Saturday, November 9, 2019

ஸ்டீஃபன் ஹாக்கிங் - My Inspiration


ஐன்ஸ்டினுக்குப் பிறகு விஞ்ஞான உலகிலிருந்துகொண்டு பிரபஞ்ச புதிர்களின் முக்கியம் எனக் கருதப்படும் கருந்துளை குறித்து தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த ஓர் அதிசய மனிதர் தன்னுடைய 76 வது வயதில் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.

Tuesday, October 29, 2019

கையாலாகா பொம்மைகள்...


ஆழ்துளையினை நிரப்பிக்கொண்டிருந்த
துயரமெல்லாம்
யார்யாரோ ஏறிக்குந்தியிருக்கும் பெருமலைகளாயின!
அந்த அந்தகாரத்தில் சிலர்
தமக்குரிய வெளிச்ச ஆடையினை நெய்து கொள்வதற்காய்
சிறிது நேரமெடுத்துக்கொண்டனர்.
அதற்காகக் கொண்டுவரப்பட்டன
கையாலாகா பொம்மைகள்.
- க.மோ.




Monday, October 21, 2019

மழையில் நனைதல்....2


                               ஒரு தீரா நினைவைக் கிளறும் தீரா மழை
                               கையோடு என் கடந்த காலத்தை
                               அழைத்து வந்திருந்தது!

                               இந்த மழையோடு நான் பேசும் வார்த்தைகள்
                               ஒரு பெருங்குரலெடுத்து
                               தொண்ணூறுகளின் அவலங்களைத் தொட்டுச்செல்லும்
                               ஆனாலும் இந்த மழை
                               என் மனதோடு இயல்பாகப் பேசுகிறது!

                               ஒரு ஆழ் நினைவை கொண்டு வந்திருந்த
                               மழையை வரைந்து கொண்டிருந்தவனும்
                               நனைந்து கொண்டிருந்தான்
                              அதீதங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டிருந்த நானோ
                              நனவிடைத் தோய்ந்துகொண்டிருந்தேன்!

Sunday, October 20, 2019

மழையில் நனைதல்....1



                                மழையின் அர்த்தமெது என அகராதியில்
                                தேடியலைந்தவர்களுக்கு - அது
                                தன்னை எழுதிச் சென்றது
                                ஒரு அழகிய கவிதையாய்

Wednesday, September 18, 2019

கிழக்கிலங்கையில் பெண் தெய்வ வழிபாட்டில் இசையின் வகிபங்கு : சிலப்பதிகார கானல்வரியில் குறிப்பிடப்படும் இசைச்சேதிகளை உள்ளடக்கிய ஆய்வு



அறிமுகம் :
  கிழக்கிலங்கைத் தமிழர் பண்பாட்டில் பெண் தெய்வ வழிபாடானது முக்கிய இடத்தினைப்பெறுகின்றது. பொதுவாக பெண் தெய்வ வழிபாட்டினை தாய்த் தெய்வங்கள், கன்னித் தெய்வங்கள் என இரு பிரிவுகளாக பிரிக்க முடியும். கிழக்கிலங்கைப் பெண் தெய்வ வழிபாட்டுப்பரப்பில் தாய்த்தெய்வங்களே அதிக முக்கியத்துவத்தினைப் பெறுகின்றன. பெண்களை தாய்மையின் வடிவமாகவும், வளமையின் குறியீடாகவும் பார்த்ததனால் பெண் தெய்வ வழிபாடு தாய்த்தெய்வ வழிபாடாக மாறியது. ஆண்தெய்வங்கள் மீதில்லாத பயமும் மரியாதையும் பெண் தெய்வங்கள் மீது அதீதமாக வெளிப்படுவதை இந்த வழிபாட்டு முறைகளிலிருந்து காண முடிகின்றது. இவ்வழிபாடுகளின் போது இசைக்கென்று ஒரு தனியிடம் உண்டு. ஒப்பீட்டளவில் அதிகமான பெண் தெய்வ வணக்க முறையும் அதற்காக அதிகளவான இசைப்பாடல்களையும் கொண்டமைந்திருப்பது கிழக்கிலங்கைப் பெண் தெய்வ வழிபாட்டின் சிறப்பம்சங்களாகின்றன. அத்தோடு சிலப்பதிகாரத்தில் பெண் தெய்வ வணக்க முறைகள், அதன் உருவாக்கற் பின்னணி என்பன பற்றி தெரிவித்திருப்பதோடு குறிப்பாக புகார்க்;காண்டத்தின் கானல்வரியில் இசை பற்றிய பல்வேறு செய்திகளையும் எம்மால் அறிய முடிகின்றது. இந்தப்பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலங்கையில் பெண் தெய்வ வழிபாட்டில் இசையின் வகிபங்கினை ஆய்வு செய்வதாக இந்த ஆய்வுக் கட்டுரையானது அமைகின்றது.

Saturday, July 6, 2019

மாணவர்களுக்கு ஒரு தெளிவான கற்றல் அனுபவத்தை தரவல்லது...


வாழ்த்துரை



பல்துறை ஆற்றல் மிகு ஆசிரியனாக திகழும் நண்பன் நாகேந்திரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது பல்கலைக்கழகம் என்றாலும் அவரது ஆளுமையும் சிந்தனைப்போக்குமே அவரின் தோளில் கைபோட்டுக்கொண்டு தொடர்ச்சியாக பயணிப்பதற்கான பாதையினை உருவாக்கித்தந்திருந்தன. பல்கலைக்கழக காலங்களில் இவர் பங்கு பற்றிய பல்வேறு ஆற்றுகைகளும் காத்திரமான நாடகம் சார் ஆய்வரங்குகளும் இவர் யார்? இவரது ஆற்றல் என்ன? இவரது கருத்துலகம் என்ன? என்பதை சரியாக அடையாளம் காட்டியிருந்தன. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நண்பன் நாகேந்திரன் மிக ஆழமான புலமைத்தேர்ச்சியுள்ளவன் என்பதை அவரோடு கதைக்கும் சிறிது நேரத்திலேயே அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.

Monday, July 1, 2019

மண்வாசனையை அள்ளி வார்த்தைகளிலும் சித்தரிப்புக்களிலும் அப்பியிருக்கிறார்...

பாரத்தின் 'துளிர் இலை' சிறுகதை நூலுக்கான அறிமுகக் குறிப்பு...


  படைப்பாளிகள் பல்வேறு தளங்களில் தமது அனுபவங்களை படைப்புக்களாக வெளியிடுகின்றனர். மனித வாழ்வியலை படைப்புக்களினூடாக சொல்லும் போது சில அனுபவங்கள் பொது அனுபவங்களாகவும் ஆகிவிடுகின்றன. அவ்வாறான பொது அனுபவங்கள் அப்படைப்பின் அங்கீகாரத்தினை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றுவிடுகின்றன. ஒரு சிறு செய்தியை அல்லது சிறு அனுபவத்தைக் கருவாகக் கொண்டு உரைநடையில் எழுதப்படுவதே சிறுகதையாகும். சிறுகதைகள் தனித்தன்மையைப் பெற்றிருப்பதற்குக் காரணம் பாத்திரங்கள் உணர்வுகளை சொல்லும் விதத்தை மிகச் சரியாகக் கையாள முடியும் என்பதனாலாகும்.

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...