Monday, July 1, 2019

மண்வாசனையை அள்ளி வார்த்தைகளிலும் சித்தரிப்புக்களிலும் அப்பியிருக்கிறார்...

பாரத்தின் 'துளிர் இலை' சிறுகதை நூலுக்கான அறிமுகக் குறிப்பு...


  படைப்பாளிகள் பல்வேறு தளங்களில் தமது அனுபவங்களை படைப்புக்களாக வெளியிடுகின்றனர். மனித வாழ்வியலை படைப்புக்களினூடாக சொல்லும் போது சில அனுபவங்கள் பொது அனுபவங்களாகவும் ஆகிவிடுகின்றன. அவ்வாறான பொது அனுபவங்கள் அப்படைப்பின் அங்கீகாரத்தினை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றுவிடுகின்றன. ஒரு சிறு செய்தியை அல்லது சிறு அனுபவத்தைக் கருவாகக் கொண்டு உரைநடையில் எழுதப்படுவதே சிறுகதையாகும். சிறுகதைகள் தனித்தன்மையைப் பெற்றிருப்பதற்குக் காரணம் பாத்திரங்கள் உணர்வுகளை சொல்லும் விதத்தை மிகச் சரியாகக் கையாள முடியும் என்பதனாலாகும்.

      சிறுகதை என்பது அளவில் சிறியதாய் முழுமை பெற்று இருக்க வேண்டும், தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும். சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை. விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரல் கூடாது. குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டும். சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும். நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும். என்பது சிறுகதைகளுக்கிருக்க வேண்டிய பொதுவான சில விதிகளாகும்.

         இந்தப் பின்னணியோடு பாரத்தின் சிறுகதைகளை அவதானிக்கும் போது இத்தன்மைகளோடு இணைந்ததாகவும் இன்னும் வேறு சில தளங்களில் பயணிப்பதாகவும் அமைந்திருக்கின்றன. பாரத், தான் அன்றாட வாழ்வில் அனுபவித்த, கண்முன்னே நடந்த, நடக்கின்ற பல விடயங்களை தனக்குள் உள்வாங்கி தனதாக இருந்த அனுபவத்தினை பரவலாக்கம் செய்திருக்கின்றார். இது பெரும்பாலும் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வலியாக இருப்பதைக் காண முடிகின்றது. இவர் ஒன்றும் கற்பனைக் குதிரையில் பறந்து கற்பனை மாந்தர்களையோ சாகசக் கதைகளையோ இங்கு உரைக்கவில்லை. தரையில் நின்று கொண்டே பேசுகின்றார், தனது மண்ணின் புழுதி வாசனையுடன் நின்று கொண்டே கதை சொல்கிறார். 

    இவரது சிறுகதைகளை வாசிக்கும்போது சம்பவத்தோடு எம்மை அழைத்துச் செல்லும் முறைமை நிஜங்களுக்குள் நுழைவதான உணர்வை நமக்குக் தருகிறது. சிறுகதையில் உச்சநிலை என்பது வாசகர்கள் எதிர்பார்க்காத வகையில் அல்லது உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சியில் கதையை முடித்தலாகும். உச்சநிலையே படைப்பாளரின் தனித்தன்மையை வெளிப்படுத்தும். கதை சொல்லலிலும் சம்பவக் கோர்வைகளிலும் ஆங்காங்கே சில பலவீனங்கள் இவரது சிறுகதைகளில் எட்டிப்பார்த்தாலும் கதையின் கனதி அவற்றினை மறைத்துவிடுகிறது. 

      கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் பாதிப்பு, பெற்றோரை, கணவனை இழந்த பெண்களின் கையறுநிலை, சூழ்நிலைக்கைதிகளாக மாற்றப்பட்டிருக்கும் மண்ணின் மாந்தர்கள், இடப்பெயர்வு வாழ்வு, வறுமை நிலை எனப் பல்வேறுபட்ட வேதனைகளோடு இவரது சிறுகதைகள் பிறப்பெடுத்திருக்கின்றன.

        'இந்தக் கொட்டில் வீட்டுக்கே இப்படிக் கத்துறியே நானும் தானே பெரிய மாளிகை போல் வீட்டைக் கட்டி விட்டுட்டு வந்திருக்கன்' எனும் இடப்பெயர்வு வாழ்வின் வேதனையினை 'புது விடியலுக்காக' எனும் சிறுகதையில் பதிவு வெய்திருக்கிறார். தொடர்ந்து அதே கதையில் 'முகமாலை சண்டையில தாய் தந்தையை இழந்ததும் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இடம்பெயர்ந்த மக்களோடு மக்களாக யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தான். யாழ்ப்பாணத்திலும் சண்டை தொடங்கியது. எங்கு செல்வது என்று தெரியாமல் யாழ்ப்பாணச் சனங்களுடன் கட்டுடைக்குச் சென்றான்' என்ற வசனங்கள் நிஜமான ரணங்களிலிருந்து உருவான வார்த்தைகளாகும்.

      'வேரில்லாத ரோஜா' எனும் சிறுகதையானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி படும் அவலங்களைச் சித்தரித்து நிற்கின்றது. 'மாப்பெட்டியை எடுத்தாள். அது நேற்றுத்தான் முடிந்தது என்று அவள் மறந்து போய்விட்டாளோ தெரியவில்லை. அதனுள் ஒன்றும் இல்லாததைக் கண்டு அவளது கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் பெருகின' என்பது பல பெண்களின் யதார்த்த நிலையினைக் கோடிட்டுக் காட்டுகின்றது. 'அது இவளின்ற பிழையில்ல கடைசிச் சண்டைக்கு பிடிச்சிடுவாங்க எண்டு சின்ன வயசிலேயே பானுயாவிற்கு கல்யாணம் செஞ்சுவச்சாங்க அந்த சண்ட முடிகிறத்துக்குள்ள பானுயாவின் கணவர் இறந்து விட்டார், முள்ளிவாய்க்கால் சண்டையில அவள்ர தாய், தகப்பனும் இறந்து போயிற்றினம்' எனத் தொடர்ந்து 'வேரில்லாத ரோஜாவின்' அவலப்பின்னணியினைக் கூறுகின்றார்.

   'காத்திருக்கும் ஜீவன்' எனும் கதையில் விசாரணைக்காக அழைத்துச் சென்று இன்னும் விடப்படாமல் இருப்பவர்களுக்காகக் காத்திருத்தலை அச்சமூகப் பின்னணியுடன் தந்திருக்கிறார். 'இப்ப எல்லாம் சரியாயிட்டுது வாற புதன் வீட்ட வந்திடுவன் என்ற சொல்லுக்காகவே அவள் காத்துக் கொண்டிருந்தாள்... ஆனால் ஆறுவருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் அவன் வரவில்லை. அவள் இன்றும் அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள்' என்பது எம்மத்தியில் இருக்கும் எத்தனையோ பேரின் உணர்வலைகளின் பதிவாகும்.

    'பள்ளிப்பருவம்' எனும் சிறுகதையில் அப்பா இல்லாத அவலத்தையும், படிக்காமல் கவனத்தை சிதறவிட்டால் ஏற்படுகின்ற கஸ்டத்தையும் காட்டியிருக்கிறார். 'அப்பா இருந்தா நீ வேலைக்கு போகத் தேவையில்ல. இப்ப நீ வேலைக்குப் போகாட்டி குடும்பம் நடுரோட்டிலதான் நிற்கும். ஆனா நீ கொஞ்சம் கூடப் படிச்சிருந்தா இப்படி கஸ்ரப்படத் தேவையில்ல' என்பதன் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தினை விளக்குகின்றார்.

         'துளிர் இலை' எனும் சிறுகதையில் சாதிப்பிரிவினை பற்றியும் சிலர் எமது இயலாமைகளை மூலதனமாக்கி தமது சௌகரியங்களைப் பாதுகாத்துக் கொள்வது பற்றியும் தோலுரித்துக் காட்டுகின்றார். 'இன்னொரு மகன்' எனும் கதையில் யுத்தத்தில் மகனை இழந்த தாயின் மனநிலை காட்டப்படுகிறது. 'எங்க தம்பி எங்க என்ர மகன் எங்க என்ன தேடி வந்துட்டானா?' என இல்லாத மகனுக்காகத் தாய் ஏங்கும் போது எங்கோ ஓர்  மூலையில் எமக்கும் வலிக்கிறது.

    தாயை இழந்த மகன் படும் சோகம், விபத்துக்களால் உருவாகும் பாதிப்புக்கள் சகோதர்களுக்கிடையிலான பாசப் போராட்டம் எனப் பல உணர்வுகளையும் தனது சிறுகதையின் கருக்களாக மாற்றியிருக்கிறார். தனது மண்வாசனையை அப்படியே அள்ளி வார்த்தைகளிலும் சித்தரிப்புக்களிலும் அப்பியிருக்கிறார். வாழ்க்கை அனுபவம், வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் ஆர்வம் என்பனவற்றால் இவரது சிறுகதைகள் நிஜங்களின் வலிகளாக சம்பவங்களைப் பதிவுசெய்கின்றன. வாசித்து முடித்தவுடன் சில பெருமூச்சுக்கள் எம்மையறியாமல் மேலெழுவது தவிர்க்க முடியாததாகின்றது.



க.மோகனதாசன்

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...