்தது இந்த ராகம் என இசையறிந்தோர் கூறுவர். இந்த ஒலியிலிருந்து பிறந்த சாதாரிப்பண் தரும் சோக ரசத்தை மாலை வேளையில் கோவலன் பிரிவால் வாடும் மாதவி பாடுவதாக கானல் வரிப்பாடல்கள் சில அமைந்துள்ளன.

'ஆங்கனம் பாடிய ஆயிழை, பின்னரும்
காந்தள் மெல்லிரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச்செவ்வழிப்பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடி, ஓர் பண்ணும் பெயர்த்தாள்'

 எனும் கானல்வரிப்பாடல் கைக்கிளைக்கான செவ்வழிப்பாலை பண் பற்றிக்குறிப்பிடுகின்றது. உண்மையில் சிலப்பதிகாரம் காப்பியமாக உருவெடுத்தபின் நாட்டுப்புற மக்களிடம் கதையாகவும், நாடகமாகவும் கூத்தாகவும், இசைப்பாடல்களாகவும் உருப்பெறுகின்றன. அவற்றோடு இந்த இசை மரபுகளும் தொடர்ந்து நாட்டார் மரபினூடே நின்றியங்குவதை இந்த பாடல்களின் தன்மைகளைக்கொண்டு அறிய முடிகின்றது.

  கிழக்கிலங்கை கிராமிய பெண் தெய்வ வழிபாடானது பத்ததி முறையினை அடிப்படையாகக்கொண்டது. இதில் இசையானது முக்கிய பங்கினை வகிக்கின்றது. இது தமிழிசை மரபினடியான நாட்டார் இசையாக இருக்கின்றது. இது மக்களின் உள்ளக்கிடக்கையினை வெளிப்படுத்துவதாகவும் கட்டுக்கள் இல்லாததாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் செயற்படுகின்றது. இவை கானல் வரியில் வருகின்ற  'நிலை வரிப்பாடல்கள்' வகையைச் சார்ந்ததாகவேயுள்ளன. இப்பாடல்கள் உள்ள நிலையை உள்ளபடி தெரியப்படுத்தும் பாடல்களாகும். 

 சார்த்துவரிப்பாடல்கள் பாட்டுடைத்தலைவரை ஊரோடு இணைத்து வர்ணித்துப்பாடுவதாகும். இது முகச்சார்த்து, முரிச்சார்த்து, கொச்சகச்சார்த்து என மூன்று வகைப்படும். தாய்த்தெய்வ வழிபாட்டில் பெரும்பாலும் முகச்சார்த்துவரி வகைப்பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக்காண முடிகின்றது.

திங்கள் மாலை வெண்குடையான்
    சென்னி செங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்
    றறிந்தேன் வாழி காவேரி.

     எனும் முகமுடை வரிப்பாடல்களின் செல்வாக்கினை  தாய்த்தெய்வங்களை விழித்துப்பாடும் பாடல்களில் காண முடியும். தமிழிசையில் ஒரு பெரும் பண் பாடி அதன் திறம் பாடுவதற்கு வழித் திறம் பாடுதல் என்று பெயர் பெறும்.

'குழகனும் யாழினும் குரல் முதல் ஏழும்
வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்'

   எனும் சிலப்பதிகார ஆதாரம் இதனைத் தெரிவிக்கின்றது. இம்மரபினை கிழக்கிலங்கை பெண்தெய்வ வவணக்க வழிபாட்டுப்பாடல்களிலும் காணக்கூடியதாகவிருக்கின்றது. கோடி ஜெபம் தியானத்திற்கு சமானம்; கோடி தியானம் லயத்திற்கு சமானம்; கோடி லயம் கானத்திற்கு சமானம்; கானத்திற்கு சமானம் வேறில்லை என்று சொல்வதுண்டு. பக்தி என்பது ஒன்றுடன் நாம் ஒன்றுவது. பக்தி என்பதைக் கடவுள் நம்பிக்கை என்று பார்த்தாலும் அல்லது ஒன்றின் மேல் நாம் வைத்திருக்கும் தீவிர ஆசை என்று பார்த்தாலும், கடவுள் நம்பிக்கை இருப்பவர்களையும், இல்லாதவர்களையும் தன்னை மறக்கச் செய்வது இசை. கிழக்கிலங்கை தாய்த்தெய்வ வணக்க முறைகளில் பாடப்படும் பாடல்களால், இசைக்ககப்படும் இசை வாத்தியங்களால் பக்தர்கள் தம்மை மறந்து தாமும் இசையாக ஆடுவதையும் பாடுவதையும் காண முடிகின்றது. இது கானல் வரி குறிப்பிடுகின்ற மயங்கு திணைநிலை வரிப்பாடல்கள், சாயல் வரிப்பாடல்கள் என்பன குறிப்பிடும் இசையாலும் திணைத்திறத்தாலும் களிப்புற்று மயங்குதலைக்குறிப்பதாகவே அமைந்துள்ளது.

முடிவுரை : 

  கிழக்கிலங்கைத் தமிழர் பண்பாட்டில் முக்கிய இடத்தினைப்பெறும் பெண் தெய்வ வழிபாடானது தன்னகத்தே பல சிறப்பம்சங்களைக்கொண்டு காணப்படுகின்றது. இன்று நிறுவக மயமாகிப்போன ஆகமம் சார் வழிபாடுகளின் பின்னணியில் இத்தமிழ் மக்கள் தங்கள் உணர்வு நிலையோடு கொண்டாடும் தெய்வங்களாக கிராமியத்தெய்வங்கள் விளங்குகின்றன. மதங்கள் மதத் தீவிரவாதமாக புகட்டப்படும் இக்காலத்தில் அது வாழ்வியலுக்கானது என்பதை தெரிவிப்பதும் இந்த கிராமிய வழிபாட்டு முறைகளே. இதிலும் குறிப்பாக தாய்மையின் வடிவமாகவும், வளமையின் குறியீடாகவும் திகழும் பெண் தெய்வ வழிபாடு கிழக்கிலங்கை தமிழர் பாரம்பரியத்தோடு இரண்டறக்கலந்திருப்பதோடு தமிழ்ப்பாரம்பரியத்தை சடங்கினடியாக இயங்கு நிலையில் இன்னும் வைத்திருக்கின்றது.

    கிழக்கிலங்கை பெண் தெய்வ வழிபாட்டில் இசைக்கென்று தனியிடம் உண்டு, நாட்டார் இசை வடிவங்களான காவியம்;, தாலாட்டு, கும்மி, சிந்துநடை போன்ற பாடல் வகைகளும் பறை, உடுக்கு, சவணிக்கை, சிலம்பு போன்ற வாத்தியப்பாவனைகளும் இவ்வழிபாட்டு முறைகளில் முக்கிய இடத்தினைப்பெறுகின்றன. குறிப்பாக இச்சடங்குகளை இயங்கு நிலையில் வைத்திருப்பதற்கு இவ் இசை முறையே ஆதாரமாகின்றது. இந்த இசை மரபானது இன்று நேற்று வந்ததல்ல. ஆதியாம் தமிழரின் தமிழிசை மரபினடியாகவே இது எமக்கு கிடைத்திருக்கின்றது. இதற்கு பல ஆதாரங்கள் உண்டு. அதில் ஒரு விடயத்தினை ஒப்பிட்டு நோக்குவதாகவே இவ் ஆய்வு அமைந்திருக்கின்றது. இதன் மூலம் தமிழிசையானது தொடர்ந்து நிலைத்து நிற்றலில் இந்த கிராமியத்தெய்வ வணக்க முறையானது முக்கிய வகிபங்கினை எடுத்திருப்பது நிரூபணமாகும் அதே வேளை, இவ்வழிபாட்டில் பயன்படுத்தும் இசை மரபின் செழுமையும் பழமையும் உணரப்படுகின்றன. 



க.மோகனதாசன், 
சிரேஸ்ட விரிவுரையாளர்,
சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக் கழகம்.

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...