Saturday, July 6, 2019

மாணவர்களுக்கு ஒரு தெளிவான கற்றல் அனுபவத்தை தரவல்லது...


வாழ்த்துரை



பல்துறை ஆற்றல் மிகு ஆசிரியனாக திகழும் நண்பன் நாகேந்திரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது பல்கலைக்கழகம் என்றாலும் அவரது ஆளுமையும் சிந்தனைப்போக்குமே அவரின் தோளில் கைபோட்டுக்கொண்டு தொடர்ச்சியாக பயணிப்பதற்கான பாதையினை உருவாக்கித்தந்திருந்தன. பல்கலைக்கழக காலங்களில் இவர் பங்கு பற்றிய பல்வேறு ஆற்றுகைகளும் காத்திரமான நாடகம் சார் ஆய்வரங்குகளும் இவர் யார்? இவரது ஆற்றல் என்ன? இவரது கருத்துலகம் என்ன? என்பதை சரியாக அடையாளம் காட்டியிருந்தன. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நண்பன் நாகேந்திரன் மிக ஆழமான புலமைத்தேர்ச்சியுள்ளவன் என்பதை அவரோடு கதைக்கும் சிறிது நேரத்திலேயே அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.

அவரது ஆளுமைக்கும் பல்திறனுக்கும் சாட்சியாக பல விடயங்களை கூற முடியும். அதில் ஒன்றாகவே இந்த நூலுருவாக்கத்தினையும் பார்க்கிறேன். தனது அனுபவத்தையும் செயற்பாட்டுடன் கூடிய நாடகப்புலமையினையும் அடுத்த தலைமுறையோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கில் அவர்களுக்குத்தேவையான வழியில் ஒரு நூலாகத் தந்திருக்கிறார். இது தரம் 9 மாணவர்களுக்கு மாத்திரமன்றி நாடகமும் அரங்கியலும் கற்கின்ற மாணவர்கள் எல்லோருக்கும் ஒரு ஆதார நூலாக இருக்கும் என்பதில் இரண்டு கருத்துக்கள் கிடையாது.


ஒரு சிறந்த கார்டூனிஸ்ட் நாலைந்து கோடுகளிலேயே ஒரு உருவத்தை அதன் உணர்வை அதற்கான அனுபவத்தை வரவழைத்து விடுவான். அதே போல் சுருக்கமாக மிகத்தெளிவாக இந்நூலில் விடயங்களை தெரிவித்திருக்கின்றார் நாகேந்திரன். இவரது நிறைந்த வாசிப்பினாலும் அரங்க செயற்பாட்டுத்திறன் சார்ந்த அறிவினாலும் நாளுக்கு நாள் தனக்குள்ளேயே ஏற்படுத்திக்கொள்ளும் புதிய மாற்றங்களின் பதிவேற்றத்தினாலும் இது சாத்தியமாகியிருக்கிறது. மாணவர் நலன் கருதி கற்றல், கற்பித்தல் கருவியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூல் மாணவர்களுக்கு ஒரு தெளிவான கற்றல் அனுபவத்தை வழங்குவதோடு கற்றலில் உள தைரியத்தையும் நம்பிக்கையினையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. துறைசார் அனுபவத்தை உறைநிலையில் பேணாது தன்னையும் வளர்த்து தனது அனுபவங்களை ஆற்றல்களை மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்கின்ற நண்பன் நாகேந்திரனுக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...