Wednesday, November 16, 2022

தொடர்பாடல் பற்றிய அறிவு ஏன் எமக்கு அவசியமாகின்றது?



உலகில் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் தோன்றிய காலம் தொடக்கம் இன்று வரை, தங்களுக்கு இடையில் கருத்துக்களையும், செய்திகளையும், உணர்வுகளையும் பரிமாறிக்கொண்டே வருகின்றன. பரிணாமவளர்ச்சியின் தொடர்ச்சியாக, இன்று மனித இனம் பல வகையான ஊடகங்கள், ஊடக உத்திகள், ஊடகக்காவிகள் என்பவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய தொடர்பாடல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றது. தகவல் தொடர்பாடலின் பல்பக்கப் பரிமாணம் உலகை,  உலகக் கிராமம் என்று சொல்லுமளவிற்கு வளர்ச்சிகண்டுள்ளது.

ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்வும், தொடர்பாடலினால் மற்றவருடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் வளர்ந்தவர்கள் வரை, தொடர்பாடல் பற்றிய அடிப்படை அறிவு அத்தியாவசியமாகின்றது. அதேவேளையில்தொடர்பாடலை ஒரு தொழிலாக கொண்ட ஊடகவியலாளர்கள், அலுவலகங்களில் மக்கள் தொடர்பாளர்களாக இருப்பவர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வியாபாரத்துறையில் இருக்கும் சந்தைப்படுத்தல் அலுவலகர்கள், ஆய்வாளர்கள் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்குச் சாதாரண பொதுமக்களிலும் பார்க்கத் தொடர்பாடல் பற்றிய அதிக புரிந்துணர்வு அத்தியாவசியமாகின்றது. அதே நேரம் கலையாக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், கலானுபவத்தை பார்வையாளர்களிடத்தே ஏற்படுத்துவதற்கும் செய்திகளை தங்குதடையின்றித் தெரிவிப்பதற்கும் உணர்வினைக் கடத்துவதற்கும் தொடர்பாடலின் நுட்பவியல் குறித்து தெரிந்திருத்தல் மிகவும் அவசியமாகின்றது.

அன்றாட வாழ்வில் தொர்பாடல் பற்றிய நுட்பங்களை அறிந்து, அதனை திறம்பட நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாம் செய்யும் அனைத்துக் காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். வீட்டில் இடம்பெறும் உரையாடல்கள், அலுவலகத்தில் இடம்பெறும் உரையாடல்கள், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் கலந்துரையாடல்கள், தூரதேசப் பயணங்ககள் என எல்லாச்சந்தர்பங்களிலும், நாம் மற்றவர்களுடன் தனியாகவோ, அல்லது குழுவாகவோ தொடர்பாடலை மேற்கொள்கின்றோம். மேற்கூறப்பட்ட சந்தர்ப்பங்களின் நடைமுறைகள் எல்லாமே எமக்கெல்லோருக்கும் நன்கு தெரிந்தும், நாம் எல்லாவிதமான தொடர்பாடல்களையும் வெற்றிகரமாக மேற்கொள்கின்றோமா? எனும் கேள்வி தவிர்க்கமுடியாததாகின்றது. எங்கள் ஒவ்வொருவரின் சொந்த வாழ்க்கை அனுபவத்திலும் சரியான தொடர்பாடல் என்பது முக்கியமான ஒரு விடயமாகின்றது. அவற்றை ஞாபகப்படுத்தி, ஆராய்ந்து, உண்மையை அறிந்து, திறமையான தொடர்பாடல் மூலம் காரியங்களை வெற்றிகொள்வதோடு சிறப்பான உறவினையும் எல்லோரிடத்திலும் பேண முடியும்.

அன்றாட வாழ்வில் எடுக்கப்படுகின்ற முடிவுகள், செயற்பாடுகள் என்பன, ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையிலேயே அமைகின்றன. ஏனெனில், மற்றவர்களில் தங்கிவாழும் இன்றைய பொருளாதார, அரசியல் முறைமைகள், முடிவுகள் எடுப்பதற்குத் தகவல்கள் இன்றிமையாதவை என்ற ஒரு பலவீனமான நிலையில் மக்களை வைத்துள்ளது. சரியான பல தகவல்களைக் கொண்டவர் பொதுவாகத் தன்னுடைய முடிவுகளைச் சரியாக எடுப்பதையும், ஏனையவர்கள் தங்களின் முடிவுகளால் சில சந்தர்ப்பங்களில் துயரத்திற்கு ஆளாகுவதையும் அனுபவத்தில் கண்டிருக்கின்றோம்.

தகவல்கள் சரியாக கிடைக்காது துன்பப்படுபவர்களுக்கும், தகவல்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாது துன்பப்படுபவர்களுக்கும், தொடர்பாடல் பற்றிய அடிப்படையறிவு பெரும் உதவி புரியும். அன்றாட வாழ்வில்; முக்கியமான ஒன்றைப் பற்றி அறிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான செயற்பாடு ஆகும். இது மகிழ்ச்சி நிறைந்த வாழ்விற்கு வழிவகுக்கும்..

மனிதர்களுக்கு ஏற்படுகின்ற தேவைகள், அவர்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றது. மனிதர்களில் சிலர் சிந்தித்துச்; செயலாற்ற முனைகின்றனர். அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை, தாம் வாழ்ந்த, வாழுகின்ற சூழலின் அனுபவங்களின் மூலம் அறிந்து, தங்களுடைய அனுபவங்களையும், உணர்வுகளையும், செய்திகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கின்றார்கள். அதன் விளைவாகவே, பல்வேறு கலைப்படைப்புகள், புத்தகங்கள், சஞ்சிகைகள், ஒலி, ஒளி நாடாக்கள், இறுவட்டுக்கள் என்பன வெளிவருகின்றன.

நாம் தொடர்பாடலை பின்வரும் முக்கிய தேவைகளுக்காக பயன்படுத்துகின்றோம்:

01. சுற்றியுள்ள சூழலைப் புரிந்து கொள்வதற்கு..

02. தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு..

03. செய்தியை, தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு..

04. சிந்தனையைத் தெரிவிப்பதற்கு

05. அனுபவத்தை, உணர்வினைப் பகிர்ந்து கொள்வதற்கு.

1. சூழலைப் புரிந்து கொள்வது என்பது..

ஒரு குழந்தை பிறந்த கணம் முதல், தான் ஐம்புலன்களால் உணரப்படுபவைகளை பயன்படுத்தித் தன்னைச் சுற்றியுள்ள சூழலைப் இயலுமானவரை அவதானித்து, தனக்குத் தேவையான தகவல்களை இயற்கையாகவே தன்னுடைய மூளையில் பதித்துக்கொள்கின்றது. உதாரணமாக: தன்னுடைய தாயின் தொடுகை, சூழலின் பௌதீகத் தன்மைகளான வெப்பம், குளிர், காற்றுப் போன்ற உணர்வுகளை உள்வாங்கி கொள்கின்றது. உள்வாங்கப்பட்ட தகவல்களைத் தன்னுடைய உடல் அமைப்புக்கு ஏற்ப அனுபவமாக, தனக்குள் சேகரித்து வைக்கின்றது. இவ்வாறு சேகரிக்கப்படுகின்ற தகவல்களின் தன்மையானது குழந்தையின் பிறப்பு இயல்பில் பெரிதும் தங்கியுள்ளது. இங்கு தொடர்பாடற் செய்முறை என்பது தகவல் சேகரிப்பு என்ற வகையில் முதல் முதல் ஆரம்பித்து, வளர்ந்தவர்களில் இச்செயற்பாடு மொழியின் உதவியோடு கேள்விகள் கேட்பதூடாக இறக்கும் வரை தொடர்கின்றது.

2. தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பது..

தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு தொடர்பாடல் அவசியமாகின்றது. உதாரணத்திற்கு, குழந்தை தனக்குப் பசிக்கும் போது, பசி என்று உணர்த்துவதற்கோ, அல்லது தனக்குத் தேவையான ஒரு பொருளை பெற்றுக்கொள்வதற்கோ, அல்லது இன்னொருவரிடம் இருந்து சேவை ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கோ, ஒலியேழுப்பி அழுவதன் மூலமாகவோ, அல்லது கைகள், கால்களை அசைப்பதன் மூலமாகவோ தொர்பாடலை மேற்கொள்கின்றது. பின்னர், மொழியைப் பயில்வதன் மூலமும், தொடர்பாடல் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

3. செய்தியை, தகவல்களை பரிமாறிக் கொள்தல் என்பது..

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாம் வாழும் சமூகத்தில் தமக்குக் கிடைக்கும் செய்தியை, அல்லது புதிய தகவலைத் தம்மைச் சூழ உள்ளவர்களுக்குத் தெரிவிப்பதற்கு, பரிமாறிக்கொள்வதற்கு,  தொடர்பாடலில் அடுத்த முக்கிய செயல் முறையான செய்தியைச் சொல்லுதல், தகவல்களைப் பரிமாறுதல், என்பது நடைபெறுகிறது.

4. சிந்தனையைத் தெரிவித்தல் என்பது..

ஒருவர் தன்னுடைய அனுபவம், மற்றும் படைப்புத்திறன், ஆய்வுத்திறன் என்பவற்றினூடாகத் தனக்குள் எழுகின்ற ஒரு புதிய சிந்தனையை, கண்டறிவை வெளிப்படுத்துவதற்குத் தொடர்பாடலில் அடுத்தான சிந்தனையை வெளிப்படுத்தல், தெரிவித்தல் என்ற தொடர்பாடல் செயல் முறை பயன்படுத்தப்படுகின்றது.

5. அனுபவத்தை, உணர்வினைப் பகிர்ந்து கொள்வது என்பது..

ஒருவர் தன்னுடைய அனுபவத்தை, உணர்வினைப் பகிர்தல் என்னும் போது, தான் உணர்ந்து தெளிந்தவற்றைப் பிறருக்கு உதவும் வகையில் வெளிப்படுத்தற் செயற்பாடாகும். இது, சிறிய அளவில் இடம்பெறும் போது நனிநபருடனான உரையாடல்களாகவோ, அல்லது குழு ரீதியான கலந்துரையாடல்களாகவோ, அல்லது ஊடகக்காவிகளுடான மக்கள் தொடர்பாடற் செயல்முறையாகவோ இடம்பெறுகின்றது.

தொடர்பாடல் இன்றி மானுடத் தொடர்பினை கொண்டு செல்லுதல் கடினமான ஒன்றாகும். ஒட்டு மொத்தமாக மனித வாழ்வின் வெற்றிக்கு வினைத்திறன் மிக்க தொடர்பாடல் அவசியமாகின்றது. மனித இனமானது சிறு சிறு தனிக் குழுக்களாக உலகம் முழுவதும் பரவியிருந்த வேளையில் தொடர்பாடலின் தேவை என்பது, குறிப்பிட்ட குழுவின் தேவையை மட்டும் திருப்தி செய்வதாக இருப்பது போதுமானதாக இருந்தது. ஆனால், இன்று மனிதக்குழுக்கள்; பல்கிப்பெருகி, மனித குழுக்களுக்கு இடையிலான தொடர்புகள் விரிந்து, ஒவ்வொரு குழுக்களும், விரும்பியோ விரும்பாமலோ, ஒரு குழுவானது மற்றைய குழுவில் பொருட்கள், சேவைகள் என்பவற்றுக்காக ஒன்றில் ஒன்று தங்கியிருந்து, வாழ் நாட்களைக் நகர்த்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக, ஒரு வேலையை செய்வதற்காக, ஒவ்வொருவரும் தங்களைச் சுற்றி என்ன நடைபெறுகின்றது என்ற நளாந்த விடயங்களை அறியவேண்டியிருப்பது தவிர்க்க முடியாததாகின்றது.

ஆகவே, ஒவ்வொரு மனிதரும் தம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கும் அறிவினை வளர்த்துக்கொள்வதற்கும், அதனைப் பரவலாக்கம் செய்வதற்கும் கிடைக்கும் ஒய்வு நேரத்தை ஒவ்வொருவரும் தங்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் செலவு செய்வதற்கும் தொடர்பாடற் செயல்முறையும், தொடர்பாடல் சார்ந்த ஊடக உத்திகளும் மிக அவசியமாகின்றன.

க.மோகனதாசன்.

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect