Friday, January 17, 2020

வீர இராசமாணிக்கம் அண்ணாவியாரது கூத்துப்பிரதிகளுக்கான அணிந்துரை

பாரம்பரியமெனும் செழுமை நிலத்தில் ஆழ வேரூன்றி நிற்கும் பெருமரமாய்  வீர இராசமாணிக்கம் அண்ணாவியார்


பாரம்பரியக்கலைகளின் உள்ளார்ந்த விழிப்பும் தேடலும் உள்ளவர்களது படைப்புலகம் அவர்களது விழிப்பினடியாகவே விரிகிறது. இது இக்கலைசார் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுவோருக்கு ஒரு பாதையினையும் உருவாக்கித்தருகின்றது. காலனித்துவம் உருவாக்கிக் கொடுத்த தற்காலிக சௌகரிய கொட்டில்களில் தஞ்சமடையாமல், பாரம்பரிய படைப்புலகை நிர்மாணிக்கும் பெரும் பொறுப்புக்களை சிலர் ஆங்காங்கே நிறைவேற்றியும் வந்திருக்கின்றனர். அந்த வகையில் பாரம்பரிய இலக்கியப் படைப்பு வெளியில் தனக்கான படைப்புப் பயணத்தை அப்பண்பாட்டுக்குரிய தன்மைகள் கெடாதவாறு மேற்கொண்டு வருபவர் அண்ணாவியார் வீர இராசமாணிக்கம் அவர்கள்.


நனவு மனம், நனவிலி மனம், ஆழ்மனம் என்றான மனித மன அடுக்குகளில் ஆழ்மனம், தொன்மமாகத் தொடரும் படிமங்களின் உறைவிடமாக இருக்கிறது. அவற்றின் வியப்பையும் திகைப்பையும் இலக்கியமாக்கும் கலை மனம் வீர இராசமாணிக்கம் அண்ணாவியாருக்குச் சொந்தமானது. மரபும் நவீனமும் கலந்துறவாடும் படைப்பு சக்தியும் நாம் கூத்துப்படைப்புலக இலக்கிய வெளிக்குள் பிரவேசிப்பதற்கான இலகுவான வழியைக்காட்டும் தன்மையும் கொண்டது இவரது படைப்பு வெளி. அது தனக்குள்ளே பிரவாகம் கொள்கின்றது, நம்மையும் அதில் நனையச்செய்கிறது. தன்னிச்சையாக கலையை, படிமங்களை உருவாக்குகின்ற சக்தி பாரம்பரியக் கலைகளுக்குண்டு. அக்கலைகள் அழிய நேர்ந்தால் நவீன கலைகளின் ஒரு முக்கியமான வேர்நிலம் அழிகின்றதென்றே பொருள். இலக்கியத்திற்கும், நேராக வாழ்வில் இருந்து அனுபவங்களை எடுக்கும் பாரம்பரியக் கலைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது.

ஒரு செழுமைப்பாரம்பரியத்தின் தொடர்ச்சியிலும் நிலைத்து நிற்றலிலும் அதன் இலக்கியப்பாரம்பரியம் மிக முக்கிய பங்கினை எடுத்துக்கொள்கிறது. 'ஈரடி இருநூறு' என்னும் நீதிநூல் இலக்கியம் பற்றி, 'இலக்கியம் என்ப இயலழகு நீதி இலக்காக இன்பந் தரின்' எனக் குறிப்பிடுகிறது. இதற்கு உரையெழுதிய இளவழகனார், 'நூல்களால் கூறப்படும் உறுதிப்பொருள்களாகிய அறம், பொருள், இன்பம் என்பவற்றை இலக்காகக் கொண்டு எதையும் மெய்ப்பாடு என்னும் சுவையின்பம் பயக்கக் கூறுவது இலக்கியம் என விளக்குகிறார். 

ஈழத்துக் கூத்துக்களைப் பொறுத்தவரையில் மேடையேற்றங்களோடு ஒப்பிடுகையில் அவற்றினைப் பிரதிகளாக, இலக்கியங்களாகக் கொண்டுவரும் முயற்சிகள் மிகக்குறைவாகவே இடம்பெற்றிருக்கின்றன. கூத்துப் பனுவல்களை ஒரு இலக்கியச் சொல்லாடலுக்கு கொண்டுவரும் முயற்சியானது, அதன் இலக்கியச் சாத்தியப்பாடு குறித்த எண்ணத்தோடு சிலரால் முன்னெடுக்கப்பட்டு வருவதும் மனங்கொள்ளத்தக்கது. இது அதன் இலக்கியப்பரப்பை அகலிப்தோடு கூத்து இலக்கியம் சார்ந்த பல்வேறு புதிய தரிசனங்களையும் செயற்பாட்டு உந்துதல்களையும் பாரம்பரியக் கலைசார்ந்து புலமைத்துவப்பரப்பில் ஈடுபடுவோருக்கு ஏற்படுத்திவிடுகின்றது. இத்தன்மைகளை நடைமுறைச்சாத்தியமாக்கக் கூடிய, நமக்குக் கிடைத்திருக்கும் கூத்துப் புலவர்களுள் ஒருவராக மட்டுமில்லாமல் சிறந்ததோர் பாரம்பரியக் கலைமேதையாகவும் நம்முன்னே நிற்பவர் வீர இராசமாணிக்கம் அண்ணாவியாராவார்.

கல்வியறிவில் மேம்பட்ட சான்றோரே புலவர் என அழைக்கப்படுகின்றனர். புலவர்கள்: கவி, கமகன், வாதி, வாக்கி என நால்வகையினர் எனவும், அவருள்ளே கவி என்பார் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என நால்வகைப்படுவர் எனவும் குணவீரபண்டிதர் தமது வெண்பாப் பாட்டியலிற் கூறுகின்றார். புதியவாகச் செய்யுள் புனைந்து இயற்றவல்ல புலவர் 'கவி' என்றும், ஒருவர் சொல்லிய நூலினை அல்லது செய்யுளைத் தாம் பயிலாதிருந்தும், விசேட ஞானமாகிய நுண்மதியினால் அதன் மெய்ப்பொருளை விரித்து உரைக்கவல்ல புலவர் 'கமகன்' என்றும் தாம் நிலைநாட்ட எடுத்துக் கொண்ட விடயத்தினை முறைப்படி வாதஞ் செய்து எதிர்வாதம் செய்வோரை வெல்லவல்ல புலவர் 'வாதி' என்றும் தாம் விரித்துப் பேச விரும்பிய பொருளை அவைக்களத்திலிருந்து கேட்போர் யாவருக்கும் இனிது விளங்கவும் சுவை ததும்பவும் சுருங்கிய சொல்லாற் பொருட் செறிவு பொருந்த விரித்துப் பிரசங்கிக்க வல்ல புலமையாளர் 'வாக்கி' எனவும் அழைக்கப்படுகின்றனர். அண்ணாவியாரின் கூத்துப்பிரதி கொண்டிருக்கும் இலக்கியத்தரம் வாயிலாக நால்வகைப்புலவராகவும் அவரைக்காண முடிகின்றது.

'ஆடக சவுந்தரி' எனும் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள, கூத்துப்பிரதிகளின் தொகுப்பாக அமையும் இந்நூலில் ஆடக சவுந்தரி, விராதன் வதை, கர்ணன், சிசுபாலன் வதை, நந்திப்போர், பப்ரவாகன், இந்து தர்ம விழிப்பு, கூட்டறவே நாட்டுயர்வு என எட்டுப்பிரதிகள் உள்ளன. இவை அவரால் பிரதியாக்கம் செய்து அவரது நெறியாள்கையிலேயே  அரங்கேற்றியவைகளாகும். இப்பிரதிகளின் மொழியியலும் சொல்கின்ற விதமும் தமிழ் ஆர்வத்தினையும் ஒன்றிவிடும் புது இசைவின் மனக் கிளர்ச்சியையும் ஏற்படுத்திவிடுகின்றது. 

கூத்தின் வெளிப்பாட்டிலே பாடல்களுக்கு முக்கிய வகிபாகம் உண்டு. எனவே, மெய்ப்பாடுகளுக்கும் உணர்ச்சிக் கிளர்வுகளுக்கும் உகந்த நடைவேறுபாடுகளையும் தாள லயத்தையும் கொண்ட வௌ;வேறு யாப்புக்களிற் பாட்டுக்களை இயற்றவேண்டியது நாடகாசிரியர்களின் பிரதான கடனாயிற்று. இதனால் நாட்டுக் கூத்துப் பாடல்களுக்கு ஓசைநயம் உயிர்நாடியாய் அமைந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் பொருத்தமான யாப்பமைதிகளை கூத்துப் புலவர்கள் நாட வேண்டியிருந்தது. வீர இராசமாணிக்கம் அண்ணாவியாரும் யாப்பியல் தவறாதிந்த பிரதிகளை உருவாக்கியிருக்கிறார்.

பாரம்பரியக் கூத்துக்களில் அகவல், வெண்பா, கலிவெண்பா ஆகிய பாக்களும் கலித்துறை, கட்டளைக் கலிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கொச்சகம் முதலிய பாவினங்களும் நாட்டுக் கூத்துக்களுக்குகந்த தரு, சிந்து, தோடயம், பரணி, இன்னிசை, தாழிசை, உலா, கீர்த்தனம், வண்ணம், தேவாரம், திருவாசகம் ஆகிய பாவகைகளும் கூத்துப்புலவர்களினால் கையாளப்பட்டிருப்து தெரியவருகின்றது. விருத்தமானது கூத்தில் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. ஒரு பாத்திரம் அழைக்கப்பட்டபோது அப்பாத்திரம் தன்னை அழைத்த காரியம் என்ன என்று கேட்டல், தனது மற்றும் எதிர்நிற்கும் பாத்திரங்களின் நிலையுரைத்தல், பாத்திரங்கள் கொலுவாக வந்து தம்மை அறிமுகப்படுத்தல், ஒரு பாத்திரத்தினை பணிக்காக ஏவுதல் போன்ற சந்தர்ப்பங்களில் விருத்தம் கையாளப்பட்டுள்ளது. அண்ணாவியாரும் இதே நியதிக்கமைய பல இடங்களில் விருத்தப்பாக்களை அதற்குரிய இலக்கணங்களுடன் பயன்படுத்திருப்பதைக் காணமுடிகின்றது.

ஆடக சவுந்த்தரியில் வரும் அரசி விருத்தம்,
'எந்தனின் அரசை நீரும் 
ஏமாற்ற எண்ணம் கொண்டு
வந்துமே பணிந்து நின்று
வகையாகப் பொய்யுரைத்தாய்
உந்தனின் கால்கள் தன்னில்
உறுதியாய் விலங்கு பூட்டி
மந்தமாய்க் கடும் சிறையில் 
மடக்கியே பூட்டி வைப்பீர்'
என்பதாக அமைகின்றது. எழுத்தினால் ஆனது அசை, அசைகளினால் ஆனது சீர், சீர்களால் ஆனது அடி, அடிகளினால் ஆனது பா, சீரும் சீரும் சேரும் இணைப்பு தளை. எதுகை, மோனை போன்ற அழகியல் அமைப்புகள் தொடை. இதுவே யாப்பிலக்கணத்தின் அடிப்படையாகும். இவை மிக எளிதான வடிவத்தில் எல்லோருக்கும் புரியக் கூடிய விதத்தில் படைத்தல் என்பது இலக்கியத்தாடனத்தினாலேயே உருவாகும். இதனை இவர் தமது கூத்துப்பிரதிகளில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.

கூத்தின் கதை நகர்விற்கு தருக்களே முக்கிய பங்காற்றுகின்றன. தரு, மறு தரு, பல்லவித் தரு, தோற்றத்தரு, விளையாட்டுத் தரு, வரவுத் தரு, தர்க்கத் தரு, வண்ணத் தரு, சண்டைத் தரு, சபைத் தரு, ஏணித் தரு, தாலாட்டுத் தரு, தாழிசைத் தரு, கொச்சகத் தரு, ஊஞ்சற் தரு, வழி நடைத் தரு, கலிப்பாத் தரு, தேவாரத் தரு, வாழித் தரு என பல்வேறாக அமைகின்றது. இவற்றினை இடமறிந்து, தன்மையறிந்து பயன்படுத்தியிருப்பது இவரது கூத்துப்புலமை அனுபவத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. கர்ணன் நாடகத்தில் வரும் அர்ச்சுனன் தருவும் கர்ணன் தருவும் பின்வருமாறு அமைகின்றது... 

அரச்சுனன் தரு:
'கர்ணனே என் முன் நில்லடா உன்னைப்
பதினேழாம் நாள் இன்று முடிக்கிறேன்
மன்னனே உன்னிட வலிமையைக் குறைத்து நான்
விண்ணவர் போற்றிட விரைவுடன் கொல்லுவேன்'

கர்ணன் தரு:
'கொல்லுவேன் என்று நீ கூறினாய் என்னைக்
கொல்லவும் முடியுமோ அருட்சுனா
வெல்லுவேன் உன்னை நான் விறுமா அஸ்த்ரம் விட்டு
நன்றாக விடுகின்றேன் நசிந்து நீ போய்விட'

எந்வொரு முன் உணர்வுக்கிளரலும் இல்லாமல், ஒரு படைப்பை படிக்க, பார்க்கத் தொடங்கும் நம்மை, பரபரப்பு, பரவசம் என்ற உணர்வுகளால் தன்னுள் இழுக்கும்படியாக ஆட்கொள்ளும் மெய்ப்பாட்டினை இத்தருக்கள் இலகுவாக ஏற்படுத்தி விடுகின்றன. ஆக படைப்போனின் உணர்வுகளைப் படிப்போனின் மனதில் இடம்மாற்றச் செய்யும் வித்தையினை மிக நுட்பமாக இவர் செய்திருப்பதனை உணர முடிகின்றது.

சண்டைக்காட்சிகளுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்த கூத்துக்களில் பெரும்பாலும் கந்தார்த்தம் பயன்படுத்தப்படுகின்றது. கந்தார்த்தமானது கூத்திற்கு இசையழகு சேர்க்கும் பாடல் வடிவமாகும். விருத்தத்தினைத் தொடர்ந்து பாடல் வரும்போது கூத்தாட்டக்காரர்களுக்கும் பார்ப்போருக்கும் புத்துணர்ச்சியளிப்பதாக இது அமையும். இவரது பிரதிகளில் நந்திப்போரில் வரும் நந்தி கந்தார்த்தமும் விராதன் வதையில் வரும் இராவணன் கந்தார்த்தமும் சிசுபாலன் வதையில் வரும் சிசுபாலன் கந்தார்த்தமும் பப்ரவாகன் நாடகத்தில் வரும் அர்ச்சுனன் கந்தார்த்தமும் ஆடக சவுந்தரியில் மகாசேனன் கந்தார்த்தமும் இலக்கியத்தரமும் இசை நயமும் கொண்டு விளங்குவதைக் காணமுடிகின்றது. உதாரணத்திற்கு, விராதன் வதையில் வரும் இராவணன் கந்தார்த்தம்...

'தேரையும் உடைத்தேனென்று 
திறமைகள் பேசுகின்றாய்
ஊரையும் விட்டு வந்தேன்
உன்னை நான் விடவா செய்வேன்
நாரை போல் பாய்ந்து உந்தன்
நகங்களால் கிழித்தும் கொத்தி
பாறை விட்டுடைத்து விட்டாயே 
என் ஆயுதம் எல்லாம்
பறந்திட உடைத்து விட்டாயே
தாரை போல் உந்தன் ரத்தம் கசிந்து விழ
மார்பதை வெட்டி நான் மண் மீதில் சாய்க்கிறேன்'

என சங்கீதத்தில் பயில்நிலையில் இருக்கும் தொகையறாவும் பாடலும் போல் அமைந்துவிடுகிறது இந்த கந்தார்த்தம். மேலும் கூத்திலக்கியங்களில் பயன்படுத்துகின்ற வசனங்களையும் அதன் இலக்கணத்தோடு இடமறிந்து பயன்படுத்தியிருக்கின்றார். சாதாரண உரைநடையினின்றும் மாறுபட்டு இழுத்துக் கதைப்பதற்கு வசதியாகவும் நெடில் ஓசை மிகுந்ததாகவும் இது அமையப்பெற்றிருக்கும். அவ்வாறே இங்கும் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 'இந்து தர்ம விழிப்பு' எனும் கூத்தில் வருகின்ற சமயப் பெரியார் வசனம், 'கேளுங்கள் மாணவர்களே! வெற்றிலை, பாக்கு, பழவர்க்கம் வைத்து நிவேத்தியம் செய்து அரச்சனை செய்வதால் ஏற்படும் பலன்களைப்பற்றிக் கூறுகின்றோம் கேட்பீராக..' என்பதாக அமைகின்றது.

நான்கு பாவகைகளுள் முதலில் தோன்றியது அகவற்பாவாகும். அகவற்பாவின் ஓசை அகவலோசையாகும். இலக்கணக் கட்டுப்பாடுகள் குறைந்து நெகிழ்வான அமைப்புடையதால்  நிகழ்ச்சிகளை, உணர்ச்சிகளை எடுத்துக் கூற ஏற்ற வடிவமாக இது இருக்கின்றது. நந்திப்போரில் வரும் தளபதி அகவல்,

'காத்திடும் கவுத்தனாரே 
கண்டுகொண்டேன் நந்திதன்னை
போர்த்துக்கீசர் நாங்களெல்லாம்
போகின்றோம் நாட்டை விட்டு' 

என இலக்கணம் தவறாது எல்லோருக்கும் விளங்கக்கூடிய தன்மையில் அமைந்துள்ளது. இவரது கூத்துப்பிரதிகளில் வர்ணனைகள், உவமைகள், உருவகங்கள் போன்ற அணிகளெல்லாம் இடத்திற்கு ஏற்றது போல் பொருத்தமாகப் பயன்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது. நாடகத்தின் கருவை வெளிப்படுத்துவதற்கும் பொருத்தமான நாடகக் கட்டுக் கோப்பை அமைத்து பொருத்தமான பாத்திரவாக்கங்களையும் தமது பாடல்களுக்கூடாக உருவாக்கி தன்னை ஒரு சிறந்த நாடகாசிரியனாகவும் நிரூபித்திருக்கின்றார்.

இலக்கியப் பெரும்பரப்பில் கட்டற்ற வெளிப்பாட்டை, அதற்கான சூழலை உருவாக்கும் சக்தி பாரம்பரியம் சார் இலக்கியங்களுக்குண்டு. இது நவீன கலை, இலக்கியச்சூழலுக்கும் வேர் நிலமாகின்றது. தொன்மங்களினூடாக ஒரு பண்பாட்டுத் தொடரச்சியைப் பேணும் நோக்குடன் கூத்திலக்கியத்தின் ஆழ அகலங்களைக் கண்டுணர்ந்து, ஒரு பாரம்பரியத்தை, அதன் இலக்கியத்தை, ஆற்றுகையான இசை, நடனத்தை அதன் இயல்பான வழியில் நின்று பாடி அப்;பண்பாட்டு மரபிற்குப் பெருமையும் சேர்த்திருக்கிறார் அண்ணாவியார். 

நாகரீக வளர்ச்சி மூலம் ஊடகங்களும் ரசனையும் மாறும்போது பழமையான கலைகள் எவ்வாறு தம்மை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற பிரக்ஞை, அவை எந்த பண்பாட்டு சூழலை சார்ந்து உருவாகி நிலைநின்றனவோ அந்த பண்பாட்டுச்சூழல் அழியும் போதும் கூட அவற்றை தொடர்ந்து பயில வைப்பதற்கான முன்மாதிரி, நாட்டுக்கூத்துக் கலையின் அழகியலையும் அதன் வெளிப்பாட்டமைதியையும் இலக்கியத்
தரத்தினையும் இன்னொன்றுக்கு முன்னால் விட்டுக்கொடுக்காத வீரம், அவை வாழமுடிந்தால் வாழட்டும் என்று விட்டுவிடாது பாரம்பரியக் கலையின் சமகால, எதிர்கால சாத்தியம் குறித்து சிந்தித்து, பெருங்காற்றை நிதானமாக எதிர் கொள்கின்ற பழமை வாய்ந்த பெருமரம் போல அளவற்ற பொறுமையுடனும் நிதானத்துடனும் சவால்களுக்கு முன்னின்று செயலாற்றுகின்ற தன்மையென வீர இராசமாணிக்கம் அண்ணாவியார் அண்ணாந்து பார்க்கக்கூடிய முன்மாதிரியாகின்றார்.

க.மோகனதாசன்,
சிரேஸ்ட விரிவுரையாளர்,
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப்பல்கலைக் கழகம்.


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

உலகப் புத்தகத் தின வாழ்த்துகள்!

  நிஜ உலகில் எல்லோருக்கும் துயரம் இருக்கிறது, பல்வேறு சோதனைகளைத் தாண்டி வருகிறோம்.