Tuesday, April 14, 2020

வான்காவின் 'நட்சத்திர இரவு – 1889'


இன்றைய சூழலில் வான்காவின் 'நட்சத்திர இரவு – 1889' ஓவியம் பெருங்குரலெடுத்து என்னோடு பேசுகிறது..


நான் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பேராசிரியர் மௌனகுரு sir அவர்கள் விரிவுரைக்காக எனக்குத் தரும் பாடங்கள் பெரும்பாலும் கலை வரலாறு, ஓவிய வரலாறு என்பனவாகவே இருக்கும். வான்கா, கோகான், மொனே, செசான், சல்வடோர் டாலி, பிக்காசோ, ரெனே மக்ரித், லியனாடோடாவின்சி, மைக்கல் அஞ்சலோ, றபாயல், ஆதிமூலம், தனபால், அல்போன்சா, மூக்கையா, மார்க் மாஸ்டர், ஜோர்ஜ் கீத், மங்சுசிறி என நிறைய ஓவியர்களும் அவர்களது ஓவியங்களும் எனக்கு அப்போது அறிமுகமாயின. சிலரது சில ஓவியங்கள் அப்படியே மனதில் ஒட்டிவிடும். பிக்காசோவின் குவார்ணிகா, சல்வடோர்டாலியின் வடிந்தொழுகும் கடிகாரங்கள், வான்காவின் சூரியகாந்தி, கோகானின் சூரியோதயம், மைக்கல் அஞ்சலோவின் ஆதாமின் படைப்பு, ரெனே மக்ரித்தின் பைரனீஸ் கோட்டை போன்றன சில உதாரணங்கள்.


வான்காவின் ஓவியங்களில் தெரியும் அசைவை, அது தரும் உணர்வை அவரது பல ஓவியங்களில் அனுபவித்திருக்கிறேன். அவரது சுயபிரதிமை குறிப்பாக அவர் தற்கொலை செய்யுமுன் வரைந்த ஓவியம் என்பன சத்தமிட்டுக் கதறிய வார்த்தைகள் அதிகம். ஆனால் 'இந்த நட்சத்திர இரவு' அப்போது என்னோடு அவ்வளவாகப் பேசவில்லை. ஆனால் இன்று மிகப்பெருங்குரலெடுத்துப் பேசுகிறது. டேய் மனிதா பிரபஞ்ச சக்தியை மீறி உன்னால் என்ன செய்துவிட முடியும்? மூன்றில் இரண்டு பங்கு ஓவியத்தை ஆக்கிரமித்திருக்கும் அசையும் நட்சத்திரங்கள், இடது பக்கம் பிரமாண்டமாய் அசையும் மரம், நடுவே நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கும் மலை மொத்தத்தில் இயற்கையின் ஓயாத பேரியக்கம் அதிலே தெரிகிறது. ஆனால் அசையாமல் நிற்கும், விழாக் கலகலப்பு வெளியேறிய குடியிருப்புக்கள் அசைவற்றுக் கிடக்கின்றன. மொத்தத்தில் நாம் இங்கே இருக்கிறோம் என சொல்லிக்கொண்டேயிருக்கிறோம் ஆனால் நமது செயல்களால் அசாத்தியங்கள் நீங்கள் இங்கில்லையென நம் முதுகிலறைந்து கூக்குரலிட்டுக்கொண்டிருக்கின்றன.

க.மோ.

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect