Tuesday, April 14, 2020

ஒரு அனர்த்த காலத்துப் புல்லாங்குழல்


செவிகளை அடைக்கும் பேரிரைச்சலாக
மௌனம் தெருவிலே குந்தியிருக்க...
வீட்டின் நிழல் தரும் தகிப்பு - ஒரு
வெட்டவெளி வெயிலின் குளிர்ச்சியைத் தேட...
ஒரு அனர்த்த காலத்துப் புல்லாங்குழல்
இறந்த காலத்தின் இசையை
எங்கிருந்தோவெல்லாம் மீட்டெடுத்துப் பாட...

பயம் கொள்ளச்செய்யும் பாசாங்குகள்
மனதை மூழ்கடித்து தலையெடுக்க முடியாமல்
அர்த்தமிழந்த அலைகளை எழுப்பிக்கொண்டெயிருக்க...
அரூபம் ஒன்று நம் தைரியத்தின் மீது
விஷ நாவினை நீட்டுகிறதா?
அர்த்த மாயைகளைத் தாண்டி
அடங்க மறுத்த அந்தகாரத் திசைகளை
திடம் கொண்ட தீட்சண்ய நெருப்பினால்
ஒரு எல்லையற்ற சுதந்திரத்தின் பேரிரைச்லோடு
வாழ்வை வசந்தமாகப் புரட்டிய - நீ
இன்று
அனுமானங்களுக்கு
பிரத்தியேக சட்டகங்களை மாட்டிவிட்டு
மயங்கி விழுகிறாய்!
எழு
உன்னை மீண்டும்
ஒழுங்காக அடுக்கிக்கொள்
புத்தாண்டில் புதுத்தெம்பு கொள்
புயல் வீசும் மரத்திலும்
கூடு கட்டத் துணிவு கொள்
கையில் இருக்கும் வாழ்வினை
சரியாக வாசித்தால் புதிர்களும் பதில்களாகும்!
க.மோ.

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect