Thursday, April 24, 2025

உலகப் புத்தகத் தின வாழ்த்துகள்!

 

நிஜ உலகில் எல்லோருக்கும் துயரம் இருக்கிறது, பல்வேறு சோதனைகளைத் தாண்டி வருகிறோம்.

 ஆனால், நமக்குக் கிட்டிய அனுபவங்களைத் தொகுக்கும்போது ஒரு பொதுப் பார்வையே (generalised perception) உருவாகிறது. நாம் பெற்ற அனுபவப் பாடம் தனித்தன்மை வாய்ந்ததாக இல்லை. நமது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் மந்தையில் கொண்டுபோய் அடைத்துவிடுகிறோம். நம்முடைய துக்கம், பரிவு, வெறுமை, மகிழ்ச்சி என அனைத்து வகையான உணர்வுகளும் கூட்டத்தால் தீர்மானிக்கப்பட்டதாக ஆகிவிடுகிறது. எதனால் இப்படி நிகழ்கிறது? வாசிக்கும் பழக்கம் இல்லாததால்தான். மனத்தளவில் நாம் தனிமைப்பட்டுக் கிடப்பதால் சுயமான சிந்தனை முறை பழக்கமாகாமல் ‘கூட்டு எண்ணம்’ நம்மை ஆக்கிரமிக்கிறது. ஒரே சமயத்தில் உள்ளுக்குள் தனியர்களாகவும் சிந்தனைத் தளத்தில் பெருந்திரளாகவும் முரண்பட்டு வாழ்கிறோம்.இதனை மீறி ஒரு தாவலையோ தனித்த கண்ணோட்டத்தையோ அடைவதற்கு நாம் நிறையப் படிக்க வேண்டும். காட்சி ஊடகம் முற்றுகையிட்டிருக்கும் சமகாலத்திலும் நூல்களே அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கின்றன. மானுட குலத்தின் சிறந்த மனங்கள் சிந்தித்தவை அத்தனையும் நூல் வடிவிலேயே இன்னமும் கொட்டிக் கிடக்கின்றன. மனத்தின் தனிமையைப் போக்கி அந்தச் சிறந்த மனங்களுடன் மானசீக உரையாடலை மேற்கொள்வதன் வழியாகவே நமது எண்ணங்களில் புதிய மாற்றங்களைப் புகுத்த முடியும். அதன் மூலமாக நாம் பெறுவது எல்லையற்ற அறிவை, மேதைகளின் அனுபவ சாரத்தை, நமது அனுபவங்களைப் புத்திளம் பார்வையில் அலசுவதற்கான தெளிவை, மேலான வாழ்க்கையை!மரித்துப்போன பேராளுமைகளுடன் விவாதிப்பதற்கான வாய்ப்பைப் புத்தகங்களே வழங்குகின்றன. அறிவியல், வரலாறு, மெய்யியல், செவ்வியல் இலக்கியம் என எந்தத் துறையானாலும் கடந்தகாலத்துடனான உறவும் முரணுமே இன்றைய சமூகத்தின் அச்சாணி. அவற்றின் வழியாகவே நம் அறிவும் திறனும் கூர் தீட்டப்படுகிறது. நம்மைப் பகுத்தறிவதற்கும் உலகின் போக்குகளைப் புரிந்துகொள்வதற்கும் மற்றமையை விலக்காது அணைத்துக்கொள்வதற்கும் நாம் பல வகையான மனங்களை அறிந்தாக வேண்டும். இனம், மொழி, எல்லை கடந்து அவர்தம் குரலுடன் ஒத்திசைவைக் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்கு இந்த உலகம் மேலும் பண்பட்டதாக மாறவேண்டும். நாம் விழிப்புணர்வு அடைய வேண்டும். இதையெல்லாம் சாதிப்பதற்கு ஏற்ற எளிமையான வழி, குறைந்தபட்சம் நாம் எடுத்து வைக்கக்கூடிய முதல் அடி, வாசிப்பு மட்டுமே. பட்டை தீட்டப்பட்ட அறிவும் தேடலுமுள்ளவன் அதில் திளைப்பான்.-கோகுல்அனைவருக்கும் உலகப் புத்தகத் தின வாழ்த்துகள்!

No comments:

Post a Comment

உலகப் புத்தகத் தின வாழ்த்துகள்!

  நிஜ உலகில் எல்லோருக்கும் துயரம் இருக்கிறது, பல்வேறு சோதனைகளைத் தாண்டி வருகிறோம்.